Friday, July 5, 2024

அற்புத உரையும் ஆட்டுக்காரனுக்கு பதிலடியும்

 


நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புத உரை கீழே உள்ளது. 

மக்களவைத் தேர்தலில், பாஜக-வின் பாசிச அரசியலுக்கு எதிராக மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசால் தில்லி வீதிகளில் தடுக்கப்பட்ட விவசாயிகளின் டிராக்டர், அந்த தடைகளை உடைத்து, தற்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று சு. வெங்கடேசன் எம்.பி. இதுதொடர்பாக மேலும் பேசியிருப்பதாவது:
மதுரைத் தொகுதி மக்களுக்கு நன்றி
அவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
18-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச அரசியலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் எனது அன்பான வணக்கத்தையும், நன்றியையும் முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அவைத் தலைவர் அவர்களே, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் தீர்ப்பை உள் வாங்கிக் கொண்டதாக இந்த அரசினுடைய உரை அமையவில்லை. குறிப்பாகச் சொல்வ தாக இருந்தால் இந்தத் தீர்ப்பு ஆளுங்கட்சி யினுடைய 63 எம்.பி.க்களை குறைத்திரு க்கிறது. அவர்களது கார்ப்பரேட் நண்பர்கள் கட்டமைத்த- தேர்தலுக்குப் பிந்தைய (Exit Poll) கற்பனைகளைத் தகர்த்திருக்கிறது.
எடுபடாத தெய்வக் குழந்தையின் கதைகள்
இன்னும் சொல்லப் போனால் தெய்வக் குழந்தை சொன்ன பல கதைகளை மக்கள் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள். இவ்வளவு நல்ல ஒரு தீர்ப்பை 18-ஆவது நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்கியிருக் கிறார்கள். அதைவிட முக்கியம் உங்கள் கைகளில் பெரும்பான்மையைக் கொடுத் தால் எங்கள் கைகளில் வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்கிற அச்சத்தை இந்திய மக்கள் வெளிப்படுத்தி இருப்பது தான் இந்தத் தேர்தலினுடைய தீர்ப்பு.
டிராக்டரில் வந்து பதவியேற்ற தோழர் அம்ரா ராம்
நண்பர்களே 17-ஆவது நாடாளுமன்றத் தினுடைய கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவு படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். ‘தேர்தலுக்குப் பிறகு இந்த அவையில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை; பார்வை யாளர் மாடத்தில் தான் எதிர்க்கட்சிகளுக்கு இடம்’ என்று பேசினார். ஆனால், இன்றை க்கு எதிர்கட்சித் தலைவரின் உரையை இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கேட்க வைத்திருக்கிற பெருமையை இந்திய வாக்கா ளர்கள் நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல எந்த விவசாயிகளுடைய டிராக்டர்கள் தில்லிக்குள் வரக்கூடாது என்று இந்த அரசு உத்தரவு போட்டதோ, இன்றைக்கு அதே விவசாயப் போராட்டத்தின் தலைவர் எங்கள் அன்புத் தோழர் அம்ரா ராம் டிராக்ட ரிலே நாடாளுமன்றம் வந்து பதவிப் பிரமா ணத்தை எடுத்திருக்கிறார் என்பதை இங்கே நான் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
அயோத்தி மக்களின் அழகான தீர்ப்பு- அவதேஷ் பிரசாத்
பிரதமருடைய அன்றையப் பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியைப் பற்றி இருந்தது. ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை. உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள், ஆண்டவனையும் கைவிடு வீர்கள் என்பது தான் குடியரசுத் தலைவர் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ள செய்தி.
இன்றைக்குத் தான் அயோத்தியைப்பேச வேண்டும். ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அவதேஷ் பிரசாத் என்ற நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். எவ்வளவு அழகான ஒரு ஜனநாயகத்தின் தீர்ப்பு.
கோயில்கள் வாக்குச்சாவடி வாசல் அல்ல!
கோயில்களை வாக்குச் சாவடியின் வாசலாக பாஜக பார்க்கிறது. கோயில்கள் வாக்குச் சாவடி களின் வாசல்கள் அல்ல, அது ஆன்மீகத்தின் உறைவிடம் என்பதை உங்களுக்கு சொல்லி யிருக்கிறார்கள் அயோத்தி மக்கள்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, அயோத்தியினு டைய ராமர் உங்களை கைவிட்டார். எனவே தான் நீங்கள் ராமரைக் கைவிட்டு விசுவநாதரிடம் போனீர்கள்; வாரணாசியிலே காசி விசுவநாதர் முதல் மூன்று சுற்று உங்களை தவிக்கவிட்டார். ‘தெய்வத்தின் குழந்தை’ என நீங்கள் சொல்லியதை மனிதர்களான எங்களாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தெய்வங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? விசுவநாதரிடமிருந்து இன்றைக்கு ஜெகன்நாதரிடம் போயிருக்கிறீர்கள். விரைவில் ஜெகன்நாதர் உங்களுக்கு நல்ல அருளைப் பாவிப்பார்.
செங்கோல்- பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம்
இங்கே அமைச்சர்கள் எல்லாம் பேசினார்கள். மீண்டும் செங்கோலோடு எங்களது பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்திருக்கிறார் என்று. செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதை யெல்லாம் தகர்த்து விட்டுத் தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையிலே கால் ஊன்றியது. மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ, அப்பொ ழுதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டது.
செத்துப் போன சிங்கத்தின் தோலை போர்த்திக் கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று?
சாவர்க்கர் உள்ளே, காந்தி - அம்பேத்கர் வெளியேவா..?
இந்த செங்கோலைக் கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது. இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாடாளுமன்றத்தினுடைய நுழைவு வாசலில் தேசத் தந்தை காந்தியின் சிலை இருந்தது. நாடாளுமன்றத்தின் முன்புறம் அண்ணல் அம்பேத்கரின் சிலை இருந்தது. இன்றைக்கு அவைகளெல்லாம் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பின்புற வாச லிலே காந்தியைக் கொண்டு போய் வைத்திருக் கிறீர்கள். அம்பேத்கரைக் கொண்டு போய் வைத்தி ருக்கிறீர்கள். ஆனால் சாணக்கியரையும், சாவர்க்க ரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே வைத்திருக்கிறீர்கள்.
அழிக்க நினைத்தால், உயர்த்திப்பிடிப்போம்!
ஆளுங்கட்சிக்காரர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம். நாங்கள் அரசியல் சாசனத்தை கையிலே ஏந்தியபடி பதவி ஏற்றுக் கொண்டோம். ஏன் தெரியுமா? உங்களால் எது அழிக்கப்பட இருக்கிறதோ- அதை உயர்த்திப் பிடிக்கத் தான், மக்கள் எங்களுக்கு வாக்களித்தி ருக்கிறார்கள். நீங்கள் எதை அழிக்க நினைக் கிறீர்களோ நாங்கள் அதை உயர்த்திப் பிடிப்போம். அதேபோல செங்கோல் இரண்டு செய்தியின் குறியீடு.
ஒன்று மன்னராட்சியின் குறியீடு. அதேபோல இரண்டாவது குறியீடு அறம். இது நேர்மையின் குறியீடு. ஆனால், உங்களுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தமிழ்நாட்டுத் தேர்த லுக்கு எட்டு முறை பிரதமர் வந்தார். தமிழ்நாட்டின் பெருமையை, தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் பேசினார்.
மோடி அளவிற்கு தமிழர்களை இழிவுபடுத்தியது யாருமில்லை
தேர்தல் முடிந்ததும் உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள்? பீகாரிலே என்ன பேசினீர்கள்? ஒடிசாவிலே என்ன பேசினீர்கள்? உங்களுக்கு அந்த அரசியல் அறமும், நேர்மையும் இருந்திருந் தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை.
அதேபோல சிறுபான்மை மக்களை ஊடுரு வல்காரர்கள் என்று, அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் என்று செல்வத்தை அபகரிக்கிற வர்கள் என்று நீங்கள் பேசுகிறீர்கள். தொடர்ந்து இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருந்தது.
பதிலளிக்காமல் தப்பி ஓடும் ஒன்றிய அமைச்சர்கள்
அதேபோல இன்றைக்குத் தேர்தலுக்குப் பிறகு ‘நீட்’ தேர்வு பிரச்சனை . ஏறக்குறைய ‘கோச்சிங் மாபியாக்கள்’ தேர்தல் முகமைகளை தங்கள் கை களிலே வைத்திருக்கிறார்களோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். அதைப்பற்றி கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார். ரயில் விபத்தைப் பற்றி ரயில்வே அமைச்சர் பேச மறுக்கிறார். மணிப்பூர் வன்முறைகளைப் பற்றி உள்துறை அமைச்சர் பேச மறுக்கிறார். ஆனால் அதற்குப் பதிலாக தேர்த லுக்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேபோல பல இடங்களிலே- எழுத்தாளர் அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரி வால் வரை அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும்.
பாஜக-வின் சரிவு ஆரம்பமாகிவிட்டது
இந்தத் தேர்தலின் மூலம் உங்களது சரிவு ஆரம்பமாகி விட்டது. 63 இடங்களை மக்கள் பறித்தார்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் தோழமைக் கட்சிகளையே நீங்கள் மதிக்கப் பழகி விட்டீர்கள். 12 எம்.பி.க்கள் கொண்ட கட்சிக்கு பிரதமர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார். அது இந்த நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறுகிறது.
ஜனநாயகத்தின் குரல், சமூகநீதியின் குரல், பொருளாதார நீதியின் குரல் தான் இந்தியாவின் குரல் என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்கள் என்று சொல்லி முடிக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------

இந்த உரையைக் கண்டித்து ஆட்டுக்காரன் வழக்கம் போல அபத்தமாக உளற, அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் தோழர் சு.வெ.

அந்த பதிலடி கீழே

--------------------------------------------------------------------------------------------------------------

திருவாளர் அண்ணாமலை அவர்களே,
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரை குறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.
“செங்கோல் என்பது ஒன்று மன்ன ராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மை யின் குறியீடு. நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்த வுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர் களை அவமானப்படுத்தியவர்கள் தானே நீங்கள்” என்று பேசினேன்.
ஆனால் நீங்களோ, “செங்கோல் அறத் தின், நேர்மையின் குறியீடு” என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்த னர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக் கிறீர்கள்.
‘செங்கோல்’ என்றால் என்ன?
‘செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு’ என்பதைப் பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பாஜகவின் நேர்மை யின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களை அற வழிப்படுத்துவதும் நீதியின்பால் ஆட்சி செய்ய வைப்பதும்தான் காலங்காலமாக இருந்துவரும் பெரும்பிரச்சனை. அத னால்தான் அறத்தின் குறியீடாக செங்கோ லைத் தமிழ் இலக்கியங்கள் பேசின. “வம்ப வேந்தர்களாகவும், பிறர் மண் உண்ணும் செம்மல்களாகவும்” மன்னர்கள் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்திய போது அவர்களை கொடுங்கோல் ஆட்சி நடத்தாதீர்கள் என இலக்கியங்கள் இடித்துரைத்தன. நீதி மற்றும் அறத்தின் குறியீடாக “செங்கோல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
மன்னராட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஜனநாயகக் காலத்திற்கு வந்துவிட்டோம். நமக்கான நீதியின் அடையாளமாகவும் அடிப்படையாகவும் நமக்கு நாமே உரு வாக்கிக்கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.
உங்களை வழிநடத்துவது எது?
நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை யும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சி யகத்திலிருந்த செங்கோலை எடுத்து வந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் நாற்பதடி உய ரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் ஆறு வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டுவதும் தற்செயலல்ல. உங்களது இந்துத்துவா மதவெறித்தத்துவம் உங்க ளை வழிநடத்துகிறது. அதற்குத் தடை யாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.
இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் நமது அரசியல் சாசனமும் அது சார்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக்கால அடையாளத்தைக் கொண்டுவந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.
எனவேதான் நாங்கள் அரசியல் சாசனத்தைக் கைகளில் ஏந்தி 18ஆவது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். அதனை உயர்த்திப்பிடித்துப் பதவி யேற்றுக்கொண்டோம். “நீங்கள் அழிக்க நினைப்பதை காப்பாற்றத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கினோம்.
மதுரைக்கு வந்து பாருங்கள்
திரு.அண்ணாமலை அவர்களே,
மதுரை மாநகராட்சி மேயர் பொறுப் பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப் பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ள தைப் போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல.
நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சி யின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்து வதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.
பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும் விடப் பெரியவர் அவைத் தலைவர்தான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச் சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத் தால் இந்த நாட்டின் நிலைஎன்னவாகும்?
எல்லாவற்றையும் விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கி யுள்ள ஜனநாயக விதிகளும் தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள்.
அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநா யகத்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தல் முடிவு.
மன்னராக உணர்கிற தெய்வப்பிறவி
ஆனால் இந்த 1 8 ஆவது நாடாளுமன்றத் திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப் பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத் தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக் கிறார்.
ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிற வியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக் கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத் தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.
நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன்.
“அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு நான் தான் எல்லாமுமாக இருக் கிறேன் என உலகுக்கு அறிவித்துக் கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது”.
வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதிக் காலம் அல்ல; சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்.
“அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு
நான் தான் எல்லாமுமாக இருக்கிறேன் என
உலகுக்கு அறிவித்துக் கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டுசென்றுள்ளது”
--------------------------------------------------------------------------
யானை மாலை போட்டு பிச்சைக்காரி அரசியான "சரஸ்வதி சபதம்" கதை போல மாநிலத் தலைவரான நீயெல்லாம் தோழர் சு.வெ வுடன் மோதலாமா? இப்படி அசிங்கப்படலாமா?

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ளவரென்றால் ஒரு முழம் கயிற்றைத் தேடி போயிருப்பார்கள். உனக்குத்தான் அதெல்லாம் கிடையாதே!

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஜதி டி.என்.ஏ ஆராய்ச்சியை உங்க பக்கத்தோட நிறுத்திக்கோங்க! உங்க பக்கத்தை பரப்ப இங்கே வராதீங்க

      Delete