Sunday, May 21, 2017

ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்ராஜீவ் காந்தி நினைவு நாளை ஒட்டி பல பதிவுகளை முக நூலில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருந்த இந்த நூல் நினைவுக்கு வந்தது.

அந்த படுகொலை நடந்த நேரம் ராஜீவ் காந்தியுடன் இருந்த தா.பா புதிய செய்திகள் எதையாவது அளித்துள்ளாரா என்று அறிந்து கொள்ள சற்று வேகமாகவே படித்தேன்.

இதுவரை தமிழகம் அறியாத புதிய செய்தி எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரதமராக தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற தவறிய ராஜீவ் காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுதான் இந்தியா பற்றி அறிந்து கொண்டார், ஆட்சிக்கு வந்திருந்தால் ஒரு வேளை இந்திய அரசியல் நிலைமைகள் மாறி இருக்கும் என்று நற்சான்றிதழ் வழங்குகிறார்.

அந்த நற்சான்றிதழ் மீது ஏனோ நம்பிக்கை வரவில்லை, ஜெ மீது தா.பா காண்பித்த அளவுக்கதிகமான விசுவாசம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

சில முரண்பாடுகளும் இந்த நூலில் இருக்கிறது. 

வி.பி.சிங்கைக் கவிழ்த்து அந்த இடத்திற்கு ஜோதி பாசு அல்லது இந்திரஜித் குப்தாவை கொண்டு வர ராஜீவ் காந்தி முயன்றதாகவும் அந்த முயற்சிக்கு கம்யூனிஸ்டுகள் ஒத்து வராமல் வாய்ப்பை வீணடித்தாக ஒரு இடத்தில் விமர்சிக்கிறார். இன்னொரு இடத்தில் கம்யூனிஸ்டுகள், நெறி வழி நின்று அந்த முடிவெடுத்ததாக பாராட்டவும் செய்கிறார்.

அதே போல விடுதலைப் புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் அந்த நேரத்தில் ஒரு இணக்கமான சூழல் இருந்தது, அதனை பாழ்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் முட்டாள் அல்ல என்றும் சொல்கிறார். அதே நேரம் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் சதியை நிறைவேற்ற அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டார்கள் என்றும் சொல்கிறார்.

அந்த ஏகாதிபத்திய நாடு எது என்பதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

அந்த நூலில் என்னை நெகிழ வைத்த விஷயம்.

வெடிகுண்டால் தாக்கப்பட்ட தோழர் தா.பா இறந்து விட்டதாக சொல்லப் பட்ட போது அவரது குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற விபரங்கள் ஆகியவையே அவை. 

ஸ்ரீபெரும்புதூரில் காரிலிருந்து இறங்குகையில் "நான் தமிழர்களை நேசிக்கிறேன். தமிழர்கள் என்னை நேசிக்கிறார்கள்" என்று சொன்னார் என்று சொல்கிறார் தா.பா. 

இச்செய்தியை இந்த நூலில்தான் படிக்கிறேன். அது உண்மையா? பின் குறிப்பு: இருபத்தி ஆறு வருடங்கள் கடந்த பின்பும் ராஜீவ் காந்தியின் கொலையில் இன்னும் சில மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படவில்லை. ஏகாதிபத்திய நாடு ஒன்றின் பங்களிப்பே அதற்கு காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

2 comments:

 1. அந்த ஏகாதிபத்திய நாடு எது என்று சொல்லிய தெரிய வேண்டும்...? இருந்தாலும் த பா சட்ட சிக்கல் வருமோ என்று அஞ்சலாம் வழக்கறிஞர் ஆயிற்றே
  BADRINATH

  ReplyDelete
 2. //ராஜீவ் காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுதான் இந்தியா பற்றி அறிந்து கொண்டார், ஆட்சிக்கு வந்திருந்தால் ஒரு வேளை இந்திய அரசியல் நிலைமைகள் மாறி இருக்கும் என்று நற்சான்றிதழ் வழங்குகிறார்.
  விடுதலைப் புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் அந்த நேரத்தில் ஒரு இணக்கமான சூழல் இருந்தது அதனை பாழ்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் முட்டாள் அல்ல என்றும் சொல்கிறார். அதே நேரம் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் சதியை நிறைவேற்ற அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டார்கள் என்றும் சொல்கிறார்.//
  ஆஹா!தாபா சொல்கிறது பொருத்தமான உண்மைகளாக தான் இருக்கின்றன. ராஜீவ் காந்தி மக்கள் நல கொள்கைகள், கம்யூனிஸ கொள்கையை நடைமுறைபடுத்துவதில் ஆர்வமாக இருந்தார். தாராள மயம், உலக மயமாக்கம் கொள்கைகளை இந்தியாவில் அனுமதிக்க மாட்டார். அதனால் ஏகாதிபத்திய நாடு தனது கூலிப்படையான விடுதலைப் புலிகளை வைத்து ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிவிட்டது.ராஜீவ் காந்தி இந்திய தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானால் பின்பு இந்தியாவில் தேர்தலே நடைபெறாது, ராஜீவ் காந்தி தான் நாட்டின் ஆயுட்கால சர்வாதிகார பிரதமர் என்றும் அந்த ஏகாதிபத்திய நாடு நம்பிவிட்டது.
  //விடுதலைப் புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் அந்த நேரத்தில் ஒரு இணக்கமான சூழல் இருந்தது//
  விடுதலைப் புலிகள் இலங்கையில் காந்திய அஹிம்சை அடிப்படையில் மக்களுக்கு தொண்டு சேவை செய்யும் அமைப்பு அதனால் இந்திய பிரதமராக வருவதற்கான போட்டி வேட்பாளர் என்று நம்பபட்ட ராஜீவ் காந்தி இணக்கமா இருந்தார்!

  ReplyDelete