Saturday, December 5, 2020

இன்றும் பொருந்தும் புயல் பறவையின் பாடல்

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்கள் தமிழாக்கம் செய்த மார்க்சிம் கார்க்கியின் பாடலை பகிர்ந்து கொண்டுள்ளேன். 1901 ல் ஈழுதப்பட்ட பாடல் இன்றும் பொருத்தமாக உள்ளது. 


புயல் பறவையின் பாடல்




(மார்க்சிம் கார்க்கி 1901இல் எழுதிய இந்தக் கவிதை ரஷ்யப் புரட்சியின் கீதம் என்று அழைக்கப் பட்டது. லெனின் விரும்பியது.)

கடலின் சாம்பல் சமவெளிக்கு மேலே உயரத்தில்
காற்று மேகங்களைத் திரட்டுகிறது.
கடலுக்கும் மேகங்களுக்கும் இடையே
ஒரு கருப்பு மின்னலைப் போல் கர்வத்துடன்
மேலெழும்புகிறது பெட்ரல் பறவை.

மேகம் நோக்கிப் பாயும் அம்பினைப் போல்
சிறகின் நுனியால் அலையை அடித்துப் பாடும் பறவையின் கூவலில் தெரியும் மகிழ்ச்சியையும் வீரத்தையும் மேகங்கள் கேட்கின்றன.
அந்தக் கூவலில்,
புயலைக் குடிக்க நினைக்கும் தாகத்தையும்
கோபம் கொப்பளிக்கும் வலிமையையும்
உணர்ச்சியின் ஜுவாலையையும்
வெற்றியின் நிச்சயத்தையும்
கேட்கின்றன மேகங்கள்.

புயலுக்கு முன், முனகும் சீகல் பறவைகள்
அலைகளுக்கு மேல் பறந்து அச்சத்தை
கடலுக்கடியில் மறைக்க முனைகின்றன.
போர் தரும் மகிழ்ச்சியை அறியாத
லூன் பறவைகளும் முனகுகின்றன.
மோதல்களின் இரைச்சல்
அவற்றின் அச்சத்தைக் கூட்டுகின்றன.
மந்த புத்தி பெங்குவின் தன் கொழுத்த உடலை
பாறை இடுக்குகளில் வெட்கத்துடன் ஒளித்து வைக்கிறது.

பெட்ரல் பறவை மட்டுமே
சாம்பல் நிறக் கடலின் அலைகளின நுரையுடன்
சேர்ந்து மேலெழும்பி சுதந்திரமாகப் பறக்கிறது
கருமேகங்கள் கடலை நோக்கிக் கீழிறங்கும் போது
பாடும் அலைகள் இடியைச் சந்திக்க
விண்ணை நோக்கி எழுகின்றன.
இடி உறுமுகிறது.
காற்றுடன் மோதும் அலைகள்
நுரைக்கும் கோபத்துடன் சீறுகின்றன.
காற்று அலைகளின் கூட்டத்தை ஆரத் தழுவி
மலை முகட்டின் மீது கோபத்துடன் அறைகின்றது;
அந்த எமரால்டு மலைகளைத் தூளாக்குகிறது.

இந்த பெட்ரல் மட்டும் ஒரு கருப்பு மின்னலைப் போல,
மேகத்தைக் கிழிக்கும் அம்பு போல
போர்க்கூச்சலிட்டு மேலெழும்பி
தன் சிறகினால் அலை மீதிருக்கும் நுரையைக்
கிழித்தெடுக்கிறது.
புயலெனும் கர்வம் மிகுந்த கரும்பூதத்தை
உடைத்தெறியும் பெட்ரல்
மேகங்களைப் பார்த்து சிரிக்கிறது.
ஆனந்தத்தினால் அழுகிறது.
இடியின் கோபத்தைப் பார்த்த புத்திசாலியான
புயலெனும் பூதம் தன் பலவீனத்தை உணர்கிறது.
மேகங்கள் சூரியனை மறைக்க முடியாதென
அதற்கு நிச்சயமாகத் தெரியும்
காற்று ஊளையிடுகிறது...
இடி உருளுகிறது....
கடலெனும் தரையில்லாப் பெருங்குழிக்கு மேலே
மேகக் கூட்டங்கள் நீலச் சுவாலைகள் போல எரிகின்றன.
கடல் மின்னல் கீற்றுகளைப் பிடித்து நீருக்குள் மூழ்கடிக்கிறது.
மின்னல் கீற்றுகள் நெருப்பினாலான பாம்புகளைப் போல் நீர்ப் பரப்பில் வீழ்ந்து மங்கி மடிகின்றன.
சினத்தால் சீறும் கடலுக்கு மேல்
மின்னலைப் போல் கர்வத்துடன் எழும்
வீரமிகு பெட்ரல்
விரைவில் புயலைத் தாக்கும்.
வெற்றிக் கூச்சலிடும்!

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

1 comment: