Monday, May 1, 2017

கீழடி என்ன அயோத்தியா? முட்டாள்களே!

நூல்                கீழடி - என்ன செய்யப்போகிறோம்?
ஆசிரியர்            சு.வெங்கடேசன்
வெளியீடு           பாரதி புத்தகாலயம்
                    சென்னை - 18
விலை              ரூபாய் 25.00


தமிழகத்தின் சமகால பிரச்சினையான கீழடி அகழாய்வு குறித்து வெளிச்சம் பாய்ச்சும் நூல் இது. கீழடி ஆய்வினை கைவிடுவதற்கு மோடி அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் உடனடியாக களம் காண வேண்டிய அவசியம் உள்ளது என்பதைச் சொல்லி முதலில் எச்சரிக்கை மணி அடித்த அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய மூன்று கட்டுரைகளும் அவரின் நேர்காணலும் அடங்கிய சிறு நூல் இது. 

கீழடி ஆய்வு ஏன் தொடரப்பட வேண்டிய நியாயமும் அதனை முடக்க மோடி அரசு மேற்கொள்ளும்  நடவடிக்கைகளின் அரசியலும் இந்த நூலை படித்தால் எளிதில் விளங்கும்.

கட்டுரைகள் மற்றும் நேர்காணலில் சொல்லப்பட்டவற்றை இங்கே சுருக்கமாக அளிக்க முயல்கிறேன்.

தமிழர்கள் நகர வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் இங்கே கிடைத்துள்ளேன். 

தொழிற்சாலைகள் கூட இயங்கியுள்ளன என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன.

சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள மதுரை தற்போதைய மதுரை அல்ல, கீழடி பகுதியாகவே இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. 

ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. துவக்க ஆய்வுகளே அவை 2500 வருடங்களுக்கு முற்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.

ஆனால் ஆய்வை தொடர அரசு விரும்பவில்லை. அதற்கான காரணத்தை கடைசியில் சொல்கிறேன்.

கார்பன் டேட்டிங் ஆய்விற்கு குறைந்த்பட்சம் பத்து பொருட்களாவது அனுப்பப்பட வேண்டும். ஆனால் கீழடியிலிருந்து இரண்டு பொருட்களே அனுப்பப்பட்டது.

110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டபோதிலும் ஆய்வு என்னமோ 60 செண்டுகளில் மட்டுமே நிகழ்ந்துள்ள நிலையில் இங்கே அதை மூட நினைப்பது ஏன்?

இந்தியா முழுதும் 44 இடங்களில் கள அருங்காட்சியங்கள் உள்ளது. அது போல இங்கேயும் அமைப்பது அவசியம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதை இங்கே பொருத்தம். தொல்லியல் துறை ஆய்வகம் அமைக்க தயாராக இருந்து போது நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நிலம் கொடுக்க அரசு, தனி நபர் என் முன்வருகையில் தொல்லியல் துறை பின் வாங்கி விட்டது.

கண்டறியப்பட்ட பொருட்களில் ஒரு செங்கல்லில் ஒரு விலங்கின் காலடித்தடம் உள்ளது. அது பற்றி நூலில் ஒரு கட்டுரை உள்ளது. சங்க இலக்கியங்களை துணைக்குக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை அற்புதம். அதை அவசியம் படித்து இன்புறுங்கள். 

ராஜஸ்தான், குஜராத் என பாஜக ஆளும் மாநிலங்களில்  2017, ஆண்டுக்கான அகழ்வாய்வுப் பணிக்கான அனுமதி தொடர்ந்த  அளிக்கப் பட்டு பணி நடக்கையில் கீழடியில் மட்டும் நிறுத்தி வைத்திருப்பதன் மர்மம் என்ன?

கீழடியில் கண்டறியப்பட்டுள்ள எந்த ஒரு பொருளிலும் எந்த ஒரு மதச் சின்னமும் கிடையாது. சிந்து வெளி நாகரீகத்தை முந்தையது தமிழர் நாகரீகம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாவதை ஏற்றுக் கொள்ள மோடி அரசோ, காவிக்கும்பலோ தயாராக இல்லை. 

ஆனால் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 151 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது மோடி அரசு.

தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியத்தை அழுத்தமாக சொல்கிறது இந்த நூல். 

அயோத்தியில் கோடிக்கணக்கான செலவு செய்து மக்களை உசுப்பேத்தி விட்டால் ஓட்டு கிடைக்கும். மத உணர்வை தூண்டும் வாய்ப்பில்லாத கீழடிக்காக செலவு செய்ய நாங்கள் என்ன முட்டாள்களா என்ற ஆணவத்தோடு செயல்படுகிறது. முட்டாள்களே என்று நம்மையும் நினைப்பது அந்த நிர்மலா அம்மையாரின் பேச்சு சொல்லாமல் சொல்கிறது. 

நாம் என்ன செய்யப் போகிறோம்?தமுஎகச நடத்தும் இயக்கங்களிலாவது நம்மை இணைத்துக் கொள்வோமே. 

 

 

1 comment:

  1. வேதனையுடன் கோபமும் வருகிறது தோழரே...

    ReplyDelete