Thursday, December 29, 2016

பத்து ரூபாய் காயின் பயம் போனதே . . .



காலையில் வீட்டிற்கு வந்த கீரைக்காரர்தான் கிலியை கிளப்பி விட்டார். இரண்டு கட்டு கீரையை கொடுத்து விட்டு முப்பது ரூபாய் கேட்டார். மேலே உள்ள மூன்று பத்து ரூபாய் காயின்களை கொடுத்தால் வாங்க மறுத்து விட்டார்.

“என்ன சார், பத்து ரூபாய் காயின் செல்லாதுன்னு தெரியாதா? என்று வேறு கேட்டார். நீயெல்லாம் என்னதான் படிச்சியோ என்று ஒரு ஏளனப் பார்வை வேறு. பத்து ரூபாய் காயினை எல்லாம் செல்லாதுன்னு சொல்லலீங்க. அதெல்லாம் வெறும் வதந்தின்னு ரிசர்வ் பாங்கே சொல்லிட்டாங்க என்றாலும் அவர் ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. இவனுங்களை நம்ப முடியாது சார். ஒருநாளைக்கு ஒரு பேச்சு பேசறாங்க. நெருப்பில்லாம புகையுமா என்பதோடு மட்டும் அவர் நிற்கவில்லை.

பணம் இல்லைன்னா பரவாயில்லை சார். அடுத்த முறை வரும் போது வாங்கிக்கறேன் என்று முப்பது ரூபாய்க்கு கடன்காரனாக வேறு மாற்றப் பார்த்தார்.

மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அவரை அனுப்பி விட்டேன். இந்த மூன்று காயினும் என்னைப்பார்த்து கிண்டல் செய்வது போலவே தோன்றியது. நேற்றைய அவசரச்சட்டம் வேறு நினைவுக்கு வந்து தொலைத்து விட்டது.

செல்லா நோட்டு அறிவிப்புக்குப் பிறகு அரை நாள் விடுப்பெடுத்து கையில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டையெல்லாம் வங்கியில் கட்டி விட்டோம் என்று நிம்மதியாக இருந்தேனே, இந்த மூன்று காயின்களை வைத்துள்ளதற்காக சிறை போகப் போகிறோமே என்று மிகவும் பதட்டமாகி விட்டது.

சரி, இதையும் இரண்டு நாளைக்குள் வங்கியில் கட்டி விடலாம் என்றால் விளக்கம் கேட்பார்களே, என்ன பதில் தருவது என்று ஒரு சிந்தனை வந்தது. வங்கியில் நுழையவே முடியாத கூட்டம் இருக்கையில் எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்தது.

சரி வீட்டிலேயே புதைத்து விடலாம் என்று நினைத்தால் “சிப்பு இருக்கு, சேட்டிலைட் மூலம் கண்டு பிடித்து விடுவோம் என்று எஸ்.வி.சேகர் வேறு மிரட்டுகிறார்.

வேலூர் கோட்டை அகழியில் நள்ளிரவு போய் வீசி விட்டு வந்து விடலாம் என்றால் வேலூர் தெருநாய் தொந்தரவு வேறு மிரட்டுகிறது.

மூன்று பத்து ரூபாய் காயின் வைத்திருந்த எல்.ஐ.சி ஊழியர் கைது என்று தின மலர் தலைப்புச் செய்தி போடுவார்களே, கைது செய்து கூட்டிப் போகையில் முகத்தை மறைக்க ஒரு துண்டு தயாராக வைத்திருக்க வேண்டுமே, இதற்கு ஜாமீன் கிடைக்குமா,  இப்படி எல்லாம் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

செல்லாத நோட்டு வைத்திருந்தால் கைது கிடையாது என்ற புதிய துக்ளக் அறிவிப்பு வந்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சே வந்தது.

ஆனாலும் இந்த முப்பது ரூபாயை எப்படி செலவழிப்பது?

யாரும் வாங்க மறுத்தால் நிஜமாகவே அது செல்லாக்காசுதானே!!!


3 comments:

  1. இங்கு தஞ்சையில் பயன்படுத்துகிறோம்.

    ReplyDelete
  2. பத்து ரூபாய் காசு செல்லாதா? கேள்விப்படவே இல்லையே? உன்மையா?

    ReplyDelete
  3. Ivlo kastathlayum sirrikirom parunga

    Br christo

    ReplyDelete