Monday, June 5, 2017

அந்த சாமியார் நிலைதான் மற்றவர்களுக்கும் . . . .





சில நாட்களுக்கு முந்தைய ஒரு பதிவில்

“அவர் இறப்பின் மூலம்தான் அவர் இங்கே இத்தனை நாள் வாழ்ந்திருந்தார் என்பதே தெரிந்தது” 

என்று எழுதியிருந்தேன்.

சாமானியர்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் சர்வ சக்தி படைத்தவராய் விளங்கியவர்களுக்கும் பொருந்தும் என்பது இன்னொரு மரணத்தின் மூலம் தெரிய வந்தது.

ஆம்,

சந்திரா சாமி எனும் சாமியார் இறந்த தகவல் வந்த பின்பே, அவர் இத்தனை நாள் உயிரோடுதான் இருந்தாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பியிருந்தார்கள்.

சாதாரணமான ஆளாகவா இருந்தார் அவர்?

ராஜீவ் காந்தி, சந்திர சேகர், நரசிம்மராவ் என்று மூன்று பிரதமர்களை ஆட்டி வைத்தவர். உலகின் மிகப்பெரிய செல்வந்தரான ப்ரூனேய் சுல்தான், ஆயுத வியாபாரி அடனோன் கஷோகி ஆகியோரோடு நெருக்கமானவர்.

ராஜீவ் காந்தியின் வீழ்ச்சிக்கு காரணமான போபோர்ஸ் பீரங்கி ஊழலின் முக்கியமான புள்ளி. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னே இவரும் ஒளிந்து கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு வலுக்கட்டாயமாக மறைக்கப்பட்டது.

அனைத்து விதமான மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளான ஆசாமி. சிறைப்பறவையாக இருந்த போதும் “பிள்ளையாரை பால் குடிக்க வைத்ததாக” நாடெங்கும் புரளி கிளப்பிய மோசடிப் பேர்வழி. திரைப்படங்களில் வரும் சாமியார் வில்லன்களுக்கு ரோல் மாடலாக இவரைத்தான் எடுத்துக் கொள்வார்கள்.

 என்ன இருந்தால் என்ன?

சந்திராசாமி உயிரோடு இருக்கிரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு கடந்த பதினைந்து வருடங்களில் இவரைப்பற்றி எந்த செய்தியுமே இல்லை. சாமியார் என்று மட்டுமில்லை, ஒரு காலத்தில் பரபரப்பு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பல அரசியல், வணிகப் பிரபலங்களின் நிலைமையும் இதுதான்.

மோடியின் ஆட்சியில் இன்று சர்வ வல்லமை படைத்தவர்களாக காட்சி அளிக்கும் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ், சீ,சீ ரவிசங்கர் ஆகியோரும் தங்களின் எதிர்காலமும் இது போலத்தான் ஆகும் என்பதை உணரட்டும். ஓவர் ஆட்டத்தை இனியாவது நிறுத்தட்டும்.

பின் குறிப்பு:

சந்திரா சாமி குறித்து பாட்டையா பாரதி மணி முக நூலில் எழுதிய பதிவு சுவாரஸ்யமானது. அதை சுட்டு கீழே தந்துள்ளேன். 



சந்திரா ஸ்வாமி!

இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்.....சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம்.
நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். 

நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’ என்று பலரைக் கேட்க வைத்தது. தன்னுடைய செல்வாக்கு காலாவதியாய்விட்டதென்று தெரிந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகாமல் ஊடகங்களிலிருந்தும் சுத்தமாக விலகிவிட்டார். 

தொண்ணூறுகளில் அவர் புகழ் உச்சத்திலிருந்தபோது அவரை ’தரிசிக்கும்’ வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அருந்ததி ராயின் "The Electric Moon" என்ற ஆங்கிலப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த லீலா நாயுடுவுடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘மணி! கொஞ்சம் காரை கிரேட்டர் கைலாஷுக்கு திருப்பு. ஸ்வாமிஜியைப்பார்க்கணும்!’ என்றார். போனதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திரா ஸ்வாமியின் ‘இன்ஸ்டண்ட் தரிசனம்’. 

‘ஆயியே பெஹன் ஜி! உங்களைப்பார்த்து யுகங்களாகிறது!’ என்று கட்டிப்பிடித்து வரவேற்பு. இல்லையா பின்னே? ஆறு உலக அழகிகளில்ஊ ஒருவராக கருதப்பட்டவர். Householder படத்தில் சசி கபூருடன் ஜோடி...எழுத்தாளர் டாம் மோரியஸின் மனைவி! அவர் என்னை அறிமுகப்படுத்தியவுடன் ஸ்வாமிஜி என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்... ....ஏதோ நாய் கொண்டுவந்து போட்டதை பார்ப்பது போலிருந்தது! முதல் பார்வையிலேயே அவரை நானும், என்னை அவரும் வெறுத்தோம். 

அவர் இருந்த அறை பூரா மாலைகளும், தட்டுத்தட்டாக கும்பாரமாக எலுமிச்சம்பழங்களும் இருந்தன. வர்த்தகமுறையில் “மாம்பலம் மாமீஸ்’ ஊறுகாய் போடுமளவுக்கு கண்ணைப்பறிக்கும் எலுமிச்சங்காய்கள்! தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல “அய்யர்வாள்! இந்தாங்கோ!” என்று ஒரு பழத்தை எடுத்து நீட்டுவாரென்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை! ஆமாம்! இந்த ஒரு சாக்கு எலுமிச்சம்பழங்களைக்கொண்டு என்ன செய்வார்? தினமும் நான்குவேளை தலைக்கு தேய்த்துக்கொள்வாரோ? கேட்க தைரியமில்லை!

அரைமணிநேர தற்புகழ்ச்சி உரையாடலுக்குப்பிறகு --

எல்லாமே “நான் தான் அவனுக்கு (நரசிம்ம) ராவ்ஜியிடம் சொல்லி கேஸ் வராமெ முடிச்சேன். இன்னிக்கு நன்றியில்லாமெ இருக்கான்!......நேத்து இதே நேரம் வந்திருந்தா (ஒரு பிரபலம்) இவர பாத்திருக்கலாம். ஒருமணிநேரம் இருந்தார். எங்கிட்டே வந்தவங்களுக்கு நல்லதே பண்ணியிருக்கேன்”....இப்படி.....விடைபெறும்போது நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை!


இப்படி என் ‘ஸ்வாமி தரிசனம்’ இனிதே நடந்தேறியது!

--00ஓ00--



படத்தில் ரோஷன் ஸேட், மேக்கப்மென் ஜான்ஸன், லீலா நாயுடுவுடன் நான். படப்பிடிப்பின்போது.



4 comments:

  1. இது ஏன் மோடிக்கும் பொருந்தாது?

    ReplyDelete
  2. Palani velu - go to Tirupathi

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வருகிறீர்கள்?

      Delete