Tuesday, September 13, 2011

என்ன தேசம் இது?




சென்ற வாரம் டெல்லி போயிருந்த போது
நடைபெற்ற ஒரு விவாதம் இங்கே.

தமிழ் நாடு எக்ஸ்பிரசில் சென்றிருந்தேன்.
டெல்லி  நெருங்கும் முன்பாக ஒக்லா 
ஸ்டேஷன் தொடங்கி நியு டெல்லி
 ஸ்டேஷன் வரை தண்டவாளத்தின்
ஓரம் எண்ணற்ற ஆண்கள்  காலைக்கடனுக்காக
அமர்ந்திருந்தார்கள்.


இது  புதிதான காட்சியல்ல. டெல்லி மட்டும்
அல்ல, தமிழகம் உட்பட இந்தியா முழுதும்
காணுகின்ற அவலமான காட்சிதான். டெல்லியில்
என்ன   மாற்றம் என்றால் சொம்பு, பிளாஸ்டிக்
குவளை என்பதிலிருந்து மினரல் வாட்டர் பாட்டில்
என்பது முன்னேற்றம்.


என் எதிரில் இருந்த பெரியவர் " என்ன 
இது   வெட்கமே இல்லாமல் இப்படி 
உட்கார்ந்துள்ளார்கள்  என முகம் 
சுளித்தார்.


அவரை சூடாகவே கேட்டேன்,"உங்களுக்கு
உள்ள வெட்கம் அவர்களுக்கு இருக்காதா,
வேறு வழியில்லாமல்தானே  இப்படி  
வருகின்றார்கள். பெண்களின் நிலைமை 
எப்படி மோசமாக இருக்கும் என்று
யோசியுங்கள் என"



அதன் பின்பு அவர் அமைதியாகி விட்டார். 



டெல்லிக்கு   ஒவ்வொரு முறை செல்கிற போதும் 
ஏராளமான மாற்றங்களை பார்க்க முடிகின்றது.
பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதி வேக சாலைகள்,
புதுப்புது மேம்பாலங்கள்  என எத்தனையோ
 மாற்றங்களை  பார்க்க  முடிகின்றது.


புது டெல்லி ரயில்வே ஸ்டேஷனில்  சாதா
கட்டண கழிப்பறையைத்தவிர டீலக்ஸ் 
டாய்லெட் என்று வேறு ஒன்று புதிதாய்
இருந்தது.  


 பள பளக்கின்ற  பகட்டான இந்தியாவில் ,
தேசத்தின் தலைநகரத்தில் சொகுசு கார்கள்
காற்றைக் கிழித்து வேகமாய் விரைய
வழி செய்து கொள்ளும் அரசுகள், 
ஏழை மக்களை கையில் பாட்டிலோடு
காலைக் கடன் கழிக்க ரயில் தண்டவாளத்திற்கும்
புதர்களுக்கும்  அனுப்புகின்றது.


கட்டிடங்கள் , அதி   வேக  ஆறு வழிச்சாலைகள்
நவீன மேம்பாலங்கள், கண் கவர் பூங்காக்கள் என
கட்டுவோம். ஆனால்  அதற்கு முன்பாக 
சாமானிய மக்களின் மானத்தை காப்பாற்ற
போதுமான கழிப்பறைகள் கட்டுவோம் .


ஊழல்களிலும், முறைகேடுகளிலும், ஆடம்பர
விழாக்களிலும்  விரயமாகும் நிதியின் ஒரு பகுதியை
மக்களின்  அத்தியாவசியத் தேவைக்கு அரசு 
செலவிட வேண்டும். 


இதுதான் முக்கியம்.

1 comment: