Wednesday, October 31, 2012

சென்னை – இணைந்தே வந்த ஏமாற்றம்
பள்ளிக் காலத்திலிருந்தே பல வருடக் கனவு சென்னை செல்வது. ஆனால் கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டு வரை அது நனவாகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ நுழைவுத் தேர்வு கனவு நிறைவேறுவதற்கான வாசலை திறந்தது.

சென்னையில் மட்டும்தான் நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்ற நிபந்தனை எனக்கும் அது போல அதுவரை சென்னை பார்த்திராத மற்ற நண்பர்களுக்கும் உற்சாகம் அளித்தது. நுழைவுத் தேர்வு என்பதால் ரயில் கட்டணத்தில் சலுகை உண்டு. முன்பதிவு செய்து விட்டு அந்த விபரங்களை என் அப்பாவிற்கு பொறுப்பாக கடிதம் எழுதி தெரிவித்தேன். கோச் எண், சீட் எண் தெரிவிக்கச் சொல்லி அவரிடமிருந்து வந்த கடிதத்திற்கும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று பதிலெழுதிப் போட்டேன், அதுதான் என் கனவுகளை தகர்க்கப் போகின்றது என்று அறியாமலேயே.

சென்னை செல்வதற்கு பத்து நாட்கள் முன்பாகவே ஏராளமான திட்டங்கள், சென்னை சென்றதும் அன்று எந்தெந்த இடங்கள் பார்ப்பது, மறுநாள் தேர்வு முடிந்ததும் எங்கே செல்வது என்றெல்லாம் பேசிப் பேசி முடிவெடுத்தோம். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எம்.காம் மாணவர் ஒருவர் எக்ஸாமுக்கு எப்போ படிக்கிறது பற்றியும் பேசுங்கப்பா என்றார்.

அந்த நாள் வந்தது. ஆறு மணிக்கு கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸை பிடிக்க ஐந்து மணிக்கெல்லாம் மதுரை நிலையத்தில் ஆஜரானோம். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு ரயில் பயணம். பழைய கரி வண்டியாக இல்லாமல், கட்டை சீட்டுக்கள் இல்லாமல் குஷன் வைத்த வைகை எக்ஸ்பிரஸ் ஒரு அதிசயமாக இருந்தது. ஒரு கோச்சிலிருந்து இன்னொரு கோச்சிற்கு செல்லும் வெஸ்டிப்யூல் இணைப்போ மிகப் பெரிய அற்புதமாக தெரிந்தது.

ரயிலில் உட்கார்ந்ததை விட இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை நடந்த நேரம்தாம் அதிகம். மிகச்சரியாக 1.30 மணிக்கு எக்மோர் ரயில் நிலையம் வந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியோடு வண்டியில் இறங்கினோம். சென்னையைச் சேர்ந்த எங்கள் கல்லூரி மாணவன் முதல் நாளே சென்னை வந்து நாங்கள் தங்குவதற்காக எக்மோரிலேயே லாட்ஜில் ரூம் போட்டு விட்டு ரயில் நிலையத்தில் எங்களை எதிர் கொண்டான்.

அவனைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து நகரும் போது, “ராமா “ என்ற குரல் அழைத்தது. என் தோளின் மீது ஒரு கை விழுந்தது. அங்கே என் பெரியப்பாவின் பையன். “சித்தப்பாவிடமிருந்து லெட்டர் வந்திருந்தது, இது வரைக்கும் மெட்ராஸுக்கு வந்ததில்லையாமே, அதனால என்னை வீட்டுக்கு கூப்பிட்டு போகச் சொன்னார், வா போகலாம் “  என்று அழைக்க என வேறு வழியில்லை. பலியாடு போல அவர் பின்னே சென்றேன்.

நண்பர்கள் என்னை பரிதாபமாக பார்க்க நான் கிட்டத்தட்ட அழும் நிலையில் அவரைப் பின் தொடர்ந்தேன். டவுன் பஸ்ஸில் போகும் போதாவது எல்.ஐ.சி கட்டிடத்தை  பார்க்க முடியுமா என்ற நப்பாசையில் என் அண்ணனை கேட்கையில்  அதெல்லாம் இந்த ரூட்டில வராது என்று கூறி விட்டார். சாக்கடை போன்ற கூவம் ஆறு மட்டும் கடந்தது.

தண்ணீர் புரண்டோடிய காலத்தில் காவிரியை தினம்தோறும் பார்த்த எனக்கு கூவம் எரிச்சலூட்டியது.

அசோக்நகர் டெலிபோன் க்வார்ட்டர்ஸ் என் கண்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலை போலவே தென்பட்டது. மதியம் சாப்பிட்டதும் டைமை வேஸ்ட் பண்ணாம படி என்று சொல்லி விட்டார். மாலை டி.வி போட்டதும் ஒரு சின்ன நிம்மதி. யப்பா, டி.வி பார்க்கும் அனுபவமாவது கிடைக்கிறதே என்று. ஆனால் ஒரு பழைய ஹிந்திப் படம்தான். புரியாத படத்தைப் பார்ப்பதற்கு படிப்பதே மேல் என்று அடுத்த அறைக்கே வந்து விட்டேன்.

புத்தகத்தில் எங்கே புத்தி போனது.. மற்ற நண்பர்கள் எங்கெல்லாம் போயிருப்பார்களோ, எதையெல்லாம் பார்த்திருப்பார்களோ என்றுதான் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. மறு நாள் காலை சிறையிலிருந்து விடுதலை பெற்று லயோலா காலேஜ் ஓடி வந்தேன். எல்.ஐ.சி கட்டிடத்தின் கீழே நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும் என்பது ஒரு மிகப் பெரிய ஆசை, மெரினா பீச்சில் அலைகளில் கால் நனைக்க வேண்டும் என்பது அடுத்த ஆசை, வி.ஜி.பி கோல்டன் பீச், வள்ளுவர் கோட்டம் பார்ப்பது என்பதெல்லாம் திட்டம் இருந்தது.

மற்ற நண்பர்கள் அன்றே வி.ஜி.பி கோல்டன் பீச் சென்று வந்து விட்டார்கள். தேர்வு முடிந்ததும் வள்ளுவர் கோட்டமும் மெரினா பீச்சும் போகலாம் என்பது திட்டம். ஒன்றுதான் முடியவில்லை, மற்றதாவது தப்பியதே என்று நிம்மதி இருந்தது.

மதிய உணவை முடித்து, லாட்ஜில் வேறு உடை மாற்றி புறப்பட்டால் பிடித்தது ஒரு மழை. மிகக் கடுமையான மழை, நான்கு மணியிலிருந்து ஏழரை மணி வரை மழை நிற்கவேயில்லை. ஒன்பது மணிக்கு மதுரை திரும்ப பேருந்து. ஆகவே எதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

வீடியோ கோச் ஆம்னி பஸ். தாம்பரம் வரை திரைப்படம் போடவேயில்லை. அதற்குப் பிறகு ஏதோ ராணுவ ரகசியம் போல இந்த சினிமா நாங்கள் போட்டோம் என்று யாரிடம் சொல்லக்கூடாது என்று சூடம் அணைத்து சத்தியம் வாங்காத குறையாக வாக்குறுதி வாங்கி முதல் வாரம் வெளியான ஒரு கைதியின் டைரி படம் போட்டார்கள்.

அது ஒன்று மட்டும்தான் ஒரே ஒரு ஆறுதல்.

எல்.ஐ.சி கட்டிடத்தின் வாசலில் நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும் என்ற கனவு ஒரு வருடத்திற்குப் பின்பு நனவானது. அதுவும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். அதனை பின்னர் ஒரு நாள் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனால் இப்போதோ சென்னை ஒரு எரிச்சலூட்டும் இடம். அந்த நெரிசலும் நசநசப்பும் சென்னை மக்கள் மீது அனுதாபமே கொடுக்கும்.  எந்த பணிக்காக செல்கிறேனோ, அந்த பணி முடிந்த பின் ஒரு நொடி கூட அங்கே இருப்பதில்லை.

இளமைக் காலத்து கனவுகள் என்றும் அப்படியே நீடிப்பதில்லை.
மாறும் என்பதைத் தவிர உலகில் மாறாதது எதுவும் இல்லை.
இதுதான் யதார்த்தம்.

2 comments:

  1. \\எல்.ஐ.சி கட்டிடத்தின் கீழே நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும் என்பது ஒரு மிகப் பெரிய ஆசை, மெரினா பீச்சில் அலைகளில் கால் நனைக்க வேண்டும் என்பது அடுத்த ஆசை, வி.ஜி.பி கோல்டன் பீச், வள்ளுவர் கோட்டம் பார்ப்பது என்பதெல்லாம் திட்டம் இருந்தது.\\ 'ரோஜா' வைரமுத்து பாட்டு மாதிரி இருக்கே !!

    \\ஆறு மணிக்கு கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸை பிடிக்க ஐந்து மணிக்கெல்லாம் மதுரை நிலையத்தில் ஆஜரானோம்.
    மிகச்சரியாக 1.30 மணிக்கு எக்மோர் ரயில் நிலையம் வந்தது.\\ நள்ளிரவா, அதிகாலையா, மலையா எது எந்த நேரம் ஒன்னும் விளங்கல ...........???????

    ReplyDelete
  2. காலை ஆறு மணிக்கு ட்ரெயின், மதியம் 1.30 க்கு எக்மோர் வந்தது

    ReplyDelete