Sunday, August 31, 2025

விஜய்க்கு கே டிவி பில்ட் அப் ஏன்?

 


கே. டிவியில் புதன் மாலை தலைவா திரைப்படம் போட்டார்கள்.

திங்கட்க்கிழமையிலிருந்தே ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் விளம்பரம். வெறுமனே இன்னார்  இன்னார் நடித்தது என்ற வழக்கமான விளம்பரம் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பு, காதலியின் துரோகம், தந்தையின் மரணம் இத்யாதி, இத்யாதி ஆகியவை உருவாக்கிய தலைவன் என்று பயங்கர பில்டப்.

கலாநிதி மாறன் விஜய்க்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

தவெக கொடுக்கும் பணமா அல்லது குடும்ப குழப்பத்திற்கு யாருக்காவது கொடுக்கும் சிக்னலா?

ஆனால் அந்த அரைமணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்த பில்ட் அப் எரிச்சலைத்தான் தந்தது.


Saturday, August 30, 2025

இரண்டாவது கல்யாணம் தனிப்பட்ட விஷயம். ஆனால் . . .

 


நேற்று முழுதும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தி, மருத்துவர் ஐயா, தன் இரண்டாவது மனைவியோடு ஐம்பதாவது திருமண விழா கொண்டாடியது.

அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி பேச அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. அது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட பிரச்சினை.

மோடி தன் மனைவியை விட்டு விலகி வாழ்வதை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. 2024 வரை வேட்பு மனுக்களில் அதை மறைத்ததுதான் குற்றம். 

அது போல மருத்துவர் ஐயா, கூடுதலாக ஒரு காதல் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அடுத்தவர்களின் காதலை நாடகக் காதல் என்று கொச்சைப்படுத்தி காதல் ஜோடிகளை பிரிக்கும் அராஜகம் செய்தது, காதலர்கள் வசிக்கும் பகுதிகளை கொளுத்த வைத்தது போன்ற கிரிமினல் வேலைகளின் சூத்ரதாரியாக இருந்தாரே, அதுதான் குற்றம். மன்னிக்க முடியாத குற்றம் . . .

Friday, August 29, 2025

புத்தக விழாவிற்கு செல்லாமலேயே நல்ல வேட்டை

 


புத்தக விழாவிற்கு செல்லாமலேயே நல்ல வேட்டை

சென்னை புத்தக விழா தொடங்க இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பே வழக்கமாக சென்னை புத்தக விழாவில் வாங்கும் அளவிற்கு புத்தகங்கள் வந்து குவிந்துள்ளன.

எல்லாம் பணி ஓய்வை முன்னிட்டு தோழர்கள் அளித்த அன்புப் பரிசுகள். 

பணி ஓய்வு நாளுக்கு சில நாட்கள் முன்பாகவே ஒரு அலுவலக வேலையாக வேலூர் வந்திருந்த ஒரு தோழர் அளித்த கடுகு எழுதிய "கமலாவும் நானும்" நூல்தான் முதல் வரவு. முதல் போணி மிகவும் ராசியாக அமைந்து விட்டது. 


எங்கள் கோட்டத் தோழர்கள், பிற கோட்டத் தோழர்கள், ஓய்வூதியர்கள், பிற சங்கத் தோழர்கள் என ஏராளமான நூல்கள் வந்து குவிந்தன.  

அதனை பட்டியலிட்டு அதற்கான இடத்தை கண்டுபிடித்து அடுக்கி வைக்கும் வேலை இன்றுதான் முடிந்தது.

சேலத்தில் நடந்த தென் மண்டல மாநாட்டில் இரண்டு நூல்கள் வாங்கினேன். எங்கள் கோட்ட மாநாட்டிலும் ஒன்று வாங்கினேன். முன்னாள் எல்.டி.டி.இ போராளி சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து 2 ம் பாகத்தை வரவழைக்க பாரதி புத்தகாலயம் தோழர் சிராஜுதீன் அவர்களிடம் பேசிய போது முன்பதிவு செய்திருந்த "சே குவாரா" நூல்கள் வரவில்லை என்பதை குறிப்பிட அவர் அதையும் அனுப்பி வைத்தார்.




பட்டியல் இங்கே . . .


விபத்து நடந்து வீட்டில் சிகிச்சையில் இருந்த போது பார்க்க வந்த தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர்கள் தோழர் கே.சுவாமிநாதன் அளித்த நூல், தோழர் டி.செந்தில்குமார் அளித்த இரு நூல்கள், எங்கள் கோட்டப் பொறுப்பாளர்கள் தோழர்கள் கே.வேலாயுதம், தோழர் ப.முத்துக்குமரன் அளித்த நூல்கள் தனி. அவற்றை படித்து முடித்த காரணத்தால் பட்டியலில் இல்லை.

புகைப்படத்தை பார்த்தால் ஒன்று தெரியும். ஒரே நூலை மூவர் அளித்துள்ளனர்.  நல்ல வேளையாக மூன்று நூல்கள் மட்டும்தான் ஏற்கனவே படித்தவை. மற்றவை எல்லாம் இது வரை படிக்காத நூல்கள்தான். அனைத்து விதமான நூல்களும் வந்துள்ளன.

இத்தனை அன்பிற்கும் எப்படி நன்றி சொல்ல! 

அனைத்தையும் படித்து முடிப்பதன் மூலம்தான் . . .

பிகு: பட்டியலில் இல்லாத "சந்திரஹாசம்" நூலின் படம் ஏன் இங்கே என்ற கேள்வி எழலாம். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டிற்குச் சென்ற போது முதல் நூலை படித்து முடித்து விட்டேன். அதற்குப் பிறகு ஒரு பெரிய தொய்வு, சோர்வு, சுணக்கம் எல்லாம். அதனால் வேகமான ஒரு நூலை படிப்போம் என்று அதனை எடுத்து ஒரே நாளில் படித்து முடித்தேன். அதன் பிறகு மீண்டும் பழைய வாசிப்பு வேகம் வர மூன்று நாட்களில் இரண்டு நூல்களை முடித்து விட்டேன். 

ஆமாம் தோழர் சு.வெ, சந்திரஹாசம் இரண்டாம் பாகம் என்ன ஆனது?


Thursday, August 28, 2025

பொய்யாவது பொருத்தமா சொல்லுங்க சங்கிங்களா

 


மத்யமர்  ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகள் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ள படம் கீழே உள்ளது.


நான் சொல்லித்தான் மோடி போரை நிறுத்தினார் என்று இருபதுக்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் சொல்லியும் இது வரை மோடியோ அல்லது அவரது மந்திரி மந்திகளோ வாய் திறக்கவே இல்லை. 50 % வரி விதிப்பிற்கும் அப்படியேதான்.   அல்லக்கைகள்தான் சும்மா அளந்து கொண்டிருக்கின்றன.

ட்ரம்ப் என்றால் நடு நடு என்று நடுங்குகிற மோடி, ட்ரம்ப்போடு பேச மறுத்து விட்டாராம். ட்ரம்ப் கூப்பிட்டால் போனாக இருந்தால் கூட நின்று கொண்டே பவ்யமாக பேசும் மோடி, அவரது அழைப்புக்களை நிராகரித்து விட்டாராம்.

கொஞ்சமாவது பொருத்தமா பொய் சொல்லுங்க சங்கிகளா!

Wednesday, August 27, 2025

காட்டிக் கொடுக்க அழைக்கும் ஆட்டுக்காரன்

 


காதல் திருமணங்கள் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் கூறிய பிறகு, ஆட்டுக்காரனும் பாஜக அலுவலகங்களுக்கும் வரலாம் என்று சொல்ல ஒரே கன்ப்யூசன்.

"போட்டிக்கு பிள்ளை பெறுகிறார்"  என்றுதான் முதலில் நினைத்தேன். அந்தாள் பேசியதன் முழு விபரங்களை மாலை மலர் வெளியிட்டிருந்ததை வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் பகிர்ந்து கொண்டிருந்ததை படித்த பின்புதான் தெளிவு கிடைத்தது.


ஆக ஆட்டுக்காரன் காதலர்களை பாஜக அலுவலகத்திற்கு அழைப்பது திருமணம் செய்து வைக்க அல்ல. அப்பா அம்மாவிற்கும் போலீஸிற்கும் தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த.

அதெப்படி ஆட்டுக்காரன் காதல் திருமணங்களை எல்லாம் ஆதரிப்பான்! பிற்போக்குத்தனமான பாஜக ஆளுங்க எல்லாம் திருந்துவாங்களா என்ன!!

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் திருமணம் புதிதல்ல . . .

 


காதல் திருமணங்களை எங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்திக் கொள்ளலாம் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் சொன்னது முதல் பலரும் பதறிக் கொண்டிருக்கிறார்கள். 

திருமண மண்டபம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னது போல மார்க்சிஸ்ட் கட்சியின் எதிரிகள் வழக்கம் போல திசை திருப்பி மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். காதல் திருமணம் நடத்த எங்களின் ஆதரவு முழுமையாக இருக்கும் என்பதுதான் தோழர் பெ.சண்முகம் சொன்னதன் அர்த்தம்  என்பது அவர்களுக்கு புரியும் என்பதுதான் அர்த்தம்.

காதல் திருமணங்களை, ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும்  செய்துள்ளனர், நடத்தியும் வைத்துள்ளனர். கட்சி மாநாடுகளில் திருமணம் நடந்துள்ளது. ஏன் வெண்மணி நினைவு நாளில் வெண்மணி தியாகிகள் அஞ்சலிக் கூட்டத்திலே கூட திருமணம் நடந்துள்ளது.

ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக நின்றதால் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தை சில ஜாதிய சகதிகள் அடித்து நொற்க்கினார்கள். 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு திருமணம் நினைவுக்கு வந்தது, கசப்பான மனிதர்களையும் சேர்த்து. ஒரு காதல் ஜோடிக்கு அவசர திருமணம் செய்ய சில கோயில்களில் விசாரிக்கிறோம். அவர்கள் சொன்ன விதிகளை பின்பற்றினால் நாங்கள் நினைத்த காலத்திற்குள் திருமணம் செய்ய இயலாது.

கட்சி அலுவலகம் சென்று யோசிப்போம் என்று கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எனக்கு தோன்றிய யோசனைதான் ஏன் இன்றைக்கே கட்சி அலுவலகத்திலேயே திருமணம் செய்யக்கூடாது என்பது. 

அன்று ஞாயிற்றுக் கிழமை. மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்காக செயற்குழுத் தோழர்கள் இறங்கி வந்த போது அந்த யோசனையை சொன்ன போது அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆர்.புருஷோத்தமன், நாங்கள் முதலில் சாப்பிட்டு வருகிறோம். பிறகு பேசிக் கொள்வோம் என்றார்.

பிறகு அவர் இருவரிடமும் "நீங்கள் இருவரும் மேஜர்தானே, இங்கே இன்றே திருமணம் செய்து கொள்ள விருப்பம்தானே, உங்களை யாரும் நிர்ப்பந்திக்கவில்லையல்லவா?" என்றெல்லாம் கேட்டு பதில்களில் திருப்தி அடைந்த பிறகு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இருவரின் கிளைச் செயலாளர்களுக்கும் தகவல் கூறுமாறு எங்கள் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளரும் அன்றைய மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.ஜெகதீசன் சொன்னார்.

உடனடியாக என்னுடைய டி.வி.எஸ் பிப்டியில் சென்று புத்தாடைகள், மாலைகள், தங்கத்தாலி, இனிப்புக்கள் எல்லாம் வாங்கி வந்தோம். முன்னாள் எம்.எல்.ஏ வும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் தலைமையில் திருமணம் நடந்தது. 

அப்போதே ஒரு நெருடல். இறுதியில் நன்றி சொன்ன மணமகன், அங்கே இருந்தவர்கள், எட்டிப் பார்த்தவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி சொன்னாரே தவிர, திருமணம் நடத்த ஆலோசனை சொன்ன, அனைத்து பொருட்களையும் அலைந்து திரிந்து வாங்கி வந்த என் பெயரை மட்டும் ஞாபகமாக தவிர்த்து விட்டார்.

அவர் பின்னாளில் சங்கத்திற்கு ஏராளமான பிரச்சினைகளை கொடுத்து விட்டு சங்கத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் முதலில் விலகிப் போனார். பின்பு எல்.ஐ.சி யிலிருந்தே ஓடிப் போய் விட்டார்.

துரோகம் அன்று எனக்கு புதிதாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு அது அதிர்ச்சியாய் இருந்திருக்காது. எத்தனை துரோகிகளை இந்த நூறாண்டு காலத்தில் பார்த்திருக்கும்!

பிகு: பாஜக அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று ஆட்டுக்காரனும் அழைத்துள்ளாரே என்று யாராவது நினைக்கலாம். அது தனி பதிவாக எழுத வேண்டிய ஒன்று.

பிகு 2 : மேலே உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தின் புகைப்படம். 


Tuesday, August 26, 2025

அது கொலைகாரக் கூட்டம்யா அமித்து

 


துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா அணி சார்பில் போட்டியிடும் நீதியரசர் சுதர்ஷன் ரெட்டி, நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்து சொல்லி வருகிறார்.

அதற்கு என்ன காரணம்?

"சல்வா ஜூடும்" என்ற அமைப்பை தடை செய்து அவர் தீர்ப்பளித்தார் என்பது குற்றச்சாட்டு.

சல்வா ஜூடும் என்பது ராணுவத்தின் பிரிவா?

மாநில காவல்துறையின் பிரிவா?

இல்லை மத்திய மாநில கூட்டுப்படையா?

மாநிலங்களின் கூட்டுப் படையா?

இல்லை.

இவை எதுவுமே இல்லை.

சத்திஸ்கர் மாநில பெரும் நிலவுடமையாளர்கள் உருவாக்கிய அடியாள் படை, கூலிப் படை

அவர்களின் முக்கிய இலக்கு மாவோயிஸ்டுகள் கிடையாது. பண்ணையார்களின் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், போராடும் தலைவர்கள் ஆகியோரைக் கொல்வதுதான். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனிப் படை என்று சொல்லிக் கொள்வார்கள். அது வெறும் கூலிப்படை. அவ்வளவுதான். சத்திஸ்கர் மாநிலத்தில் இயங்கிய அடியாள் கூலிப்படையின் பெயர் சல்வா ஜூடும் என்றால் பீகாரில் இயங்கிய கூலிப்படையின் பெயர் "ரண்வீர் சேனா" 

இவைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை, ஜனநாயகத்திற்கு எதிரானவை.

சல்வா ஜூடுமிற்கு எதிரான வழக்கில் சுதர்சன் ரெட்டியும் இன்னொரு நீதிபதியும் (அவர் பெயர் தெரியவில்லை) " மக்களை பாதுகாப்பது என்பது  அரசின் வேலை. அதை அவுட்சோர்ஸிங் விட முடியாது" என்று சொல்லித்தான் தடை செய்துள்ளனர். அதை நக்சலைட் ஆதரவு என்று திசை திருப்புவது பாஜகவின் வழக்கமான சின்ன புத்தி.



Monday, August 25, 2025

நல்ல வேளை யூரி காகரின் இறந்து விட்டார்!

 


மோடியின் முட்டாள் மந்திரிகளில் ஒருவரான டெல்லி கலவர புகழ் அனுராக் தாகூர் உதிர்த்த முத்து ஒன்று கீழே  உள்ளது.


புராணக்கதைகளுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் வித்தியாசம் தெரியாத மோடி போன்ற பெரும் மூடரின் அமைச்சர் மட்டும் அறிவியல் பார்வையுடனா இருப்பார்! காக்கா பிரியாணி தின்பவர்களுக்கு உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்!!.

அப்படிப்பட்ட மூடனுக்கு நிலவுக்கு முதலில் சென்றவருக்கும் விண்வெளிக்கு முதலில் சென்றவருக்குமான வித்தியாசம்  எப்படி தெரியும்!!!!

நல்ல வேளை விண்வெளிக்கு முதலில் சென்ற சோவியத் வீரர் யூரி காகரின் இந்த கொடுமையை எல்லாம் கேட்காமல் முன்பே இறந்து விட்டார். 

Saturday, August 23, 2025

ரெவி விஜயால் இப்போ சந்தோஷமா!

 


மேலே உள்ள மீமை தயார் செய்து ரொம்ப நாளாகி விட்டது. சுதந்திர தினம் சமயத்தில் தயார் செய்தாலும் பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. படம் வீணாகி விடுமோ என்று மட்டும் ஒரு கவலை இருந்தது.

விஜய் கட்சி, டீ பார்ட்டியை புறக்கணிக்கிறது என்று சொன்ன நேரத்தில் ஆட்டுத்தாடி ரெவி விஜய் மீது வருத்தப்பட்டிருக்கலாம்,, கோபமாகவும் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் ரெவி இப்போது விஜயைப் பார்த்தால் ரொம்பவே குஷியாக அவரை வரவேற்று இனிப்பெல்லாம் கூட கொடுத்திருப்பார்.

முதல்வரை அங்கிள் என்று அழைத்ததில் ரெவிக்கு நெசமாகவே சந்தோஷமாக இருக்கும்! எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா?

அரசியல் காரணமெனில் ஆளுனருக்கு அருகதையில்லை

 


நேற்று காலை ஆங்கில இந்துவில் வெளியான செய்திதான் மேலே உள்ளது. 

ஜனாதிபதி, ஆளுனர்கள் மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயம் செய்வதற்கு எதிராக ஜனாதிபதி கருத்து கேட்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வாதம் வைக்கிறார்.

"அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஜனநாயகக் காரணங்களுக்காகவோ ஒரு ஆளுனர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்யலாம்."  என்று அவர் ஆளுனர்களை நியாயப் படுத்துகின்றார்.

ஆளுனர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டியவர். அரசியல் காரணத்திற்காக அவர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதிக்கிறார் என்றால் அவர் அந்த பதவிக்கு அருகதையே இல்லாதவர்.

அப்படிப்பார்த்தால் எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுனர்கள் அனைவரும் அந்த பதவிக்கு அருகதையற்ற பொறுப்பற்றவர்கள்.

அப்படிப்பட்ட ஆட்களை துரத்தி விடவும் உச்ச நீதிமன்றம் ஏதாவது வழி செய்தால் நல்லது. . . .



Wednesday, August 20, 2025

எடப்பாடியெல்லாம் மனுசனா?

 


தான் நடத்திய பொதுக்கூட்டத்தின் வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை எடப்பாடி எனும் எடுபிடி மிரட்டிய காணொளியை பார்த்தேன்.

ஆம்புலன்ஸ் கடந்து சென்றால் அதற்கு வழி விட வேண்டும் என்பது மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சாதாரண விதி. நோயாளி சிகிச்சைக்காக விரைவில் செல்ல வழி விட வேண்டும் என்பதெல்லாம் ஒருவரின் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டிய குணம்.

அந்த குணம் கூட இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மிரட்டுவது,  பின்பு கவனித்துக் கொள் என்று கட்சிக்காரர்களுக்கு உத்தரவு போடுவதெல்லாம் கேவலம். இதை செய்துள்ள எடுபிடியை மனிதன் என்று சொல்வது மனித குலத்திற்கு அவமானம். ம்னுசன் என்று சொல்ல முடியாத ஒரு ஆள் முதல்வராக இருந்தது என்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு அவமானம்.

காலி ஆம்புலன்ஸ் என்றொரு  ...... பிளக்கும் வாதம் வைக்கப்படுகிறது. அட முட்டாள்களே! நோயாளியை வீட்டிலிருந்தோ, விபத்தானால் ரோட்டிலிருந்தோ அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலியாகத்தான் செல்ல வேண்டும்.

நான் விபத்துக்குள்ளான சமயத்தில் அடுத்த கட்ட சோதனைகளுக்காக மூன்று முறை மருத்துவ மணைக்கு ஆம்புலன்ஸில்தான் சென்றேன். என்னை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலியாகத்தான் வந்தது.

இன்னொன்று இவர் கூட்டத்திற்கு வேண்டுமென்றே இடையூறு செய்கிறார்களாம்.

அதற்கெல்லாம் அவர் வொர்த்தில்லை என்பதை அவரிடம் யாராவது சொல்லுங்களேன்.


காலி ஆம்புலன்ஸ் 

Monday, August 18, 2025

ஓட்டுத்திருடன் கூட்டாளியின் காமெடி

 


ஓட்டுத் திருடர் மோடியால் "பொறுக்கி" எடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார், நேற்று முன் தினம்  ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அது முழுக்க முழுக்க ஒரு காமெடியான பேட்டி.

 "பிரமாண வாக்கு மூலம் கொடு, இல்லைன்னா மன்னிப்பு கேளு" என்று ராகுல் காந்தியை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு "சந்தைக்கு போகனும், ஆத்தா வையும், காசு கொடு" என்பதை மட்டுமே சொல்லும் சப்பாணி போல  அரற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.

ரேபரேலி தொகுதி பற்றி மோடி மந்திரி அனுராக் தாகூர் சொல்லியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவரும் பிரமாண வாக்குமூலம் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று பத்திரிக்கைக்காரர்கள் கேட்ட கேள்வி மட்டும் அவர் காதிலே விழவில்லை. செலக்டிவ் செவிக் கோளாறு போல . . .அவருக்கு ஒரு ஹியரிங் எய்ட் யாராவது வாங்கிக் கொடுங்களேன்.

வீட்டு எண் பூஜ்ஜியம் என்று வாக்காளர் பட்டியலில் உள்ளதே என்றால் அதுக்கு ஒரு பதில் கொடுத்தார் பாருங்கள் அது காமெடியின் உச்சம். பாலத்தின் கீழே, பிளாட்பாரத்தில் தங்குபவர்களுக்கு விலாசம் இல்லாத மக்களுக்கு பூஜ்ஜியம் என்று எண் கொடுத்தார்களாம். 

65 லட்சம் வாக்காளர்களை நீக்கினீர்களே, அவர்களில் எவ்வளவு பேர் வங்க தேசத்திலிருந்து வந்த வெளி நாட்டினர்கள் என்ற கேள்விக்கு "ஹிஹி, ஹிஹி" என்ற அசட்டு இளிப்புதான் பதில்.

கண்காணிப்பு காணொளிகளை வெளியிடுவது பெண்களின் தனியுரிமைக்கு (PRIVACY) ஆபத்து என்று சொல்லும் க்யேனேஷிற்கு ஒன்று கேட்க வேண்டும். "அவை வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் காணொளிகள்தானே! சக கட்சிக்காரர்களை வேவு பார்க்க ஆட்டுக்காரனின் வார் ரூம் திருட்டுத்தனமான பதிவு செய்யும் காணொளிகள் அல்லதானே!"

ஓட்டுத் திருட்டு தொடர்பாக ஒடிஷாவில் பிஜு ஜனதா தள்ளும் உ.பி யில் அகிலேஷ் யாதவும் புகார் கொடுத்தார்களே, என்ன நடவடிக்கை எடுத்தாய் என்ற கேள்விக்கு அவை முடிவு வந்து 45 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப் பட்டதால் நிராகரித்து விட்டோம். ராகுல் காந்திக்கும் அதே பதில்தான் சொல்லப் போகிறாய்! பிறகு எதற்கு பிரமாண வாக்குமூலம், எழவு எல்லாம்!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட இணைய தளங்களில் வெளியிட்டு விட்டோம் என்று சொல்கையில் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் லட்சுமி மேனன் படிக்கும் கல்லூரியை கண்டுபிடித்தவுடன், "ஆபரேஷன் ஆரம்பிச்ச 48 மணி நேரத்துல வெற்றிகரமா முடிச்சுட்டோம்" என்று காமெடியன் சூரி சொல்வதுதான் நினைவுக்கு வந்தது.

கடைசியாக ஒன்னு சொன்னார் பாருங்க. அதைத்தான் தாங்கவே முடியலை.

இப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பது "அரசியல் சாசனத்தை இழிவு படுத்துவதாம்"

அடப்பாவி! ஓட்டுத் திருடர் மோடியும் அவரால் "பொறுக்கி" எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அத்துணை அதிகாரிகளும் செய்து கொண்டிருப்பதுதான் "அரசியல் சாசனத்தை இழிவு படுத்துவது" . 

உங்களைப் போன்ற ஆட்கள் பதவியில் ஒட்டிக் கொண்டு தேர்தல் ஜனநாயகத்தை படுகொலை செய்து குழி தோண்டி புதைக்கிறீர்களே, அதுதான் குற்றம்.  நீங்கள்தான் குற்றவாளிகள். 

Sunday, August 17, 2025

பழைய து.ஜ வே நல்லவருப்பா . . .

 


ஆமாம். ராஜினாமா செய்த/செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜ்க்தீப் தன்கர்  இப்போது நல்லவராகி விட்டார். 

ஆமாம். 

அவர்கள் புதிய ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டுள்ளவரின் வரலாறு அப்படி . . .

அது சரி,

பாஜகவில் என்ன மகாத்மா காந்திகளா இருக்கிறார்கள்! எல்லோருமே ரத்தக்கறை படிந்த கிரிமினல்கள்தானே!

Saturday, August 16, 2025

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை . . .

 


சென்னை ராஜ்பவன் மக்கள் விரோதியின், மனித குல விரோதியின் வசிப்பிடமாகி விட்டது. ஆளுனர் பதவியில் அமர்ந்துள்ள ரெவி எனும் நச்சுப்பாம்பு தொடர்ந்து விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. 

சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் விஷ(ம)ப் பிரச்சாரம் அது. பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இன்று ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று செய்துள்ள சிறு மதி கொண்டவனின் சில்லறைச் செயல்.

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை பீகாருக்கு துரத்தாவிட்டால் ரெவியின் எண்ணம் பலித்து தமிழ்நாடு கலவரக்காடாகும்.

தூய்மைப் பணியாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதிலும் காண்பித்த வீரத்தில் நூறில் ஒரு பங்கையாவது திமுக உடன் பிறப்புக்கள் ரெவி மீது காண்பிக்கட்டும். ஒரு மாணவியின் வீரம் மற்றவர்களுக்கு எப்போது வரும்?


Thursday, August 14, 2025

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் முதல்வர்

 


என் பெயர் ஸ்டாலின், நான் ஒரு பாதி கம்யூனிஸ்ட் என்று முதல்வர் சொல்லலாம். அந்த மீதி முதலாளித்துவவாதிதான் தொழிலாளர்கள் பிரச்சினையில் செயல்படுகிறார் போல . . .

முதலில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டம். கடுமையான போராட்டம் காரணமாக அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அடுத்து சாம்சங் பிரச்சினையில் முதலாளியின் பிரதிநிதியாய் அரசின் அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறு வழியின்றி சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இப்போது துப்புறவுப் பணியாளர்கள் பிரச்சினையில் தேவையற்ற ஈகோ காரணமாக தீர்வைக் காணாமல் போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவி விட்டு உழைக்கும் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்றெல்லாம் பட்டியல் போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகும்.

மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கு அவரே போடும் முட்டுக்கட்டைகள் என்று முதல்வர் எப்போது உணரப் போகிறாரோ?

திமுக தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால் மைத்ரேயன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மட்டுமல்ல, சேகர்பாபுவை தள்ளி வைப்பதும் மிக முக்கியம். 

Wednesday, August 13, 2025

மனிதன் சினிமா போல நிஜத்திலும்

 


மனிதன் திரைப்படத்தில் "இறந்து போனதாக போலீஸால் கணக்கு காண்பிக்கப்பட்ட ஒருவர் க்ளைமாக்ஸில் வந்து சாட்சி சொல்லுவதாக காட்சி இறக்கும்.

பீகாரில் மரணமடைந்து விட்டார்கள்     என்று சொல்லி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இரு வாக்காளர்களை டெல்லி முன்னாள் துணை முதல்வர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார்.

திரைப்படத்தை மிஞ்சும் இக்காட்சி தேர்தல் ஆணைய, மோடி கூட்டணியின் அயோக்கியத்தனத்திகுச் சான்று 


Saturday, August 9, 2025

இன்னும் நாலு ஜட்ஜுங்கள சேர்த்துக்குங்கய்யா . . .

 


இப்படி ஒரு போர்ட் விரைவில் எழுதப்பட்டால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. 

ஆமாம். நம்ம ஜட்ஜய்யா ஒருத்தரு இந்த வேலையைத்தான் நேத்து செஞ்சாரு. 


ஐய்யா, தலைமை நீதிபதி ஐய்யாங்களா, தமிழ்நாட்டில இந்த மாதிரி உதிரி கட்சிங்க நெறய இருக்கு! அதுக்குள்ள சண்டைங்களும் நெறய இருக்கு, அதனால டெல்லில சொல்லி கூட இன்னொரு நாலு ஜட்ஜுங்கள வேலைக்கு சேத்துக்குங்க. அவங்க பஞ்சாயத்துக்களை பாத்துக்கட்டும். இல்லாட்டி கேஸ் கட்டுங்க தேங்கிப் போய் கோர்ட்டுல இடம் பத்தாம போயிடப் போகுது. 

Thursday, August 7, 2025

இனிமே பத்ரி சேஷாத்ரி பேரு ????

 


கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரிக்கு எதுக்கு இப்போ பாயசம் என்ற கேள்வி வரலாம்.

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயர் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த சமயத்தில் 01.08.2025 அன்று தெனாவெட்டாக " பாபர் மசூதியை இடிக்கும் போது அமெரிக்காவில் இருந்தேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது" என்று சொல்லியிருந்த அந்த சங்கி ஒரு பதிவு போட்டு "எல்லாம் வல்ல" வில்சன் உச்ச நீதிமன்றம் போவாரா என்று வேறு கேட்டிருந்தார். 

நேற்று தீர்ப்பு வந்ததும் அப்படியே பல்டி அடித்து வில்சனுக்கு பாராட்டு வேறு சொல்கிறார்.


இவருக்கு பல்டி சேஷாத்ரி என்ற பெயர் கன கச்சிதமாக பொருந்துகிறது அல்லவா!

Wednesday, August 6, 2025

இதுதான் நெசம் முட்டாள் சங்கிகளே

 

இந்த கார்ட்டூனை நினைவு படுத்த வேண்டிய அவசியத்தை முட்டாள் சங்கிகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது நான்தான் என்று  27 முறை ட்ரம்ப் சொல்லிவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று சொல்லி ஒரு வாரமாகிவிட்டது. ரஷ்யாவோடு எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று மிரட்டி மூன்று நாளாகி விட்டது. ஆனால் மோடியோ வாய் திறக்கவே இல்லை.

இந்த சூழலில் இப்படி ஒரு படத்தை சங்கிகள் பரப்புகிறார்கள்.


அதனால்தான் சொல்ல வேண்டியுள்ளது. அடேய் முட்டாள் சங்கிகளே, உங்க மோடி பில்டிங், பேஸ்மெண்ட் எல்லாம் பலவீனமாக இருக்கிற. மேல் மண்டையில ஒன்னும் இல்லாத  வெறும் டம்மி பீஸ்.  ட்ரம்பைப் பார்த்து நடுங்குபவர் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் இந்த பில்ட் அப் வேலையை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். 

Tuesday, August 5, 2025

நன்றி சொல்லும் நேரம் இது . . .

 



பணி ஓய்வு நாள் வந்து அதன் பின்னும் நான்கு நாட்கள் கடந்து விட்டது. 31.007.2025 அன்று பணி ஓய்வு. அதன் பின்பு 02.08.2025, 03.08.2025 ஆகிய நாட்கள் கோட்டச்சங்கத்தின் 38 வது பொது மாநாடு. கொஞ்சம் ஓய்விற்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்திற்கு வர அவகாசம் கிடைத்தது. 

வேறு எதுவும் இங்கே எழுதப் போவதில்லை.

நன்றி நவில்வது மட்டுமே நோக்கம்.

வாட்ஸப் மூலமாக,
முகநூல் மூலமாக,
தொலை பேசி மூலமாக
வாழ்த்து தெரிவித்த
நேரடியாக இருக்கைக்கும் வீட்டிற்கும்
பின்பு அலுவலகத்தில் நடந்த,
சங்கம் சார்பாக மண்டபத்தில் நடந்த
பணி நிறைவு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்ட, பங்கேற்று வாழ்த்திய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தோழர்கள்
எல்.ஐ.சி அதிகாரிகள், ஊழியர்கள்,
தோழமைச்சங்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள்,

நண்பர்கள், உறவினர்கள்,

பணி நிறைவு பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய வேலூர் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள், அவர்களை வழிநடத்திய இளம் தலைவர்கள் தோழர் எஸ்.பழனிராஜ், பொதுச்செயலாளர், தோழர் பி.எஸ்.பாலாஜி, தலைவர் ஆகியோருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி தெரிவிப்பேன்! இனி வரும் காலமும் நான் எப்போதும் போல உங்களுடன் இணைந்தே செயல்படுவேன் என்பதைத் தவிர!!

அனைத்தையும் தாண்டி  திருமணமான நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை என் பயணத்தில் துணை நின்று மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு கை கொடுத்தவர். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகளால் மன வலியும் காயங்களும் பெற்றவர்.  அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்த அவரின்றி நான் இல்லை. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து தாயுமானவனாக திகழும் என் மகன். இவர்கள் இருவருக்கும் எந்நாளும் நான் என்ன நன்றி சொல்ல முடியும்! என் அன்பை பகிர்ந்து கொள்வதைத் தவிர!

எல்.ஐ.சி பணியிலிருந்துதான் ஓய்வு. மக்களுக்கான பொது வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பணி நிறைவு பாராடு விழாவில் வாழ்த்திய பல தலைவர்கள், தோழர்கள் கூறினார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் செயல்படுவதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும். 

என அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.