Tuesday, April 3, 2012

மீண்டும் கர்ணன் – கொலை வெறி இல்லாத ஒரு திருவிழாபுதிய பொலிவோடு தொழில் நுட்ப முன்னேற்றங்களோடு வெளி வந்துள்ள கர்ணன் திரைப்படத்தை ஞாயிறு அன்று பார்த்தேன். ஏதோ ஒரு புதிய திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தது போன்ற உணர்வு உருவானது.

நான் சென்றது திரைப்படம் வெளியாகி இருபத்தி நான்கு நாட்களுக்குப் பிறகுதான். ஆனாலும் அன்று கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்து வழிந்தது. அனைவருக்கு இனிப்பும் பெண்களுக்கு தாலிச்சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்துத்தான் உள்ளே அனுப்பினார்கள்.

அது மட்டுமா, சிவாஜி தோன்றும்  காட்சிகளில் எல்லாம் மலர்களை தூவிக்கொண்டே இருந்தார்கள். விசில் சத்தங்களுக்கும் குறைவில்லை. இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்து வயதினரும் சமமாக வந்திருந்ததுதான். வயது முதிர்ந்தவர்கள் முதல் இளைஞர்கள் வரை,  பல தரப்பினரும் கலந்திருந்தனர் என்பதுதான் ஆச்சர்யம்.

திரைப்படம் முடிந்து வெளியே வந்தால் ஜவ்வந்தி மலர்கள் கொண்டு பெரிதாக கர்ணன் என எழுதி மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரித்து இருந்தனர். பழைய நல்ல படங்களுக்கு இப்படி சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான்.

சரி படம் எப்படி ?

முன்பு முப்பத்தி ஐந்து எம்.எம் மில் பார்த்த திரைப்படத்தை இப்போது சினிமாஸ்கோப்பில் பார்ப்பது பிரம்மாண்டமாகவே உள்ளது. பல இடங்களில் வண்ணம் நன்றாகவே மெருகேற்றப்பட்டுள்ளது. சில இடங்கள் மங்கலாகவும் உள்ளது. ஒலியைப் பொறுத்தவரை சில இடங்களில் இசை வசனத்தை அமுக்கி விடுக்கிறது. ஒரு வேளை அது வேலூர் திரையரங்கின் கோளாறாகக் கூட இருக்கலாம். சிவாஜி, அசோகன், என்.டி.ஆர், சாவித்ரி, தேவிகா ஆகியோரின் நடிப்பை இப்போதும் ரசிக்கிற முடிகின்றது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசை என்றும் இனியவைதான்.

ஒரு காட்சி ( கர்ணனுக்கு பெண் பார்க்கும் காட்சி ) வெட்டப்பட்டுள்ளது. கர்ணன் பரசுராமனிடம் பிரம்மாஸ்திரம் கற்றுக் கொள்ளும் காட்சி இடம் மாறி வருகின்றது.இதனால் எந்த பாதிப்பும் கிடையாது  என்பது வேறு விஷயம்.

இந்த திரைப்படத்தின் ஒரு காட்சி இன்றைக்கும் அவசியமான ஒன்று.

விற்போட்டியில் ஜாதியை காரணம் காண்பித்து கர்ணனை இழிவு செய்கிறபோது, துரியோதனன் பேசுகின்ற வசனம் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது.

“ பெண்களின் கற்பை இனத்தைக் கொண்டு எடை போடுவது எப்படி அர்த்தமில்லாததோ, அது போல வீரத்தையும் இனத்தைக் கொண்டு எடைபோடுவதும் சரியல்ல. ஷத்ரியன் மட்டும்தான் ஆயுதம் ஏந்த வேண்டுமென்றால் குருவாய் உள்ள துரோணரும் கிருபாச்சாரியரும் அந்தணர்களாயிற்றே! நீங்கள் மட்டும் வில்லேந்தலாமா? “

நாங்கள் எதையும் செய்யலாம் என்ற ஆணவமான பதில்தான் கிடைத்தது என்றாலும் சவுக்கடியான வசனங்கள். மனு தர்மத்திற்கு எதிரான அழுத்தமான படமாகத்தான் கர்ணன் எனக்கு தோன்றுகிறது.

கடைசியாகக் கிடைத்த தகவல் : புதிதாக வெளியான மூன்று (கொலை வெறி படம்தான்)  படத்தை விட வேலூரில் ஞாயிறன்று கர்ணனுக்கு கூடுதல் வசூலானதாம். இளைய கதாநாயகர்கள் கவனமாக இருக்கட்டும். இன்னும் எத்தனையோ பழைய படங்கள் உள்ளன. அவை வரிசையாக வரத் தொடங்கினால் உங்கள் கதி திண்டாட்டம்தான்.4 comments:

 1. கலை இருக்கும் வரை கணேசன் புகழ் நிலைக்கும்.

  ReplyDelete
 2. Sivaji's Karnan is going stronger from strong over the last 20 days beating all the new releases including kolaiveri.Sivaji's magic works.

  ReplyDelete
 3. NT's Karnan is going stronger n stronger,mowing down all the new releases including kolaiveri

  ReplyDelete
 4. Nadigar Thilagam is always great

  ReplyDelete