Wednesday, December 14, 2016

ஏ.டி.எம்மில் கால் நோகும் முன்னே . . .எப்போது பணம் எடுக்க வேண்டிய அவசியம் வருகிறதோ அப்போதுதான் ஏ.டி.எம் கார்டை எடுத்துச் செல்வேன். நவம்பர் எட்டாம் தேதிக்குப் பிறகு எப்போதுமே அது சட்டைப் பையில்தான் இருக்கிறது.

எந்த ஏ.டி.எம்மிலாவது பணம் இருக்கிறது தெரிந்தால் ஒரு ரோஸ்மில்க் கலர் நோட்டை எடுத்து வருவேன். அப்படிப்பட்ட சந்தர்ப்பம் மூன்று முறைதான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றதற்குப் பிறகு கிடைத்துள்ளது.

இன்று காய்கறி வாங்கச் செல்கையில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்த எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் ஒரு பெரிய வரிசை. ஒரு நாற்பது பேர் இருப்பார்கள். எத்தனை நேரம் நின்றாலும் சரி, காய்கறிக்கடைகள் மூடி நாளை சமையலே செய்ய முடியாத நிலை வந்தாலும் சரி, இன்று பணம் இல்லாமல் செல்லக் கூடாது என்ற தீர்மானகரமான முடிவோடு வரிசையின் வாலில் இணைந்தேன்.

பத்து நிமிடம் நிற்கும்போதே கால் வலி தொடங்கி விட்டது. காலே உடைந்து போனாலும் சரி, இன்று கண்டிப்பாக பணம் எடுத்தே ஆக வேண்டும் என்று காத்திருந்தேன்.

அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது.

எனக்கு முன்னால் வரிசையில் இருந்த எல்லோரும் வரிசையிலிருந்து விலகி விட்டார்கள். ஆஹா சிரமமே இல்லாமல் ஜெயமோகன் சொன்னது போல உடனடியாக இன்று பணம் கிடைக்கப் போகிறது போல என்று ஒரு உணர்வு ஏற்பட்டது.

பிறகுதான் தெரிந்தது.

ஏ.டி.எம் மில் பணம் தீர்ந்து விட்டதால்தான் வரிசை கலைந்தது என்று.

 

4 comments:

 1. ATM போகும்போது கூடவே ஒரு சேர் எடுத்து செல்லவேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.....! மத்திய அரசு அறிவிப்பு என்று கூடிய சீக்கிரம் செய்தி வரலாம்...

  ReplyDelete
 2. எங்கெங்கு காணினும் இதே காட்சிகள்தான்

  ReplyDelete
 3. "பத்து நிமிடம் நிற்கும்போதே கால் வலி தொடங்கி விட்டது."

  nalla udamba paarthukonga
  appothaan makkalukkaaga
  ulaikkamudiyum thozhar!


  oru aachariyamaana visayam

  yeppadithaan factory-la
  8 hr- 12hr ninnu velay seiraanglooo!!!

  ReplyDelete
  Replies
  1. மதிப்பு மிக்க, மரியாதைக்குரிய அனானி அவர்களே,

   என்னுடைய வலைப்பக்கத்திற்கு புதிதாக வருபவரா அல்லது முகத்தை மூடிக் கொண்டு தாக்குதல் நடத்தும் கோழைகளில் ஒருவரா அல்லது வன்மமான சிந்தனையையே வாழ்க்கையாகக் கொண்ட காவிக்கூட்டத்தின் அங்கமா என்று எனக்கு தெரியாது.

   உங்களது நக்கல் எனக்கு நன்றாகப் புரிகிறது. ஒரு வேளை எனது பக்கத்தை தொடர்ந்து படிப்பவராக இருந்தால், நான் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதால் வலது முழங்காலில் ஜவ்வு கிழிந்து போனவன் என்பதும் அதனை சரி செய்ய வாய்ப்பில்லை என்று கூறிய மருத்துவர்கள், நீண்ட நேரம் நிற்பதையோ, அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை அளித்துள்ளனர் என்பதும் அதை மீறியே நான் செயல்பட்டு வருகின்றேன் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

   வலது காலில் பிரச்சினை என்பதால் பெரும்பாலும் இடதுகாலுக்கு அழுத்தம் கொடுப்பதால் இடது காலிலும் அவ்வப்போது நரம்பு இழுத்துக் கொண்டு அந்த சில நிமிடங்கள் மரண வலி வந்து விடும். சொல்லப் போனால் இன்று காலை கூட அப்படிப்பட்ட வலியால் பாதிக்கப்பட்டேன்.

   என்னுடைய உடல் நிலை பற்றி தெரியாமல் எழுதியிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி தெரிந்துதான் எழுதினீர்கள் என்றாலும் கவலை இல்லை. விபத்தின் காரணமாக இயல்பான நடையை இழந்து சற்று விந்தித்தான் நடப்பேன். இதனை "சகுனி நடை" என்று ஒரு கண்ணியவான் நக்கலடித்தபோது கூட நான் வருந்தவில்லை. அவரது முகமுடி கிழிந்து போனது என்று ஆறுதலடைந்தேன்.

   இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு என்ன பணி செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே உடலை பார்த்துக் கொள்ளும்படி நீங்கள் காண்பித்த அக்கறைக்கு நன்றி.

   ஓய்வு பெற்ற ஒரு தோழருக்கு அவரது ஓய்வு கால பலன்கள் பெறுவதில் சில தடைகள் உள்ளன. அதற்காக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நேற்று சென்னையில் நடைபெற்றதால் உங்களது பின்னூட்டத்தை உடனடியாக வெளியிடுவத்ற்கோ பதிலளிக்கவோ முடியாமல் போய் விட்டது.

   ஏதோ உங்கள் கமெண்டைப் பார்த்து நான் பயந்து போய் விட்டதாக அற்ப மகிழ்ச்சி அடைந்திருந்தால் அது அபத்தமானது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

   பின்னூட்டம் போடுவதோ, நக்கல் அடிப்பதோ, திட்டுவதோ சமூக வலைத்தளங்களில் இயல்பான ஒன்று. அதை அனாமதேயமாகச் செய்வது என்பது கோழைத்தனமானது, கேவலமானது.

   Delete