Monday, April 25, 2016

புதுக்கோட்டையிலிருந்து ஒரு கோபக்குரல்



வாட்ஸ்ப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு செய்தி.


தந்தை பெரியார் சமூக நீதி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் நாடெங்கிலும் அலைந்து பேசுவது குறித்து  தீவிரமாக யோசிக்கிறார். எப்போது? புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர் தனது ஆளுகைக்கு உட்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான நாட்டில் ஜாதிவாரி இடஒதுக்கீட்டை தனது அரசுப் பணிகளில் சட்டமாக்கியதைக் கண்டு.

தந்தை பெரியார் அனைத்து சாதியினரும் கோயிலினுள் நுழையும் போராட்டத்தைத் துவங்க யோசிக்கிறார். எப்போது? புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர் தனது ஆளுகைக்கு உட்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான நாட்டில் அனைவரையும் கோவிலுக்குள் அனுமதித்தாக வேண்டும் என்று சட்டம் இயற்றிய போது.

இன்றைக்கும் புதுக்கோட்டை மாவட்டக் கிராமங்களில் சிறு தெய்வ நாட்டார் வழிபாட்டியல் கோவில்களில் பூசாரிகளாக தலித் மக்களே இருப்பார்கள். இது எங்கள் மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர் அன்று நியமித்ததன் தொடர்ச்சி.

அன்றைக்கு மாத்திரம் அல்ல... இன்றைக்கும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தில் சமையல்காரர்களாக தலித் சகோதரர்களை மட்டுமே பணிக்கு எடுக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்கு தனது அரண்மனையின் அடுப்படியிலேயே இடம் அளித்து தனது நாட்டு மக்களுக்கு சமத்துவம் போதித்தார் எங்கள்  மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர்.

இன்றைய செய்தித்தாளில் ஒரு படம் பார்க்கிறேன். ஆளும் அரசி அம்மையார் ஒரு தனி மேடையில் அமர்ந்து இருக்கிறார். அவரது காலுக்கும் கீழ் உள்ள மேடையில் பத்தோடு பதினொன்றாக நவீன தீண்டாமையாக  புதுக்கோட்டை சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திக் அமர்ந்து இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல.... எங்கள்  புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள்தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர் அவர்களின் நேரடி குடும்ப வாரிசு அவரது மகன்.

- கவிஞர் நிலா பாரதி

Sunday, April 24, 2016

க்விஸ் மாஸ்டரின் மோசடி அம்பலம்

க்விஸ் மாஸ்டரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி யுமான டெரிக் ஓ ப்ரியன், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அதிலே ஒரு புகைப்படத்தைக் காண்பித்துள்ளார். 

பாஜக வின் ராஜ்நாத்சிங், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ்காரத்திற்கு லட்டு ஊட்டுவது போன்ற அந்த படத்தைக் காண்பித்து "பார்த்தீர்களா? பாஜக விற்கும் சிபிஎம் கட்சிக்கும் உள்ள உறவை" என்று பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு என்பார்கள். ஆனால் டெரிக்கின் புளுகோ எட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. 

ராஜ்நாத்சிங் மோடிக்கு லட்டு கொடுத்த படத்தை மனிதன் பிரகாஷ் காரத் என்று மோசடி செய்து விட்டான்.



இப்போது டெரிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோழர் பிரகாஷ் காரத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார். மம்தா என்ன அராஜகம் செய்தாலும் கண்டு கொள்ளாத, கையாலாகத தேர்தல் ஆணையம் க்விஸ் மாஸ்டரை என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம். 


பாஜகவால் சகித்துக் கொள்ள முடியாத இன்னொரு விஷயமும் இதில் உள்ளது. 

வழக்கமாக மோடிக்காக, போட்டோஷாப் செய்வது பாஜகவின் வழக்கம். ஆனால் மோடியின் படத்தையே தூக்கி விட்டு ஒரு போட்டோஷாப் வேலை நடந்துள்ளது.
 

Saturday, April 23, 2016

இவங்கெல்லாம் படிச்சவங்களாம்!



மேலேயுள்ள புகார்ப்பெட்டி சென்னை விமான நிலையத்தில் உள்ளதாம். அதை உண்டியல் என்று நினைத்து பணத்தை போட்டுப் போயிருக்கிறார்கள் விமான சேவையை பயன்படுத்தும் பல படித்த மேதாவிகள்.

என்ன கொடுமை சார் இது?
 

வேறு யார் பொருத்தம்?





இலக்கியங்களில் காவிரி பற்றி சொல்லப்பட்டுள்ளதா?
வரலாற்றில் காவிரி பற்றி என்ன பதிவாகியுள்ளதா?
காவிரி எங்கே எப்படி தொடங்கி எதுவரையில் ஓடுகிறது?
பேச்சுவார்த்தைகள் மூலம் நதி நீர் பிரச்சினைகள் எங்காவது தீர்ந்துள்ளதா?
காவிரி கர்னாடகாவிலும் தமிழகத்திலும் எவ்வளவு தூரம் ஓடுகிறது?
தமிழகத்தில் முன்பு காவிரி மூலம் பாசனம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவு என்ன? உற்பத்தியின் அளவு என்ன?
கர்னாடகத்தில் முன்பு காவிரி மூலம் பாசனம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவு என்ன? உற்பத்தியின் அளவு என்ன?
காவிரி பிரச்சினை எப்போது தொடங்கியது? அது முற்றியது எவ்வாறு?
காவிரிப்பிரச்சினையில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் மைசூர் அரசின் நடவடிக்கைகள் என்ன? அப்போது தமிழக நிர்வாகப் பொறுப்பில் இருந்த வெள்ளை அரசு என்ன செய்தது?
சுதந்திர இந்தியாவில் பிரச்சினையைத் தீர்க்க மத்தியரசு செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன?
நீதிமன்ற வழக்குகளை வாபஸ் வாங்கியது யார்? அதற்காக அளிக்கப்பட்ட உறுதி மொழி என்ன? அது காப்பாற்றப்பட்டதா?
காவிரி நதி நீர் தீர்ப்பாணையம் இடைக்கால தீர்ப்பாக அளித்தது என்ன? இறுதித் தீர்ப்பாக சொன்னது என்ன?
தீர்ப்பாணையத்தில் கர்னாடகம் செய்த அடாவடிகள் என்ன?
காவிரி நதி நீர் ஆணையத்தையும் கண்காணிப்புக்குழுவையும் செயலற்ற ஒன்றாக கர்னாடக அரசு எப்படி மாற்றியது?
அரசிதழில் வெளியான தீர்ப்பாணை நடைமுறையில் உள்ளதா?
மேட்டூர் அணை ஒவ்வொரு வருடமும் எப்போது திறக்கப்பட்டது?

இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவையாறு தொகுதி வேட்பாளர், தோழர் வெ.ஜீவகுமார் எழுதி பாரதி புத்தகாலயம்,  முப்பது ரூபாயில் வெளியிட்டுள்ள “காவிரி : பிரச்சனையின் வேர்கள்” என்ற நூலைப் படியுங்கள்.

“ஒரு நதியை பொறுத்தவரை அது பாயும் நிலப்பரப்பு மட்டும்தான் அந்த நதி சம்பந்தப்பட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்கு கிடையாது. காவிரி தான் ஓடுவதை, பாய்வதை, பயன் தருவதை இயற்கையாக தீர்மானித்திருந்தது. மாநில எல்லைக் கோடுகள் பின்னர் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டன.

பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமாகி வாரி வழங்கிய காவிரி தம்மைச் சுற்றி வரும் சோக செய்திகளால் கெட்டி இறுக்கமாகி விட்டாள். பாரம்பரியமாக காவிரிமடியில் தலை சாய்த்து அமுதுண்டவர்கள் தற்கொலை செய்து மடிகிறார்கள். காவிரி கலங்குகிறாள். காவிரியின் கரைகளில் கண்ணகி நீதி கேட்டு நடந்தது ஒரு காலம். இப்போது காவிரியே நீதி கேட்டு தெருவில் அலைகிறாள்.

இப்போதும் நெல்லி மரத்தடியில் காவிரி ஊற்றாகத்தான் பிறப்பெடுத்து ஓடி வருகிறாள். அதன் தண்ணீர் முன் போல் தேன் கனியாக இனிக்கவில்லை. கண்ணீரால் உப்பு கரிக்கிறது.”

எவ்வளவு அற்புதமான வரிகள்! “மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்கு கிடையாது” என்பதை காவிரையை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிற கர்னாடக மாநில அரசியல்வாதிகள் உணர்ந்திட வேண்டும்.

காவிரி பாயும் திருவையாறு தொகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகளை முழுமையாக உணர்ந்துள்ள இவரன்றி வேறு யார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பொருத்தமாக இருக்க முடியும்?


இன்று ஒரு நாளாவது . . . .

தொலைக்காட்சிகளிலும் முக நூலிலும் வாட்ஸப்பிலும் மட்டுமே தங்களின் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிற அருமை நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

உலகப் புத்தக தினமான இன்றாவது ஒரு புத்தகத்தை வாங்குங்கள். குறைந்தபட்சம் ஒரு இருபது பக்கங்களாவது படியுங்கள்.



பேட்டரி சார்ஜ்  தீர்ந்து போனால் முக நூல், வாட்ஸப் காணாமல் போய் விடும். மின் வெட்டினால் தொலைக்காட்சியும் இயங்காது. 

எப்போதும் உங்களுக்கு துணையாக புத்தகங்கள் மட்டுமே இருக்க முடியும்.

எனவே 

வாசிப்பை நேசிப்போம்.
வாசிப்பை வசப்படுத்துவோம்

உலக புத்தக தின வாழ்த்துக்கள்
 

Friday, April 22, 2016

நேற்று பறக்கும் படைக்கு லீவா?




நேற்று ஒரு அவசர வேலையாக கும்பகோணம் சென்று திரும்பி வர வேண்டிய அவசியம் இருந்தது. 

காலையில் புறப்படும் போதே, எத்தனை இடங்களில் பறக்கும் படை வழி மறித்து எரிச்சலூட்டப் போகிறதோ என்ற எண்ணத்தோடுதான் புறப்பட்டேன்.

ஆனால் அதிசயிக்கக் கூடிய விதத்தில் போகும் போதும் சரி, வரும் போதும் சரி ஒரு இடத்தில் கூட பறக்கும் படையைக் காணவே இல்லை. ஒரு வேளை கடுமையான வெயில் காரணமாக நேற்று பறக்கும் படை விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டார்கள் போலும்.

ஒரு வேளை,  நேற்றுதான் ஆளும் கட்சியின் பணம் பயணிக்கும் என்று ஏதாவது தகவல் கிடைத்து பாதையிலிருந்து விலகி விட்டார்களோ என்னவோ? 


தடை வரும் முன்பாகவே





தேர்தல் நெருக்கத்தில் இந்த நூல் பற்றி எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் சொத்து குவிப்பு வழக்கு பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் யாரும் பேசக்கூடாது என்று ஜெயலலிதா வழக்கு போட்டுள்ளதாக ஒரு செய்தி உலவுவதால் இந்த நூலைப்பற்றி இப்போதே பகிர்ந்து கொள்கிறேன். அப்படி தடை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஐயப்படுபவர்களுக்கு ஒரு விஷயத்தை கடைசியில் நினைவு படுத்துகிறேன்.


நூல்            : ஜெயலலிதா வழக்கு – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை
ஆசிரியர்       : வெ.ஜீவகுமார்.
வெளியீடு      : பாரதி புத்தகாலயம்
                  சென்னை 18
விலை         : ரூபாய் 40.00

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டபோது தமிழகத்தில் நடந்த “கடவுளை மனிதன் தண்டிப்பதா, காவிரியை எடுத்துக் கொள்” உள்ளிட்ட ஏராளமான கூத்துக்களை பதிவு செய்கிற இந்நூல், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம், திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காலம், அரசியலில் மேலே வந்தது ஆகியவற்றை சொல்கிறது. அதன் மூலம் முதல்வர் ஆகும் முன் அவர் அப்படியொன்றும் மிகப் பெரிய கோடீஸ்வரியாக இல்லை என்பதையும் ஆசிரியர் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளின் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளதால் அம்மையார் எப்படியெல்லாம் கொள்ளையடித்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது.

சொத்து குவிப்பு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடித்தார்கள் என்பதையும் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்திலும் ஜவ்வாய் இழுத்த கதை விபரமாக சொல்லப்படுகிறது.

குன்ஹா  அளித்த தீர்ப்பின் விபரங்களும் அதற்குப் பின்பு பவானிசிங் எப்படியெல்லாம் வழக்கை நீர்த்துப் போக வைத்தார் என்பதையும் குமாரசாமி அன்பழகன் தரப்பு வக்கீல்களை நடத்திய விதத்தையும், அவருக்கு பிணை கொடுக்க உச்சநீதி மன்றம் எடுத்துக் கொண்ட அக்கறையையும் சுப்ரமணியசாமியின் இரட்டை நிலையையும் படிக்கையில் சாமானிய மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்து போகும்.

பக்கிரி போல ஆடை அணிந்த ஒரு ஏழை  மனிதனுக்கும்   மிடுக்கான உடை அணிந்த பானை வயிறு கொண்ட பணக்காரனுக்கும்  ஒரு வழக்கில் சரி சமமான ஆதாரங்கள் இருந்தால் நீதிபதி பணக்கார மனிதனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு எழுதுவார் என்று சொன்னதற்காக தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடிற்கு ஐம்பது ரூபாய் அபராதமும் பத்து நாள் சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டதை நினைவு கொள்கிற ஆசிரியர், நீதி யார் பக்கம் உள்ளது என்ற கேள்வி இன்றும் பொருந்துகிறது என்பதைச் சொல்லி

“ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதி அமரும் போது அவரும் விசாரணைக்கு உள்ளாகிறார். அவர் செயல்பாட்டில் தவறு ஏற்பட்டால் சார்பற்ற நிலையிலிருந்து அவர் பிறழ்கிறார் என்று அவர் மீதும் ஒரு கண் வைக்கப்பட வேண்டும்” என்று நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியதை நினைவு படுத்தி

“அரசாங்கங்களையும் அரசாங்கத்தை கண்காணிக்கும் நீதிமன்றங்களையும் சேர்த்து மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்”

என்று நூலை நிறைவு செய்கிறார்.

நீதிமன்ற விசாரணைகளின் போது உடனிருந்த உணர்வை இந்த நூல் அளிக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகளின் பட்டியலும் பதினைந்து பக்கங்களுக்கு கொடுக்கப்பட்ட சொத்து விபரங்களும் மலைக்க வைக்கிறது. வழக்கு தொடர்பாக வெளிவந்த பல கேலிச்சித்திரங்கள் கூடுதல் சுவாரஸ்யம் அளிக்கிறது.

இந்த நூலை மலிவுப்பதிப்பாக வெளியிட்டு தமிழகமெங்குமோ அல்லது குறைந்தபட்சம் ஆர்.கே.நகர் தொகுதியிலாவது மக்களிடம் வினியோகித்தால் அது அம்மையாரை தோற்கடிக்க உதவிகரமாக இருக்கும்.

முக்கியக் குறிப்பு ஒன்று : குமாரசாமி, மகேந்திர பூபதி போன்ற நீதிபதிகள் உள்ள நாட்டில் தடை கிடைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

முக்கியக் குறிப்பு இரண்டு : இந்த நூலின் ஆசிரியர் தோழர் வெ.ஜீவகுமார் ஒரு வழக்கறிஞர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினரான தோழர் வெ.ஜீவகுமார், திருவையாறு சட்ட மன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.


அவருக்கு வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். திருவையாறு தொகுதி வாக்காளர்கள் சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து தோழர் வெ.ஜீவகுமாரை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவருடைய இன்னொரு நூல் மிக முக்கியமானது. அதைப்பற்றி நாளை எழுதுகிறேன்.