Thursday, June 21, 2012

கட்டிடங்களை வேண்டுமானால் இடித்து விடலாம்? ஆனால்
வேலூர் நகரத்தின் தோற்றம் கடந்த சில ஆண்டுகளாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பதை முந்தைய ஒரு பதிவில் எழுதியிருந்தேன். பழைய பல கட்டிடங்கள், திரை அரங்குகள், சிறு வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் பிரம்மாண்ட வணிக மையங்கள் வந்துள்ளன,  வந்து கொண்டிருக்கின்றன, தற்போது இடிக்கப்பட்டு வரும் இரண்டு கட்டிடங்கள் பற்றியே இப்பதிவு.

ஒரு கட்டிடம் சி.எம்.சி மருத்துவமனைக்கு அருகாமையில் எங்கள் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கிரவுன் தியேட்டர். மிகவும் பழைய தியேட்டர். ஒரு முறை கூட உள்ளே நுழைந்ததில்லை. காரணம் அது பலான படங்கள் மட்டுமே திரையிடும்  பாரம்பரியம் கொண்டது. ஆகவே அப்படிப்பட்ட படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே வருத்தம் ஏற்படுத்தும் செய்தி இது. பலான படம் மட்டுமே போட்டாலும் லாபகரமாக  இயங்கக் கூடிய தொழிலாக திரை அரங்கத் தொழில் இல்லை என்ற செய்தியும் இதோடு ஒட்டி இருக்கிறது.

எனது கவலை வேறு. இந்த கிரவுன் தியேட்டரை ஒட்டிய தெருவில்தான் எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லம் உள்ளது. சரோஜ் இல்லத்திற்கு வழி கேட்பவர்களுக்கு அடையாளமாக கிரவுன் தியேட்டரை சொல்லி, அங்கிருந்து வாருங்கள் என்போம். அதிகாலை மூன்று மணிக்கு ஹௌரா எக்ஸ்பிரஸில் இறங்கி அரைகுறை ஆங்கிலத்தில் வழி கேட்பவர்களுக்கு நான் தூக்க கலக்கத்தில் இனி எப்படி பதில் சொல்வது, எப்படி புரிய வைப்பது என்பதுதான் என் கவலை.

ஏராளமான நினைவுகளை தாங்கிய இன்னொரு கட்டிடமும் இடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது சொந்தக் கட்டிடத்திற்கு வரும் முன் எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகம் செயல்பட்டுக் கொண்டு இருந்த கட்டிடம். 20, ஆபீஸர்ஸ் லைன் என்ற முகவரியில் முதலில் எல்.ஐ.சி வேலூர் கிளை இருந்தது. பிறகு அங்கு வேலூர் கோட்ட அலுவலகத்தின் பல பிரிவுகள் செயல்பட்டன. வேறு சில கட்டிடங்களில் வேறு பல பிரிவுகள் செயல்பட்டாலும் இதுதான் பிரதான அலுவலகமாக இருந்தது. 1988 முதல் 1996 வரை சங்கம் செயல்பட்டதும் இங்கிருந்துதான்.

பல முக்கியமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இங்கே நடந்திருக்கிறது. அதிலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியமான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி ஒரு கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். அக்கருத்தரங்கம் தொடங்கும் முன்னர் ஒரு இரண்டு மணி நேரம் கிளைச் செயலாளர்களோடு அவர் கலந்துரையாடினார். வானத்திற்குக் கீழே எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற அறிமுகத்தோடு நடந்த அந்த விவாதம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத பரவசம்.

பல்வேறு பிரச்சினைகள் அங்கே நடந்திருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் பிறந்திருக்கின்றன. முக்கியமான நிகழ்வுகளுக்கான சாட்சியமாக அந்த கட்டிடம் இருந்திருக்கிறது. எப்போது அந்த வழியாக சென்றாலும் ஒரு நொடி அந்த கட்டிடத்தை பார்ப்பது வழக்கம். அந்த நொடியில் எத்தனையோ நினைவில் வந்து அலை மோதி விட்டுச் செல்லும்.

அஞ்சல் நிலையத்தோடு தன் பயணத்தை துவக்கிய அந்தக் கட்டிடம் இனி இருக்காது. ஆனால் நினைவுகள் இருக்குமல்லவா!சரோஜ் இல்லத் திறப்பு விழா அன்று

 


No comments:

Post a Comment