Thursday, June 22, 2017

பதில் சொல்லுங்கள் மிஸ்டர் அடிமை (எ.பாடி) பழனிச்சாமி

சமாதி அம்மையாரின் அடிமையாய் தொடங்கி பரப்பன அக்ரஹார சிறைவாசியாரின் அடிமையாய் மாறி இன்று மோடியின் அடிமையாய் தொடரும் எடப்பாடி பழனிச்சாமி எனும் தமிழகத்தின் துயரம், தனது ஏவல்படை கொண்டு தன் தற்போதைய எஜமானர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டத்தை இயற்று என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்த நடைப்பயண இயக்கத்தை சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் தாம்பரத்திலே தடை செய்து பயணக்குழுத் தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள்.

இந்த நடைப்பயணத்தை சென்னை நகருக்குள் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம்!

கடந்த ஒன்பதாம் தேதி சேலத்தில் தொடங்கி நேற்று மாலை தாம்பரம் வரை நடைபெற்ற  பயணத்தில் எங்காவது சிறு அசம்பாவிதம் நடந்ததாக ஏவல் படையால் சொல்ல முடியுமா? ஏதேனும் மோதல் உண்டா? பயணக் குழுவில் வந்தவர்கள் குடித்து விட்டு கும்மாளமிட்டார்களா? பெண்கள் முகம் கோண நடந்து கொண்டார்களா?ஆபாசமாய் பேசினார்களா? வழியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்களா? பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடினார்களா?

என்ன குற்றம் செய்தார்கள் மிஸ்டர் பழனிச்சாமி?

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் மாண்ட துயரத்தைச் சொன்னார்கள். அவர்களின் படுகொலைக்குப் பின்னே  ஒளிந்துள்ள, தமிழகத்தை பீடித்திருக்கிற ஜாதிய வெறி பற்றி சொன்னார்கள். கௌசல்யா போல, அபிராமி போல வேறெந்த பெண்ணிற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழக் கூடாது என்றார்கள். அதனை தடுக்க சட்டம் வேண்டுமென்றார்கள். சமத்துவத்திற்கான விதைகளை வரும் வழி எங்கும் தூவிக் கொண்டே வந்தார்கள். ஜாதியத்திற்கு எதிரான குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இறுதியில்  உங்களிடம்தான் வருவதாக  இருந்தார்கள். சட்டம் இயற்றும் இடத்தில் நீங்கள்தானே உள்ளீர்கள்?

சேலம் தொடங்கி தாம்பரம் வரை சட்டம் ஓழுங்கிற்கு ஏற்படாத அபாயம் எப்படி ஐயா, சென்னை நகருக்குள் மட்டும் ஏற்படும்?

ஜாதியத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான குரல் சென்னையில் ஒலிப்பதைக் கேட்க உங்கள் செவிகளுக்கு விருப்பமில்லையா? உங்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய தீய சக்தியின் உத்தரவா?

கூவாத்தூர் சாக்கடையில் மூழ்கி பதவியைப் பெற்று அதை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு சாக்கடையில் கூடிக் குலாவும் உங்களுக்கு நேர்மையின் அடையாளமான செங்கொடியின் புதல்வர்களைச் சந்திக்க உள்ளம் கூசுகிறதோ? நீங்கள் பதவி பெற்றதற்கும் உங்கள் ஜாதியப் பின்னணி ஒரு காரணி என்பதாலும் அந்த ஆதிக்க சக்திகளில் நீங்களும் ஒருவர் என்பதால் தீண்டாமையை கடைபிடிக்கிறீரோ?

சொல்லுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, தடை செய்ததன் மர்மம் என்னவோ?

உங்களின் முதல் எஜமானர், அதுதான் சமாதி அம்மையார், அவரே கூட அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி கையில் குண்டாந்தடிகளோடு வாயில் மத வெறி முழக்கங்களோடு மனதில் மக்களை துண்டாடும் வெறியோடு காவிகள் சென்னை நகரில் நடைபோட அனுமதித்த உங்களால் செங்கொடிகளின் சங்கமத்தை தடை செய்ய முடிகிறதென்றால் அதற்கு உங்களின் மோடி விசுவாசத்தைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே, அதுவும் தகாத உறவுப் பிரச்சினைக்காக கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் பிணத்தை வைத்துக் கொண்டு கோவையிலே காவிகள் ஊர்வலம் செல்லவும் செல்லும் வழியில் கலவரங்கள் நிகழ்த்துவதையும், கடைகளிலே புகுந்து கொள்ளையடிப்பதையும் சிறு சலனம் கூட இல்லாமல் வேடிக்கை பார்த்த உங்களால் நியாயமான கோரிக்கையோடு அமைதியான முறையிலே நடைப்பயணம் வந்தவர்களை மட்டும் எப்படி தடுக்க முடிக்கிறது? கைது செய்ய முடிகிறது?

அடிமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக இருப்பது வெட்கக்கேடு. மானக்கேடு.

3 comments:

 1. our grievance that only Delhi kingdom had slave kings is now rectified  ReplyDelete
 2. கம்யூனிஸ்ட் கட்சிகள் பிஜேபி அறிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஏற்றுகொள்ள முடியாது என்று அறிவித்துவிட்டனர்.
  2002-ல் அப்துல்கலாமை இதே பிஜேபி முன்னிறித்தியபோது கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுக்கவில்லை??
  ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ,
  ஆனால் அப்துல்கலாமை ஏன் ஆதரிக்கவில்லை என்பதற்க்கு கொடுத்தார்களே பாருங்க ஒரு விளக்கம்..
  இன்றும் , அப்படியே மனதில் நிற்கிறது.
  "அப்துல்கலாம் அணு ஆயுதம் தயாரிக்க காரணமானவர். அது அழிவை உருவாக்கும் கண்டுபிடிப்பு. அதனால், அவர் முஸ்லீம்வேட்பாளர் என்றாலும், ஜனாதிபதி பதவிக்கு தகுதி இல்லாதவர்". என்று..
  இப்படி சொல்ல இவர்களுக்கு வெட்கம் இருக்காது என்று
  விவரம் அறிந்த எல்லோருக்கும் தெரியும். .
  எனவே , இவர்கள் வெளிப்படையாகவே இப்படி அறிவிப்பு செய்திருக்கலாம்.
  "அப்துல்கலாம் வெற்றிகரமாக நடத்திய அணுஆயுத சோதனை மூலம் , சீனாவுக்கு நிகராக அணுஆயுத வளர்ச்சியை இந்தியா பெற்றுவிட்டது. அது எங்கள் பாஸ் சீனாவுக்கு பிடிக்கவில்லை,
  அவர்கள் ஆதரிக்காத அப்துல்கலாமை நாங்களும் ஆதரிக்க மாட்டோம்" இப்படி வெளிபடையாக பேசி இருந்தால்..
  இவர்களைநம்பி ஏமாந்து ரோட்டில் , பஸ்டாண்டில் பிச்சை எடுத்து ..
  கட்சி நிதி அனுப்பும் ஏழை தொண்டனுக்கு புரிந்து இருக்கும் ,
  இவர்கள் ஒரு சீனாவின் அடிமை கைக்கூலிகள் என்று..!!
  --------------------
  இப்போ என்னபிரச்சனை , ராம்நாத் கோவிந்தை இவர்கள் ஆதரிப்பதில்?
  "தலித் மக்களுக்கு எதிரான பிஜேபி வந்துட்டா , எல்லாம் போச்சு . . எல்லாம் நாசம். . Rss இருக்கானுக பாருங்க , எல்லாரும்
  அவனவன் ஜாதி வேலையைத்தான் செய்யனும்னு சொல்லி திரியுற பயலுக , நம்பிராதீங்க. அவனுக நாட்டில் எல்லாரையும் அடிமையா வச்சுக்க பாக்குறானுங்க".
  இப்படி 1000 பொய்களை பரப்பிவிட்டு நாட்டை குழப்பி, அதில் சீனாவுக்கு ஆதாயம்தேடிய இவர்கள் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே, என்று வெட்கம்தான் , இன்று ,
  இவர்கள் கூவுவதற்கு காரணம் . .

  ReplyDelete
 3. யாருப்பா நீ? தொலைக்காட்சியில் அநாகரீகமாக நடந்து கொண்ட நாராயணனோ அல்லது ஆபாச ஃபேக் ஐடி சுதா கர்ரோ, இதில் யாரோ வாந்தியெடுத்ததை இங்கே ஏன் கக்குகிறீர்? நல்ல காமெடி

  ReplyDelete