Sunday, June 3, 2012

இன்று லாரி, அன்று ஜீப் -தொடரும் ஊழல் பாரம்பரியம்



திருவிளையாடல் தருமி பிரிக்க முடியாதது எது என்று இன்று கேள்வி கேட்டால் ராணுவத் தளவாடக் கொள்முதலும் ஊழலும்தான் என்று பதில் வரும். அந்த அளவிற்கு ஒவ்வொரு கொள்முதலும் ஊழலோடு பின்னிப் பிணைந்துள்ளது. அமெரிக்க அரசை ஆட்டிப் படைப்பது, போர்களுக்கு தூண்டுவது என ஆயுத வியாபாரிகளின் ஆதிக்கம் அங்கே அதிகம். இப்போது இந்தியாவின் பரபரப்பு ஊழல் புகார் ராணுவத்திற்கு “ டட்ரா” லாரிகள் வாங்குவது.

இந்த இதழில் நாம் பார்க்கப் போவது 1948 ன் ஊழல் வரலாறு. இந்திய ராணுவத் தேவைக்காக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து 155 ஜீப்புக்கள் வாங்கப் படுகின்றது. 80 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த கொள்முதல் எவ்வித வழி முறைகளையும் பின்பற்றி செய்யப்படவில்லை.

அப்போது இங்கிலாந்து நாட்டிற்கான தூதராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனனே நேரடியாக அந்த நிறுவனத்தோடு பேரம் பேசி அவரே ஒப்பந்ததிலும் கையெழுத்து போடுகின்றார். அந்த ஜீப்புக்களை ராணுவத்தில் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நேரு வலியுறுத்துகின்றார்.

டெண்டர் விடுதல் போன்ற எவ்வித முறையையும் கையாளப்படாத் இந்த பேரம் குறித்து பிரச்சினை மக்களவையில் வருகின்றது. பின்பு நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்ற அன்ந்தசயனம் ஐயங்கார் என்பவரது தலைமையிலான நாடாளுமன்றக்குழு  இந்த பேரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

ஆனால் மத்தியரசோ, நீதி விசாரணை அவசியமில்லை, இது முடிந்து போன ஒரு விவகாரம் என்று மறுத்து விட்டது. எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் இதை தேர்தல் பிரச்சினையாக எடுத்துச்செல்லட்டும் என்று சவால் விட்டது.

பிரதமர் நேரு இன்னும் ஒரு படி மேலே போய் “ ஜீப் வாங்குவதில் ஊழல் என்று சொல்வதுதான் ஊழல் “ என்று கூறினார். அதோடு நிற்காமல் யார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்ததோ அதே வி.கே.கிருஷ்ண மேனனை ராணுவ அமைச்சராகவும் நியமித்தார்.

அந்த  ஊழல் பாரம்பரியம் இன்றும் தொடர்கின்றது. 

எங்கள் சங்க மாத இதழ் " சங்கச்சுடர் " மே மாத இதழின் 'ஊழல்களின் ஊர்வலம்' தொடருக்காக எழுதியது.

No comments:

Post a Comment