Tuesday, October 20, 2015

கரவொலிகளாய் வெடித்த ரணங்கள்(நீண்ட நாட்களாக டிராப்டிலேயே இருந்ததை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்)

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஏழாவது மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.


 

பேரணி வந்து சேருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக சென்றடைந்தோம். முன் வரிசையில் சில நாற்காலிகளில் மட்டுமே தோழர்கள் அமர்ந்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்துக்! நாற்காலிகளில் அமர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக எண்ணிக்கையில் கொண்டிருந்தார்கள். பேரணி வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் அத்தனை நாற்காலிகளும் நிறைந்து போனது. தங்களுக்கு ஒரு இடத்தைப் பிடிக்க என்று முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஓட்டம் ஓட்டமாக ஓடிப் போன காட்சியை இதுவரை எந்த நிகழ்விலும் பார்த்ததில்லை. எளிய உழைப்பாளி மக்கள் அல்லவாஇடம் கிடைக்காமல் நின்று  கொண்டிருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகளை முந்தைய இரண்டு பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருந்தேன். தோழர் பிருந்தா அவர்கள் உரையாற்றும் போது முக்கியமான இரண்டு விஷயங்களப் பற்றி அவர் பேசும் போது வந்த மலைவாழ் மக்களிடமிருந்து பலத்த ஆரவாரம் இருந்தது.

“எங்கள் மலைவாழ் மக்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் கலாச்சாரத்திலும் சுய மரியாதையிலும்  மேன்மையானவர்கள். எங்களது பெண்களின் மானத்தோடு காவல்துறையோ, வனத்துறையோ விளையாடினால் அதை சகித்துக் கொள்ள மாட்டோம். அதை எதிர்கொண்டு முறியடிப்போம். எங்கள் பெண்களுக்கு உங்களால் சிக்கல் வருமானாலும் செங்கொடி கொண்டு அதை தடுப்போம்”

என்றும்

“மாநில அரசு ஒப்புக் கொண்ட போதும் மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல் மட்ட அதிகாரிகள் வரை அலட்சியப்படுத்தி வருகின்றனர். சான்றிதழ் என்பது அவர்களது உரிமை. அது ஒன்று அதிகாரிகளின் மூதாதையர் சொத்து கிடையாது. குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு முதல் முறையாக 110 பேருக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது. அடைபட்டுக் கிடந்த தகவல்களை திறந்து விட்டோம். மற்றவர்களுக்கும் கிடைக்க தொடர்ந்து போராடுவோம்.”

இந்த இரண்டு விஷயங்களின் போது மட்டும் அவர்கள் மிகவும் ஆரவாரமாக வரவேற்றார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

காவல்துறையாலும் வனத்துறையாலும் மலைவாழ் மக்கள் தொடர்ந்து சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொய் வழக்கு போடுவது, அவர்கள் பயிர் செய்த விளைபொருட்களை சூறையாடுவது, இருப்பிடங்களை காலி செய்ய மிரட்டுவது, பாலியல் இச்சைக்கு பெண்களை உட்படுத்துவது போன்ற கொடுமைகள் சர்வ சாதாரணம். வாச்சாத்திப் பிரச்சினையும் திருக்கோயிலூர் அருகே இருளர் இனப் பெண்கள் காவலர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது ஓரளவு ஊடகங்கள் மூலமாக வெளி வந்த செய்தி. ஆனால் ஊடக வெளிச்சம் படாமல் எவ்வளவோ கொடுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அது போல எஸ்.டி சான்றிதழ் பெறுவது என்பது இன்று குதிரைக் கொம்பாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஒப்புக் கொண்டால் கூட கீழேயுள்ள அதிகாரிகள் மறுப்பது என்பது பல மாவட்ட அனுபவம். பழங்குடி மக்களின் குழந்தைகள் படித்து முன்னேறுவது என்பது அதிகாரிகளுக்கு கசக்கிறது. இட ஒதுக்கீடு என்பது சட்டத்தில் இருந்தாலும் சான்றிதழ் வழங்கப்பட மறுப்பதால் அதை அவர்கள் அனுபவிக்க முடியாத நிலைதான் இருக்கிறது. விடுதலை பெறுவதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தார்களோ, அப்படித்தான் இப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்த இரண்டும்தான் பழங்குடி மக்களின் முக்கியமான இரண்டு பிரச்சினைகள். காவல்துறை, வனத்துறை யின் அட்டூழியங்களும் ஜாதி சான்றிதழ் கிடைக்காத துயரமும் அவர்களின் மனங்களில் மாறாத ரணங்களாக இருக்கின்றன.

அதனால்தான் அப்பிரச்சினைகள் பற்றி தோழர் பிருந்தா காரத் பேசிய போது அவர்கள் அப்படி ஆரவாரம் செய்து வரவேற்றதாக நான் உணர்கிறேன்.

மோடி போல கூட்டத்தில் பேசிய உடனே மறந்து போகிற பாரம்பரியம் இடதுசாரிகளுக்குக் கிடையாது.

சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவார்கள். வெற்றியும் பெறுவார்கள். மலைவாழ் மக்களின் வாழ்வில் நிச்சயம் விடியல் பிறக்கும்.
1 comment:

  1. விடியலை எதிர்நோக்குவோம். நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete