Saturday, May 12, 2012

மதுரை ஆதீனம் - நித்தி - நாயன்மார்கள் -சில் உண்மைகள்

 தீக்கதிர் நாளிதழில் வெளியான தோழர் அருணன்,
கௌரவத்தலைவர், த.மு.எ.க.ச அவர்களின் ஆழமான
ஒரு கட்டுரை


ஆதீன விவகாரம் : சில வரலாற்றுத் திரிபுகள்
அருணன் 
மதுரை ஆதீனகர்த்தராக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து திருவாளர்கள் அர்ஜுன் சம்பத், பழ.கருப்பையா ஆகியோர் “தினமணி”யில் எழுதியிருக்கிறார்கள். இந்த நியமனத்தை “கேலிக்கூத்து” என்று வருணித்திருக்கிறார் முன்னவர் என்றால், பின்னவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். அவற்றில் சில பகுத்தறிவாளர்களும் பளிச்சென்று சொல்லக்கூச்சப்படக் கூடியவை.“ஒரு காலத்தில் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல ஆதீன கர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம்விடப்படுகின்றன. பழைய ஆதீன கர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம், தங்கச் சிம்மாசனம், தங்கச் செங்கோல் - அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ?”‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று அவர் (சம்பந்தர் சிவபெருமான் பற்றி) மக்களுக்குச் சொன்னதை தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது”.


“இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்கள் எல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப் படுவது போல இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக்கொண்ட போது இன்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக்கொடுமை!”- இப்படியெல்லாம் பழ.கருப்பையா (தினமணி 10.5.2012) தனது மனவேதனை யைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்து மடாதிபதிகள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதை விட, சுயமத நோக்கிலிருந்து பேசாமடந்தையாக இருப்பதைவிட இப்படிப் பொங்கி எழுந்தது வரவேற்கத்தக்கதுதான்.ஆனால், மடாதிபதிகள் சிலரின் போக்கு இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்யப்புகுந்து, மிக மோசமான வரலாற்றுத் திரிபுகளை இந்த பக்திமான்கள் முன் வைக்கிறார்கள்.“மதவெறி கொண்ட சமணர்கள் சம்பந்தரைக் கொலைசெய்யும் உள்நோக்கத் துடன் சம்பந்தர் தங்கியிருந்த இம்மடத்திற்கு தீ வைத்தனர்” என்கிறார் அர்ஜுன் சம்பத். ஆனால், இப்படியாக பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறவில்லை. “திருமடப்புறம்பு பழுது செய்வதோ” என்று மட்டுமே பாடியிருக்கிறார். ஆனால், எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது பற்றி விரிவாக விவரித்திருக் கிறார். இந்தக் கொடூரத்தைப் பாண்டிய மன்னன் செய்தபோது அதைத் தடுக் காமல் சம்பந்தர் வெறுமனே வேடிக்கை பார்த்தார் என்றும் சொல்லியிருக்கிறார்.“மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாது” இருந்தார் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.மடத்திற்கு தீ வைக்கப்பட்டதைச் சொன்ன அர்ஜுன் சம்பத், எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட அந்த உலகமகாக் கொடூரம் பற்றி மட்டும் ஏதும் சொல்லவில்லை! மடத்திற்கு தீ வைக்கப்பட்டது உண்மை என்றால் சமணர்கள் படுகொலை செய்யப்பட்டதும் உண்மைதானே? இரண்டும் அதே பெரிய புராணத்தில் இருப்பவைதானே? ஏன் பின்னதை மட்டும் சொல்லவில்லை? இங்குதான் புராணத்தைத் தங்களது வசதிக்கு ஏற்ப இந்துத்துவாவாதிகள் வாசிக்கும் தன்மை பளிச்சென வெளிப்படுகிறது.“சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை 63 நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” எனும் ஒரு பழைய துருப்பிடித்த பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார் அர்ஜுன் சம்பத். மதுரை ஆதீனமாக ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்தான் வரமுடியும் என்று இப்போதும் கூச்சமில்லாமல் வேறு சில ஆதீனங்கள் கூறுகிறார்கள் என்றால், அதுவெல்லாம் இடையில் வந்த சமாச்சாரம் என்பது போலச் சித்தரிக்கப் பார்க்கிறார்.


உண்மை என்னவென்றால் அப்பர் - சம்பந்தர் காலத்திலும், அதற்கு முன்பும் தமிழகத்தில் பெரிதும் தழைத்திருந்த மதம் சமணம், அடுத்து பௌத்தம். பெரும்பாலான தமிழர்கள் இந்த மதங்களில் இருந்ததால் அவர்களைத் தன் பக்கம் இழுக்க சைவம் சில சாகசங்களைச் செய்தது. அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த சிலரையும் நாயன்மார்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. ஆனால், அப்படிச் சேர்த்த பெரிய புராணமே அவர்கள் இந்த நிலையை அடையச் சில கொடூரமான தியாகங்களை அல்லது அவமானங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உற்சாகத்தோடு சுட்டிக்காட்டியது.சிதம்பரத்தில் நந்தனாருக்கு ஏற்பட்ட கதியை அறிவோம். சம்பந்தர் தனது பாடல் களுக்கு இசையமைத்துப் பாட பாணர் குலத்தைச் சார்ந்த யாழ்ப்பாணரையும் அவரது மனையாளையும் பயன்படுத்திக் கொண்டார் எனப் பெருமையோடு கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன் வாயிலில் நின்றுதான் பாடவைத்தார் சம்பந்தர். இதோ அந்த வரிகள் - “கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்குக் கும்பிடு வித்து/ ‘ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்’/ என ஆய புகழ்ப்பிள்ளையார்”.இதுதான் “சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது” என்பதன் சரிதம்! விஷயம் என்னவென்றால் சைவம் - வைணவம் என்பவை எல்லாம் அந்தக் காலத்திய சனாதன மதத்தின் பிரிவுகளே. அவற்றுக்கும் சாதியம் உண்டு. அன்றைய தமிழகத்தின் ஆளும் வர்க்கங்கள் அதைத் தங்களின் சமூகக் கட்டுமானமாக ஏற்றுக் கொண்டிருந்தன. இதற்கு ஆதாரமாக மூவர் தேவாரத்திலேயே நிறைய வரிகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் இருந்தால் சாதியம், தமிழில் இருந்தால் அது சாதியம் கிடையாது என்பது மெய்யான தமிழ்ப்பற்று ஆகாது, மாறாக இன்றைய நடப்புகளின் நேற்றைய மூலத்தை அறியவிடாமல் செய்துவிடும்.பழ.கருப்பையா எழுதுவதை நோக்குங்கள் - “தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவை தாம்” சமணம் - பௌத்தத்தை மட்டும் குறிப்பிடவில்லை; கவனமாகத் தவிர்த்து விடுகிறார். இந்தச் சைவம் - வைணவம் தழைத்தோங்குவதற்கு முன்பு தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்த மதங்கள் சமணம் - பௌத்தமே எனும் வரலாற்று உண்மையைச் சொல்லக்கூட மகாக் கூச்சம்! இவர்களால் மதுரை மடம் போன்றவற்றில் இன்று ஏற்பட்டுள்ள விவகாரங்களுக்கு நோய் முதல் நாடி சிகிச்சை அளிக்க முடியாது.பிற மத வெறுப்பு, சாதியம், பண ஆதிக்கம், மூடநம்பிக்கைகள் போன்றவை சைவத் திலும் புகுந்திருந்தன. அவை மெல்ல மெல்லப் பரவி ஆதீன கர்த்தாக்களின் தனி மனித ஒழுக்கவியலையும் அரித்துத் தின்றன. வெகு மக்களுக்கு இருக்கக்கூடிய மத நம்பிக்கையை, அதன் தோற்றுவாயை மார்க்சியர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதற்காக ஒரு மதமானது மேலே குறிப்பிடப்பட்ட கேடுகளைத் தழுவ வேண் டியதில்லை என்கிறார்கள். அப்படி அது செய்யும் போது அவற்றை எதிர்த்து பகுத் தறிவாளர்கள் மட்டுமல்ல பக்திமான்களும் போராட வேண்டும் என்கிறார்கள்.இங்கோ பழ.கருப்பையா போன்றோர் விஷயத்தைத் தனிமனித ஒழுக்கக் குறை வாகவே, துணிவின்மையாகவே பார்க்கிறார்கள். “ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார். அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர் களைக் கழுவிலேற்றினார். சமணம் ஒழிந்தது, சைவம் தழைத்தது. மெத்த சரி! திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப் பட்ட போது எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கு அழைத்ததுண்டா?” - என்று ஆத்திரத்தோடு கேட்கிறார்.இவர் ஆசையைப் பாருங்கள்! இதே மனிதர் கீதையைத் தமிழரின் தத்துவ நூலாக ஏற்க முடியாது என்கிறார். ஆனால் சைவர்களது திருமறைகளையும் வைணவர் களது பிரபந்தங்களையும் விமர்சித்தால் விடக்கூடாது என்கிறார்! சம்பந்தரைப் போல வாதுக்கு இழுத்து கழுவில் ஏற்ற வேண்டும் என்கிறார். பெரியாரை அப்படிச் செய்திருந்தால் தற்காலத்தில் சைவம் தழைத்திருக்கும் என்கிறார். அண்ணா பெயரால் உள்ள கட்சி சார்பாக நின்று இந்த மகானுபாவர் எம்எல்ஏ ஆகியிருக்கிறார்!
பெரியார் மட்டுமல்ல அண்ணாவும் பெரிய புராணம், தேவாரம், ஆழ்வார் பாசுரம் இத்யாதி இத்யாதிகளை விமர்சித்தவர் என்பதை இவர் அறியாரா?? அறிந்தேதான் இப்படி எழுதியிருக்கிறார்!அவருக்குச் சொல்லிக் கொள்வோம். சமஸ்கிருத கீதையானாலும் சரி, தமிழ்ச் சமய நூல்களானாலும் சரி விஷயம் மொழி பற்றியது அல்ல. அவற்றில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். அது பிறமத வெறுப்பாக, சாதியமாக, ஆணாதிக்கமாக, பணஆதிக்கமாக, மூடநம்பிக்கைகளாக இருந்தால் நிச்சயம் மார்க்சியர்கள் எதிர்ப்பார்கள்.பெரியார் தனது எதிர்ப்பைச் சற்று முரட்டுத்தனமாகச் செய்திருக்கலாம். மார்க் சியர்களோ இன்னும் தர்க்கரீதியாக, இன்னும் சரித்திர ரீதியாகச் செய்வார்கள். அப்படியாக வாது செய்ய அவர்கள் தயார் - எதிராளிகள் கழுமரத்தோடு வந்தாலும் சரி, நவீன காலத்திற்கு ஏற்ப கடப்பாரையோடு வந்தாலும் சரி! 


--
அப்பர் - சம்பந்தர் காலத்திலும், அதற்கு முன்பும் தமிழகத்தில் பெரிதும் தழைத்திருந்த மதம் சமணம், அடுத்து பௌத்தம். பெரும்பாலான தமிழர்கள் இந்த மதங்களில் இருந்ததால் அவர்களைத் தன் பக்கம் இழுக்க சைவம் சில சாகசங்களைச் செய்தது.
--

நன்றி - தீக்கதிர்

2 comments:

  1. நீங்கள் சொல்வது உண்மை; அதையே நானும் எனது பதிவில் எழுதியுள்ளேன். இவர்கள், அர்ஜுன் சாமப்த் வகையறா எதிர்த்து வாதம் செய்ய மாட்டார்கள்; ஆனால், அவர்கள் புளுகை தொடர்ந்து புளுகுவர்கள்.

    ReplyDelete
  2. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.பார்பான் உன்னை ஏய்க்கப்பார்பான் என்பதை மறந்துவிடக்கூடாது.

    ReplyDelete