Monday, February 28, 2011

புதைகுழிக்குள் போவோமா?

பிரணாப் முகர்ஜி  இன்று சமர்ப்பித்த  பட்ஜெட் ஏமாற்றம்  அளிப்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.  பட்ஜெட்டின் துவக்க பாராக்களில்
பண வீக்கம், விலைவாசி உயர்வு,  விவசாயிக்கும் நுகர்வோருக்கும் 
உள்ள இடைவெளி பற்றியெல்லாம்  கூறி விட்டு  அதற்கான நடவடிக்கை
எதுவும் எடுத்துள்ளாரா  என்று பார்த்தால்  உள்ள நிலைமையை  மேலும் 
மோசமாக்கத்தான்  பார்த்துள்ளார். 

உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலியப் பொருட்களின் மானியத்தை 
குறைக்க மட்டுமே  செய்துள்ளார்.  இதன் விளைவு  விலைவாசி உயர்வு 
மிகவும் கடுமையாக  எதிர்காலத்தில்  இருக்கும்  என்பதுதான். குளிர் பதனக் கிடங்குகளை  அதிகப்படுத்தினால்  பிரச்சினைகள்  எல்லாம் தீர்ந்து போகும்  என்பது போல அங்கங்கே மாய்ந்து மாய்ந்து  கூறுகின்றார். 
அதற்கு  ஏராளமான  சலுகைகள் வேறு. குளிர்பதனக் கிடங்குகள் அதிகரிப்பதில்  பதுக்கல்  அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.  இன்னொன்று 
சோனியா குடும்பத்தினர் ஒரு வேளை  இந்த வியாபாரத்தில்  இறங்கியிருக்கக் கூடுமோ? 

கறுப்புப் பணத்தைப் பற்றி மிகவும் கவலைப்படும் பிரணாப் முகர்ஜி, 
அவற்றை  வெளியே கொண்டு வர சில நாடுகளோடு  ஒப்பந்தம் போடப்
பட்டதாக வேறு  தெரிவிக்கிறார். ஆனால்  மொரீஷியஸ், சுவிஸ் போல 
எந்த நாடுகளில்  அதிகமாக இந்தியப் பணம் பதுக்கப்படுகின்றதோ, 
அந்நாடுகளோடு  ஒப்பந்தம் போடாதது ஏன்? 

தனி நபர் வருமான வரி விலக்கு குறைந்தபட்சம்  இரண்டு லட்சமாக 
உயராதா என்று ஏங்கியவர்கள்  எல்லாம் ஏமாற்றமடைந்துள்ளனர். 
பெண்களுக்கு  அளிக்கப்பட கூடுதல் முப்பதாயிரம் ரூபாய் விலக்கு 
இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை. அதைப்பற்றி கடந்த
பட்ஜெட்டுகள்  தனியாக, தெளிவாக  சொல்லும். இப்போது அதைப் பற்றி
எந்த பேச்சும் இல்லாததால் அச்சலுகை பறிக்கப்பட்டதாகவே  நான்
உணர்கிறேன்.  

நிதித்துறை சீர்திருத்தங்கள்  பற்றி  அவர் பட்டியல் இட்டுள்ளது மிகவும்
ஆபத்தான  விஷயங்கள். 

இன்சூரன்ஸ் துறை தொடர்பாக இரு மசோதாக்களை  நிறைவேற்றுவோம்  என்று  சொல்லியுள்ளார். 

எல்.ஐ.சி யின் மூலதனத்தை  உயர்த்துவது, பின்பு கொல்லைப்புற வழியாக  பங்கு விற்பனை செய்வது போன்ற மசோதாவில்  உள்ள 
மோசமான அம்சங்களை   நிதியமைச்சகத்திற்கான நாடாளுமன்ற 
நிலைக்குழு ஒருமனதாக  நிராகரித்துள்ளது.  

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதனத்தை  உயர்த்துவது என்பது
இந்திய மக்களின் சேமிப்பை அந்நிய கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் 
ஒப்படைப்பது என்பதே. இதற்கான மசோதா பற்றி  
நிதியமைச்சகத்திற்கான   நாடாளுமன்ற   நிலைக்குழு   இன்னமும் தனது
பரிந்துரையை அளிக்கவேயில்லை. 

ஆனால் அமைச்சரோ இப்போதே, இந்த கூட்டத்தொடரிலேயே 
நிறைவேற்றுவேன்  என்கிறார். அமெரிக்க கம்பெனிகளுக்கு அளித்த
உறுதி மொழி இவ்வாறு  சொல்ல வைக்கிறது. 

மற்ற மசோதாக்களும் அப்படித்தான். பின்பு அவை பற்றி விவரமாக
பார்ப்போம்.  சர்வதேச பொருளாதார நெருக்கடி பற்றி பேசிக்கொண்டே 
அதே புதை குழிக்குள்  நம்மை தள்ளும் ஆபத்தான பட்ஜெட் இது.



 

2 comments:

  1. உங்கள் பெரும்பாலான கருத்துக்களோடு உடன் படுகிறேன். ஆனால், குளிர் பதன கிடங்குகள், உணவு பொருட்கள் அழுகி வீணாவதை தடுக்கும் அல்லவா? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சில வருடங்களுக்கு முன், இரட்டை மாட்டு வண்டி கொள்ளும் அளவு தக்காளி வெறும் பத்து ருபாய் விலைக்கு கேட்டார்கள் என்று ஒரு விவசாயி தன் நிலத்திலேயே அறுவடை செய்த தக்காளியை கொட்டினார், உரமாக அதன் மதிப்பு அதிகமாகும் என்று. அது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும் அல்லவா?

    ReplyDelete
  2. நன்றி திரு பந்து, குளிர் பதனக் கிடங்குகள் மூலம் விரயம் தடுக்கப்படும்

    என்பது உண்மைதான். ஆனால் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும்

    விலைவாசி உயர்வும் இதனால் தீர்ந்து விடும் என்பதைத்தான் என்னால்

    ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த ரீதியில்தான் பட்ஜெட் உரை

    உள்ளது.

    ReplyDelete