Friday, December 28, 2018

ரயிலில் ஒரு குடிமகனோடு மோதல் . . .நேற்று விழுப்புரத்தில் ஒரு கூட்டம். 

எங்கள் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் நினைவு நாளை ஒட்டி நாங்கள் நடத்திய புது வணிகப் போட்டியில் வெற்றி பெற்ற முகவர்களுக்கு பரிசளிப்பு,  31.12.2018 அன்று ஓய்வு பெறவுள்ள தோழர் ராதாகிருஷ்ணன் என்ற உறுதியான தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, 8,9 ஜனவரி 2019 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்ட கோரிக்கை விளக்கக் கூட்டம் என 3 இன் 1 ஆக நடைபெற்ற கூட்டம் அது. 

கூட்டம் முடிந்து விழுப்புரம் - காட்பாடி பாஸெஞ்சரில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்தேன். நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்த அந்த புகை வண்டியில் பெரிய கூட்டமில்லை. இருக்கைகள் பலவும் காலியாகவே இருந்தது. 

ஒற்றை இருக்கையாகப் பார்த்து அமர்ந்து கொண்டேன். எதிர் இருக்கை காலியாகவே இருந்தது. வெண்மணி தியாகிகள் தினத்தன்று வெளியிடப்பட்ட தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய "மார்க்சியம் என்றால் என்ன?" நூலை படித்துக் கொண்டிருந்தேன். 

திருக்கோயிலூர் வந்த போது ஒரு தொலைபேசி வந்தமையால் கையிலிருந்த புத்தகத்தை எதிர் இருக்கையில் வைத்து விட்டு அழைப்பிற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். 

அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு குடிமகன் எனது இருக்கையை கடந்து போய் விட்டு மீண்டும் திரும்பி வந்து எதிர் இருக்கையில் இருந்த புத்தகத்தை கோபமாக கீழே தள்ளி விட்டு அங்கே அமர்ந்து கொண்டு யாருடனோ போனில் பேசுவது போல நடித்துக் கொண்டிருந்தான். 

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

எங்களுக்குள் நடந்த உரையாடல்

அவன் : என்ன பாக்கறே! நாந்தான் புக்கை எடுத்துத் தரனுமா?

நான் : நீங்கதானே கீழே தள்ளி விட்டீங்க? நீங்கதான் எடுத்துத் தரனும்.

அவன்: இது என்ன ரிசர்வேஷன் சீட்டா? நீங்க (டக்கென்று மரியாதை வந்து விட்டது? என்ன ரிசர்வ் செஞ்சி வச்சீங்களா?

நான்: நீங்க ரிசர்வ் செஞ்சி வச்ச சீட்டா? 

அவன்: அதுக்காக புக்கை வைப்பீங்களா?

நான்:  நான் புக்கை வச்சதில என்ன பிரச்சினை?

அவன்: நாந்தான் எடுத்துக் கொடுக்கனுமா?

நான்: மேனர்ஸ் இல்லாம தள்ளி விட்ட நீங்கதான் எடுத்துத் தரனும்

அவன்" அது என்ன உங்க சீட்டா?

இந்த உரையாடல் முற்றுவதற்குள் அவனின் நண்பர் ஒருவர் வந்து விட்டார். 

அண்ணே! ட்ரெயின் ஏறதுக்கு முன்னாடி சரக்கு போடாதேன்னு சொன்னா கேட்கறதில்லை. டெய்லி யாரோடயாவது தகராறு செஞ்சு கிட்டே இருக்க! அந்த புக்கை எடுத்து கொடுத்துட்டு வா! நம்ம சீட்டுக்கு போகலாம்

என்று இழுக்க அவனும் புத்தகத்தை மீண்டும் கோபமாக எடுத்து கொடுத்து விட்டு போய் விட்டான்.

பாவம் அவனுக்கு என்ன பிரச்சினையோ?

புத்தகம் பிரச்சினையோ இல்லை புத்தகத்தின் அட்டையில் இருந்த மார்க்ஸ் பிரச்சினையோ தெரியவில்லை.

இல்லை ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற மனரீதியான பிரச்சினை அவனுக்கு உள்ளதா என்றும் தெரியவில்லை.

காரணம் எதுவும் இல்லாவிட்டலும் ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற சேடிஸ மனநிலை கொண்டவர்கள் கொண்ட இந்த உலகத்தில் போதையில் பிரச்சினை செய்கிற அவன் மீது கோபம் வரவில்லை. இரக்கம்தான் வந்தது. 

பிகு:

சிவசேனா மகாராஷ்டிர மாநில அரசிடம் முன்வைத்துள்ள ஒரு கோரிக்கையை காலை செய்தித்தாளில் படித்தவுடன்தான் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அது என்ன கோரிக்கை? மாலை பார்ப்போம்

No comments:

Post a Comment