Sunday, August 26, 2012

முருகப் பெருமானே, இந்த அநீதிக்கு நீயும் துணையா?





கிங் பிஷர் விமானம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியில்லை, கடன் கொடுத்த வங்கிகளும் கூட எப்படி வசூல் செய்வது என்று திணறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் உல்லாச புருஷன் விஜய் மல்லய்யாவிற்கு எந்த கவலையும் இல்லை. எப்படியானாலும் மன்மோகன்சிங் தனக்கு கை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

மன்மோகன்சிங்கோடு நிற்காமல் கடவுளையும் இப்போது துணைக்கு அழைத்திருக்கிறார். கர்னாடகத்தில் உள்ள பிரபலமான குக்கே சுப்ரமணியா ஆலயத்திற்கு தங்கக் கதவுகள் தயாரித்து காணிக்கை வழங்கியுள்ளார்.

அதன் மதிப்பு என்ன தெரியுமா? மூன்று கிலோ தங்கத்தில் எண்பது லட்சம் ரூபாய் செலவில் அந்தக் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. கம்பெனி பிழைக்குமா, பிழைக்காதா, வேலை நீடிக்குமா, நீடிக்காதா, பாக்கி வைத்துள்ள சம்பளத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்று கிங்பிஷர் விமான ஊழியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஜய் மல்லய்யாவோ கடவுளுக்கு தங்கக்கதவுகள் தருகிறார்.

திருப்பதி போன்ற பெரிய பெரிய கோவில்களில் கொட்டப்படும் காணிக்கைகள்  உழைப்பவர்களை சுரண்டி சேர்க்கப்பட்ட பணம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

கடவுள் என்பவர் உண்மையிலே இருந்தால், அவர் புராண இதிகாசக் கதைகள் சொல்வது போல நேர்மையானவராக இருந்தால் அவர் விஜய் மல்லய்யா போன்ற மோசடிப் பேர்வழிகள் தரும் காணிக்கைகளை ஏதாவது ஒரு வகையில் நிராகரித்திட வேண்டும்.

அந்த சக்தி கடவுளுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். எப்படி அண்ணா ஹசாரே ஊழலுக்கு காரணமான உள்நாட்டு நிறுவனங்களிடம் ஸ்பான்ஸர் வாங்கிக் கொண்டு ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்தினாரோ, அது போல கடவுள்களின் கோயில்களும் பெரும்பாலும் பணக்காரர்கள் அளிக்கும் காணிக்கை கொண்டே நடக்கிறது.

அநியாயம் செய்பவர்களையும் அராஜக, ஊழல் பேர்வழிகளையும் எந்த கடவுளும் இப்போது துஷ்ட நிக்கிரக பரிபாலனம் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்குத்தான் அருள் பாலிக்கிறார்கள். அவர்களும் கடவுளுக்கு கையூட்டாய் காணிக்கை வழங்குகிறார்கள்.

எனவேதான் நான் கேட்கிறேன்.

விஜய் மல்லய்யாவிடம் தங்கக் கதவுகள் வாங்கிய

முருகப் பெருமானே இந்த அநீதிக்கு நீயும் துணையா?

பின் குறிப்பு : நேற்று நான் அளித்திருந்த தலைப்பு வேறு. கடவுள்
நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்படுவதாக சிலர் தெரிவித்தனர்.
கம்யூனிஸ்டுகள் மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர்கள்.
தலைப்பை விட கருத்துதான் முக்கியம். ஆகவே தலைப்பை
மாற்றி விட்டேன்.

3 comments:

  1. ஜீவராசிகள் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டு அவனது சொத்தாக இருக்கிறது. அப்படி கடவுளால் கொடுக்கப்பட்ட பொருளை அவனுக்கே காணிக்கையாகவோ, லஞ்சமாகவோ, கொடுப்பது வேடிக்கையாக இல்லை?. நீங்களாக இரக்கப்பட்டு ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள். அப்படிச் செய்யும் பொழுது, அவரிடமிருந்து லஞ்சமாகவோ, கமிஷனாகவோ, நன்றியாகவோ ஏதாவது பெறுவீர்களா?. இல்லை அவராகவே ஏதாவது கொடுத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். மனிதர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத இச்செயலை கடவுள் செய்கிறார் என்பது உங்கள் அறியாமையே!. “சம்பவாமி யுகே யுகே” என்றபடி தர்மத்திற்கு சோதனை வரும் பொழுதெல்லாம் தனது அவதாரங்கள்/செயல்கள் மூலம் தர்மத்தை நிலை நாட்டிக்கொண்டுதான் இருக்கிறார். கடவுள் என்றுமே சாமானியர்கள் பக்கம்தான். நீங்கள் கடவுளை கேலி செய்வதை விட்டு அநியாயத்திற்கு எதிராக மட்டும் குரல் கொடுங்கள். ஏன் உங்கள் மூலமாகக் கூட கடவுள் துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்யக்கூடாது?.

    ReplyDelete
  2. தோழர் சம்பத், தர்மத்திற்கு சோதனை வரும் போது பகவான் அவதாரம் எடுப்பார் என்ற கதை துவாபர யுகத்தோடு முடிந்து விட்டது. கலி யுகத்தில் இன்னும் கடவுள் தோன்றவேயில்லை. கடவுளின் தூதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் சர்ச்சைகளின் புருஷர்களாகவே அமைந்து விட்டார்கள். அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒன்றிணைப்பதற்கு இன்று மிகப் பெரிய தடையே ஆன்மீகமும் கடவுளும் கார்ப்பரேட் சாமியார்களும். மனிதன் தன்னுடைய பிரச்சினைகளுக்கான உண்மையான காரணம் என்று சிந்திப்பதற்கு தடையாக இருப்பது இவைதான்.

    அயோக்கியத்தனம் செய்பவர்கள் கொழிப்பதுதான் கடவுள் என்ற தத்துவத்தின் மீது எங்களைப் போன்றவர்களை கேள்வி எழுப்ப வைக்கிறது.

    ReplyDelete
  3. தலைப்பை மாற்றியதற்கு நன்றி!. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. நம் கண் எதிரே குற்றம் செய்தவனுக்கு தண்டனை கிடைக்க பல காலங்கள் ஆகிறது. அவன் திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்கள் நாமே தருகிறோம். கடவுளும் பல சந்தர்ப்பங்கள் கொடுத்துத்தான் கெட்டவர்களை அழிக்கிறார். கடவுளின் அவதாரங்களுக்கு முடிவே கிடையாது. இப்படிக் கேள்வி கேட்கும் நீங்களும் ஒரு நாள் உணர்வீர்கள். உங்களிடம் வாதம் புரியவில்லை. எனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவக் கருத்துக்களைத்தான் எடுத்து வைத்திருக்கிறேன். நன்றி!.

    ReplyDelete