Friday, June 29, 2018

இந்தக் குழந்தையைத்தான் சுட்டுக் கொன்றார்கள் . . .
கார்ப்பரேட் – மோடி – எடப்பாடி கூட்டுக் களவாணிகளின் லாப வெறியால் காவல்துறை கயவர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின். பின் மண்டையில் சுட்டு குண்டு  தலைக்குள் புகுந்து  வாய் வழியாக வெளியேறி மரணித்த அந்த மாணவி எழுதிய நாட்குறிப்புக்களை ஒரு சிறு நூலாக பாரதி புத்தகாலயம், புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டை ஒட்டி வெளியிட்டுள்ளனர்.

அந்த நூலின் பிரதி ஒன்றை வாங்கி வருமாறு எங்கள் கோட்டச்சங்கத்தின் இணைச்செயலாளரும் தமுஎகச அமைப்பின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தோழர் கே.வேலாயுதம் அவர்களிடம் கூறியிருந்தேன். அவரும் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கோட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் போது அந்த நூலை கொடுத்தார்.

அந்த நூலை படிக்கையில் மனம் மிகவும் கனத்துப் போனது. தன் அன்னைக்கு எழுதிய கடிதத்தில்

“எல்லோரும் சொல்வாங்க, அம்மா இல்லாதப்பதான் அம்மா உடைய வருத்தம் தெரியும்னு . . அவங்களுக்கு கொடுத்த குறைய எனக்கு இந்த கடவுள் தரல்ல . . .கடவுளே உமக்கு நன்றி! அம்மா நீதான் என் உலகமே, நீ இல்லாமல் எனக்கு ஒரு உலகமே இல்லை”

அந்தப் பெண் இல்லாமல் அந்த அன்னைக்கு இனி ஏது உலகம்?

தன் தந்தைக்கு எழுதிய குறிப்பில் அந்தப் பெண் சொல்கிறாள்

“உங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்னு தெரியும். Pls .. pa.. உங்களை ஒன்னே ஒன்னு மட்டும் கெஞ்சி கேட்கிறேன். Pls . .pa. குடிக்காதீங்க. . நீங்க இந்த உலகில் நிறைய நாள் வாழணும். நீங்களும் அம்மாவும் என்ன நல்லா படிக்க வச்சி ஒரு வேலைக்கு போன பிந்தி உங்களையும் அம்மாவையும் நாதான் பாத்துக்குவேன் . . Pls . .pa.. குடிக்க மட்டும் செய்யாதீங்க . . .Pls . .pa ..

படித்து முடிக்கும் முன்பே பாவிகள் கொன்று விட்டார்கள்.

மரணத்தை ஊகித்ததோ அந்த குழந்தை???

அந்த நூலில் அக்குழந்தை எழுதிய மூன்று குறிப்புகள் சொல்லவொண்ணா வலியைத் தருகிறது.

“எப்பொழுதுஜ்ம்
சிரித்துக் கொண்டிருந்த
என் நண்பன்
ஒருமுறை அழுது கொண்டிருந்தான்.
நான் எழுந்து துடைக்க நினைத்தேன்
நான் இறந்து கிடந்ததை மறந்து”

“ஆயிரம் பூக்களைக் கொண்டு
அலங்கரித்தாலும்
நீ சிந்தும்
ஒரு துளி
கண்ணீர் போதும்
என் கல்லறையை அலங்கரிக்க”

“இன்னமும் தூங்கி எழுந்தவுடன்
என் அம்மாவின் முகத்தில்
நான் கண்விழிக்க ஆசைப்படுகிறேன்
ஏனெனில்
இப்போதெல்லாம் தூங்குவதற்கு முன்
கொஞ்ச நேரம்
என் அம்மாவை
இமைக்காமல் பார்த்துவிட்டுத்தான்
கண் மூடுகிறேன்
ஒரு வேளை தூக்கத்திலேயே
என் உயிர் பிரிந்தாலும்
நான் கடைசியாகப் பார்த்தது
என்
அம்மாவின் முகமாகத்தான்
இருக்க வேண்டும்”

தூக்கத்தில் பிரியவில்லை அவள் உயிர். துப்பாக்கிக் குண்டுகளால் பிரிந்தது.

“உயிர் கொடுத்த
தந்தையை நினைப்பேன்
உதிரம் கொடுத்த தாயினை நினைப்பேன்
என்னால் முடியும்
என்ற மனநிலை கொள்வேன்
உயர்வாய் உலகில் வாழ்வேன்
முடியும்
என்னால் முடியும்
என்னால் மட்டுமே முடியும்
தேர்வை நன்றாக எழுத முடியும்”

தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்னரே அந்தக்குழந்தையின் கனவுகளை கருக்கிய கொடூரர்களை என்ன செய்வது?

நூலின் முன்னுரையில் தமுஎகசவின் இப்போதைய கௌரவத்  தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனும் தலைவர் தோழர் சு.வெங்கடேசனும் குறிப்பிட்டுள்ளது போல

“அவளைப் போய் இப்படிக் கொன்று சிதைத்திருக்கிறீர்களே, நீங்கள் நாசமாய்ப் போவீர்கள் என்று அறம் பாடுகிறோம்”

அவர்கள் நாசமாய்ப் போகட்டும் . . .


1 comment: