Sunday, June 11, 2017

நடக்கவே நாங்களும் நாளை . . . .


*ஆணவக் கொலையைத்*
*தடுக்கத் தனிச்சட்டம் இயற்று!*
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி *சேலம் - சென்னை 369கிமீ நடைபயணம்!*

••விடுதலை சிறுத்தை கட்சி, ஆதி தமிழர் கட்சி, சிபிஐஎம் 2ஆம் நாளில் வழியெங்கும் அதிர்வேட்டு முழங்க உற்சாக வரவேற்பு!

••தன் தலைமகனை இழந்த ஒரே நாளில் வரவேற்பு நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஆத்தூர் கலைமணி..!

••60 கிமீ கடந்த போதும் உற்சாகம் பொங்கும் 72 வயது இளைஞர் நாமக்கல் ப.ராமசாமி..!

••நடைபயணத்தில் மதுரை பர்வத வர்த்தினி, தனலட்சுமி, காஞ்சிபுரம் பிரியா..!

••2 நாட்களும் 200 இன்சூரன்ஸ் ஊழியர் பங்கேற்ற அற்புதம்..!
##
அன்று 8.6.17 காலை முதலே சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம் பரபரப்பு பற்றிக்கொண்டு இருந்தது; ஆம், மறுநாள் வரலாற்று சிறப்புமிகு ஒரு நிகழ்வு நிகழப்போகிதென்ற ஆச்சரியமாக கூட இருக்கலாம் அல்லவா?

ஆம், அதேதான்! தமிழக வரலாற்றில் ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் வேண்டுமென்று, ஆணவ கொலைக்கு ஆளான கோகுல்ராஜ் மண்ணில் இருந்து சென்னைக்கு மகத்தான நடைபயணம் புறப்பட போகிறதென்பது வரலாற்று நிகழ்வுதானே! இதுவரை யாரும் செய்யவில்லையே!

அன்று இரவே மாநிலம் முழுவதுமிருந்து நடைபயண போராளிகள் வந்து சேர்ந்து விட்டனர். ஒரு வாரமாகவே தீஒமு மாவட்ட மையமும், சேலம் மாநகர வடக்கு சிபிஎம்மும் தயாரிப்பு பணிகளில் மூழ்கி கிடந்ததை பார்க்க முடிந்தது. இரவு சேலம் மாநகரம் மேற்கு சிபிஎம் தோழர்கள் உணவளித்தனர்!

9.6.17 காலை 7 மணிக்கே மானா கறிக்குழம்புடன் அருமையான காலை சிற்றுண்டியை சேலம் மாநகர வடக்கு பரிமாறினர்; நிகழ்ச்சி காலை 9 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக 11 மணிக்கு தான் சேலத்தில் சாமுவேல்ராஜ் தலைமையில் துவங்கிய நடைபயணக்குழு 300 க்கும் மேலானவர் நடைபயணத்தில் பங்கேற்றனர்!

துவக்க நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமா, திஒமு தலைவர் சம்பத் இன்னும் பிற தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பு தலைவர்கள் மற்றும் சிஐடியு, விச, விதொச, மாதர், வாலிபர், மாணவர், எல்ஐசி, அரசு ஊழியர்-ஆசிரியர் என சுமார் 1000 க்கும் மோலானவர் பங்கேற்றது மிகுந்த சிறப்பும், எழுச்சியும் பெற்றது துவக்க நிகழ்ச்சி!

சாதி ஆணவ கொலைக்கு பலியான இளவரன், கோகுல்ராஜ் உள்ளிட்ட குடும்பங்களை கவரவித்தது உணர்ச்சி பிழம்பாக இருந்தது துவக்க நிகழ்ச்சி!

"சாதி ஆணவம்... தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு மட்டுமானதல்ல; அது மேல் சாதி என வர்ணிக்கப்படும் சாதிக்குள்ளேயே கலாச்சார கொடுக்கல் வாங்கல் இருக்காது; ஆனால் பொருளியல் கொடுக்கல் வாங்கல் மட்டும் இருக்கும்; இந்த வேற்றுமை நீக்கி சமத்துவம் கொண்டு வரவே... பேணவே... இந்த சட்டத்ததை மத்திய மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும்!" என்கிற திருமாவின் பேச்சு நச்!

"சிபிஎம் போன்ற தேசிய இடதுசாரி கட்சிகள் இப்பிரச்சனை கையில் எடுக்கிற போதுதான், அதன் தாக்கம் அரசுகளை கவ்வுகிறது; ஆகையால் தான் எங்களின் இயற்கையான கூட்டாளிகளாக இடதுசாரிகள் அமைந்து விட்டார்கள்!" என்கிற திருமா பேச்சு உளபூர்வமாகவே எழுச்சியே! பயணம் தொடங்கியது!

அம்மாப்பேட்டை சேலம் மாநகரம் கிழக்கு சிபிஐஎம் தோழர்கள் நீர் மோர் கொடுத்து வரவேற்றனர்! அடுத்து வாழப்பாடி தாலுக்கா சிபிஐஎம் தோழர்கள் சார்பில் உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டினம் ஆகிய இடங்களில் நீர்மோர் கொடுத்து ஒலிபெருக்கி அமைத்து சுட்டெரிக்கும் வெயிலையே துரத்தியடித்தனர்!

அதனை தொடர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்பில் இயற்கையோடு இயற்கையாக மதிய உணவு மாலை 3.30 அளித்தனர்; பயணக்குழு வழி நெடுகிலும் பெற்று சென்ற வரவேற்பே மதிய உணவு எடுத்துக் கொள்ள தாமதமானது!

மீண்டும் உடனே 4.30 மணிக்கு துவங்கி எம்.பெருமாபாளையத்தில் சிறப்புமிகு வரவேற்பு பொதுக்கூட்டம் நடத்தினர்!  

இரவு உணவை எடுத்துக் கொள்ள இரவு 11 மணி ஆகிவிட்டது!

அதன்பின் அன்று அணிந்து வந்த சிவப்பு - நீலம் உடை வேர்வையால் நனைந்து வேர்வை நீசம் அடித்ததால், அவற்றை கசக்கி போட்டுவிட்டு, குளித்துவிட்டு உறங்க செல்ல நள்ளிரவு ஒரு மணி ஆகிவிட்டது பலருக்கு; சிலரோ படுத்த வாக்கில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பரிமாறி கொண்டிருந்தனர்; ஆனால் அவர்களின் கண்களுக்கு தூக்கம் எப்படி வந்தது என்றே அவர்களுக்கே தெரியவில்லை!

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு விசில் சத்தம் கேட்டதுதான் தாமதம்; ஒரு மணி நேரத்தில் பயணத்திற்கு எல்லோரும் தயாராகி விட்டதுதான் அதிசயம்; ராணுவ கட்டுப்பாடு என்கிறார்கள்; அப்படியென்றால் என்ன வென்பது இங்கே வந்து தெரிந்து கொண்டால் நன்று!

10.6.17 இரண்டாம் நாள் பயணம் காலை 6.45 க்கு நடைபயணம் துவங்கியது; காலை 10.15 மணிக்கு காலை உணவளித்து வாழப்பாடி தாலூக்காகுழு தோழர்கள் பிரியா மனதுடன் வழி அனுப்பினர்; அவர்களை இன்முகத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர் பெத்தநாயக்கன்பாளையம் சிபிஐஎம் தாலுக்கா குழு தோழர்கள்!

புத்தக்கவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் விடுதலை சிறுத்தைக் கட்சி கிழக்கு மாவட்ட தலவைர் மாஸ்கோ ரவி தலைமையில் பட்டாசு வெடியோடு, பாண்டு வாத்தியமிட்டு வரவேற்று பயணக்குழுவினரை திக்குமுக்காட செய்தனர்!

வழக்கபோல் இன்றும் மதிய உணவு மதியம் 2.30 மணிக்கு மானா வறுவலோடு, தென்னை, பாக்கு தோப்பில் விருந்துபோல் உபசரிப்பு மெய் மறந்தனர்! ருசியோ ருசி மானா வறுவல்!

பெ.நா.பாளையம் வரவேற்பு முடித்து, வழியனுப்ப... ஆத்தூர் தாலுக்கா குழு சிபிஎம் தோழர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்; நரசிங்கபுரத்தில் பழம், முறுக்கு கொடுத்து தோழர்களுக்கு மேலும் முறுக்கேற்றினர்! ஆனால் இந்த முறுக்கையே முறித்த வண்ணம் ஆதி தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் தலைமையில் ராசீபுரம் கூட்ரோட்டில் வரவேற்பு அமைந்து விட்டது எனலாம்!

ஆத்தூர் பேருந்து நிலையத்தில்... தன் மகன் இறந்து, அடக்கம் செய்த மறுநாளே "என் துக்கம் என்னோடு இருக்கட்டும்; வீதியிலே... செங்கொடி மைந்தர்கள் வரலாற்று சிறப்புமிக்க நடைபயணம் போகும்போது நான் பங்கேற்காமல் விட்டால், என் கட்டை வேகாது!" என தன் தனையன் உடலை தகனம் செய்த அந்த துக்கம் ஆறாமல்... அது தொண்டையை அடைத்தபோதும்கூட நிகழ்ச்சியில் பங்கேற்றதும், அதை சாமுவேல்ராஜ் சுட்டி மெச்சிப் பேசியதும் தோழர்கள் சிலிர்த்து போயினர்!

பொதுக்கூட்டத்தில் ஜக்கையன் சிறப்புரை எழுச்சி உரையாக அமைந்தது மிகுந்த சிறப்பு!

இன்று 10/6 இரவு ஆத்தூரில் தங்கி, நாளை காலை ஆத்தூரில் துவங்கி, காலை உணவு ஆத்தூரிலும், மதிய உணவு காட்டுக் கோட்டையிலும் எடுத்துக் கொண்டு தலைவாசல் கூட் ரோட்டில், விழுப்புரம் மாவட்ட தோழர்கள், சேலம் மாவட்ட தோழர்களிடமிருந்து பயணக்குழுவைப் பெற்று, பயணம் தொடர்ந்து மேற்கொண்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக 23.6.17 சென்னை கோட்டையில் நடைபயணம் நிறைவுறும்!

பயணத்தில் புதுச்சேரி சப்தர் கலைக்குழு மற்றும் சேலம் மாங்குயில் கலைக்குழுவின் நிகழ்ச்சிகளும், "வீதியிலே... வீதியிலே..." உள்ளிட்டு இதற்கென்று மதுரை வெண்புறா-கருணாநிதி தயாரிப்பில் வந்துள்ள பாடல்களும், அதன் வைர வரிகளும் மக்களை எழுச்சியுறும் வகையில் அமைந்திருக்கிறது என்றால்... அது மிகையல்ல!

*இனியொரு விதி செய்வோம் அதை என்நாளும் காப்போம்!*
*ஆணவகொலையை தடுக்கவில்லையெனில்... இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!*
நன்றி - தோழர் இ.எம்.ஜோசப்,
                முன்னாள் துணைத்தலைவர்,
                தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

எங்கள் வேலூர் கோட்டத்திலிருந்து  நாற்பது தோழர்கள் நாளை முழுதும் நடைப்பயணத்தில் பங்கேற்கிறோம். வேலூரிலிருந்து இன்று மாலை புறப்பட்டு கள்ளக்குறிச்சி சென்று  13.06.2017 அன்றைய இயக்கத்தில் பங்கேற்கிறோம். 

இன்னும் கூடுதல் நாட்கள் கூட பங்கேற்க வேண்டும் என்று உள்ளம் விரும்பினாலும் உடல், முக்கியமாக கால்கள் ஒத்துழைப்பு ஒரு நாளைக்கு மட்டுமே கிடைக்கிறது. 
 

No comments:

Post a Comment