Friday, May 1, 2015

குண்டாந்தடிகளுக்கு கவிதைகள் புரியாது

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைப்பயணம் சென்ற அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களை காவல்துறை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கண்டனத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்த அராஜக சம்பவம் பற்றி இரண்டு தோழர்கள் எழுதிய கவிதைகளை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். ஆனால் அதெல்லாம் குண்டாந்தடி கொண்டு தாக்க மட்டுமே தெரிந்த காக்கிச்சட்டைகளுக்கு புரியுமா என்றுதான் தெரியவில்லை.

காக்கி புராணம்
___________________

"சாதிப் பகைமை வேண்டாம்
அமைதியை நேசிப்போம்" - என்ற
அமைதியான நடைப் பயணம்
எவ்வளவு பெரிய
ராஜ துரோகக் குற்றம் தெரியுமா!

எல்லோருக்கும் வேலையாம்,
எல்லோருக்கும் கல்வியாம்,
சாதிப் பகைமை எதிர்ப்பாம்,
கொலைகளுக்குக் கண்டனமாம்.
கேக்கவே சிரிப்பாயில்லை!!

அமைதிப் பூங்காவான
தமிழகத்தில்
அமைதி இல்லையென்று
அமைதியைக் குலைத்தால்
அமைதியாக இருந்து விடுவோமா?

"சொத்துக் குவிப்பெல்லாம்
ஒரு குற்றமென்று தீர்ப்பெழுதினால்
நெஞ்சு பொறுக்குமா?" - என்று
'அம்மா'வின் அடிமைகள் போல்
சாந்த சொரூபியாக வீதிக்கு வந்து...

கடைகளை உடைத்தோமா
பேருந்துகளைக் கொளுத்தினோமா
பால்குடம், கேங் மொட்டையென
மக்கள் பிழைப்பைக் கெடுத்தோமா
என்றில்லாமல் இது என்ன கூத்து!

அனுமதி கொடுக்கவும்
பாதுகாப்பு அளிக்கவும்
ஒரு வரைமுறை வேண்டாம்?

எங்கள் கழுத்துப் பட்டையில் பிணைக்கப்பட்ட மர்மச் சங்கிலி
யார் கையில் இருக்கிறதோ
அங்கு வாலாட்டவும்
அவர்கள் ஏவும் இடத்தில்
விழுந்து பிடுங்கவும்
அதிகாரம் படைத்தவர்கள் நாங்கள்
எங்களிடம் கையாட்டாதீர்கள்.

காக்கிச்சட்டை விரைப்புக்குப் போடும் கஞ்சியில் கூட உப்பு இருக்கும்...
சங்கம், யூனியன், கோரிக்கைகளை
மோந்துகூட பாக்காத எங்கள்
சோத்தில் உப்பு மட்டுமல்ல
சூடு சொரணை எதுவுமில்லை!


 

---  தோழர் வெண்புறா சரவணன்

ஓங்கட்டும் உங்கள் கீர்த்தி காவலர்களே
உங்களிடம் தடிகள் இருக்கிறது சுழற்றுங்கள்...
மிடுக்கான உங்கள் உடைகளுடன் நீங்கள்
யாரை கொலைவெறியுடன் தாக்கினீர் அறிவீரா?

யாருக்கெல்லாம் ஆபத்தில் இரத்தம் தேவையோ
அவர்களுக்கு தன் இரத்தம் கொடுத்தவனை. .
நோயாளிகள் நலன் காக்க தேசமெங்கும்
மருத்துவமணைகளை தூய்மை செய்தவனை. .

எரியாத தெருவிளகினை எரிய வைக்க
களத்தில் நின்று கரம் உயர்த்தியவனை. .
எளிய மக்களின் குரலை எங்கும்
விசையாய் எடுத்துச் சென்ற தூயவனை. .

சாதிய சண்டடையில் இளமை அழியாமல்
சாதிக்க வா என்று ஆற்றுபடுத்துபவனை. .
வேலை கல்வி எங்கள் உரிமையென
தமிழகத்தின் எதிர்காலம் காக்க துடிப்பவனை. .

பரவடும் உங்கள் புகழ் காவலர்களே
உங்களிடம் அதிகாரம் இருக்கிறது ஆடுங்கள். .
எடுப்பான உங்கள் சீறுடையுடன் நீங்களை
இரத்தம் சிந்த அடித்தவர்யாரென உணர்வீரா?

அங்கு வந்த எந்த இளைஞனும்
தனக்கான சொந்த லாபம் பார்த்தவனில்லை. .
கூலிக்கு கைகளில் கொடி ஏந்தியவனில்லை
தலைவனுக்கு வாழ்க கோஷம் இட்டவனில்லை.

கூலிக்கு மாரடிக்கும் உங்களை போலில்லை
தேசம் காக்க தன்வாழ்க்கை ஈந்தவன். . .
குடிப்பவர்களின் வாகனத்தை வழி மறித்து
உங்களைப் போல பிச்சை கேட்பவனில்லை. .

டாஸ்மாக் கடைகளில் வாழ்விழக்கும் மனிதனை
போதையின் பாதையில் வழி மாறுபவனை. .
அப்பாதை போகாதே என எச்சரித்து
நல்வழி படுத்தும் இளைய நாயகனை. .

வேலை கேட்டு வீதியில் நின்றவர்களை
முத்துநகர் வீதியில் நைய புடைத்தீர்கள். .
உங்கள் தாக்குதலில் கீழே விழுந்தவன்
ஆட்காட்டி விரலால் எச்சரிக்கிறான் பாருங்கள்.

அட காக்கிச் சட்டை கழிசடைகளே!
அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்தே
வேலை கேட்டார்கள் அறிவீரா நீங்கள்.
பாவம் நீங்கள் வெறும் கூலியாட்கள்.

உங்களை ஏவியவர்க்கு உரத்துச் சொல்கிறோம்
உங்கள் தடியடியும் சிறைக் கதவும்
எங்களின் கேசத்தைக் கூட பணியச்செய்யா. .
ஏனெனில் நாங்கள் பகத்சிங் தோழர்கள்!
 
 
- தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு 

No comments:

Post a Comment