எட்டு மணி நேர வேலை எனும் உரிமையைக் கோரி அதற்காக உயிர் நீத்த சிக்காகோ நகர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் பகிர்ந்து கொள்ள கவிஞர் தமிழ் ஒளியின் கவிதை கீழே
கோழிக்கு முன்னெழுந்து 
கொத்தடிமை போலுழைத்துப்
பாடுபட்ட ஏழைமுகம் 
பார்த்துப் பதைபதைத்து
கண்ணீர் துடைக்க வந்த காலமே வருக !
மண்ணை , இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணின் மழையிறக்கி 
மேதினிக்கு நீர் பாய்ச்சி
வாழ்க்கைப் பயிருட்டு 
வாழ்ந்த தொழிலாளி
கையில் விலங்கிட்டுக் காலமெல்லாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்க 
பொங்கி வந்த மேதினமே
அமெரிக்க மாநகரில் 
அன்றொரு நாள் 
மக்கள் குமுறியெழுந்து 
குருதியெலாம் சிந்தியதால்
வான் சிவந்து 
மண் சிவந்து 
மாகடலும் தான்சிவந்து
ஊன் சிவந்து வந்தாய் 
உயிர் சிவந்த செந்தினமே !
உன் கொடியைப் போற்ற 
உயிர்விட்டார் அந்நாளில்.
வன் கொடியர் 
மாய வழிகண்டா ராதலினால்,
வாழ்கின்றார் இன்றும் ;
வளர்கின்றார் நாள் முழுதும்
சூழ்கின்றார் வானில் ; 
சுடர்கின்றார் நீ வருக !
கண்ணின் கருமணியே ,
காசினிக்கும் மாமணியே ,
கண்ணீர் துடைக்கவரும் காலமே 
நீ வருக !
அன்னை ஒருத்தியதோ 
அங்கே நெடுந்தொலைவில்
தன் மகனைத் தூக்கேற்றி 
கொல்லும் சதிகாரர்
வஞ்சமெண்ணி அஞ்சுகிறாள் 
வாராய் மணிவிளக்கே !
அன்னவள்தன் நெஞ்சத்தின் 
ஆறுதலே வாராய் நீ !
தூக்குக் கயிற்றைத் 
துச்சமென எண்ணுமகன்
கண்ணில் ,உள்ளத்தில் 
களிப்பேற்ற வாராய் நீ !
உலகத் தொழிலாளர் ஒற்றுமையே ! நல்லுணர்வே !
அன்பே ! 
இருட்கடலின் ஆழத்திருந்து 
வந்த முத்தே , முழுநிலவே , 
மே தினமே வாராய் நீ !
வாராய் உனக்கென்றன் 
வாழ்த்தை இசைக்கின்றேன் !
கவிஞர் தமிழ் ஒளி -1949.


 
 
No comments:
Post a Comment