Wednesday, December 17, 2025

கேவலமான பின்னூட்டத்திற்கு சூடான பதில்

 


சங்கிகள் ராஜஸ்தானில் நிகழ்த்திய வந்தேமாதர காமெடி பற்றிய பதிவில் ஒரு அனாமதேயம் "அவங்க முட்டாப்பசங்க" என்று பின்னூட்டமிட அதற்கு இன்னொரு பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்தது. "உண்டியல் குலுக்கி கோஷ்டிகள் பற்றியும் தெலுங்கு தேவதாசி கோஷ்டி பற்றியும் என்ன சொல்கிறீர்கள்?" என்பதுதான் நான் பிரசுரிக்காத அந்த பின்னூட்டம்.

நாங்கள் உண்டியல் குலுக்கிகள் என்ற பட்டத்திற்காக என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. மக்களுக்காக போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் மக்களிடம் நேரடியாக உண்டியல் குலுக்கி நிதி திரட்டுகிறோம். இது வெளிப்படையானது. 

பாஜக போல அமலாக்கப் பிரிவை அனுப்பி விட்டு பின்பு அந்த முதலாளிகளிடம் பணத்தை பறிக்கும் கொள்ளைக்காரக் கட்சி அல்ல கம்யூனிஸ்டுகள். அடுத்து திமுக கொடுத்த பத்து கோடி என்று ஒரு அனாமதேய கோஷ்டி வரும். அது நன் கொடை. முறையாக கணக்குகளில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பணம்.  உண்டியலை நாங்கள் மட்டுமா பயன்படுத்துகிறோம்? யாரெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பட்டியல் போட்டால் "மனம் புண்பட்டு விட்டது " என்று புலம்பும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பிரச்சினைக்கு வருகிறேன்.

கலைஞர் குடும்பத்தை இழிவு படுத்த சங்கிகளும் அதிமுகவினரும் ட்ம்ப்ளர்களும் இப்போது தவெக தற்குறிகளும் பயன்படுத்துகின்ற அவதூறு.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கட்டமைத்து அந்த பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் பரப்பி அவர்களே  உண்மை என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எனக்கும ஏற்கக் கூடிய அதே நேரம் நிராகரிக்க வேண்டியது என்று இரண்டும் உண்டு. ஆனால் அவருடைய தமிழ் உணர்வையோ தமிழுக்கான பணிகளையோ யாராலும் நிராகரிக்க முடியாது. அவரது தமிழறிவின் நிழல் அளவு  கூட எம்.ஜி.ஆரை சொல்ல முடியாது என்ற கையாலாகத தனம், இந்த பிரச்சாரத்தின் பின்னணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பூர்வீகத்தை ஆராய்வது போல ஒவ்வொருவருடைய பூர்வீகத்தை ஆய்வு செய்தால் அது ஆப்கானிஸ்தானத்தை தாண்டிச் செல்லுமல்லவா! நம் எல்லோரின் பூர்வீகமுமே ஆப்பிரிக்க மூதாய்தானே!

தேவதாசி முறை என்பது இந்திய சமூகத்தின் இழிவு. மன்னராட்சிக் காலத்தின் திமிர். ஆதிக்க சக்திகளின் வெறிக்கு சில குறிப்பிட்ட சமூகங்களை பலியாக்கிய கொடுமை. 

தேவதாசி முறை தடைச்சட்டத்தை சட்டமன்றத்தில்  காமராஜரின் குரு சத்தியமூர்த்தி எதிர்க்கிறார். தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி  டாக்டர் முத்துலட்சுமி "இம்முறை புனிதமானது, புண்ணியம் அளிப்பது என்றால் இனிமேல் உங்கள் குடும்பப் பெண்களை பயன்படுத்துங்கள்" என்று பதிலளிக்க அவர் வாயடைத்துப் போனார்.

அந்த சமூக இழிவை ஒரு குடும்பத்தை இழிவு படுத்த பயன்படுத்துவது என்பது கேவலமான சிந்தனை. அழுகிப்போன ஜாதிய மேட்டிமை புத்தி. ஆணாதிக்க திமிர்.

அந்த அனாமதயேத்திற்கு முடிவாக ஒன்றை சொல்கிறேன்.

நான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன் என்று உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, மகள், பெண் நண்பர்கள் ஆகியோரிடம் சொல்லவும். 

உனக்கு அவர்களிடமிருந்து செருப்படி நிச்சயம். . .

பிகு" கடைசி இரண்டு பத்திகள் அந்த ஆங்கில அனாமதேயத்திற்கு மட்டுமல்ல, அதே போல அவதூறு பரப்பும் அனைத்து ஜந்துக்களுக்கும் பொருந்தும். 



Tuesday, December 16, 2025

சங்கிகளின் வந்தே மாதர காமெடி - DON'T MISS

 


மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக 'வந்தே மாதரம்" பாடலின் 150 ஆவது ஆண்டு என்றொரு நாடகத்தை மோடி வகையறாக்கள் நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் மாநிலங்களிலும் நடத்தியுள்ளார்கள்.

அப்படி ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 150 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய பாடலுக்கு பதிலாக எந்த பாடலை ஒலிபரப்பியுள்ளார்கள் என்பதை கீழே உள்ள காணொளியில் பார்த்து மகிழ்ந்து சிரியுங்கள். அந்த மாநில முதல்வர் வேறு அங்கே இருந்துள்ளார்.



தங்கள் கட்சித்தலைவர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனர் சந்தான பாரதி, அம்மன் பட வில்லன் ஜண்டா ஆகியோரின் படங்களை போட்டு சுவரொட்டி அடித்த கும்பல்தானே!

மகாத்மா பெயரைச் சொல்ல வெட்கமா மோடி



 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என்று மோடி அரசு மாற்றியுள்ளது.

மகாத்மா காந்தியை கொன்றவர்கள்  அவரது கொள்கைகளையும் கொன்று விட்டார்கள். அதனால் அந்த கொலைகாரர்களுக்கு ஒரு திட்டத்தின் பெயரில் கூட மகாத்மா காந்தியின் பெயர் இருப்பது வெட்கமாக உள்ளது போல.

அதனால் திட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)  என்று மாற்றி விட்டார்கள். எந்த எழவாவது புரிகிறதா?

நேருவை இன்றளவும் வசை பாடுகிறார்கள். நேரு அளவிற்கு மகாத்மா காந்தியையும் வசை பாடினால் அசிங்கமாக போய் விடும். அதனால் பெயரை தூக்கி விட்டார்கள்.

இன்னும் மிச்சம் இருப்பது ரூபாய் நோட்டுக்கள் மட்டும்தான். 

அதில் என்றைக்கு கோழை சாவர்க்கர்/கோட்சே வகையறாக்களின் படத்தை போடப் போகிறார்களோ? 

Monday, December 15, 2025

தகுதியற்றவர்களின் ஆட்சியின் மரணங்கள்

 


போன மாதம் சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்து நினைவில் உள்ளதல்லவா!

பதினைந்து பேரை காவு வாங்கிய அந்த விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பிரிஜேஷ் குமார் மிஷ்ரா கொடுத்த அறிக்கையின் விபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

அந்த ரயிலின் இஞ்சின் ட்ரைவர் அந்த ரக ரயில்களை ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் தோற்றுப் போனவராம். அதே போல அந்த ரயிலின் கார்டும் அந்த பதவிக்கான தகுதி வரம்பை எட்டாதவராம். உதவி இஞ்சின் ட்ரைவரும் சிவப்பு சிக்னலை பார்த்தும் வண்டியை நிறுத்த முயற்சிக்கவில்லை.

தகுதித் தேர்வில் தோற்றுப் போன பலரும் பல ரயில்வே கோட்டங்களில் ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த அறிக்கை அளிக்கும் இன்னொரு செய்தி.

உண்மையில் சொல்ல வேண்டுமானால்

ரயில்களை இயக்கியவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.

பயணிகள் நலன் பற்றி கவலைப்படாத, ஆட்சி நடத்த தகுதியற்ற மோடி அரசுதான் பயணிகளின் மரணத்துக்கான உண்மையான காரணம். 

அந்த வக்கீல்கள் அனாமதேயங்களா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். 

தி.குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்தால் ஒட்டு மொத்த நீதித்துறையே நிலை குலைந்து போய்விடும் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய அளித்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வக்கீல்கள் மக்களவை தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.



சரி, இதை அனுப்பியவர்கள் யார் என்று பார்த்தால் இந்த செய்தியில் யாருடைய பெயரும் இல்லை. எந்த வழக்கறிஞர் அமைப்பின் பெயரும் இல்லை. ஜாதி, மத அமைப்புக்களின் பெயர் கூட இல்லை. இந்த மனுவில் எத்தனை வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்ற விபரமமும் இல்லை. ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் என்ற சங்கிகளின் கட்டுக்கதை மட்டும் மனுவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சங்கிகள் எப்படி அனாமதேயமாக, போலி ஐடிக்களில் பின்னூட்டம் போடுவார்களோ அது போல சபாநாயகருக்கு அனாமதேயமாக, மொட்டைக் கடிதம் அனுப்பி விட்டார்கள் போல. . .


Sunday, December 14, 2025

கேரளா - பின்னடைவும் முன்னேற்றமும்

 


கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அச்சத்தையும் கவலையையும் அதே நேரம் நம்பிக்கையையும் அளிக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக இடங்களை (பெரும்பான்மை இடங்களை அல்ல, ஆனாலும் பாஜக வாஷிங் மெஷினில் கொலைக்குற்றத்திலிருந்து விடுபட்ட காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உதவியுடன் சில கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்) பெற்றுள்ளது அச்சத்தை அளிக்கிறது ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கேடு கெட்ட சூட்சுமத்தை அறிந்த சங்கிகள் ஒட்டு மொத்த கேரளத்திலிருந்தும் இடதுசாரிகளை வீழ்த்தி விட்டோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதுதான் அச்சம்.

இடது முன்னணிக்கு பின்னடைவா?

ஆம். பின்னடைவுதான். ஏற்கனவே பொறுப்பிலிருந்த பல இடங்களை இழந்துள்ளது என்பது நிச்சயமாக பின்னடைவுதானே!

மோடியும் காங்கிரஸும் சொல்வது போல இடது முன்னணி கேரளத்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

பொய், மிகப் பெரிய பொய்


மேலே உள்ள பட்டியலே உண்மையைச் சொல்லும்.  மாநகராட்சிகளில் பெரிய இழப்பு இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்  ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும்  கணிசமான எண்ணிக்கை கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக இழந்ததுதான் அதிகம். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விபரத்தை பகிர்ந்திருந்தார். அது கீழே


2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது,
காங்கிரஸ்:- 45.40%
இடதுசாரி:- 33.60%
தேஜகூ:- 19.40%
வாக்குகள் பெற்றன.

தற்போது உள்ளாட்சி தேர்தலில்
காங்கிரஸ்:- 42%
இடதுசாரி:- 40%
தேஜகூ:-9%. வாக்குகள் பெற்றுள்ளன.
2024 ஐ விட கூடுதலான வாக்கு சதவீதத்தை இடது ஜனநாயக முன்னணி பெற்றும் வெற்றி பெற இயலவில்லை.



இந்த புள்ளி விபரம் நம்பிக்கையையும் அளிக்கிறது. கவலையும் அளிக்கிறது.

திருச்சூரில் காங்கிரஸ் தன் வாக்குகளை சுரேஷ் கோபிக்கு மடை மாற்றிக் கொடுத்தமைக்கு பாஜக இப்போது நன்றிக் கடன் ஆற்றியுள்ளதோ என்றொரு சின்ன சந்தேகம் வருகிறது.

அதே நேரம் பின்னடைவு ஏற்பட்டாலும் தளம் அப்படியே இருப்பதால் இடது முன்னணி தன் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை களைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில ஆட்சி எவ்வளவு சிறப்பான பணிகளை செய்திருந்தாலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டில் நிற்பவர் யார்? அந்த தெருவில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதெல்லாம்தான் முக்கியமான காரணிகள்.

பத்தாண்டு கால கேரள மக்களுக்கு செழிப்பான ஆட்சியில் சில களைகளும் முளைத்திருக்கும். அந்த களைகளை கறாராக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இடது முன்னணி எடுத்திடும் என்று நம்புகிறேன்.

காலத்தே களைகளை அகற்றத் தயங்கினால் அது பெரும் புதராக மாறி பின்னடைவுகளை உருவாக்கிடும், மேற்கு வங்கத்தைப் போல.

கேரளா மேற்கு வங்கம் அல்ல என்பதை 2025 ல் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.

வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதால் அலட்சியம் வந்திடுமோ என்பது கவலையளிக்கிறது.

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!