Friday, May 18, 2012

முடிவுகள் இரண்டு, உண்மை ஒன்று
உலகம் முழுதும் உள்ளவர்களின் கவனத்தை ஐரோப்பாவில் நடைபெற்ற இரண்டு நாடுகளின் தேர்தல் முடிவுகள் ஈர்த்துள்ளன. அம்முடிவுகள் சொல்லும் செய்திகளும் மிக முக்கியமானவை.

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி அடிப்படைவாதக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான நிக்கோலஸ் சர்கோஸ்கி தோற்றுப் போயுள்ளார். சோஷலிஸ்ட் கட்சியின் ஹாலன்டே புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

கிரீஸ் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு கூட்டணி அரசை உருவாக்கும் முயற்சி தோற்றுப்போய் வரும் ஜீன் மாதம்  மீண்டும் தேர்தல் நடைபெறப் போகின்றது.

இந்த தேர்தல்கள் உணர்த்தும் உண்மை என்ன?

சர்வதேச நிதி மூலதனத்தின் அளவு கடந்த லாப வெறி சர்வதேச பொருளாதர நெருக்கடியாக உருவெடுத்தது. பெரும் நிறுவனங்கள் திவாலாகின. திவாலின் விளிம்பிற்குச் சென்றன. நிறுவனங்களைப் பாதுகாக்க அரசுகள் தங்கள் கஜானாவை திறந்து விட்டன. அதனால் நாடுகளே திவாலாகும் நிலைக்குச் சென்றன.

நாடுகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களின் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர், உழைப்பாளிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். நலத் திட்டங்கள் வெட்டி சுருக்கப்பட்டன. சலுகைகள் பறிக்கப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அவர்கள் வீதிக்கு வந்தனர்.

முதலாளித்துவத்தின் அடையாளமான அமெரிக்கப் பங்குச்சந்தை அமைந்திருக்கும்  “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்” என்ற முழக்கத்தோடு தொடங்கிய போராட்டம் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போராட்டம் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது.

அடிப்படைவாத வெறியைத் தூண்டி மிகப் பெரிய ஆரவாரத்தோடு ஆட்சிக்கு வந்த சர்கோஸிக்கு பிரஞ்சு மக்கள் ஐந்தே ஆண்டுகளில் வீட்டிற்குப் போகும் வழியைக் காண்பித்து விட்டார்கள். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதன் அடையாளம் இந்த முடிவு. ஆட்சிக்கு வந்த ஹாலண்டே லத்தீன் அமெரிக்க சோஷலிஸ ஆட்சியாளர்களைப் போல அமைப்பு முறையை மாற்றியமைப்பார், பறிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் தானே வழங்கிடுவார் என்ற பிரமை நமக்கு இருக்க வேண்டியதில்லை.

அதே நேரம் சர்கோஸி வழியில் சென்றால் மக்கள் சர்கோஸி போலவே தன்னையும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்  என்ற எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

கிரீஸின் நிலைமை மாறுபட்டது. அங்கே பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது. அதனை கைதூக்கி விட ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது. ஆனால் அதற்கான விலையை அந்நாட்டு மக்கள்தான் ஏற்றாக வேண்டு. ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் ஏற்கனவே கடுமையான தாக்குதல்களைச் சந்தித்து போராட்ட களத்தில் நிற்கும் மக்கள் மீது இன்னும் கூடுதல் சுமையினை சுமத்த வேண்டியிருக்கும்.

தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசு அமைக்க தடையாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதில் கருத்தொற்றுமை வராததுதான். அதனால்தான் அந்த நாடு மீண்டும் தேர்தலை எதிர் நோக்கியுள்ளது. மீண்டும் தேர்தலுக்காக அங்கே உள்ள அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் குறித்து தங்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்திட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கட்சிகள் மேற்கொள்ளும் நிலைதான் கிரீஸின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அக்கட்சிகளின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யப் போகின்றது. முதலாளிகளின் நலனுக்காக மக்களின் எதிர்காலமா அல்லது மக்களின் நலனுக்காக முதலாளிகளின் எதிர்காலமா, யார் எதை காவு கொடுக்கப் போவதாகச் சொல்லுகின்றார்களே அதற்கேற்றார்போலத்தான் தேர்தல் முடிவும் அமையும்.

உலகமயமாக்கல் கொள்கைகளை அமுலாக்குவதை இனியும் நாங்கள் 

அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் பிரான்ஸ் மற்றும் கிரீஸ் மக்கள் 

தெரிவித்துள்ள திட்டவட்டமான செய்தி. இதை எல்லா நாட்டு 

ஆட்சியாளர்களுமே புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்திய 

ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment