Sunday, September 25, 2011

சுதந்திர பாலஸ்தீனம் - காலத்தின் தேவை



காலம் காலமாக அமெரிக்காவின்  துணை கொண்டு  இஸ்ரேலின்
தாக்குதல்களை , அராஜகத்தை  சந்தித்து  வருகின்றனர்  பாலஸ்தீன
மக்கள். யாசர் அராபத் மறைவிற்குப் பின்  அவரது கட்சிக்கும்  ஹமாஸ் 
இயக்கத்திற்கும்  இடையேயான  மோதலில் குளிர் காய்ந்தது இஸ்ரேல். 


தீவிரவாத தற்கொலைப்படைத்  தாக்குதல்களை  தவிர்க்க என்று 
சொல்லி, பாலஸ்தீன பகுதிகளுக்குள்ளாக  சுவர்களையும் 
முள் வேலிகளையும்  எழுப்பி மக்களின் நடமாட்டத்தை  
தடுத்தது  இஸ்ரேல். 


விமானத்தாக்குதல்கள்  மூலமாக  வீடுகளை இடித்து தள்ளியது. 
எண்ணெய்  வளம் மிக்க  நாடுகளில் ஏதாவது நடந்தால் 
மனித உரிமை மீறல் என்று கூச்சலிட்டு அங்கே உள்ளே 
நுழையும்  அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு 
மட்டும் ஆதரவு  தருகின்றது. ஐ.நா வில் இஸ்ரேலுக்கு  எதிரான
தீர்மானங்கள் வராமல்  தனது வீட்டோ  அதிகாரத்தை 
பயன்படுத்துகின்றது. 


இத்தகைய சூழலில்தான் பாலஸ்தீன  அதிபர் முகமது அப்பாஸ்
பாலஸ்தீனத்தை  தனி நாடாக ஐ.நா அங்கீகரிக்க வேண்டும் என
ஐ.நா பொது சபைக் கூட்டத்தில்  அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.


தனது நியாயங்களை, அமைதியின் தேவையை  அவர் 
வலியுறித்திப் பேசிய அதே நேரம்   இஸ்ரேல் பிரதமர் 
நெதன்யாஹு  வின் உரை  அராஜகத்திற்கு  எடுத்துக்காட்டு.
இவர், ராஜபக்க்ஷே  ஆகியோரெல்லாம்  எப்போதும் 
ரத்தம் வழியும் வாயோடுதான்  அலைவார்கள் போலும். 


அதிசயக்கத்தக்க  வகையில்  அமெரிக்க எஜமானர்களின் 
விருப்பத்திற்கு மாறாக  இந்தியா  பாலஸ்தீன  கோரிக்கைக்கு 
ஆதரவாக பேசியுள்ளது. 


பாதுகாப்பு கவுன்சிலில்  அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை
பயன்படுத்தலாம். ஆனால் பாலஸ்தீன மக்களின் குரல் 
உலகெங்கும்  எதிரொலித்து விட்டது. அந்த விடுதலை 
முழக்கத்தை கட்டுப்படுத்துவது  இனி இஸ்ரேல் அமெரிக்க 
கூட்டணியால் முடியாத  ஒன்று.

No comments:

Post a Comment