Saturday, November 8, 2014

ஆதாயமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் புகழாது

ராஜேந்திர சோழனும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்

 

ராஜேந்திர சோழன் பட்டத்திற்கு வந்து ஆயிரமாண்டு ஆனதன் விழாவைக் கொண்டாடப் போவதாக இந்தியக் கப்பற்படை அறிவித்துள்ளது. அதனது தமிழ்நாடு - புதுச்சேரி பொறுப்பாளர் கமாண்டர் அமர் கே.மகாதேவன் கூறியிருக்கிறார்: “இந்தக் கொண்டாட்டத்தில் `என்.எஸ்.சுதர்ஷிணி’ கப்பல் பங்கேற்கும். இப்போது அது உலகைச் சுற்றி வருகிறது. பழங்காலத்திலேயே நமது எல்லைகளைத் தாண்டி கப்பற்படை நடத்திய ஒரு ராஜாவுக்கான கொண்டாட்டத்தில் அது பங்கேற்பது பொருத்தமானது” (பிசினஸ் லைன் 3-11-14)இது வினோதமானது. தனது வயிற்றுப் பிழைப்புக்காக, மீன் பிடிப்புக்காகத் தெரிந்தோ தெரியாமலோ எல்லை தாண்டும தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது இலங்கையின் ராஜபக்சே அரசு. இப்போதும் கூட ஐந்து தமிழ் மீனவர்கள் அங்கே தூக்கு மேடையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மோடி அரசு அமைந்தால் போதும் இலங்கைத்தமிழர் பிரச்சனையும், இந்திய மீனவர் பிரச்சனையும் உடன் தீர்ந்து போகும் என்று கடந்த தேர்தலின் போது வாய்ப்பந்தல் போட்டது பாஜக தலைமை.

பிரச்சனைகள் தீரவில்லை என்பது மட்டுமல்ல மோசமாகி வருகிறது. அதனால் தமிழக மீனவர்கள் போராட்டக்களத்தில் இறங்கியிருக்கிறார்கள். பாஜகவின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணிய சாமியோ “ராஜபக்சேவிற்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும்“ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வருகிறார். இந்த லட்சணத்தில் பாஜக அரசின் கப்பற்படை ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப்போவது வேதனை கலந்த வினோதமின்றி வேறு என்ன?இதற்கொரு பின்புலம் இருக்கிறது. ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கப் போவதாக முதலில் அறிவித்தது ஆர்எஸ்எஸ். அதாவது மோடி அரசின் குருபீடம். 

ஏனிந்தத் திடீர்ப் பாசம் ஒரு தமிழ் மன்னன் மீது என்று கேட்டால், “எங்களுடைய ஸ்தோத்திரப் பாடலிலேயே ராஜேந்திர சோழனின் பெயர் இருக்கிறது. இது ஒன்றும் புதிது அல்ல” என்று கூறுகிறார்கள். அப்படியெனில் ஆர்எஸ்எஸ்சின் முடிவைத்தான் இந்தியக் கப்பற்படை அமல்படுத்துகிறது. இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம், ராஜேந்திர சோழன் கடல் கடந்து படையெடுத்துச் சென்றதை இன்றைக்கும் பெருமையோடு நமது கப்பற்படைத் தளபதி புகழ்வது! இத்தகைய ஆதிக்கப் பெருமிதம் ஆர்எஸ்எஸ்சின் “அகண்ட பாரதக்” கனவோடு இயைந்து போகிறதோ எனச் சந்தேகப்பட்டால் அது தவறாகாது.ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதில்லை என்பது மட்டுமல்ல, வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் கொள்கையே சர்வதேச அரசியலுக்கு உகந்தது எனச் சொல்லி ஹிட்லரின் ஆதிபத்திய நடவடிக்கைகளையே ஆதரித்து எழுதியவர் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர். 

அவரது ஆசையெல்லாம் அத்தகைய ஆதிக்கத் தன்மையுள்ள இந்துத்துவா அரசு இந்தியாவில் அமைய வேண்டும் என்பதுதான். அதற்குப் பொருத்தமாக இருக்கிறது “கங்கை கொண்டான்-கடாராம் வென்றான்“ ராஜேந்திர சோழனின் நடவடிக்கைகள் என்பதால்தான் அவனை போற்றுகிறார்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது.இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடந்த போது அதில் பங்கு கொண்ட சங்பரிவாரத்துக்காரர் சொன்னார்: “ராஜேந்திர சோழன் வெளிநாடுகள் மீது தனது கப்பற்படையை ஏவியதால்தான் நமது கலாச்சாரம் அங்கெல்லாம் பரவியது. ராமாயணம், மகாபாரதம் அங்கு பரவியதற்கு அதுதான் காரணம்.” விஷயம் தெளிவானது. ராஜேந்திர சோழனை ஆர்எஸ்எஸ் போற்றுவதன் காரணம் அவன் வருணாசிரமக் கலாச்சாரத்தைப் பிற நாடுகளிலும் பரப்பினான் என்பதுதான். ராஜேந்திர சோழன் சங்க இலக்கியத்தையோ, திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையோ பரப்பவில்லை. வால்மீகியின் ராமாயணத்தையும், வியாசரின் மகாபாரதத்தையும் தான் பரப்பினான் என்பதை அவரது வாயாலேயே ஒப்புக்கொண்டார். 

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ எனும் திருக்குறளை அவன் பரப்பவில்லை. சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டிய ராமாயணத்தையும் பழங்குடி மகன் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய மகாபாரதத்தையும் அவன் பரப்பினான். அதனால்தான் அவனுக்கு விழா எடுக்கிறது ஆர்எஸ்எஸ்.இதை ஏதோ இங்குள்ள சங் பரிவாரத்துக்காரர் மட்டுமல்ல அதன் அகில இந்தியத் தலைமையே ஒருவிதமாக ஒப்புக் கொண்டுள்ளது. “தமிழ்நாட்டின் எண்ணாயிரத்தில் வேதப் படிப்புக்கானப் பல்கலைக்கழகத்தை அமைத்த பெருமை ராஜேந்திரனைச் சாரும் என்று ஆர்எஸ்எஸ்சின் சர்கர்யவகா சுரேஷ் பையாஜி ஜோசி தெரிவித்தார்” என்கிறது “இந்து” (21-10-14) ஏடு. அது உண்மை. தென்னாற்காடு மாவட்டத்தின் “எண்ணாயிரம்“ என்ற ஊரில் ஒரு கல்லூரி இயங்கியது, அங்கே எல்லாம் சமஸ்கிருதமயமாக இருந்தது. புகழ்பெற்ற வரலாற்றாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தனது “சோழர்கள்” நூலில் “சமஸ்கிருதத்தில் உயர் படிப்புமுறை அமைந்திருந்தது குறித்து நமக்கு விபரங்கள்தெரிகின்றன.

ஆனால், அதேகாலத்தில் தமிழ்க் கல்வியின் தன்மை எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். சாஸ்திரியாருக்குப் பிந்திய வரலாற்றாலராகிய கே.கே.பிள்ளையும் தனது “சோழர் வரலாறு நூலில் “பிற்காலச் சோழர் காலத்தில் வடமொழியும் வடமொழி நூல்களும் எந்த அளவிற்கு போற்றி வளர்க்கப் பெற்றன என்பதைத் தெளிவாய் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆயின், தமிழ் மொழி வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை” என்று பதிவு செய்திருக்கிறார்.

இத்தகைய ராஜேந்திர சோழன் அரியணை ஏறியதையும், அது நடந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனதையும் ஆர்எஸ்எஸ் கொண்டாடுகிறது என்றால் அதன் அர்த்தம் தெளிவாகிறது அல்லவா? மோடி அரசு அமைந்ததும் “சமஸ்கிருத வாரம்“ கொண்டாடியது. அத்தகைய கவுரவத்தை தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் அது தரவில்லை. “செந்தமிழ் வாரம் கொண்டாடச் சொல்லிக் கேட்டிருக்கிறோம் என்று பேசியபடியே நாட்களை ஓட்டிவிட்டது தமிழக பாஜக தலைமை. விஷயம் என்னவென்றால், ஆர்எஸ்எஸ்சைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் மட்டுமே இந்த பூமியின் தலையாய மொழி என்பதுதான் அதன் கோட்பாடு. 1958 ல் அது நிறைவேற்றிய தீர்மானத்தை நோக்குங்கள்: “மாகாணங்களுக்கு இடையிலான தொடர்புக்கான பொது மொழியாக சமீப காலத்தில் இந்தி உருவாகிவிட்டது. 

இப்படியாகவே அனைத்து அலுவல் நோக்கங்களுக்கும் அதையே பயன்படுத்த வேண்டும். பிராந்திய மொழிகளை அந்தந்த பிராந்திய அளவில் பயன்படுத்த வேண்டும். சமஸ்கிருதத்தின் அடிப்படையிலேயே அனைத்து மொழிகளையும் வளர்க்க முடியும் என்பதால் அதன் படிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்“ (சு.ளு.ளு. சுநளடிஎநச).இந்தியாவில் பல மொழிக் குடும்பங்கள் உள்ளன. அதிலொன்றுதான் சமஸ்கிருத மொழிக்குடும்பம், தமிழ் போன்றவை வேறு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்கிற மொழியில் ஞானமே இல்லை.இருந்தாலும், அதை சுத்தமாக ஓரம்கட்டிவிட்டு சமஸ்கிருதத்தையே இந்தியா முழுமைக்குமான தலைமொழியாக ஓங்கியடித்துப் பேசுகிறார்கள். அதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அந்த இலக்கை நோக்கி நகரும் உத்தியில் ஒன்றுதான் ராஜேந்திர சோழன் விழா, அவன் “வேதப் படிப்புக்கான பல்கலைக்கழகம் நடத்தினான்“ எனும் நினைவூட்டல்.

ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவைக் கொண்டாடிய திமுக அரசு, அந்தக் கோயிலின் கலைப் பெருமையைப் பேசியதைவிட அந்த மன்னனின் ஆட்சி முறையைப் புகழ்வதிலேயே கவனம் செலுத்தியது. அப்போதே நாம் “தீக்கதிரில்” எழுதினோம் சோழ மன்னர்களுக்கு இன்னொரு முகம் இருக்கிறது - அவர்களும் நிலப்பிரபுத்துவ சாம்ராஜியவாதிகளே, தமிழகத்தில் வருணாசிரம அமைப்பை வேரூன்ற வைத்ததில் பெரும் பங்கு ஆற்றியவர்களே, அதற்காகக் கல்வியை சமஸ்கிருத மயமாக்கியவர்களே- என்பதை எடுத்துக் காட்டினோம். அரசியல் ஆதாயத்திற்காக சோழர் காலப் பெருமை பேசியது திமுக அரசு. அதன் விளைவாக அவர்கள் காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட சாதியத்தையும், ஆணாதிக்கத்தையும் மறந்தது.
இருபதாம் நூற்றாண்டில் அந்த இரு கேடுகளையும் எதிர்த்துத்தான் சமூக சீர்திருத்த இயக்கம் தோன்றியது என்பதையும் மறந்தது.இப்போது ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரம் அதே அரசியல் ஆதாயத்திற்காக அதே சோழ ராஜாக்களின் பெருமை பேச துவங்கியிருக்கிறது. 

திமுக தமிழர் பெருமையின் ஒரு பகுதியாக சோழர்களின் புகழ் பாடியது என்றால், சங் பரிவாரமும் அதே ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால், முன்னது தமிழ்ப் பெருமையின் பொதுவான வடிவமாக அவர்களை முன்வைத்தது என்றால், பின்னது அந்தப் பெருமையின் வருணாசிரமம் எனும் குறிப்பான வடிவமாக அவர்களைத் தைரியமாக முன்வைக்கக் கிளம்பியிருக்கிறது. இந்த ஆபத்தை உணர்ந்துதான் மார்க்சியர்களாகிய நாம் சோழ மன்னர்களின் சகல முகங்களையும் பார்க்கச் சொன்னோம்.இதன் அர்த்தம், தமிழ்ப் பெருமை கொள்ள நியாயமான காரணங்களே இல்லை என்பதல்ல. அது நமது மூதாதையர் வடித்தெடுத்த அருமையான சங்க இலக்கியக் கவிதைகளில், திருக்குறள் போன்ற பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில், நீலகேசி போன்ற தத்துவப் படைப்புகளில் பொதிந்து கிடக்கிறது. ஆனால், அவற்றைத் தூக்கிப் பிடிக்க ஆர்எஸ்எஸ்- பாஜக தயாராக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

தமிழ் இன்னும் மத்திய அரசில் அதன் உரிய இடத்தைப் பெறவில்லை. சென்னை-மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக ஆகவில்லை. உயர் கல்வியிலும் ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் போன்ற மத்திய அரசுத் தேர்வுகளிலும் அதற்கு ஆங்கிலத்திற்கு இணையான இடம் இல்லை. நாடாளுமன்றத்தில் நினைத்தவுடன் தமிழக உறுப்பினர்கள் தமிழில் பேசும் வசதி இல்லை- இந்த அறிவியல் யுகத்திலும் இல்லை.இதையெல்லாம் சரிசெய்ய முயலாத பாஜகவின் மோடி அரசு “கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை” என்ற கதையாக சமஸ்கிருதத்திற்கு ஆலவட்டம் சுற்றும் வேலையை மட்டும் உடன் ஆரம்பித்து விட்டது. ஆசிரியர் தினத்தை “குரு உத்சவ்” என்று மாற்றியது. நாடு முழுக்க “சமஸ்கிருத வாரம்“ கொண்டாடியது. அந்த மதிப்பை தமிழ் உள்ளிட்ட இதர செம்மொழிகளுக்குத் தர மறுக்கிறது. அனைத்திற்கும் மேலே இலங்கைத் தமிழர் - இந்திய மீனவர் பிரச்சனைகளைத் தீர்க்க உருப்படியான காரியம் எதையும் செய்யவில்லை.இந்த லட்சணத்தில்தான் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கிறது கப்பற்படை மூலம் மோடி அரசு. அதற்குக் காரணம், ஒருபுறம் அதன் சமஸ்கிருத மயமாக்கலுக்கு அந்தச் சோழனின் நினைவு உதவுகிறது என்றால், மறுபுறம் தமிழர்களின் காதில் பூ சுற்ற அது பயன்படும் என்று நினைக்கிறது. 

தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமிது. கொஞ்சம் அசந்தாலும் வண்டி குடை சாய்ந்துவிடும். காரணம், சங் பரிவாரம் போட்டு வரும் வேடங்கள் அத்தகையவை.

பேராசிரியர் அருணன்

நன்றி தீக்கதிர் 07.11.2014 

1 comment: