Saturday, January 1, 2011

புத்தாண்டுக் கொண்டாட்டமா? மரணத்திற்கான அழைப்பிதழா?

நேற்று  இரவு எட்டரை மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு
வர முடியவில்லை. பல்வேறு வாகனங்கள் வேகம் வேகமாக கடந்ததும்
வாகனங்கள்  கடக்கும்  வேகத்திலேயே மதுவின் நெடியும் சேர்ந்து 
கடந்ததும்   நாமாவது  சற்று   நிதானமாக  செல்வோம்  என்றாலும்
அதனையும்  கூட  சில  இளைஞர்கள்  கிண்டலாக  பேசி விட்டுப்போனார்கள்.

இன்று தமிழக இளைஞர்கள்   குடிப்பது  என்பது  அதிகரித்தே  வருகின்றது.
குடித்து விட்டு  வாகனங்களை  ஓட்டுவது  என்பதும் நடக்கிறது.   இதனால் 
அவர்களது  உயிருக்கு  ஆபத்து  என்பது  மட்டுமே  அல்ல, தொடர்பே 
இல்லாதவர்கள்  உயிருக்குக் கூட  ஆபத்து.   மிதமான  வேகத்தில் 
வண்டி ஒட்டி வந்த  என் மீது  யாரோ  ஒருவன்  மோதிச்செல்ல  எட்டு 
மாதங்கள்  ஆனா பின்பும்  என்னால்  சரியாக  நடந்திட முடியவில்லை. 
வலியோடுதான் படியேற  வேண்டியுள்ளது.  

எப்போது  தமிழக அரசு நேரடியாக  மதுபானங்களை  விற்கத்
தொடங்கியதோ  அப்போதுதான்  தொடங்கியது  கேடு. மறைவாக ,
ரகசியமாக  குடிப்பதற்குப் பதிலாக  பலரும்   வெளிப்படையாக
 குடிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.  கட்டுப்பாடுகள் அகன்ற
நிலை அரசுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. அரசும்
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் இலக்குகள் வைத்து
விற்பனையை பெருக்குகின்றது.

இன்று இளைஞர்களுக்கும்  மதுபானம் பருக ஏதாவது சாக்கு 
தேவைப்படுகின்றது.  கொண்டாட்டங்கள்  என்றால் தண்ணி 
அடிப்பதுதான்  என்ற கலாசாரத்தை  சினிமாவும் டிவியும் வேறு
வழி காட்டி விட்டது.  

கடந்தாண்டு  எங்கள்  அலுவலகத்தில்  இரவுப் பணிக்கு வந்த
வாட்ச்மேன் தோழருக்கு  மாரடைப்பு வர  அப்போது  அலுவலகத்தில் 
இருந்த  இரண்டு நல்ல உள்ளம் படைத்த  அதிகாரிகள்  அவரை  
உடனே  சி.எம்.சி  மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று  அனுமதித்து
எனக்கும்  தகவல்  அளித்தார்கள்.  நானும்  மருத்துவமனைக்கு சென்று
செய்ய வேண்டிய  பணிகளை  செய்து கொண்டிருந்தேன்.  அவசரப் 
பிரிவுக்கு பக்கத்தில்  உள்ள  கவுண்டரில்  பணம் கட்டிக் கொண்டிருந்த
போது  விபத்தில்  சிக்கிய  ஒரு கல்லூரி  மாணவனை கொண்டு 
வந்தார்கள். 

சில நிமிடங்களுக்குள்ளாக  சர் சர் என்று கிட்டத்தட்ட பத்து பைக்குகள், 
எல்லாமே அப்பாச்சி, பல்சர் போன்ற விலை அதிகமான வண்டிகள். 
இருபது மாணவர்கள். பணம் கட்ட வேண்டும்  என்று சொன்னால் 
அவரவர் பர்சை எடுக்கின்றனர். எல்லாமே ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.
மாணவர்களிடம் பணம் மட்டும் இல்லை, அத்தனை பேர் மூச்சுக் 
காற்றிலும் ஆல்கஹால் வாசனைதான்.  விபத்தில் சிக்கிய
மாணவனும் அந்த கொண்டாட்டத்தில் நிதானம் இழந்து வண்டி
ஓட்டியவன்தான்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக  தி.மு.க  வேலூரில்  ஒரு மண்டல
மாநாடு நடத்தியது.  அதிலே பங்கேற்க  தோழர் என்.வரதராஜன் 
வந்திருந்தார்.  அவருக்கு  ஒரு நல்ல விடுதியில்  அறை  ஏற்பாடு 
செய்து கொடுத்திருந்தனர்.  அப்போது நாங்கள்  ஒரு கையெழுத்து 
இயக்கம் நடத்திக் கொண்டிருந்தோம்.  தோழர் என்.வி யிடம் 
கையெழுத்து  வாங்க  அங்கே சென்றால், அந்த விடுதி முழுதுமே 
ஆல்கஹால் வாசத்தால்  ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டிருந்தது. 

பின்பு அவரோடு  அந்த மாநாடு சென்றால்  அடுத்த அதிர்ச்சி. 
மாநாட்டுப் பந்தலில்  எதோ வேர்கடலை விற்பது போல 
சர்வசாதாரணமாக  கூடைகளில்  குவார்ட்டர் பாட்டில்கள் வைத்து 
விற்றுக் கொண்டிருந்தார்கள்.  இது வரை நான் கலந்து கொண்ட எந்த
அமைப்பின் மாநாட்டிலும் பார்க்காத காட்சி  அது. 

அடுத்த அதிர்ச்சி இரவு கிடைத்தது.  தோழர் என்.வி. க்கு இட்லி வாங்கிக் 
கொண்டு விடுதிக்கு வருமாறு சொன்னார்கள்.  அதன்படி நானும் 
வாங்கிக் கொண்டு வரவேற்பறையில்  காத்திருந்தபோது  மாநாடு 
முடிந்து இன்றைய  மூன்று  அமைச்சர் பெருமக்கள் ( பெயர்கள்
வேண்டாம் எனக்கு உயிர் மேல் ஆசை இருக்கிறது. இன்னும் சில
கடமைகளும் இருக்கிறது)  வந்தனர். அவர்களும்  ஆல்கஹாலின்  ஆக்கிரமிப்பில்தான்   இருந்தார்கள்.  மேடையில் உள்ள போதே அருந்தினார்களா இல்லை வழியில் காரில் சாப்பிட்டார்களா  என்று
தெரியவில்லை.

இன்றைக்கு மது அருந்துவது ஒரு தவறு. அதனால் ஏற்படும்
விளைவுகள் மிகவும் மோசமானது  என்ற உணர்வே இல்லை.
அதை உருவாக்க வேண்டியது ஒரு உடனடிக்கடமை.  சாராய
வியாபாரத்தில் சாம்ராஜ்யங்களை கட்டியுள்ள கழகங்கள் அதை
செய்யாது. வாலிபர் சங்கம்  போன்ற அமைப்புக்கள்  இதிலே கூடுதல்
கவனம்  செலுத்தினால்  ஒரு மாற்றத்தை  நிச்சயம் உருவாக்க முடியும்.

4 comments:

  1. DYFI Lost Two Lives Kumar & Anandhan at
    Cuddalore fighting against Illicit
    Liqour.

    ReplyDelete
  2. Read Vanavaasam & Manavaasam of
    Kavignar Kannadasan. Only If Ministers
    of Kazhagamas do not drink, it is a
    news

    ReplyDelete
  3. இதை சொல்ல அதே கழகங்களுடன் அஞ்சு சீட்டுக்கும் பத்து சீட்டுக்கும் அலையும் பொதுவுடைமைக் காரர்களுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?

    ReplyDelete
  4. KARUNANITHI DOES NOT HAVE MORAL RIGHT TO TALK ABOUT PROHIBITION. HIS COLLEAGUES T R BAALU,
    JAGATHRATCHAGAN, AND ONE GUY WHO PRODUCED FILMS LIKE ILAIGNAN, ULYIN OSAI ALSO HAVE
    DISTILLERIES WHICH SUPPLY REGULARLY TO TASMAC. LET THEM FIRST CLOSE THEIR FACTORIES
    AND THEN THEY CAN TALK ABOUT PROHIBITION.

    ReplyDelete