Wednesday, August 20, 2014

அமைச்சரைக் கிழித்தெறிந்த குறவர்

எங்கள் கோட்டச் சங்க மாநாட்டை ஒட்டி நடந்த மக்கள் ஒற்றுமைக் கலை விழாவில் உரை வீச்சு நடத்திய த.மு.எ.க.ச தோழர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள் சொன்ன கதை இது.

டெல்லியை ஆண்ட அரசனின் மகன் ஒரு குறவர் இனப் பெண்ணைப் பார்த்து   மோகித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். பெண் கேட்டு மந்திரியை அனுப்புகிறான். குறவர் இனத் தலைவரைப் பார்தத மந்திரி தனது அரசனின் பரம்பரை பற்றி இவ்வாறு புகழ்ந்தானாம்.

சத்தியம் தவறாத அரிச்சந்திரன்,
தேவர்கள்  பொறாமைப் பட்ட நளன்,
தந்தை சொல் கேட்டு கானகத்திற்குப் போன ராமன்,
ஆகியோரின் பரம்பரையில் வந்தவர்,
தர்மத்தின் அடையாளமான தர்மராஜா பரம்பரையோடு சம்பந்தம் செய்தவர் 

இந்த பரம்பரையில் பெண் கொடுப்பது உனக்கு பெருமை என்று சொன்னவுடன் குறவர் இனத் தலைவருக்கு கோபம் வந்து விட்டது.

மனைவியை  காசியில் விற்றவன் அரிச்சந்திரன்,
இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விட்டு காட்டில் ஓடிப் போனவன் நளன்,
மனைவியை தீயில் குதிக்கச் சொல்லி பின்பு காட்டிற்கும்  அனுப்பியவன் ராமன்,
மனைவியை நட்ட நடு சபையில் துகிலுரித்த போது வேடிக்கை பார்த்தவன் தர்மன்.

இவர்கள் யாருமே மனைவியோடு ஒழுங்காக வாழாதவர்கள். இந்தப் பரம்பரையில் நான் பெண் தர வேண்டுமா?

நாங்களோ சிவ பெருமானுக்கே சம்பந்தி. முருகனுக்கு நாங்கள் வளர்த்த பெண்ணைக் கொடுத்தோம். அதுவும் சிவன் எங்கள் வேடர் இன கண்ணப்பர்  சாப்பிட்ட எச்சிலை உண்டதால். 

அதன் பின்பு அங்கே நிற்க மந்திரிக்கு பைத்தியமா என்ன? 

( இது சங்க இலக்கியப் பாடலில் வருவதாகச் சொன்னார் அவர்) 

5 comments:

  1. ஆகா அற்புதம் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. சரியான பதிலடி! அருமை! நன்றி!

    ReplyDelete
  3. அருமை, அருமை- உண்மையும் கூட.
    அச் சங்க இலக்கியப் பாடலையும் தேடித் தந்து உதவவும்.

    ReplyDelete
  4. குறவர் என்றுதானே இருக்க வேண்டும் குறவன் என்று இழிவாகக் கூறுவது உங்கள் பார்ப்பனீய மனநிலையைக் காட்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. தலைப்பில் இருந்ததை நான் சரி செய்து விட்டேன். உள்ளே எப்படி எழுதியிருந்தது என்பதை பார்க்காமல் ஜாதியத்தை புகுத்தும் உங்கள் மன நிலைக்கு என்ன பெயரோ? ஜாதி மறுப்பவர்களின் மீதும் ஜாதியப் பார்வை பார்ப்பது உங்களது மன வியாதி

      Delete