Sunday, June 10, 2012

ஆட்டோ சங்கர் புதைத்த் பிணங்களும் பாடப்புத்தக வக்கிர கார்ட்டூன்களும்



ஆட்டோ சங்கர் புதைத்த பிணங்கள் போல என்.சி.இ.ஆர்.டி  
பாடப் புத்தகங்களில் உள்ள வக்கிரங்கள் தொடர்ந்து
ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் குறித்த கார்ட்டூனுக்குப் பிறகு
அடுத்த சர்ச்சை இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்தது.

ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்ததாக இருந்தாலும் அது
தவறுதான். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை
வன்முறையாளர்களாகவும் எதுவும் அறியாத 
முரடர்களாகவும் சித்தரிக்கிற  அந்த கேலிச்சித்திரம்
ராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோரை வேறு உன்னத
மனிதர்களாக காண்பிக்கிறது.

மொழி என்பது அடிப்படையில் தகவல் தொடர்பிற்கானது.
இதிலே ஒரு மொழிதான்தலைசிறந்தது. அதனை மற்ற
மொழிக்காரர்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்
என்று அரசு உத்தரவு போடுவது அபத்தமானது.

யாருக்கு தேவை இருக்கிறதோ, அவர்கள் அதனை
கண்டிப்பாக கற்றுக் கொள்வார்கள். இந்தி மொழியின்
தரகராக மத்தியரசு இருந்ததுதான் பிரச்சினையின்
ஆணிவேர். 

இன்னமும் கூட இந்தியை திணிக்கும் வேலை 
நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுத்துறை
நிறுவனங்களில் இந்தியை திணிப்பதற்கு என்று
ஒரு துறையே உள்ளது. அதை கண்காணிப்பதற்கு
பெரிய அரசு இயந்திரமே உள்ளது.

அலுவலகப் படிவங்களில் இந்தி இருக்க வேண்டும்,
இந்தியில் கையெழுத்து போடுவதை ஊக்குவிக்க
வேண்டும் என்று உத்தரவுகள் உள்ளது. இதன் அபத்தம்
எந்த அளவிற்கு உள்ளது என்றால் தமிழ் மொழியும்
மலையாள் மொழியும் பேசும் ஊழியர்கள் உள்ள
எல்.ஐ.சி தென் மண்டலத்தில் வருங்கால வைப்பு
நிதியிலிருந்து கடன் வாங்கும் விண்ணப்பம் இந்தியிலும்
அச்சிடப்பட்டிருக்கும்.

ஆண்டிற்கு ஒரு முறை இந்தி தினம் கொண்டாடப்படும்.
அதனை ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஹிந்தி திவஸ்
எனச்சொல்வார்கள். என்ன இன்று இந்திக்கு திவசம்
கொடுக்கப் போகின்றீர்களா என்று நான் கிண்டலாகக்
கேட்பதுண்டு.

மக்கள் செலவில் இந்தியை இந்தி பேசாத மக்களுக்கு
போதிப்பது என்ற அபத்தம் தொடர்வதை நாம் இன்னும்
அனுமதிப்பதால்தான் இவர்களுக்கு கொழுப்பேறிப் 
போயுள்ளது.

எல்லாவற்றிலும் இந்தி இருக்க வேண்டும் என்ற 
காங்கிரஸ் கட்சியின் மொழிக் கொள்கைக்கு எதிராக
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் இயல்பானது.
திமுக அதனை தனது அரசியல் லாபத்திற்கு 
பயன்படுத்திக் கொண்டது.

தாய்மொழியைப் புறந்தள்ளி, இந்தியை கற்றுக் 
கொள்ள வேண்டும் என்று மத்தியரசு கட்டுப்படுத்திய
அராஜகம்தான் போராட்டத்திற்கு  காரணம் என்பதை
கார்ட்டூன் மறைக்கிறது.

அதை இப்போது பாடப்புத்தகத்தில் வெளியிடுவதில்
இந்தி மொழி பேசுபவர்கள் மத்தியில் தமிழர்கள்
பற்றி மோசமான பிம்பம் உருவாக்கும் சதி
உள்ளடங்கியுள்ளது.

ஆதிக்க வெறியும் மொழி வெறியும் கொண்ட
கீழ்த்தரமான மனிதர்கள் தயாரித்துள்ள 
பாடப்புத்தகம் இது என்பது தெளிவாக
புலப்படுகின்றது.

வரலாறு  என்பதே எப்போதும் ஆட்சியாளர்கள்
நினைப்பதை சொல்வதாகத்தான் அமைந்துள்ளது.
மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் ஏராளம்.

சமகால வரலாற்றையே இந்த புண்ணியாத்மாக்கள்
இப்படி திரிக்கிறார்களே, கடந்த கால வரலாற்றில்
எத்தனை திரிபுக்கள் நடந்திருக்கும்?

இந்த கார்ட்டூன் மட்டுமல்ல, அத்தனை கார்ட்டூன்களையும்
பாடப்புத்தகங்களிலிருந்து அகற்றுவதே மத்தியரசு
செய்ய வேண்டிய முதல் வேலை.

மேலும் இந்த வக்கிரபுத்திக்காரர்கள்  மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டியது அதை விட முக்கியம்.

பின் குறிப்பு : இந்தி பேசும் மாநிலங்களை விட கல்வியில்
தமிழகம் எவ்வளவோ மேம்பட்டுள்ளது என்பதை 
புத்தகம் போட்ட புத்திசாலிகள் அறிவார்களா? 

3 comments:

  1. நல்ல சுரணையூட்டும் பதிவு

    ReplyDelete
  2. thangal karuthai, padikkum kaalathil hindi ethirppu poraattathil thadiyadi petravan enkindra
    murayil muzhu manadhudan varaverkiraen.

    ReplyDelete
  3. //பின் குறிப்பு : இந்தி பேசும் மாநிலங்களை விட கல்வியில்
    தமிழகம் எவ்வளவோ மேம்பட்டுள்ளது //

    True.

    ReplyDelete