Monday, August 27, 2012

அப்துல் கலாமின் அபத்தம்





சரியான அரசியல் புரிதல் இல்லாதவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
என்பது இடதுசாரிகள் அவர் மீது வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.
உலகமயமாக்கல் கொள்கைகள்  இந்திய மக்களையும்
இந்தியப் பொருளாதாரத்தையும் எப்படி பாதிக்கிறது என்ற
உணர்வே இல்லாமல் மன்மோகன், சிதம்பரம் வகையறாக்கள்
போல உலக மயத்திற்கு ஆதரவாக நிற்பவர் கலாம்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காணச் 
சொல்பவர், அதற்கான கதவுகளை மத்தியரசு அடைத்து
வருகின்றது என்ற யதார்த்தத்தை கண்டு கொள்ளாமல்
இருப்பவர்.

அவரது அரசியல், பொருளாதார புரிதலுக்கு இன்னொரு
உதாரணம், இதோ நேற்று கொல்கத்தாவில் அவர் 
பேசியது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 
அனுமதிக்கலாம் என்று அவர் ஒபாமாவின் வார்த்தைகளை
எதிரொலித்துள்ளார். மார்க்கெட்டிங்கில் தீவிரமாக நாம்
இருந்தால் அன்னிய முதலீட்டுக்காக அச்சப்பட வேண்டிய
அவசியம் இல்லை என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.

சில்லறை வர்த்தகம் என்ன வெறும் மார்க்கெட்டிங் 
பிரச்சினையா?

பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் நெறிமுறையற்ற
உத்திகளோடு சாதாரண வணிகர்கள் எப்படி போட்டி
போட முடியும்? அவர்களின் மூலதனத்திற்கு முன்பாக
இந்திய வணிகர்கள், அதுவும் சாதாரண, சிறு வணிகர்கள்
எப்படி சமமாக முடியும்?

சென்னையில் உள்ள பெரிய ஜவுளி நிறுவனங்களும்
நகை விற்பனையாளர்களும் செய்வது போன்ற 
விளம்பரங்களை சாதாரண துணிக்கடை, நகைக்கடை
உரிமையாளர்களால் செய்ய முடியாத போது
வால்மார்ட் போன்ற நிறுவனங்களோடு எப்படி
மார்க்கெட்டிங்கில் தீவிரம் காண்பிக்க முடியும் என்று
அப்துல் கலாம் எதிர்பார்க்கிறார்.

அமெரிக்கா எப்படி  ஆடை களைந்து அசிங்கப்
படுத்தினாலும் அதன் சொல்லே வேத வாக்கு என்று
அப்துல் கலாம் இருந்தால் இறுதியில் அவமானப் படப்போவது
அவர்தான்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க
மாட்டோம் என்று வீரம் பேசும் மம்தா தீதி அவர்களே!

உங்களால் ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டவர்,
உங்களுடைய கருத்துக்கு எதிராக, அதுவும்
கொல்கத்தாவிலேயே பேசியுள்ளாரே!
என்ன செய்யப் போகின்றீர்கள்?

உங்கள் வசை மொழி கேட்க ஆவலோடு உள்ளேன்.
உங்களைப் பாராட்டிய அப்துல் கலாமிற்கு நீங்கள்
அளிக்கப்போகும் இழிவுத் தண்டனை என்ன?


1 comment:

  1. வெறும் மார்கெடிங் பிரச்சனையா? கொடுமை! அதிகம் இல்லை. வெறும் இருபது வருடங்களில், பெப்சி, கோககோலா மட்டுமே குளிர்பானத்தயாரிப்பில். மற்ற எல்லாவற்றையும் ஒழித்தாகிவிட்டது. இதை பார்த்தும் புத்தி வரவில்லை என்றால் என்ன சொல்வது?

    ReplyDelete