Sunday, June 10, 2018

தமிழிசை தூண்டிய கோவைக் கலவரம் . . . .

கோவையில் நடக்கவிருந்த ஒரு கலவரம் தவிர்க்கப்பட்டு விட்டது. கருத்துக்களை எதிர் கொள்ள கையாலாகாத தமிழிசை அம்மையாரே ஒரு கலவரத்திற்கு தூண்டுகோலாக இருந்தார் என்பதை தீக்கதிர் நாளிதழில் இன்று வெளியான முழுமையான ரிப்போர்ட் அம்பலப்படுத்துகிறது.

காவிக்கூட்டத்தை இந்திய ஊடகங்கள் புறக்கணிப்பது அவற்றுக்கு நல்லது.

இப்போது ரிப்போர்டை படியுங்கள்






ஆம்... நாங்கள் உண்டியல் குலுக்கிகள்தான்!

கோயம்புத்தூர், ஜுன் 9- எம். கண்ணன்

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக ‘வட்டமேசை விவாதம்’ நிகழ்ச்சி எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வெள்ளியன்று மாலை 6மணியளவில் துவங்கியது. ‘‘தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா?’’ என்பதுதான் தலைப்பு. இதில் ‘‘போராட்டங்கள் நடப்பது அரசியல் காரணங்களுக்காகவே’’ என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக செ.கு.தமிழரசன் ஆகியோர் ஒரு பக்கத்திலும், ‘‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவே’’ என்று வாதிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவையின் உ.தனியரசு, இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் மறுதரப்பாகவும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் நெறிப்படுத்தினார்.முதலில் பேச அழைக்கப்பட்ட டி.கே.எஸ்.இளங்கோவன், ‘‘நாட்டின் விடுதலை துவங்கி எல்லாமே போராட்டத்தால்தான் பெறப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் நல்ல தண்ணீர் வேண்டும். நல்ல காற்று வேண்டும் எனக் கேட்டுப் போராடுவது குற்றமா..?’’ என்ற கேள்வியை முன்வைத்தும், பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டியும் பேசி முடித்தார்.

தமிழிசை பாய்ச்சல்

அதன் பின்னர் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனை, கார்த்திகைச் செல்வன் பேச அழைத்தார்.அப்போது தமிழிசை, ‘‘தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம்….. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத்தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள். இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது...’’ என தமது வழக்கமான பல்லவியைப் பாடினார். பேசிக்கொண்டே வந்தவர், எதிரிலிருந்த கே.பாலகிருஷ்ணனை பார்த்தவுடன், ‘‘இந்த கம்யூனிஸ்ட்கள் இங்கே (தமிழகம்) கெயில் குழாய் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் கேரளாவில் கெயில் திட்டத்தை ஆதரித்து வருகின்றனர். அவர்களது ஆட்சியின் சாதனையில் அதனைக் குறிப்பிட்டும் விளம்பரம் செய்கின்றனர். கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியதால்தான் தொழிற்சாலைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது” என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

எந்த மண்ணில் நின்று கொண்டு பேசுகிறீர்கள் தெரியுமா?

அதன் பின்னர், நெறியாளர் கார்த்திகைச் செல்வன், கே.பாலகிருஷ்ணனை பேச அழைத்தார்.கே.பாலகிருஷ்ணன், பேசத் துவங்கினார்... 

‘‘இந்த கொங்கு மண் போராட்டத்தால் சிவந்த மண். திருப்பூர் குமரன் கையில் கொடியோடு போராடி வீழ்ந்தான்; ஸ்டேன்ஸ் மில் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆலை முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெற்ற மண் இந்த கோவை. விவசாயிகளைத் திரட்டிப் போராடிய நாராயணசாமி நாயுடு இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான். உழைப்பாளர்களைத் திரட்டிப் போராடிய எங்கள் தோழர் ரமணி உள்ளிட்ட பல்வேறு போராட்டத் தலைவர்கள் வாழ்ந்த மண் இந்தமண். அம்மையார் தமிழிசை எந்த மண்ணில் இருந்து போராட்டத்திற்கு எதிராக பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். (அரங்கம் அதிர கைதட்டல்)அழுத குழந்தைதான் பால் குடிக்கும்… போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும். குழந்தை கூட அழும் போதுதான் தாய் பால் கொடுக்கிறார். குழந்தை சும்மா இருக்கும் போது பால் கொடுப்பதில்லை. குழந்தை கூட அழுது போராடித்தான் உரிமையைப் பெறுகிறது. போராடுவது ஒவ்வொருவரின் உரிமை. (விசில் சப்தம் காதைப் பிளக்கிறது)தமிழ்நாட்டில் அதிகமான போராட்டங்கள் நடைபெறுகிறது என்பது உண்மையே. தமிழகம் முன்னைக்காட்டிலும் வேகமும், விழிப்புணர்வும் பெற்றுள்ளது. இன்று அரசின் கொள்கைகளால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்கள் தாங்களாகவே எதிர்த்துப் போராடுகின்றனர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டால் தவறு. திருடினால் தவறு. ஏன் என்று கேள்வி கேட்டு போராட முன்வருவதைப் பாராட்ட வேண்டும். அது, வாழ்த்த வேண்டிய நல்ல அம்சமாகும். அத்தகைய போராட்டத்தின் மீது ஏன் கோபம் கொள்கிறீர்கள்?

தமிழிசை அம்மையார் கேட்கிறார்... 24 வருடமாக இருந்தவர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள், என்ன நியாயம் என்று கேட்கிறார்... தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது; எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவருக்குத் தெரியுமா?இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் கூட 200 ஆண்டுகாலமாக நம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்தான், ஆனால் 1947 ல்தான் விடுதலை கிடைத்தது. அப்போது இவ்வளவு நாளாக அடிமையாக இருந்த இந்தியர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என பிரிட்டிஷ்காரன் கேட்டால் எப்படி இருக்குமோ அதே போல்தான் இருக்கிறது தமிழிசையின் கருத்து…(அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது)

(தமிழிசை குறுக்கிட்டு பேசவிடாமல் செய்ய முயலுகிறார்)நான் சுதந்திரப் போராட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்…
கே.பாலகிருஷ்ணன் : கொஞ்சம் அமைதியாக இருங்கள்... பொறுமை வேண்டும்... என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள்...

(கார்த்திகைச் செல்வன் தலையிடுகிறார்...)

கே.பாலகிருஷ்ணன் : அடுத்து சொன்னாங்க… கம்யூனிஸ்ட்கள் கேரளாவில் கெயிலை ஆதரிக்கிறார்கள்; இங்கே எதிர்க்கிறார்கள் என்று! உண்மைதான். கேரளாவில் கெயில் பைப் லைன் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் வீட்டிற்குள் பைப்லைன் வருகிறது. விவசாய நிலத்தில் வருகிறது. அதனால்தான் எதிர்க்கிறோம். நாங்கள் கெயில் பைப் லைன் திட்டம் வேண்டாம் எனக் கூறவில்லை. விவசாயிகளின் விளைநிலத்தையும், வீட்டையும் அழித்து வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.கெயில் நிறுவனம் ஏன் கேரளாவில் ஒரு நிலைப்பாடும், தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும் எடுக்க வேண்டும்? 

அதனை ஏன் பாஜக ஆதரிக்க வேண்டும்? தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே; அது அரசின் நிலம்தானே, அதில் உங்களுக்கென்ன சிரமம்? இங்கே இரண்டு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களா? அல்லது பாஜகவா? (அரங்கத்தின் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆகிறது)கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார் தமிழிசை... நான் கேட்கிறேன்… சென்னையில் ஹூண்டாய், நோக்கியா நிறுவனங்களை மூடியது. நாங்கள் போராட்டம் நடத்தியதாலா? அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கொள்ளை லாபம் ஈட்டியவுடன் ஓட்டம் பிடித்தன. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் மூடப்பட்டிருக்கிறதா?ஸ்டெர்லைட் ஆலையிடம் பாஜக பணத்தைப் பெற்றுக்கொண்டு, போராடிய மக்களுக்கு எதிராக, போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசுகிறது…

தமிழிசை : இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… இதற்கு ஆதாரம் இருக்கிறதா? (நாற்காலியின் முனைக்கு வந்து கத்துகிறார்...)

கே.பாலகிருஷ்ணன் : தமிழிசை, கொஞ்சம் பொறுமையாக இருங்க… ஆதாரம் இருக்கிறது… சொல்கிறேன் கேளுங்கள்…
(தமிழிசை, பேசவிடாமல் மீண்டும் கத்தி ஏதோ சொல்கிறார்…)

கார்த்திகைச் செல்வன் : (தமிழிசையைப் பார்த்து) அமைதியாக இருங்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம். அதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அவரைப் பேச அனுமதியுங்கள் …

கே.பாலகிருஷ்ணன் : ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்திடம் இந்தியாவிலேயே அதிகமாக நன்கொடை பெற்ற கட்சி பாஜக. அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டுதானே இன்று தூத்துக்குடியில் போராடிய மக்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்… இங்கே யார் சமூக விரோதி?பாஜக வேதாந்தா குழுமத்திடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது குறித்த வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்வேறு அமைப்புகள் வேதாந்தா குழுமத்திடம் எவ்வளவு நன்கொடை, யார் யார் வாங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அது பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது... 

(தமிழிசை மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார்…)

கே.பாலகிருஷ்ணன் : நான் சொல்கிறேன்... கார்ப்பரேட்டுகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெற்றதில்லை... தமிழிசை, பாஜக எந்த நன்கொடையும் பெறவில்லை என்று கூற முடியுமா? ஏன், எங்கள் கட்சி பத்திரிகைக்கு வேதாந்தா குழுமம் விளம்பரம் தந்த போது அதனை பிரசுரிக்க முடியாது என மறுத்த இயக்கம் நாங்கள்... வேதாந்தா விளம்பரத்தை வெளியிடாத ஒரே பத்திரிகை எங்கள் பத்திரிகை தீக்கதிர்…!

தமிழிசை : உண்டியல் குலுக்கிகள்… வெளிநாட்டில் இருந்து பணம்… (கத்தத்துவங்கினார்) (உடனே கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு ஆதரவாக அரங்கமே ஆர்ப்பரித்து தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்...)

கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்தார்:

அம்மையார் தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்… நான் அதற்கும் பதில் சொல்கிறேன்...ஆம், நாங்கள் உண்டியல் குலுக்கிகள்தான்… எங்கள் முழுநேர ஊழியர்களின் அலவன்சுக்கு கூட உண்டியல் குலுக்கி அந்தக் காசைத்தான் தருகிறோம்... அதனை மக்களிடம் சென்று உண்டியல் ஏந்தி நேர்மையாக கேட்கிறோம்... அதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்…!ஆனால், பாஜக போன்று ஸ்டெர்லைட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளிடமும், பெருமுதலாளிகளிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வாலாட்டிக் கொண்டு திரிய மாட்டோம்… (அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது)இன்றைக்கு மூடும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் 99 நாள் போராடிய போது மூடியிருந்தால் இந்த 13 பேர் உயிரிழப்பே ஏற்பட்டிருக்காது. எனவே இந்த உயிரிழப்பிற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்… போராட்டத்தில் வன்முறை என்கிறார்கள். யார் வன்முறை செய்கிறார்கள்? வரலாறு முழுவதுமே அமைதியாகப் போராடிய மக்களின் மீது அதிகாரமும், ஆட்சியாளர்களும், காவல்துறையும்தான் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து, உயிர்களை எடுக்கின்றனர். இது தொடர்கதையாக நடந்துவருகிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காகத்தான் போராடுகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நோக்கத்தோடு அல்ல. ஆனால் அவர்களின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவது இன்று நேற்றல்ல, 

வரலாறு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.கீழ் வெண்மணியில் அரைப்படி நெல்லைக் கூலி கேட்டுப் போராடியபோது, 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். இந்தக் கொடுமையை செய்தது ஆண்டைகள், நிலப்பிரபுக்கள். மக்கள் சிறு வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை.இந்திய வரலாற்றிலேயே போராடும் மக்களின் மீது காவல்துறையை ஏவ மாட்டேன் என்று அறிவித்தது மேற்குவங்க முன்னாள் முதல்வர் தோழர் ஜோதிபாசுதான். அதுபற்றி தொழிற்சங்க தலைவர் முகமது அமீன் கூறியபோது, “மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கைகளுக்கும், அமைதிவழிப் போராட்டங்களுக்கும் அரசு ஆதரவாக இருக்கும் என நின்றது ஜோதிபாசுவின் அரசு” என்கிறார்.போராடும் மனிதன்தான் முழுமையான மனிதன்.. போராடாத மனிதன் அரைகுறை மனிதன். திசைகள் அதிர நிறைவு செய்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.

தவித்துப் போன செம்மலை

அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகைச் செல்வன் அதிமுக சார்பில் செம்மலையை பேச அழைத்தார்.ஆனால் செம்மலை, நேரடியாக பேச முடியாமல் சிகாகோ வரை சென்று பார்த்தார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பொறுமை இழந்து, பேசியது போதும் முடியுங்கள் என குரல் கொடுத்தனர். அப்படியே கேரளாவிற்குத் தாவிய செம்மலை, கேரளாவிலும் விவசாய நிலத்தில்தான் கெயில் பைப் லைன் பதித்திருப்பதாக செய்தித்தாளில் பார்த்தேன். அங்கு மக்களைத் தூண்டி விட ஆள் இல்லை. அதனால் போராட்டம் நடப்பதில்லை என்று கூறி மீண்டும் எங்கெங்கோ சென்றார்.

அடுத்ததாக அதே அணியில் இருந்த தமாகா ஞானதேசிகனைப் பேச அழைத்தார்.எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, காமராஜர் என எல்லா ஆட்சியிலும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது எனக் கூறி 13 பேர் படுகொலையையும் நியாயப்படுத்த ஞானதேசிகன் முயன்றார். மேலும் காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதியா என ஜல்லிக் கட்டு சம்பவத்தையொட்டி ஆட்டோவிற்கு தீ வைத்த போலீசையும் புனிதராக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு அரங்கத்தில் இருந்தவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது.அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகைச் செல்வன், தனியரசைப் பேச அழைத்தார். “போராட்டம் இல்லாமல் எதுவுமில்லை. பாதிக்கப்படும் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாவிட்டால் கண்டுகொள்ளும்படி போராடத்தான் செய்வார்கள். புரட்சி வெடிக்கத்தான் செய்யும். உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… ஊர்வலமாகச் சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்” என்றார் தனியரசு.(அப்போது குறுக்கிட்ட தமிழிசை, அதனை வன்மையாகக் கண்டிப்பதாக கூறி ஏதோ பேச முயன்றார். அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

‘அமீர் பேசக்கூடாது’

அதன் பின்னர் இயக்குநரும், நடிகருமான அமீரை பேச அழைத்தார் கார்த்திகைச் செல்வன்.

அமீர்: கருவறையில் இருக்கும் குழந்தை கூட போராடித்தான் வெளியே வருகிறது. மக்கள் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.(உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர். அடுத்து அமீர் பேச முயன்ற போது பாஜகவினர் கூச்சல் போட ஆரம்பித்தனர்.)

கார்த்திகைச் செல்வன் : (பாஜகவினரைப் பார்த்து) அமீர் பேசட்டும்... அதற்கு அனுமதியுங்கள்... அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார். அவரும் பேசுவார்.

அமீர் : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கடைகள் சூறையாடப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே போனது?(அமீர் பேசி முடிக்கும் முன் அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட காவிக் கும்பல்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர். எங்களைப் பற்றி அமீர் பேசக்கூடாது; உடனே வேளியேற வேண்டும் எனப் பாய்ந்தனர். அங்கிருந்த காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.)

உங்கள் தரப்பு மாற்றுக் கருத்தைக் கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்; பொறுமையாக இருங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார் நெறியாளர். ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை நடத்த விடக்கூடாது என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர்.இந்த களேபரத்தில் அரங்கத்தின் முன் பகுதியில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், காவிக் கும்பல் முன்பகுதிக்கு வந்தவுடனேயே பெண்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தை காலி செய்து வெளியேறினர்

.ஒரு கட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் முன் பகுதிக்கு வந்து பாஜகவினருக்கு எதிராக ரகளையில் இறங்க, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரைச் சொல்லி அழைத்து அமைதி காக்க வேண்டினார். அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது.இதற்கிடையில் பின் பகுதியில் இருந்த பொதுமக்கள் சங் பரிவாரின் அராஜகத்தை கண்டித்தவாறே அரங்கத்தை விட்டு வெளியேறினர்.

போலீஸ் நிர்ப்பந்தம்

இதற்கிடையில் மேடைக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், கார்த்திகைச் செல்வனை தனியே அழைத்து உடனே நிகழ்ச்சியை முடியுங்கள், கலவரம் ஏற்பட்டு விடும், அனுமதிக்க முடியாது எனக் கூறினர். மேலும் காவல்துறை அதிகாரிகள் அமீர் பேசக்கூடாது என்றும் கூறினர்.

அதனைத் தொடர்ந்து கார்த்திகைச் செல்வன் செ.கு.தமிழரசனை பேசுமாறு கூறினார். அப்போது பின் பகுதியில் இருந்து, இது அநியாயம்.. அமீரை பேசச்சொல்லுங்கள் எனக் குரல் வந்தது. ஆனால் செ.கு.தமிழரசன் பேசிக்கொண்டிருந்தார்.மேடையில் இருந்த கே.பாலகிருஷ்ணன், நெறியாளரைப் பார்த்து, ‘‘அமீர்தானே பேசிக்கொண்டிருந்தார். அவர் முழுமையாக ஒரு நிமிடம் கூட பேசவில்லை. பாஜக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதற்காக அமீரை பேச அனுமதிக்க மறுப்பது எப்படி சரியாக இருக்கும்? இது நியாயமே இல்லை. அமீரை பேச அழையுங்கள்’’ எனக் கூறினார். அமீர் பக்கம் திரும்பி அமீர் நீங்கள் பேசுங்கள், பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.பின்னர் அமீர், ‘‘யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை. நான் அப்படி பேசவும் இல்லை. ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட முயன்றேன். ஓர் உயிர் போனது குறித்து பேசுவதற்கே நீங்கள் இப்படி ஆவேசமாக என்னை பேசக்கூடாது என்று போராடுகிறீர்களே; அப்படி என்றால் 13 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறதே! அதற்கு போராடாமல் இருக்க முடியுமா? போராடுவோம்; போராட்டம் தொடரும்’’ என்று பேசினார்.

உடனே மேடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக அமீரிடம், “பேசியது போதும் நிறுத்துங்கள்” என வந்தார். அப்போது, கே.பாலகிருஷ்ணன் தலையிட்டு, போலீஸ் அதிகாரியைப் பார்த்து ‘நீங்கள் ஏன் அமீரை நிறுத்தச் சொல்கிறீர்கள். ரகளையில் ஈடுபடும் அவர்களை வெளியேற்றுங்கள்’ எனச் சொன்னார்.அடுத்து மீண்டும் செ.கு.தமிழரசனை கார்த்திகைச் செல்வன் பேச அழைத்தார்.பாஜகவுக்கு ஆதரவாகப் பேச வந்திருந்த செ.கு.தமிழரசன், நடந்த நிகழ்வுகளையும், பாஜக – அதிமுகவிற்கு எதிரான ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்ப்பையும் உள்வாங்கிய நிலையில், தனது பேச்சை துவங்கினார். 

மக்கள் அடிப்படை உரிமைக்காகவே அன்றாடம் போராட்டம் நடத்துகிறார்கள் எனத் துவங்கி போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார். அப்போது இருளடித்தது மாதிரி தமிழிசை வைத்த கண் மாறாமல் செ.கு.தமிழரசனை பார்த்துக் கொண்டே இருந்தார்.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்ட போது, எப்படியாவது அமீரைத் தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்... அதற்காகத்தான் என்றார் நம்மிடம்! 

நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் அமீரை கே.பாலகிருஷ்ணன் மற்றும் தனியரசு ஆகியோர் அழைத்துக் கொண்டு ஒரே காரில் மூவரும் சென்றனர். முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி கார்கள் ஊர்ந்து சென்றன.


அரங்கத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

1 comment:

  1. இதுதான் மோடி வித்தை சாரே...

    ReplyDelete