Tuesday, October 27, 2015

மகாத்மாவால் பாராட்டப்பட்ட பார்வைத்திறனற்ற வழக்கறிஞர்

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வந்த அற்புதமான ஒரு கட்டுரை. இப்படி ஒரு மாமனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவில்லையே என்று வெட்கமாகக் கூட இருக்கிறது. இப்போதுதான் இக்கட்டுரையை வாசித்தேன். உடனடியாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவசியம் முழுமையாக படியுங்கள்

  சதன்குப்தாவின் பன்முகப்பார்வை
 

சாதனைகளுக்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டிய தோழர் சதன் குப்தா கடந்த மாதம் கொல்கத்தாவில் மரணமடைந்தார். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அகில இந்திய மேடையின் நிர்வாகக்குழு உறுப்பினர் மேற்குவங்கத்தை சேர்ந்த பார்வையற்ற தோழர் அனிர்பன் முகர்ஜி, உரிமைக்குரல் இதழுக்காக எழுதிய கட்டுரை யின் மொழியாக்கம்.இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பார்வையற்ற முதல் எம்.பி..!மேற்கு வங்க அரசின் தலைமை வழக்குரைஞர்... பார்வையற்றோர் கூட்டமைப்பை(சூகுக்ஷ) உருவாக்கியவர்களில் முதன்மையானவர்.. மேற்கு வங்கத்தில் மாற்றுத்திறனாளி இயக்கங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தவர்.. இடதுசாரி இயக்கத்தின் முன்னோடி.. மாணவர் சங்கத்தலைவர்.. தொழிற்சங்கத் தலைவர்.. என அடுக்கடுக்கான பொறுப்புகளுக்குச் சொந்தக்காரர் சதன் குப்தா.. தன்னுடைய இறுதி மூச்சு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் செயல் பட்டவர். 

கடந்த செப்.19 அன்று 98-வது வயதில் கொல்கத்தாவில் தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். தற்போதைய வங்கதேச தலைநகராக விளங்கும் டாக்காவில் 1917 நவம்பர் 7-இல் அதாவது ரஷ்ய புரட்சி வெற்றி பெற்ற தினத்தன்று பிறந்தவர் சதன் குப்தா.அவருடைய தந்தை ஜோகேஷ் சந்திர குப்தா பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராகவும் விளங்கியவர். ஒன்றரை வயதில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்த குழந்தை சதன் குப்தாவை பரிவோடு பாதுகாத்து வளர்த்தார் தாய் உஷா குப்தா

நாடாளுமன்ற-சட்டமன்றங்களில்

கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பள்ளி இறுதித் தேர் வில் பத்து முதன்மையான மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி. கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் பொருளியல் படிப்பில் முதுகலைப் பட்டம். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்ட படிப்பு. பின்னர் பாரிஸ்ட்டர் பட்டம் பெற்று 1942 செப்.14 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணி. அவருடைய சாதனைப் பட்டியல் மிகநீண்டது. 1944-இல் மஞ்சரி தாஸ் குப்தாஎன்ற வழக்கறிஞரை திருமணம் செய்தார். மஞ்சரி தாசும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். கல்லூரி படிப்பின்போது இடதுசாரி மாணவர் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட சதன் குப்தா, அப்போதைய வங்க மாகாண மாணவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் ஆங்கிலேயரின் அடக்குமுறை கடுமையாக இருந்த 1939ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆனார். ஆங் கிலேயரை எதிர்த்த போராட்டத்திலும் கட்சிப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சதன் குப்தா. நாடு குடியரசு ஆனதும் முதலாவது பொதுத் தேர்தல் வந்தது. அதில் கொல்கத்தா தென் கிழக்கு நாடாளுமன்ற தொகுதியில் ஜனசங்க ஸ்தாபகர் ஷியாமபிரசாத் முகர்ஜியை எதிர்த்து சதன் குப்தாவை வேட்பாளராக நிறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், ஷியாமபிரசாத் முகர்ஜியின் மறைவை அடுத்து நடை பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார் சதன் குப்தா. இம்முறை காங்கிரஸ் வேட்பாளரும் மிகப்பெரிய சட்ட நிபுணராகவும் திகழ்ந்த ராதா பினோத் பால் என்பவரை தோற்கடித்து வெற்றி பெற்றார் சதன்குப்தா. அதன் மூலம் இந்திய குடியரசின் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பார்வையற்ற உறுப்பினர் என்றபெருமையோடு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். 1957-இல் மீண்டும் வெற்றிபெற்று 1962 ஆம் ஆண்டு வரை சிறந்த நாடாளுமன்றவாதியாக ஜொலித்தார் சதன் குப்தா.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு தன்னை உறுதியாக இணைத்துக் கொண்டார் சதன் குப்தா. 1969 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் கொல்கத்தாவில் உள்ள காளிகட் சட்டமன்ற தொகுதி வேட்பாள ராக சதன் குப்தாவை நிறுத்தியது மார்க் சிஸ்ட் கட்சி. அதில் வெற்றி பெற்று மேற்குவங்க சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல்பார்வையற்ற உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு 13 மாதங்களில் அந்த சட்டமன்றத்தை எதேச்சதிகாரமாக கலைத்தது. அதுவரை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றினார் சதன் குப்தா.

தொழிலாளர்களின் தோழன்

ஐடிசி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சதன் குப்தா தொழி லாளிகளின் அன்புக்குரிய தோழனாகவும் விளங்கினார்.நாடாளுமன்றப் பணியோடு, அவரு டைய வாதத் திறமையின் காரணமாக பலமாநிலங்களில் நடைபெற்ற முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் சதன் குப்தா. இதனால், அவருடைய வழக்குரைஞர் பணி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தோடு மட்டுமல்லாமல், ஸ்ரீநகர், ஜோத்பூர், ஜெய்பூர், பாட்னா, அலகாபாத், கட்டாக், ஜாம்ஷெட்பூர், ஜபல்பூர் நகர்களுக்கும், அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் சிட்ட காங் நகருக்கும் விரிவடைந்தன. ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் அவருடைய பணி மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக சதன் குப்தா வாதாடாத வழக்குகளே இல்லை என்று சொல்லலாம். அதோடு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் மனித உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பலநீதிமன்றங்களில் வந்த பல வழக்கு களுக்கு எதிராகவும் அவர் ஆஜராகி வாதாடினார். கிழக்கு இரயில்வேயில் மின்மயமாக் கும் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை எந்த அறிவிப்பும் இன்றி நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார்.மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் இரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளை நிர்வாகம் பழிவாங்கியதை எதிர்த்து வாதிட்டு வெற்றிபெற்றதும் குறிப்பிடத் தக்கது. 

காந்திஜியின் வாழ்த்து

இந்திய பாதுகாப்புச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் ஆகிய கொடூரச் சட்டங்களை பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த விசாரணையும் இன்றி சிறையில் தள்ளிக் கொண்டிருந்தது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சி. இப்படி பாதிக்கப்பட்ட ஷிப்நாத் பானர்ஜி என்ற விடுதலை வீரருக்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார்சதன் குப்தா. பின்னாளில் இது ஒரு பிர சித்திபெற்ற வழக்காக கருதப்பட்டது. காரணம், சதன் குப்தாவின் திருமணத்தை வாழ்த்தி அவருடைய தந்தை ஜோ கேஷ் சந்திர குப்தாவிற்கு மகாத்மா காந்திஅனுப்பிய கடிதத்தில்.. “ஆங்கிலேயர் களின் கொடுங்கோல் சட்டங்களினால் பாதிக்கப்பட்ட ஷிப்நாத் பானர்ஜிக்கு ஆதரவாக ஒரு பார்வையற்ற இளைஞன் வாதாடி னான் என்பதை அறிந்தேன். வழக்கு ஆவணங்களையும் சில மாதங்களுக்கு முன்புதான் பார்த்தேன். அந்த பார்வை யற்ற இளம் வழக்கறிஞரின் வாதத் திறமைகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அந்த பார்வையற்ற இளம் வழக்கறிஞர் உங்களுடைய மகன் என்பதை நான் ஒருபோதும்அறிந்திருக்கவில்லை. தற்போது அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மகனுக்கும், அவரை மணமகனாக தேர்வுசெய்த மணமகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள்” என காந்தியடிகள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1977-இல் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பெரும் வீச்சில் நிலச்சீர் திருத்தத்தை அமல்படுத்த துவங்கியது இடது முன்னணி அரசு. உச்சவரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, பெரும் நிலச் சுவான்தார்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலங்களைப் பறித்து நிலமற்ற கிராமப்புற ஏழைகளுக்கு வழங்கும் உன் னதப் பணியை மேற்கொண்டது இடது முன்னணி அரசு. இது இடது முன்னணி அரசுக்குநாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால், நில உடமையாளர்கள் பலர் அரசின் இந்த நடவடிக் கையை எதிர்த்தனர். அனுதாபம் தேடி நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தனர். அந்த வழக்குகளை எதிர்கொள்ள கூடு தல் அரசு வழக்குரைஞராக சதன் குப்தா வை இடது முன்னணி அரசு நியமித்தது. சதன் குப்தா இடது முன்னணி அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை ஆதரித்துவாதாடி நிலச்சுவான்தார்கள் தொடுத்தவழக்குகள் அனைத்தையும் தோற்கடித்தார். சதன் குப்தாவின் திறமையைக் கண்டுஅவரை 1986 ஆம் ஆண்டுமேற்கு வங்க அரசின் தலைமை வழக்கறிஞராக நியமித்தது. இதன் மூலம் இப்படிப் பட்ட பதவியை பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் சதன் குப்தா பெற்றார்.

சமூகம் மற்றும் கல்விப் பணி

ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான இயக்கங்களிலும் ஈடுபட்டு பிரகாசித்தார். தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (சூகுக்ஷ) ஸ்தாபகத் தலைவராக அவர் விளங்கினார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இந்திய பிராந்தியத் தலைவராகவும்அவர் செயல்பட்டார். மாற்றுத்திறனாளிகள் அடங்கிய தூதுக்குழுவோடு சோவியத் யூனியனிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கல்வி கற்றுக்கொடுத்த கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளி, கொல்கத்தா காதுகேளாதோர் பள்ளி ஆகியவற்றின் நிர்வாகக்குழுத் தலைவராக பின்னாளில் சதன் குப்தா விளங்கினார். பத்வான் பவன் மாண்டிசோரி பள்ளி யின் தலைவராக பல ஆண்டுகள் செய லாற்றினார்.அவருடைய மறைவு நம் அனைவருக்கும், நாட்டிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஈடற்ற பேரிழப்பாகும். அவர் ஒரு சகாப்தம்.

தமிழில்: எஸ். நம்புராஜன்

நன்றி - தீக்கதிர்  27.10.2015


4 comments:

 1. அவர் புகழ் வாழ்க

  ReplyDelete
 2. அருமையான கட்டுரை சார்.
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  சதன் குப்தா மாமனிதர்தான்.

  ReplyDelete
 3. சிறப்பான ஒரு மனிதரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 4. தோழர் சதன் குப்தா வியக்கவைக்கிறார்
  தோழரின் நினைவினைப் போற்றுவோம்

  ReplyDelete