Thursday, March 23, 2017

கா.கொ.கூ.க.வி.சு.சா.க.விளம்பரம்காட்டிக் கொடுத்த கூட்டத்து கலப்பட வியாபாரி சுடிதார் சாமியாரின் கபட விளம்பரம்.


போலிச்சாமியாரும் புதிய கலப்பட வியாபாரியுமான ராம்தேவ், இன்று தனது பதஞ்சலி பொருட்களுக்காக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். பன்னாட்டுக் கம்பெனிகளை புறக்கணிக்க வேண்டும் என்பது சரிதான். இதை பன்னாட்டுக் கம்பெனிகளின் தரகரான மோடியின் மடியில் அமர்ந்து கொண்டு சொல்வதுதான் அயோக்கியத்தனம்.

பகத்சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் தனது பொருட்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்துவது என்பது கேவலமானது.

கோட்சேவின் பெயரையோ, சவர்க்காரின் பெயரையோ சொல்லி விற்க முடியாது என்று தெரிந்ததால் பகத்சிங்கின் பெயரை பயன்படுத்துகிறார்.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக போலியாக விளம்பரத்தில் முழங்கிய ராம்தேவால் இக்கருத்தை மோடியிடம் நேரடியாக முழங்க முடியுமா?

தூக்குக்கயிற்றை தைரியமாக சந்தித்த ஒரு வீரனின் பெயரை உச்சரிக்க, காவல்துறை கைது செய்து விடுமோ என்று பயந்து சுடிதார் அணிந்து தப்பித்த இந்த கோழைக்கு அருகதை உண்டோ?

போலிகள், போலிகள், போலிகள்.
காசுக்காக எதையும் செய்ய வெட்கப்படாத இழி பிறவிகள்.

பகத்சிங் மீது இன்னும் பயம் ......
இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மகத்தான தியாகிகள்
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு என் வீர வணக்கம். 

விடுதலைக்குப் பிந்தைய இந்தியா உழைக்கும் வர்க்கத்தின் வசம் வர வேண்டும் என்ற அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற சூளுரைப்போம். 

"நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று சின்னஞ்சிறு வயதில் மிகப் பெரிய கருத்துச் செறிவோடு எழுதிய பகத்சிங் இன்னும் ஆட்சியாளர்களை அச்சுறுத்துகிறான்.

மூவர் நினைவுநாளை ஒட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற வாலிபர் பேரணியில் தடியடி நடத்தியுள்ளது அம்மாநில பாஜக அரசு.

வேலூரில் இன்று நடைபெற இருந்த இளைஞர் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது இடைக்கால எடப்பாடி அரசு.

வெள்ளை ஏகாதிபத்திய அரசை அச்சுறுத்திய பகத்சிங்கைக் கண்டு, இன்றைய  ஆட்சியாளர்களும் நடுங்குவது ஏன்?

பகத்சிங் எழுப்பிய முழக்கம், பகத்சிங் உயர்த்திப் பிடித்த சோஷலிச லட்சியம், அவர்களை அச்சுறுத்துகிறது. காவிப்படைக்கு கூடுதலாகவே பகத்சிங் என்றால் பயம் வருகிறது. தங்களால் மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்களை விடுவிக்கும் சக்தி பகத்சிங்கிற்கு உண்டு என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது. 

பின் குறிப்பு: இதனை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.  மூன்றாண்டுகள் முன்பாக மக்களவைத் தேர்தலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விருதுநகரில் ஒட்டிய ஒரு சுவரொட்டியை பாஜக ஆட்கள் கிழித்துப்போட்டு, இது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்பதாக காவல்துறையிலும் புகார் கொடுத்தார்கள். 

பாஜக பார்வையில் இதுதான் தேசத்துரோகம். இந்த வாசகங்களைத்தான் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு பயம் . . . . .

 

Wednesday, March 22, 2017

ஊழல் கட்சிகள் – பிபிசி பெயரில் ஊழல்

மேலே உள்ள தகவல்கள் வாட்ஸப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாக பார்க்கிறபோதே இது ஏதோ வில்லங்கம் என்று தெரிந்தது.

2017 ம் ஆண்டின் ஊழல் கட்சிகள் என்று சொல்லப்படுகிற இந்த பட்டியலில் உள்ள சில கட்சிகள் காணாமல் போய் எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டது.

சோவியத் யூனியனே இல்லை. ஆனால் பட்டியலில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
                                                        
ஜெர்மனியின் ஹிட்லர் கட்சியும்
இத்தாலியின் முசோலினி கட்சியும்

இன்னும் அந்த பட்டியலில் இருக்கிறது.

பிடல் கேஸ்ட்ரோ, புரட்சி மூலம் தூக்கியெறிந்த பாடிஸ்டா கட்சிக்குக் கூட 2017 பட்டியலில் இடம் தருகிறார்கள்.

சியாங்கே ஷேக் கட்சியும் கூட இங்கே உள்ளது.

இப்படி ஒரு அபத்தமான சர்வேயை பி.பி.சி செய்திருக்குமா என்று தேடிப்பார்த்தால் உண்மை தெரிந்தது.

பி.பி.சி பாய்ண்ட் என்று ஒரு இணையதளம் இதைப் பிரசுரித்ததாம். அது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை போட்டுத் தள்ள உருவாக்கியதாம். இப்படி ஒரு சர்வே எதுவும் தங்களால் நடத்தப்படவில்லை என்று பி.பி.சி யும் தெளிவுபடுத்தி விட்டது.

காங்கிரஸ் கட்சியின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளதால் பாவம் பலர் இதனை உற்சாகமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்படி ஒரு மோசடி வேலையை பலர் நம்பியதுதான் பரிதாபகரமானது.

ஊழல் கட்சிகள் என்று பட்டியல் தயாரித்ததிலேயே ஊழல். ஆமாம், இந்த சவப்பெட்டி ஊழல், வியாபம் ஊழல், கடலை மிட்டாய் ஊழல் செஞ்ச் கட்சியெல்லாம் ஏம்பா பட்டியலில் வரவில்லை? லஞ்சம் கொடுத்தாங்களா?

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க. அடுத்து என்ன மோசடி செய்யப் போறீங்க?

யுவர் ஆனர், நீங்க எதுக்கு?
அயோத்தி பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆலோசனையை சொல்லியுள்ள மரியாதைக்கு உரிய நீதியரசர்களே,

அதிகாரம் அத்தனையையும் கையில் குவித்துக் கொண்டு ஆணவமாய் திரியும் தரப்பு, அதுதான் அராஜகமாய் மசூதிக்குள்ளாக திருட்டுத்தனமாய் சிலையை வைத்தது, உங்களின் முன்னோர்கள், ஆம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை காலில் போட்டு மிதித்து மசூதியை இடித்துத் தள்ளி, இந்தியாவின் நற்பெயரை, சமூக நல்லிணக்கத்தை சீரழித்தது.  இன்னும் வெறி அடங்காமல், சொல்லப் போனால் ஆட்சி கையில் உள்ள திமிரோடு சாராயம் குடித்த குரங்காய் வலம் வருகிறது. 

அந்தத் தரப்போடு பாதிக்கப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் சட்டத்திற்கோ, நியாயத்திற்கோ இடமிருக்குமா?

பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றால் இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்தது ஏனோ?

இபிரச்சினையில் சட்டபூர்வமான தீர்ப்பை அளிக்க வழியில்லையா அல்லது சட்டபூர்வமான தீர்ப்பை அளித்து ஆளும்கட்சியின் வெறுப்பை ஏன் தேடிக்கொள்ள வேண்டும் என்று தப்பி ஓடுகிறீர்களா? யார் தரப்பு பலவீனமாக உள்ளதோ, அவர்கள்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால்தான் சங் பரிவாரம் உங்கள் ஆலோசனையை வரவேற்றுள்ளது. அதனை மறுப்பவர்களுக்கு தேச விரோதி பட்டமும் வழக்கம் போல கிடைக்கும். 

ஆனால் ஒன்று,

ஆலமரத்தடி பஞ்சாயத்து ரேஞ்சில்தான் உங்களால் செயல்பட முடியும் என்றால் எதற்கு நீதிமன்றங்கள்?

நீங்க எல்லாமும் எதற்கு?

இப்படி ஒரு ஆலோசனையைக் கொடுத்ததற்கு பதில் ராஜினாமா செய்திருந்தால் அது நேர்மையாக இருந்திருக்கும் யுவர் ஆனர். 

 

 

Tuesday, March 21, 2017

காட்டுக்கும் கவிதைக்கும் பொய் அழகு

காலையில் வந்தது
இரண்டு வாழ்த்துச் செய்திகள்.

உலக காடுகள் தினமென்று
ஒரு வாழ்த்து சொன்னது.

கவிதைகள் தினமும் இன்றுதானென்று
இன்னொரு வாழ்த்து நினைவுபடுத்தியது.

காடுகள் வாழ்கவென
கவிதையும் படிக்கலாம்.

காட்டுக்குள் குடியேறி
கவிதையாகவும் வாழலாம்.
                                                 
காட்டை அழித்து
வானாளவிய சிலையும் வைத்து
காடுகள் வளர்ப்போம்
என  உபதேசமும் செய்யலாம்.

கவிதைக்கும் பொய் அழகு.
காடு பற்றிய கரிசனத்துக்கும்
பொய்தான் அழகு.

.

Monday, March 20, 2017

சிலையல்ல – உயிர். நிஜமாகவேகீழே உள்ள படத்தைப் பாருங்கள். சிற்பி செதுக்கிய சிலை அல்ல. மாறுவேடப் போட்டிக்காக ஒரு பெண் – கர்னாடகாவில் ஏதோ ஒரு பள்ளியில்.. அந்தப் பெண்ணிற்கும் ஒப்பனைக் கலைஞருக்கும் அதற்கான ஆலோசனை சொன்னவருக்கும்.(வாட்ஸப்பில் வந்ததுங்க. அதனால வேற விபரம் எதுவும் தெரியவில்லை)


ஒரு சந்தேகம் கேட்க நினைத்தேன். இருக்கிற சர்ச்சை போதுமென்பதால் கேட்கவில்லை.  

இந்த பதிவை பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு எங்கள் விழுப்புரம் தோழர் குணசேகரன், மேலே உள்ள ஒப்பனைக்கு அடிப்படையான கர்னாடக மாநிலம் பேளூரில் உள்ள சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி சொல்லி அதனையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

Sunday, March 19, 2017

வருந்துகிறேன் ராஜா

அன்புள்ள இளையராஜா அவர்களுக்கு,

இன்று காலை அச்செய்தியை படிக்கையில் மிகவும் அதிர்ந்து போனேன். 

உங்களின் வழக்கறிஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், சரண், சித்ரா உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பிய செய்திதான்.

நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்பது இந்த வலைப்பக்கத்திற்கு தொடர்ச்சியாக வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். என் பயணங்கள் எல்லாமே இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருந்ததில்லை. நேற்று சென்னைக்கு ஒரு வாடகை வாகனத்தில் சென்றிருந்தோம். அந்த வாகனத்தில் இருந்த தொலைக்காட்சியில் எல்லோரும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டு வந்தார்கள். படம் முடிந்து இளையராஜாவின் பாடல்கள் ஒலித்ததும் "இப்போதுதான் பயணம் செய்யும் உணர்வே வருகிறது" என்றேன். அந்த அளவிற்கு உங்கள் ரசிகன் நான்.

ஆனாலும் வேறு வழியில்லை. மனதில் உள்ளதை சொல்லித்தானே ஆக வேண்டும்.  நமக்கு பிடித்தவர் என்பதற்காக அமைதியாக இருந்தால் நாளை மோடியையோ அல்லது ஜெமோவையோ விமர்சிக்கும் தார்மீக உரிமை எனக்கு கிடையாது.

காபிரைட தொடர்பான சட்டரீதியாக விஷயங்களுக்கு நான் செல்லவில்லை.  உங்கள் பாடல்களை சட்டரீதியான கேஸட், சி.டி, டௌன்லோட் ஆகியவை மூலமே கேட்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அதற்கான உரிமை உங்களுக்கானதா அல்லது நீங்கள் அமைத்த இசைக்கு உங்களுக்கு ஊதியம் அளித்த தயாரிப்பாளருக்கானதா என்பதை யாராவது வழக்கறிஞர்கள் தெளிவு படுத்தினால் நல்லது. தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கான உரிமை யாருடையது என்பதிலும் தெளிவு வேண்டும்.  

நீங்கள் இசையமைத்த பாடலை திருடி தங்களுடையது என்று யாராவது சொன்னால் அது தவறு.  திருட்டு வி.சி.டி போல திருட்டு கேஸட்டும் தவறுதான் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உங்கள் பாடலை மேடையில் பாட வேண்டுமென்றாலும் அதற்கு ராயல்டி தர வேண்டும் என்பதுதான் உதைக்கிறது. 

காபிரைட், காபிரைட் என்று சொல்வதால்தான் சில கேள்விகள் எழுகிறது. 

இசை என்பது ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம். அந்த ஏழு ஸ்வரங்களைத்தான் மாற்றி மாற்றி போட்டு ஏமாற்றி வருகிறோம் என்று நீங்களே பல முறை சொல்லியுள்ளீர்கள். அந்த ஏழு ஸ்வரங்களை கண்டுபிடித்தவர்கள் யார்? அவர்கள் அதற்கு காபிரைட் பெற்றுள்ளார்களா? இல்லை அவர்களுக்கு நீங்கள் ராயல்டி தருகிறீர்களா? 

கண்டிப்பாக கிடையாது.

எல்லாமே ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம் எனும் போது யாருக்கு யார் ராயல்டி தருவது?

கவரிமான் படத்தில் "ப்ரொவபாரமா" சிந்துபைரவி படத்தில் "மரிமரி நின்னே" என்ற தியாகையர் பாடல்கள், சிந்து பைரவி படத்திலேயே முத்துசாமி தீட்சிதரின் "மஹா கணபதி" , எண்ணற்ற பாரதி பாடல்கள் என்று பலவற்றை பயன்படுத்தியுள்ள நீங்கள், அவற்றுக்கெல்லாம் ராயல்டி கொடுத்திருந்தால் அந்த விபரத்தை சொல்வது நலம்.

நாட்டுப்புற பாட்டுக்களை பரவச் செய்த பெருமை நிச்சயமாக உங்களுடையதுதான். ஆனால் ஏற்கனவே காலம் காலமாக கிராமப் புறங்களில் இருந்தவற்றைத்தானே நீங்கள் பயன்படுத்தினீர்கள். மெருகேற்றினீர்கள்?
 

அடுத்த சந்தேகம்.

ஒரு பாடலை உருவாக்கும் குழுவின் தலைவர் கண்டிப்பாக இசையமைப்பாளர்தான். இயக்குனர், கதாசிரியர், கவிஞர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள், ஒலிப்பதிவாளர் என அனைவரும் தங்கள் பணியை சரியாக செய்தால்தானே அந்த கற்பனைக்கு வடிவம் கிடைக்கும்! அந்த பாடலின் உருவாக்கத்தில் பங்கேற்ற ஒருவருக்கு அப்பாடலில் உரிமை கிடையாதா? அவர் ஊதியம் வாங்கி பாடினார் என்றால் நீங்கள்????

இன்றைக்கு ஏராளமான தொலைக்காட்சிகள் உள்ளன. ஃஎப்.எம் வானொலிகள், இணைய தளங்கள் என்று ஏராளமான ஊடகங்கள் வந்து விட்டன. ஆனால் உங்கள் பாடல்களை பிரபலமாக்கியது, உங்கள் புகழை மக்களுக்கு  கொண்டு சென்றது எல்லாமே கிராமத்து திருவிழாக்கள் தொடங்கி நகரத்து திருமணங்கள் வரை நடைபெற்றுக் கொண்டிருந்த மெல்லிசை மேடைக் கச்சேரிகள்தானே!  இன்று மேடைக் கச்சேரிகள் என்பதும் நலிந்து கொண்டிருக்கிறது. எங்கள் பாட்டை பாடினால் காசு தர வேண்டும் என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தால் அந்த பாரம்பரியம் முற்றிலுமாக அழிந்து விடும்.

உங்கள் இசைக்கு நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும். உங்கள் பாடலுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். இதில் எல்லாம் எனக்கு மாற்றுக் கருத்து கிடையவே கிடையாது. 

ஆனால்  உங்கள் பாடல் ஒவ்வொரு முறை எங்காவது, எந்த மூலையிலாவது, எப்படியாவது ஒலிக்கும் போதெல்லாம் உங்களுக்கு பணம் வந்து விழுந்து கொண்டே இருக்க  வேண்டும்  என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. 
 

இது கார்ப்பரேட் நடைமுறை என்றால் அது நாசமாகப் போகட்ட்டும்.