Friday, May 1, 2015

அனைவருக்குமானது

மே தினத்திற்காக எங்கள் கோட்டத்தில் உறுப்பினர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை. 

தகவல் அனைவருக்குமானது.







காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 /என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 26/15                                                                                  29.04.2015
அனைத்து உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழரே,

உழைக்கும் மக்கள் போராட்டத்தில் முன்னணியில் நின்றிட
                        மே தின சபதமேற்போம்.

மனிதனை மனிதன் சுரண்டும் அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுந்து உரிமைக்குரல் முழங்கி துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தூக்கு மேடைக்கும் தங்கள் இன்னுயிரை நீத்த மே தினத் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திடுவோம்.

“எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம்” என்ற முழக்கம் அன்றைய தொழிலாளர்களுடையதாக இருந்ததென்றால் “இருக்கும் உரிமைகளை பாதுகாத்து மேலும் முன்னேறுவோம்” என்ற முழக்கம் இன்றைய தொழிலாளர்களுடையது.

முதலாளிகளும் சரி அவர்களுக்கு ஆதரவாக உள்ள அரசாங்கங்களும் சரி அவர்களது வர்க்க நிலையில் உறுதியாக இருக்கின்றனர். உலகமயக் கொள்கைகள் முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதை உலகப் பொருளாதார நெருக்கடி உறுதிபட உணர்த்தி விட்டாலும் காந்தத்தில் ஒட்டிக் கொண்ட இரும்பாக அதிலிருந்து விலகி வர முதலாளித்துவமும் அதனை அமலாக்கும் அரசுகளும் தயாராக இல்லை.

உலகம் எங்கும் நாம் காணும் நிலை இதுதான். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் லாபத்தை அதிகரிக்க தொழிலாளர்களை சுரண்டுவது என்ற நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள தயாராக இல்லை. இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்று கோரஸ் நிறுவனத்தை வாங்கிய ரத்தன் டாடா, அந்நிறுவன தொழிலாளர்களின் பென்ஷன் திட்டத்தை வெட்ட முயற்சிக்க, அவர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இது போல பல போராட்டங்கள் ஐரோப்பா முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக முதற்கட்டமாக கிரீஸில் சோஷலிசக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளும் செம்மயமாகி விடுமோ என்ற அச்சத்திற்கு அங்கேயுள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய நிலை மட்டும் கொஞ்சமும் மாறுபட்டதல்ல. “நல்ல நாள் வரும்” என்ற முழக்கம் செல்வந்தர்களுக்குத்தான் என்பதை மூடி மறைத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு முதல் நாள் முதல் இன்றைய தினம் வரை கார்ப்பரேட்டுகளின் அரசாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாமானிய மக்களை பாதிக்கிற, செல்வந்தர்களை வளப்படுத்துகிற கொள்கைகளை மட்டுமே அமலாக்குவது என்ற துடிப்போடு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது. மன்மோகன்சிங் மட்டுமல்ல, மோடியும் முதலாளிகள் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மைதான் என்பதை தேசத்தை உண்மையாகவே நேசிப்பவர்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

நிலம் தருவோம், மின்சாரம் தருவோம், நீர் தருவோம். இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றி அடிமைத் தொழிலாளர்களைத் தருவோம் என்று நாடு நாடாக பறந்து “இந்தியாவில் உருவாக்குவோம்” என்ற பெயரில் இந்தியாவில் கொள்ளையடிக்க வாருங்கள் என்ற மோடி இந்தியாவை விலை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மோடியின் நெருங்கிய நண்பர்களான இந்திய முதலாளிகள், ரத்தன் டாடா போல அன்னிய நாடுகளுக்கு தங்கள் முதலீடுகளை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மட்டும் முப்பத்தி ஆறு பில்லியன் டாலர்களை ( ரூபாய் மதிப்பில் இரண்டு லட்சத்து முப்பத்தி நான்காயிரம் கோடி) இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்.

விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதி வெட்டப்பட்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தனியாரின் ஆதிக்கம் தழைத்தோங்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை பங்குகளை விற்றே அரசு செலவினத்தை சமாளிக்கப்பார்க்கிறது. மறு புறம் இன்சூரன்ஸ் போன்ற இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறிக்கப் பார்க்கிறது. ராணுவ தளவாடங்களை தயாரிக்க தனியாரை அனுமதிப்பதன் மூலமும் தரமற்ற விமானங்களை வாங்குவதன் மூலமும் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

சோறிடும் விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க சட்டம் கொண்டு வருவதில் காண்பிக்கிற அதே அவசரத்தை நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் கிராமப் புற வேலை உறுதிச் சட்டத்தை முடக்குவதிலும் காண்பிக்கிறது. பணிப் பாதுகாப்பு, ஊதிய வெட்டு, சலுகை வெட்டு ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்களுக்கு கிடைத்த சட்டபூர்வமான பாதுகாப்பை அகற்றும்வகையில் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் திருத்தம் கொண்டு வந்து விட்டனர். அதையே நாடு முழுவதும் செய்ய திட்டமிடுகிறது மோடி அரசு. மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் மூலம் சாலைகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு எதிராக முப்பது ஏப்ரல் அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. பாஜக வின் பி.எம்.எஸ் சங்கமும் கூட ஒன்று பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்பது நிலைமையின் தீவிரத்தைக் காண்பிக்கிறது.

ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்டமே நம் துயரங்களைப் போக்குவதற்கான ஒரே வழி. அதற்கான உறுதியையும் எழுச்சியையும் மேதினத் தியாகிகள் நமக்குத் தருவார்கள். அவர்களின் தியாகம் நமது போராட்ட உணர்வை அதிகரிக்கும். அனைத்து அலுவலகங்களிலும் சங்கக் கொடியேற்றி மேதின தியாகிகளை நினைவு கூர்வோம். மேதினப் பேரணிகளில் பங்கேற்று உழைப்பாளி மக்களின் முன்னணிப் படையாகத் திகழ்வோம்.

என்றும் இறுதி வெற்றி உழைக்கும் வர்க்கத்திற்கே என்று முழங்கி முன்னேறுவோம்.
புரட்சிகர மே தின வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள


பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment