Tuesday, October 13, 2015

முதலில் பாராட்டு. மத்ததெல்லாம் அப்புறம்தான்

புதுகை வலைப்பதிவர் விழா பற்றி ஒரு பதிவோடு நிறுத்திட முடியாது. 

விழா ஏற்பாடுகள்,
பதிவர் அறிமுகங்கள், சந்திப்புக்கள்,
சிறப்புரைகள்,
புத்தக வெளியீடுகள்,
ஓவியக் கவிதைகள்,
திரு எஸ்.ரா உரை 

என்று ஆறு  பதிவுகளாக எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.  

நான் பங்கேற்ற முதல் பதிவர் விழா இதுதான். முதல் பங்கேற்பே மனதில் நிற்கும் வண்ணம் இருந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினர்தான்.



பதினோரு மணிக்குத்தான் என்னால் அரங்கிற்கு செல்ல முடிந்தது. துல்லிய திட்டமிடல் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு  முன்பதிவு செய்திருந்த பதிவர்களுக்கென ஒரு பதிவேடு போட்டிருந்ததுதான். என் பெயரைச் சொன்னதும் மிகச் சரியாக வரிசை எண்ணைச் சொல்லி பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். பல முறை முன்பதிவோடு பரிச்சயம் இல்லாமல் வரிசை எண்ணைச் சொல்வதெல்லாம் சாத்தியம் இல்லை. அங்கேயே ஈர்த்தார்கள் நம் நெஞ்சை. கையெழுத்திட்டவுடன்  முகமலர்ந்த புன்சிரிப்போடு ஒரு கைப்பையும்  அதன் உள்ளே பதிவர் கையேடும் பேனா, குறிப்பேடு கொடுத்து  உள்ளே அனுப்பினார்கள்.

போதுமான இருக்கைகளும் காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட அரங்கம். சரியான ஒலியமைப்பு என்று ஒரு விழா கச்சிதமாக நடப்பதற்கான அனைத்து அமைப்புக்களும் சரியாக இருந்தது. சிறப்புரை, பதிவர் அறிமுகம், புத்தக வெளியீடு  போன்ற நிகழ்வுகளின் கால அளவு சரியாக திட்டமிட்டபடி நடந்ததால் ஒரு நிமிடம் கூட அலுப்பு தட்டவில்லை என்பது ஒரு சிறப்பு. 

புதுக்கோட்டை நகரில் இத்தனை சாதனையாளர்கள் உள்ளனவரா என்று மலைக்க வைக்கும் அளவிற்கு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களை கௌரவித்ததில்  ஒரு பாசம் தெரிந்தது.  அதே போல முந்தைய பதிவர் விழாக்களுக்கு அடித்தளமாக இருந்த சென்னை மற்றும் மதுரை மூத்த பதிவர்களை கௌரவித்ததில் பாரம்பரியம் தெரிந்தது.   சால்வைகளும் கேடயங்களும் அன்பை பறிமாறின.

பறிமாறல் என்று சொல்லும் போது உணவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாதே. உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் இருக்கை தேடி காய்கறி சூப் வந்தது. காலிக் கோப்பைகளை சேகரிக்கவும் வந்தார்கள். மதியமோ அறுசுவை உணவு அன்போடு கலந்து அளித்தார்கள். என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு பறிமாறினார்கள். மாலையிலோ அந்த மண்ணின் பாரம்பரியமான குழிப்பணியாரம் இருக்கை தேடி மீண்டும் வந்தது இஞ்சி கலந்த தேநீரோடு. 

மிகவும் நுட்பமான திட்டமிடலும் அதனை செயல்படுத்திய பாங்கும் அபாரம். விழாக்குழுவினர் ஓடி ஓடி உழைத்தார்கள். அதிலும் பெண்களின் பங்கு அற்புதம். ஆண்கள் ஜிகுஜிகுவென்ற சட்டையில் மின்ன பெண்களோ கைத்தறி சேலையில் எளிமையாய் இருந்ததே ஒரு வித்தியாசமான காட்சியாக இருந்தது.

அடுத்து விழாவை யார் நடத்தினாலும் அவர்களுக்கு ஒரு சவாலாகவே புதுகை வலைப்பதிவர் விழா இருக்கும்.

அந்த முறையில் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த விழாக்குழுத் தோழர்களுக்கும் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் நா.முத்து நிலவன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்கிறேன். 



தோழர் முத்து நிலவனுக்கே தெரியாமல் இன்ப அதிர்ச்சி அளிக்க ஆளுயர மாலையை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்ததும். அதை ஏற்க அவர் கூச்சப்பட்டதும் பிறகு அவர் அம்மாலையை எழுத்தாளர் எஸ்.ரா மற்றும் முதன்மை கல்வி அலுவர் திரு அருள் முருகனோடும் பகிர்ந்து கொண்டதும் சுவாரஸ்யமான காட்சி.



நானும் விழாவில் கலந்து கொண்டேன் என்பதற்கு சான்றான புகைப்படத்தை தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்திருந்த தோழர் முத்து நிலவன் அவர்களுக்கு நன்றி சொல்லி நாளை சந்திப்போம் என்றும் சொல்லி விடை பெறுகிறேன்.
 



 
 

13 comments:

  1. தோழரே! உங்களை புதுக்கோட்டையில் சந்தித்ததிலும், உங்களோடு உரையாடியதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. நன்றி... தோழர்

    ReplyDelete
  3. அருமை மட்டுமல்ல ! அனைத்தும் உண்மை!

    ReplyDelete
  4. ஆகா எங்கள் திட்டமிடலில் எங்கோ ஒரு ஓட்டை இருக்கும் போல உள்ளதே!
    நண்பர்கள் அனுப்பிய இந்தப் படத்தை வெளியிடாமல் மறைத்தல்லவா வைத்திருந்தேன்.
    எப்படி வெளியானது? பலர் சேர்ந்து செய்யும் வேலைக்கு ஒருவனுக்கு மாலை போடுவதில், மற்றவர் உழைப்பை அங்கீகரிக்காத அராஜகம் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். நம் தமிழ்த் திரைப்படங்களில் ஒருவனை வீரனாக்குவதற்காக பத்துப் பேரைக் கோழையாக்கிக் காட்டுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அதனால்தான் மறுத்தேன். ஆனால் இந்தச் சமூகத்தின் மிச்சசொச்சம் நம்மையும் விடமறுக்கிறதே!. இது ஊர்கூடித் தேரிழுத்த வேலை நண்பரே! ஒவ்வொரு இளைஞருக்கும், குறிப்பாக நீங்கள் சொன்னது போல என் அருமைத் தங்கையர் பலரின் வேர்வையின் விளைச்சல் இது! அவர்களுக்கு நான் ஆலோசகனாகவே இருந்து என்னாலும் இயன்றவரை உழைத்தேன். தங்களின் அன்பான பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. சந்திப்புக்கு வரமுடியாமல் போனதே என்று வருத்தமாக இருக்கிறது.......வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் விழா குழுவினருக்கு.....

    ReplyDelete
  6. நன்றி....நன்றி....நன்றிகள்!

    ReplyDelete
  7. விழாக்குழுவுக்கு பாராட்டுக்கள்.தொடர்கின்றேன் .

    ReplyDelete
  8. மறக்க முடியாத நிகழ்வு. அடுத்தடுத்து வரவுள்ள வலைப்பதிவர் விழாக்களுக்கு ஒரு முன்னணி உதாரணம். விழாக்குழுவினரின் ஈடுபாடு பாராட்டத்தக்கது. புதுக்கோட்டையில் அந்நாளில் அனைவரையும் கண்டதில் மகிழ்ச்சி. சிலருடன்தான் உரையாட முடிந்தது. நிகழ்வினைப் பகிர்ந்தவிதம் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் சார்..உங்கள் பாராட்டு எங்களின் உழைப்பிற்கு கிடைத்த பரிசாக நினைக்கின்றோம்....குழுவின் ஈடுபாடே வெற்றிக்கு காரணம்...சீருடை போடுவது என முடிவெடுத்த பின் பெண்களின் உடையை ஒத்த கலரில் சட்டை எடுக்க வேண்டும் என முடிவு செய்து அதன் பின் காலக்குறைவால் அந்த கலரில் ஆயத்த ஆடை எடுத்ததால் இப்படி ஆனது ..மேலும் உங்களின் பதிவுகளைக்காண ஆவலாக உள்ளேன் ...மிக்க நன்றி..

    ReplyDelete
  10. அருமையாக தொடங்கியுள்ளீர்கள். தொடரும் பதிவுகளை படிக்க இப்போதே ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உணவை பற்றி நீங்க புகழ்வதனால் அவர்கள் அங்கே தந்தது மிக சுவையான உணவுகளாக இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  12. நல்ல ஆரம்பம் சார்.

    ReplyDelete
  13. அட்டகாசமான விழாவில் கலந்துகொள்ள முடியாத ஏக்கம் மனதில் குடிகொள்கிறது!

    ReplyDelete