Thursday, January 20, 2011

கைத்தறித் துணிகளும் காத்திருந்த பெண்மணியும்

நேற்று புதுவை, கடலூர், பண்ருட்டி ஆகிய ஊர்களுக்கு சங்கப் பணியாக சென்று வந்தேன். அப்போது வேலூர் திருவண்ணாமலை
நெடுஞ்சாலையில் புது மல்லவாடியில் இருந்த தொழுநோய் மறு
வாழ்வு இல்லத்தைப் பார்த்தபோது நெஞ்சில் ஏற்பட்ட நினைவுகளை
பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம். 

அது ஜெயலலிதா ஆட்சிக்காலம். இப்போது போல அப்போதும் கைத்தறி
நெசவாளர்கள் நெருக்கடியில் சிக்கியிருந்த நேரம்.  இலவச வேட்டி சேலை  திட்டத்தை ரத்து செய்திருந்தது நெசவாளர்களின் நெருக்கடியை  அதிகரித்து கஞ்சித்தொட்டி வைக்கும் நிலைக்கு
கொண்டு போயிருந்தது.

அப்போது எங்கள் சங்கத்தலைமை ஒரு அறைகூவல் விடுத்தது. கைத்தறித் துணிகளை கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு
வழங்குவது என்பதே அந்த முடிவு. எப்போதும் போல் இந்த
அறைகூவலும் சங்கத்தோழர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டது.
நிதியை வாரி வழங்கினார்கள். தமிழகம் முழுதும் சில லட்சம் ரூபாய்
மதிப்பில் கைத்தறித் துணிகள் வாங்கி வழங்கப்பட்டது. எங்களது
வேலூர் கோட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வசூலானதாக
நினைவு.

வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய
பகுதிகள் அடங்கியது வேலூர் கோட்டம் என்பதால் மாவட்டத்திற்கு
ஒரு மையத்தில்  துணிகள் வழங்குவது என்று முடிவெடுத்தோம்.
இச்செய்தி அறிந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள
புது மல்லவாடி அரசு மறு வாழ்வு இல்லத்திலிருந்து தொடர்பு
கொண்டார்கள். அங்கே 400 பேர் உள்ளதாகவும் அரசு வழங்கும்
வேட்டி சேலை வராததால் இந்த உதவி கிடைத்தால் பொங்கலுக்கு
அங்கே உள்ளவர்கள் புது ஆடைகள் அணிய முடியும் என்று கடிதம்
எழுதியிருந்தார்கள். 

அதன்படி அங்கே ஆடைகள் வழங்குவது என்று முடிவெடுத்தோம்.
வேலூரில் சைதாப்பேட்டை பகுதியிலும் கடலூரில் ஒரு கிராமத்திலும் ( சட்டென்று பெயர் நினைவுக்கு வரவில்லை. வானமாதேவி என்று நினைக்கிறேன்)  ஒரு பொதுக்கூட்டம் நடத்தி
துணிகள் வழங்கப்பட்டது. அரசின் கொள்கைகளை விமரிசிக்கும்
வாய்ப்பாக அக்கூட்டம் பயன்படுத்தப்பட்டது. வேலூரில் பங்கேற்ற
சுதந்திரப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கட்சியின் குடியாத்தம்
தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தோழர்
கே.ஆர்.சுந்தரம் அவர்களின் அன்றைய உரை சிம்ம கர்ஜனை
என்றே சொல்ல வேண்டும்.

புதுவையில் ஒரு முதியோர் இல்லத்தில் துணிகள் வழங்கினோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் வேட்டவலத்தில் உள்ள ஒரு தொழு நோய்
மறுவாழ்வு இல்லத்தில் வழங்குவது என்றும் திட்டமிட்டிருந்தோம்.
ஒரு சனிக்கிழமை புதுமல்லவாடி சென்று விட்டு பிறகு வேட்டவலம்
செல்வது என்பது பயணத்திட்டம்.

புதுமல்லவாடி இல்லத்துவாசிகளுடைய குழந்தைகள் பலரும் அங்கே
இருப்பதாக தெரிந்ததும் அந்த விபரங்களை கேட்டு  வயதிற்கு ஏற்றார் 
போல ஆயத்த ஆடைகளும் வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். அதிலே 
ஒரே  ஒரு  மாணவிக்கு  மட்டும்  அளவு போதவில்லை.  அந்தப் பெண்ணின் முகமும்  அந்தப் பெண்ணின் தாயின் முகமும் மிகவும் 
வாடி விட்டது. வேட்டவலம் போய்விட்டு திருவண்ணாமலையில் 
இருந்து இந்த வழியாகத்தான்  வேலூர் திரும்புவோம்.  ஆகவே  திருவண்ணாமலையில்  புது  உடை வாங்கி  வரும் போது   தந்து விட்டுப்போகின்றோம்   என்றோம். 

ஆனால்   வேட்டவலம் போய் திருவண்ணாமலை வருகின்ற போது
எங்களுக்கு மறந்து விட்டது. ஆனால் திருவண்ணாமலையில் பணி
செய்யும் எங்கள் கோட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தோழர்
பிளாரன்ஸ் லிடியா மறக்கவில்லை. தோழர் அந்தப் பெண்ணுக்கு துணி வாங்க வேண்டாமா என்று அதட்டல் போட்டு அவரது
பெண்ணிற்கு தேர்ந்தெடுப்பது போல ஒரு சுடிதாரை வாங்கிக்
கொடுத்தார்.

மீண்டும் நாங்கள் புதுமல்லவாடி இல்லத்தை அடைந்தபோது இரவு
மணி ஒன்பது இருக்கும். வீதியில் விளக்குகள் இல்லாமல் இருள்
சூழ்ந்திருந்தது. இல்லத்து வாயிலருகில் வாகனத்தை நிறுத்தியவுடன்
ஒரு உருவம் அந்த இருளில் ஒடி வந்தது. அந்த மாணவியின் தாய்தான்  அது. நீங்க நிச்சயமா வருவீங்கன்னு தெரியும் அதனாலதான்
வாசலிலேயே உக்காந்திருக்கேன் என்று அந்தப் பெண்மணி
சொன்னபோது மெய்சிலிர்த்துப்போனது. நல்ல வேலையாக அந்தப்
பெண்மணியின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டோம் என்ற
உணர்வோடு தோழர் லிடியாவிற்கு மனதில் நன்றி சொல்லி விட்டு
வேலூர் புறப்பட்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது.
No comments:

Post a Comment