Monday, December 24, 2018

பொங்கலுக்கு வந்தாலே சந்தோஷம்தான்






கஜா புயல் நிவாரணப் பணிகளின் போது நாங்கள் சந்தித்த மிக முக்கியமான பாதிப்பு மின்சார வெட்டு.

பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரவலாக்கோட்டை என்ற கிராமத்திற்குப் போயிருந்தோம். நான்கு மணிக்கு முன்பாக அங்கே சென்றிட வேண்டும் என்று தஞ்சைக் கோட்டத் தோழர்கள் வலியுறுத்தினார்கள்.

அதற்கான காரணம் ஓரிரு நிமிடங்களிலேயே தெரிந்து விட்டது.

செல்லும் வழியெங்கும் பார்த்த காட்சி அப்படி

விழுந்து கிடந்த மின் கம்பங்கள், அறுந்து கிடந்த மின் கம்பிகள்.

அந்தப் பக்கம் எல்லாம் இன்னும் மின் வாரிய ஊழியர்கள் அனுப்பப்படவே  இல்லை.

பட்டுக்கோட்டை நகரத்திலேயே இன்னும் பல வார்டுகளில் அப்போது மின்சாரம் வந்திருக்கவில்லை. ஏன் எங்கள் எல்.ஐ.சி பட்டுக்கோட்டை கிளை அலுவலகமே ஜெனரேட்டரில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட பின்பு கிட்டத்தட்ட முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரத்த நாடு வருகிற வரைக்கும் வழியில் எங்குமே மின்சாரம் இல்லை.

வேலை நடக்கவே இல்லை என்று சொல்ல மாட்டேன்.  இருக்கிற ஊழியர்கள் வேகமாகத்தான் பணி செய்கிறார்கள்.   மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும்  மின் ஊழியர்கள் வந்திருந்தாலும் பாதிப்புக்கு ஏற்ப போதுமான ஊழியர்கள் களமிறக்கப்படவில்லை.

வந்திருப்பவர்களுடைய பணி அபாரமானது. காலை முதல் இரவு இல்லாமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டுள்ளனர். நம்பிவயல் என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் பணி செய்து கொண்டிருந்த மின் ஊழியர்களைப் பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தோம். அந்த உழைப்பாளி மக்களோடு பெருமையோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டிருந்தோம்.

அவர்கள் மேட்டூரிலிருந்து வந்தவர்கள்.  போதுமான வசதிகள் உள்ளதா என்று  கேட்டபோது கல்யாண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் என்று கூறினார்கள். உணவெல்லாம் எப்படி என்றதற்கு ம்ம்ம் என்ற தலையாட்டல் கிடைத்தது. அதற்குப் பிறகு வேறெதுவும் கேட்கவில்லை. சென்னைத் தூய்மைப் பணிக்குச் சென்ற துப்புறவுத் தொழிலாளிகள் எப்படிப்பட்ட அவஸ்தைக்கு உள்ளானார்கள் என்பதுதான் நினைவுக்கு வந்தது.

கடினமான சூழலில் பணியாற்றி வரும் மின் ஊழியர்கள் சாதாரண ஊழியர்கள் அல்ல.

ஒளி தரும் மனிதச் சூரியர்கள்

பட்டுக்கோட்டையிலிருந்து புறப்படும் வேளையில் தேநீர் அருந்தும் நேரத்தில் பட்டுக்கோட்டை அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு தோழர் சொன்னார்.

“பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திலிருந்து வருகிறேன். மின்சாரம் இல்லாமல் வாழ பழகிக் கொண்டிருக்கிறோம். பொங்கலுக்குள்ளாவது மின்சாரம் மீண்டும் வந்தால் அதுவே பெரிய சந்தோஷம்”

வருமா மிஸ்டர் எடப்பாடி?

பதிவு தொடரும் . . .


6 comments:

  1. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. கோழை அனானி, உன்னுடைய சொந்த அடையாளத்தோடு பின்னூட்டமிடு. உன் நாற்றமடிக்கும் கமெண்டுகளை வெளியிடுகிறேன்

    ReplyDelete