Sunday, December 23, 2018

அனுமான் ஜாதி ஆராய்ச்சி முடிந்தால்?
எல்லை மீறும் பாஜகவினரின் சாதி ஆராய்ச்சி

வாலி, சுக்ரீவன், ஜடாயு சாதியும் கண்டுபிடிப்பு


புதுதில்லி, டிச.21-ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனுமன் ஒரு தலித் என்றுஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமனின் சாதியைக் கண்டுபிடித்தார். ‘பஜ்ரங் பாலி ஒரு தலித்’ என்றுஅவர் கூறினார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரான நந்த் கிஷோர் சாய், அதற்கு மறுப்பு தெரிவித்து, அனுமன் தலித் அல்ல, “பவன்புத்திரா மற்றும் கேசரிநந்தன் என்று அழைக்கப்படுகின்ற அனுமன், உண்மையில் வனத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்” என்று மற்றொரு தகவலைக் கூறினார். 

இதைக்கேட்டு சண்டைக்கு வந்துவிட்ட மத்திய அமைச்சர் சத்யபால் சிங்,“அனுமன் தலித்தும் அல்ல; பழங்குடியும் அல்ல; அவர் ஆரியன்; ஏனென்றால் அனுமன் காலத்தில் தலித்துக்களே இல்லை” என்று கூறினார்.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநில மேலவை உறுப்பினர் புக்கால் நவாப், ‘இந்துக்களின் கடவுளான அனுமன் ஒரு முஸ்லிம்’ என்று கூறி,புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ள அவர், “இந்து கடவுள் அனுமான் ஒரு முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் இஸ்லாமியரின் பெயர்களை போன்றுதான் அனுமன் பெயரும் உள்ளது. ரஹ்மான், ரம்ஜான், ஃபர்மான், ஜிசான், குர்பாஃன் போன்ற பெயர்கள் இஸ்லாமிய மதத்தில் தான் சூட்டப்படுவது வழக்கம்; ஹனுமான் என்றபெயரிலிருந்து தான் இந்தப் பெயர்களெல்லாம் சூட்டப்பட்டு இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளார். 

கண்டுபிடிப்புகளில் புக்கால் கூறியது வித்தியாசமாக இருக்கிறது. இந்து கடவுளை முஸ்லிம் என்றது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றாலும் பாஜக எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது புதிதாகும்.இதை அறிந்து தானோ என்னவோபுக்கால் நவாப்பின் ஆராய்ச்சிக்கு, சவால் விடும்வகையில், பாஜகவின் ஹரி ஓம் பாண்டே என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் சாதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்துத்துவா கோட்பாட்டு படி அனுமன் பிராமணர் என்பதை விட்டு கொடுக்க ஹரிஓம் பாண்டே தயாரில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் ஹரி ஓம் பாண்டே, அனுமன் ‘பிராமணன்’ என்ற முடிவுக்கே வந்துள்ளார்.

இதில்,விஷேசம் என்னவென்றால், அனுமனோடு நிற்காமல், அனுமனைப் போலவே ராமனின் உதவியாளர்களாக இருந்த சுக்ரீவன், ஜடாயு போன்றவர்களின் சாதியையும் நோண்டி நுணுகிகண்டுபிடித்து ‘சாதனை’ படைத்துள்ளார். 

வானர நாட்டின் தலைவன் சுக்ரீவன் குர்மி; அவருடைய அண்ணன் வாலி யாதவர், சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்ற முற்படும் ஜடாயு ஒரு முஸ்லிம்;இலங்கைக்கு பாலம் கட்ட உதவிய வானர சேனையை சேர்ந்த நால்நீல் விஸ்வகர்மா என்று கண்டறிந்துள்ளார். 

இதில், சுக்ரீவன் குர்மி எனும்போது, அவரது அண்ணன் வாலி மட்டும் எப்படியாதவர் ஆனார்? என்று கேள்வி வந்தாலும், அது தொடர்பாகவும் விரைவில் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவுகளை பாஜக தலைவர்கள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

செய்தி - தீக்கதிர் 22.12.2018 

பிகு: 

இந்த ஆராய்ச்சிகள் முடிந்தால் ராஜராஜ சோழனை விட அதிகமான ஜாதிகளைச் சேர்ந்தவர் அனுமானாக மாறி விடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இது மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தின் பிரம்மாண்ட சாதனையாக தஞ்சை கோயிலில் கல்வெட்டாக பொறிக்க "சீசீ.ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த" தொல்லியல் நிறுவினாலும் நிறுவலாம் . . .

No comments:

Post a Comment