Wednesday, May 4, 2016

இப்பெண்ணின் கேள்விக்கு பதிலென்ன?






ஜாதி ஆதிக்க வெறியர்களால் கொல்லப்பட சங்கரின் மனைவி கௌசல்யா கூறும் கண்ணீர் வாக்குமூலம் இது. சற்று நீண்டதுதான். ஆனாலும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி படியுங்கள்.

ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் என்றென்றும் நிற்பது இடதுசாரிகள் மட்டுமே. அவர்கள் கௌசல்யாவிற்கு துணை நிற்பது இயல்பானது.

மற்ற கட்சிகளும் இருக்கிறார்கள். அவர்களில்

இப்பிரச்சினை குறித்து வாய் திறக்காத ஜெயலலிதா,
வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக குறுக்கி வாக்குகளுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்.
வேறு விஷயம் பேசுங்கள் என்று அலட்சியம் செய்த மருத்துவர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக முற்றுகையிடப்பட்ட வைகோ.

இதிலே வைகோவை படு கேவலமாக பல உடன்பிறப்புக்கள் வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதிர்ச்சியாக இருந்தது. இதுதான் அவர்கள் தரம் என்பது இப்போது புரிந்து விட்டதால், இப்படி வசை பாடினால்தான் சிலருக்கு பிழைப்பு நடக்கும் என்பது தெரிந்து விட்டதால் இப்போது அதிர்ச்சி வருவதில்லை. ஒருவேளை திமுககாரர்கள் நாகரீகமாக எழுதினால் வேண்டுமானால் ஆச்சர்யமாக இருக்கும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

தமிழகத்தை காட்டுமிராண்டிக் காலத்திற்கு எடுத்துச் செல்ல ஆதிக்க சக்திகள் முயல்கிறார்கள்.

மௌனத்தின் மூலம் அதிமுகவும் திசை திருப்பல் வாயிலாக திமுக வும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பது பாமக மற்றும் பாஜக.

இவர்களை இந்த சட்டமன்றத் தேர்தலில் நிராகரிக்காவிட்டால் வேறு எப்போது வாய்ப்பு கிடைக்கும்!

மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்பீர்.

மேலேயுள்ள படங்கள் எங்கள் சங்கத்தலைவர்கள் கௌசல்யாவை சந்தித்து நிதியுதவி செய்த போது எடுக்கப்பட்டது. 



இப்போது கௌசல்யா கூறியுள்ளதை படியுங்கள்.

உங்கள் உள்ளம் உருகும் என்றே நம்புகிறேன்.


என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிரமலை கள்ளர் சாதியை சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் செல்ல மகள். எது கேட்டாலும் என் அப்பா வாங்கிக் கொடுப்பார். அதே நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது என்கிற கடுமையான கட்டுப்பாடும் உண்டு. இந்த கட்டுப்பாடு எப்போது விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. பிறந்தது முதல் இருந்தது போன்றுதான் உணர்கிறேன்.

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பொள்ளாச்சியில் அமைந்துள்ள பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் 2014ம் ஆண்டு பி.இ. முதலாம் ஆண்டு சேர்ந்தேன். அங்குதான் சங்கர் மூன்றாம் ஆண்டு பி.இ. படித்து வந்தான். சங்கர், பழனி அருகில் உள்ள கொமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்தவன். எப்போதும் துருதுருவென்றும் அதே நேரத்தில் கரிசனையும் அன்பும் கலந்த குணத்தோடு அவனது அணுகுமுறை இருக்கும். ஒரு நாள் சங்கர் என்னிடம் வந்து நீங்கள் யாரையாவது லவ் பண்றீங்களா? என்று கேட்டான். இல்லை என்றேன். உங்களை எனக்கு பிடித்திருக்கு என்றான். நான் அவனிடத்தில் நட்புடன் பழகலாமே, அதை கடந்து காதல் என்றெல்லாம் என்னிடம் பழக வேண்டாம் என்று கூறினேன். அவன் அமைதியாக சாரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

சங்கர் என்னிடம் காதலை சொல்லத்தான் வந்தான் என்று சொன்னாலும் அதை நான் மறுத்தபோது அவனிடம் தென்படாத அந்த கோபம் எனக்கு பிடித்திருந்தது. இருவரும் நட்புடன் பேசிக் கொள்வோம். ஒருநாள் அவனது குடும்பத்தை குறித்து விசாரித்தேன். அவனக்கு அம்மா இல்லை, அப்பாவும் இரண்டு தம்பிகளும் மட்டும்தான் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டேன். சங்கரிடம் ஒரு குணம் உண்டு. பெண் பிள்ளைகளிடம் ஒருவிதமான வரையறையுடன் மரியாதையுடன் பேசுவான் பழகுவான்.

சில நாட்கள் கடந்து மறுபடியும் சங்கர் என்னிடத்தில் நான் உங்களை ஹர்ட் பண்ணியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றான். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். முதலில் மறுப்பு தெரிவித்த நான், இரண்டாவது முறை சங்கரிடத்தில் ஏன் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தேன் என்பதை என்னால் உணர முடிந்தது. அவன் மீது அன்பை கடந்து ஒரு மரியாதையும் இருந்தது. கன்னியமான நடத்தைதான் காதலின் அணுகுமுறை என்று சங்கர் எனக்குள் உணர்த்தியிருந்தான்.

நட்புடன் பழகி வந்த நான் ஒரு கட்டத்தில் சங்கரின் காதலை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாள் அவனிடத்தில், என்னை ஏன் உனக்கு ரொம்ப பிடிக்கும்? என்றேன். நீ என் அம்மா போன்று இருக்கிறாய் என்றான். எனக்கு அப்போது வயது 17. அவன் என்மீது அன்பு ரீதியாக உணர்த்திய அந்த பொறுப்பினை தாங்கும் சக்தி கூட எனக்கு இல்லை. பேச்சு வரவில்லை. லேசாக கண்ணீர் எட்டி பார்த்தது.

நானும் சங்கரும் காதலில் வரையறையை கடைபிடித்து வந்தோம். நேரில் குறைவாகத்தான் பேசிக் கொள்வோம். அலைபேசியிலும் குறுந்த தகவலிலும் அதிகமாக உரையாடியிருக்கிறோம். நான் பி.இ. படிப்பினை கடந்து ஜாப்பனிஷ் மொழி குறித்து தனியாக பயின்று வந்தேன். ஒரு நாள் வகுப்பு முடிய கால தாமதமாகிவிட்டது. இரவு 7.30 மணியிருக்கும் எனக்காக காத்திருந்த சங்கர் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை என்னுடன் பஸ்ஸில் வந்தான். அதை கவனித்த யாரோ என் அம்மாவிடம், உன் மகளோடு யாரோ ஒரு பையன் பேசி வருகிறான் என்று சொல்லிவிட்டார்கள்.

என் அம்மா, சங்கர் குறித்து என்னிடம் விசாரித்தார். என் அம்மாவின் முதல் கேள்வி என்ன தெரியுமா? சங்கர் என்ன சாதி. பள்ளர் சமூகத்தை சேர்ந்தவன் என்றேன். அவனோடு நீ எப்படி நட்புடன் பழகலாம். அவனோடு நீ பேசுவது நம்ம சாதி ஆட்களுக்கு தெரிந்தால் நம் குடும்பதை கேவலமாக பேசுவார்கள் என்றார்.

பேசுவதற்கே சாதி வன்மம் காட்டுகிற என் அம்மா, நான் சங்கரை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்பதை தெரிந்து கொண்டால் என்ன செய்வாரோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதை வாட்ஸ்அப் மூலம் சங்கருக்கு தெரியப்படுத்தியிருந்தேன். சங்கர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். அந்த உணர்ச்சியில் கோபமில்லை. ஆழமான அன்பு இருந்தது. என் அம்மாவை இழந்தது போன்று உன்னையும் நான் இழந்துவிடுவேனா? என்று பதிலுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.

நான் சங்கரோடு பேசுகிறேன் பழகுகிறேன் என்பதை என் குடும்பத்தினருக்கும் என் நெருங்கிய உறவினர்களுக்கும் தெரிய வந்தது. சங்கரை சாதி ரீதியாக இழிவாக பேசினார்கள். என்னையும் இழிவுபடுத்தி தாக்கினார்கள். எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பேசிக் கொண்டனர்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. சங்கரை திருமணம் செய்யவில்லை என்றால் நம்மை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயந்தேன். சங்கர் படிப்பினை முடிக்க 9 மாதம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் தான் சங்கர் வேலைக்கு செல்ல முடியும். அதற்கு முன் திருமணம் செய்து கொண்டால் குடும்பத்தை எப்படி நடத்துவது? என்கிற கவலையும் வந்தது. இதுகுறித்தெல்லாம் நானும் சங்கரும் பேசிக் கொண்டோம். நான்தான் சங்கருக்கு தைரியம் சொன்னேன். நீ படி. நான் வேலைக்கு செல்கிறேன். நீ படித்து முடித்தவுடன் நீ வேலைக்கு போ எல்லாம் சரியாகிவிடும் என்றேன். சங்கர் உன்னை எப்படி நான் வேலைக்கு அனுப்புவது என்று கேட்டான். வேறுவழியில்லை என்று அவனுக்கு நிலைமையை புரிய வைத்தேன்.

சங்கரின் நண்பர்கள் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்று உறுதியளித்தனர். கடந்த 11.07.2015 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் என் வீட்டைவிட்டு வெளியேறினேன். சங்கர் எனக்காக காத்திருந்தான். நாங்கள் இருவரும் சங்கரின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றோம். ஒரு நாள் மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டோம். அவர்களும் அனுமதித்தனர்.

மறுநாள் 12.07.2015 அன்று காலை 6.30 மணியளவில் பழனி பாதவிநாயகர் கோவிலில் நானும் சங்கரும் திருமணம் செய்து கொண்டோம். சங்கரின் நண்பர்கள் 20 பேர் வந்திருந்தனர்.

என் அப்பா சின்னசாமி, பழனி காவல்நிலையத்தில் சங்கர் என்னை கடத்திச் சென்றதாக புகார் கொடுத்திருந்தார். இந்த விபரம் எங்களுக்கு தெரிய வந்தது. நானும் சங்கரும் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு காலை 9.00 மணியளவில் சென்றிருந்தோம். எங்களோடு சங்கரின் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் என் குடும்பத்தினரால் எனக்கும் என் கணவர் சங்கருக்கும் ஆபத்து இருக்கிறது என்று புகார் தெரிவித்தேன். போலீசார் சங்கரின் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் அலைபேசி மூலமாக தகவல் சொன்னார்கள். சங்கரின் அப்பா, உறவினர்கள் என்று அவனது தரப்பில் 20 பேர் வந்திருந்தனர். அதேபோன்று என் குடும்பத்தைச் சேர்ந்த என் அப்பா, அம்மா, என் பாட்டி கோதையம்மாள், என் அத்தைகள் வனிதா, உமா என்று சுமார் 15 பேர் வந்திருந்தனர். போலீசார் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த காவல் ஆய்வாளர் என்னைப் பார்த்து, உன் குடும்பத்தினரை விட்டு இப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்திருப்பது நியாயமா? ஆசை 60 நாள், மோகம் 30 நாள். நீ வசதியுடன் வாழ்ந்த பெண். நீ கல்யாணம் செய்திருக்கிற அந்த பையன் வசதியில்லாதன். எப்படி வாழ்வாய் என்று கேட்டார். அதற்கு நான், நாங்கள் இருவரும் உறுதியுடன் இருக்கிறோம். எந்தவிதமான சிரமம் இருந்தாலும் வாழ்க்கை நன்றாக வாழ்வோம் என்று கூறினேன். என் அப்பா கோபமாக என் மகள் செத்துவிட்டாள். இனி அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லை என்றார். என் அத்தை என்னிடத்தில், உனக்கு நம்ம சாதியில பையன் வேண்டாம் என்றுதானே கீழ்சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்ட. நாங்க உனக்கு போட்டிருக்கிற நகையெல்லாம் கழட்டிக் கொடு என்றார். நான் என்னுடைய செயின், வளையல், கொலுசு, புடவை, செருப்பு என்று அனைத்தையும் கழட்டிக் கொடுத்தேன். என் கணவர் சங்கர் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து கொண்டேன். காவல்நிலையத்தில் ஒரு அறையில் என் குடும்பத்தினர் வாங்கிக் கொடுத்த உடைமைகளை கழட்டும் போது சாதி எந்த அளவிற்கு நம்மை அவமானப்படுத்துகிறது என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.

நான் உறுதியாக இருந்ததனால் வேறு வழியில்லாமல் போலீசார் என் தந்தையிடம் இனிமேல் கௌசல்யாவிற்கும் சங்கருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். அவர்களது வாழ்க்கையில் குறுக்கீடு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கினார்கள். நான் என் கணவர் சங்கரோடு வீட்டிற்கு வந்தேன். சங்கரின் அப்பா எனக்கும் அப்பா. சங்கரின் தம்பிகள் எனக்கும் தம்பிகள் என்கிற உணர்வுதான் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது இருந்தது. அது இன்றுவரை இருக்கிறது.

பழனி காவல்நிலையத்தில் சங்கர் என்னை கடத்தியதாக என் அப்பா ஒரு புகார் கொடுத்திருந்தாரல்லவா, அந்த புகாரின் விசாரணைக்காக பழனி நீதிமன்றத்திற்கு 13.07.2015 அன்று நானும் சங்கரும் சென்றிருந்தோம். மாலை 4.30 மணியிருக்கும் நீதிமன்றத்தில் என் அப்பா, என் அம்மா, என் அத்தைகள் வனிதா, உமா, அப்பாவின் அம்மா அம்சவேணி, அப்பாவின் நண்பர் காளிதாஸ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அங்கு நின்றிருந்த போலீசாரிடம் என் குடும்பத்தினர் 5 நிமிடம் கௌசல்யாவிடம் பேசலாமா? என்று கூற, போலீசாரும் பேசுங்கள் என்று கூறினர். என் குடும்பத்தினர் எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு பள்ளப்பயல் கட்டிய தாலியை கழுத்தில் கட்டியிருக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? மரியாதையாக எங்களோடு வந்துவிடு. இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று பேசினார்கள். நான் அமைதியாக திரும்பிக் கொண்டேன். ஆத்திரமடைந்த என் பாட்டிகளும், என் அத்தைகளும் என் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்திலும், மார்பிலும், முதுகிலும் தாக்கத் தொடங்கினார்கள். நான் நிலை தடுமாறு கீழே விழுந்தேன். சங்கர் பதட்டத்துடன் என் அருகில் வந்து என்னை காப்பாற்ற முயன்றான். போலீசாரும் உடனடியாக வந்து என்னை மீட்டனர்.

நீதிமன்றத்தில் என் கணவரோடு செல்ல தான் எனக்கு விருப்பம் என்று கூறினேன். நீதிபதியும் நீங்கள் உங்கள் கணவரோடு வாழலாம் என்று கூறிவிட்டு என் அப்பா கொடுத்திருந்த புகாரினை தள்ளுபடி செய்தார்.

என் குடும்பத்தினர் மோசமான சாதி வெறியோடு இருப்பதனால் நானும் சங்கரும் பயந்திருந்தோம். நீதிமன்றத்திற்கு சென்று வீட்டிற்கு வந்த நாங்கள் எங்கள் வீட்டில் படுக்காமல் சங்கரின் உறவினர்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குவோம்.

சில நாட்கள் கடந்து என் தாத்தா ஜெயராமன் என்னை பார்க்க வந்தார். எப்படிமா இருக்கிறாய்? கவலைப்படாதே உன் அப்பன், ஆத்தாவுடைய கோபம் கொஞ்ச நாட்களில் போய்விடும் என்று கூறினார். பாசத்துடன் பேசினார். ஒரு நாள் முழுவதும் இருந்துவிட்டு சென்ற என் தாத்தா மறுநாள் கொஞ்சம் கறி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். மது அருந்தியிருந்தார். தாத்தாவிற்கு உன் கையால சமைச்சு கொடு என்று கூறிவிட்டு திண்ணையில் படுத்துவிட்டார். நானும் சமைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பினேன். போதையில் இருந்த என் தாத்தா, நீ எங்கள் குலசாமி என்றெல்லாம் பேசி கண் கலங்கினார். ஆனால் கடுமையான போதையில் இருந்ததனால் அவரால் சாப்பிட முடியவில்லை. நானே அவருக்கு ஊட்டிவிட்டேன். அவர் கொண்டு வந்திருந்த ஸ்கூட்டி வாகனத்தை எங்கள் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் 23.07.2015 அன்று காலை 11.30 மணியிருக்கும் என் தாத்தா மறுபடியும் வந்தார். என்னிடம் எனக்கு உடம்பு சரியில்லை மடத்துக்குளத்திலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நீயும் என்னுடன் வா என்றார். நான் அவரிடத்தில், நீங்களே போய் வாருங்கள் தாத்தா, எனக்கு வேலை இருக்கு என்றேன். தாத்தாவை சந்தேகப்படுகிறாயா? என்று உரிமையுடன் கோபிக்க வேறு வழியில்லாமல் நானும் சங்கரின் அக்கா முறையான மாரியம்மாள் என்பவரும் என் தாத்தாவோடு அந்த ஸ்கூட்டியின் பின் அமர்ந்து சென்றோம். மடத்துக்குளத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் என் தாத்தா சிகிச்சைக்காக உள்ளே சென்றார். வெளியே வருகிற போது என் தாத்தாவின் நண்பர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நலம் விசாரித்த தாத்தா இது என் நண்பர். அவர் வீட்டிற்கு நம்மை அழைக்கிறார் என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து நீ என் ஸ்கூட்டியில் உட்காரு. மாரியம்மாள் என் நண்பரின் வண்டியில் உட்காரட்டும் என்று கூறினார். அதே போன்று நானும் மாரியம்மாளும் இரண்டு சக்கர வாகனங்களில் ஏறி அமர்ந்தோம். ஒன்றாக சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென்று ஒரு சாலையில் திரும்பி என் தாத்தா வேகமாக ஸ்கூட்டியை ஓட்டினார். எங்கு தாத்தா அழைத்துச் செல்கிறாய்? என்று கேட்டுக் கொண்டே வந்தேன். ஒரு காட்டுப்பகுதி போன்று இருந்தது. அங்கு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் என் அப்பா, அம்மா, என் அப்பாவின் இரண்டு நண்பர்களும் இருந்தனர். அதை கவனித்த நான் ஸ்கூட்டியில் இருந்து கீழே குதித்து ஓட தொடங்கினேன்.

என் அப்பாவும் அவர் நண்பர்களும் என்னை விரட்டி பிடித்து காரில் ஏற்றினார்கள். கார் எங்கெங்கோ சென்றது. பிற்பகல் 3.00 மணியளவில் ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒரு சாமியார் இருந்தார். அவர் மந்திரித்து ஒரு மருந்தினை கொடுத்தார். அதை சாப்பிடச் சொல்லி என் அப்பாவும் அம்மாவும் தாக்கினார்கள். நான் சாப்பிட மறுத்தேன். அந்த சாமியார் என் அப்பா, அம்மாவிடம் உங்கள் மகளுக்கு மருந்து வைத்திருக்கிறார்கள். அதை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதன்பிறகு என்னை அந்த காரில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லில் உள்ள என் சித்தி ரேவதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் அப்பாவும் அம்மாவும் சித்தியும் பள்ளப்பயல கல்யாணம் பண்ணிக் கொண்டு இப்படி நிற்கிறாயே? தேவிடியா என்றெல்லாம் என்னை இழிவாகப் பேசினார்கள். நான் அணிந்திருந்த தாலி, மெட்டி, உடைகள் எல்லாவற்றையும் கழட்டச் சொல்லி அனைத்தையும் தீ வைத்து எரித்தார்கள். நான் மறுத்ததற்கு என் சித்தி என்னை கடுமையாக தாக்கினார். அன்று இரவு என் சித்தி வீட்டில் தங்க வைக்கப்பட்டேன்.

மறுநாள் 24.07.2015 அன்று திண்டுக்கல்லில் உள்ள கேரளா பெண் சாமியார் வீட்டிற்கு என்னை என் அப்பா, அம்மா, என் தாய் மாமா பாண்டித்துரை ஆகியோர் அழைத்துச் சென்றனர். எங்களோடு என் மாமா பாண்டித்துரையின் மனைவி சுமதி, என் சின்ன தாய்மாமா விஜய் (லேட்) அவர்களின் மனைவி சித்ரா, மாமாவின் இரண்டு பசங்க ஆகியோரும் வந்திருந்தனர். அன்று 9.30 மணியளவில் ஏதேதோ பொருட்களை வைத்து அந்த பெண் சாமியார் பூஜை செய்தார்.

கொஞ்ச நேரம் கடந்து நடந்த சம்பவத்தை எல்லாம் என் அப்பா, அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று இரவு 12.00 மணியிருக்கும் அந்த பெண் சாமியாருக்கு சாமி வந்தது. இன்னும் ஒரு நாள் உங்கள் மகள் சங்கர் வீட்டில் இருந்திருந்தால் உங்கள் மகளை உயிருடன் பார்த்திருக்க முடியாது என்று கூறினார். என் உறவினர்கள் எல்லோரும் சாமிதான் என் மகளை காப்பாற்றிவிட்டது என்று கூறினார்கள். அந்த கேரள சாமியார் என் கால் கட்டைவிரலில் ஒரு நூலை கட்டிவிட்டார். அந்த வீட்டின் ஒரு அறையில் என்னை படுக்க வைத்தார்கள். சிறிது நேரம் கடந்து என்னுடன் அந்த பெண் சாமியார் அருகில் படுத்துக் கொண்டார்.

என்னிடம் அந்த பெண் சாமியார், நீ நல்ல பெண். உன்னை அந்த பையன் திட்டம் போட்டு ஏமாற்றிவிட்டான். நீயும் சங்கரும் கணவன், மனைவி போன்று இருக்கிறீர்களா? நான் கேட்பது உனக்கு புரிகிறதா? என்றார். நான் அதற்கு ஆமாம் நானும் சங்கரும் கணவன், மனைவி. ஏன் கணவன், மனைவி போன்று இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். தயவுசெய்து நான் கடத்தப்பட்ட தகவலை என் கணவர் சங்கருக்கு தெரியப்படுத்த உதவி செய்யுங்கள் என்றேன். அந்த பெண் சாமியார் அப்படி எல்லாம் என்னால் செய்ய முடியாது. உன் குடும்பத்தினர் என்னை கொன்றே விடுவார்கள் என்றார்.

மறுநாள் 25.07.2015 அன்று என் குடும்பத்தினரிடம் அந்த பெண் சாமியார் நான் அவரிடத்தில் சொன்ன தகவலை எல்லாம் கூறிவிட்டார். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் கிறுக்கு பிடித்தது என்று தான் சொல்வேன். திடீரென்று அந்த பெண் சாமியாரிடம், ஒரு இடத்திற்கு சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு ஒரு கிராமத்திற்கு சென்றனர். அங்கிருந்த சாமியார் உங்கள் மகளுக்கு மை வைத்துள்ளனர். நான் எடுக்கிறேன் என்று எதோ மந்திரம் போட்டார். பாப்பாளி பழத்தில் உள்ள விதைகள் போன்று எங்கிருந்தோ வந்து கீழே விழுந்தது. பார்த்தீர்களா மருந்தை எடுத்துவிட்டேன் என்று அந்த சாமியார் கூறினார்.

மாலை 3.00 மணிக்கு மறுபடியும் என்னை அந்த கேரள பெண் சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த பெண் சாமியார் தனியாக என்னிடத்தில் எங்கே சென்றீர்கள்? என்று கேட்க, ஏதோ ஒரு சாமியாரிடத்தில் என்னை அழைத்துச் சென்றனர் என்று கூறினேன். அந்த பெண் சாமியார் என்னிடம், உங்கள் அப்பா, அம்மாவிற்கு என் மீது நம்பிக்கையில்லையா? என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். அந்த பெண் சாமியார் என்ன நினைத்தாரோ, திடீரென்று உன் கணவனின் போன் நம்பர் கொடு என்று வாங்கிக்கொண்டு சங்கருக்கு போன் செய்து உன் மனைவி கௌசல்யா பாதுகாப்பாக இருக்கிறாள் என்று விபரத்தை சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

கேரள பெண் சாமியார் என் குடும்பத்தினரிடம் பட்டும் படாமல் பேசினார். இதனால் என் குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னை அழைத்துக் கொண்டு என் சித்தி வீட்டிற்கே வந்தனர். அங்கு என் அப்பாவும் என் அத்தை சித்ராவும் என்னை அடித்தனர்.

இரவு முழுவதும் என் உறவினர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தூங்காமல் என்னை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். விடிந்தது. வருசநாட்டில் ஒரு சாமியார் இருக்கிறார். அங்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேசி முடிவெடுத்தனர். அதனடிப்படையில் 26.07.2015 அன்று என்னை வருசநாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த சாமியார் ஒரு தாயத்து மாதிரி ஒன்றை கொடுத்தார். இதை வேப்பமரத்தில் கட்ட வேண்டுமென்று என் அப்பாவிடம் கூறினார். இன்னொரு சாமியார் மை போன்ற ஒரு கடினமான திரவத்தை என் நெற்றியில் பூசிவிட்டார். சிறிது நேரத்தில் அதை நான் அழித்துவிட்டேன். உனக்கு அந்த பள்ளப்பய உறவுதான் கேக்குதோ? நாங்களெல்லாம் உனக்கு வேண்டாமா? ஒரு கள்ளச்சி வயிற்றில ஒரு பள்ளப்பய குழந்தை வளர்ந்தா அவமானம் என்பது உனக்கு தெரியவில்லையா? உன்னை பெற்று வளர்த்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று என் அப்பா என்னை இழிவாகப்பேசினார். என்னை வருசநாட்டில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

வருசநாட்டில் இருக்கும் போது என் அப்பாவுக்கு மடத்துக்குளம் காவல்நிலையத்திலிருந்து ரமேஷ் என்கிற காவலர் பேசினார். என் அப்பா லவ்டு ஸ்பீக்கரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த காவலர் ரமேஷ், உங்க மகளை இழுத்துக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுன அந்த பையனும் அவன் அப்பனும் புகார் கொடுத்திருக்காங்க. நிலைமை சீரியசாக இருக்கு உங்க பொண்ண அழைத்துக் கொண்டு வாங்க. ஆனாலும் நீங்க நினைச்சது நடக்கும், இன்ஸ்பெக்டருக்கு இருபதாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வாங்க, உங்க பொண்ணை நல்லா பிரைன் வாஸ் பண்ணி அழைத்துக் கொண்டு வாங்க, அந்த பையனோடு போக விருப்பம் இல்ல. என் அப்பா அம்மாவோடு போகத்தான் விருப்பம் என்று உங்கள் மகள் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

அன்றிரவு 11.00 மணியளவில் என்னை திருப்பூரில் உள்ள என் பெரியப்பா மோகன் வீட்டிற்கு என் அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் அழைத்துச் சென்றனர். அங்கு நான் தங்க வைக்கப்பட்டிருந்தேன். காலை 8.00 மணியிருக்கும் (27.07.2015) வழக்கறிஞர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் என்னை தனியாக அழைத்து உன் முடிவு என்னம்மா? என்று கேட்டார். நான் என் கணவர் சங்கரோடு செல்லத்தான் விருப்பம் என்றேன். இது உன் வாழ்க்கை பிரச்சனை, யோசித்து முடிவு சொல் என்றார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. நான் என் சங்கரோடு தான் வாழ்வேன் என்றேன். அப்படியா என்று கூறிவிட்டு அந்த வழக்கறிஞர் என் அப்பாவை தனியாக அழைத்து ஏதோ பேசினார்.

என் பெரியப்பா மோகன் வீட்டிலிருந்து வேறொரு உறவினர் வீட்டிற்கு பிற்பகல் 12.30 மணியளவில் அழைத்துச் சென்றனர். என் அப்பாவும் என் அம்மாவும் என் தாத்தா ஜெயராமன், என் அப்பாவின் நண்பர்கள் எல்லோரும் உன் முடிவுதான் என்ன? எங்களோடு வரமாட்டாயா? என்று கேட்டனர். தயவுசெய்து என்னை சங்கரோடு வாழ விடுங்கள் என்று கெஞ்சி அழுதேன். என் அப்பாவும் என் அம்மாவும் உனக்கு விஷம் கொடுக்கிறோம். மரியாதையாக குடித்து செத்துப்போ என்று மிரட்டினார்கள். நான் அமைதியாக இருந்தேன். என் அப்பாவிற்கு தொடர்ந்து காவல்நிலையத்திலிருந்தும் வழக்கறிஞரிடம் இருந்தும் போன் வந்து கொண்டிருந்தது. தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் கடந்ததும் என் அப்பா என்னிடத்தில், நீ அந்த கீழ்சாதி நாயோடு வாழ்ந்து எப்படியாவது செத்துப்போ, நாங்கள் உன்னை தலைமுழுகிவிட்டோம். வழக்கறிஞர் வருவார் உன்னை அழைத்துச் செல்வார் என்று கூறினார்.

மாலை 5.45 மணியளவில் என்னை மடத்துக்குளம் காவல்நிலையத்திற்கு வழக்கறிஞர், அவரது நண்பர், என் தாத்தா ஆகியோர் அழைத்து வந்தனர். வருகின்ற போது வழக்கறிஞர் என்னிடத்தில், உன்னை யாராவது கடத்தினார்களா? என்று போலீசார் கேட்பார்கள். யாரும் என்னை கடத்தவில்லை. தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை அதனால் சென்றேன் என்று கூற வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு சங்கரோடு வாழ வேண்டுமே தவிர யாரையும் பழிவாங்க வேண்டுமென்பது என் நோக்கமல்ல. நீங்கள் சொல்வது போன்றே சொல்கிறேன் என்றேன். அதே போன்று காவல்நிலையத்தில் கூறினேன். என்னை சங்கரோடு போலீசார் அனுப்பி வைத்தனர்.

என் தாத்தா ஜெயராமன் என்னை கடத்தியலிருந்து சங்கரும் அவனது அப்பாவும் கொமரலிங்கம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். நான் கடத்தப்பட்டு தங்க வைக்கப்பட்ட 5 நாட்களில் சங்கர் பல இடங்களில் என்னை மீட்க முயற்சி செய்திருக்கிறான். போலீசார் என்னை சங்கரிடத்தில் ஒப்படைக்கும்போது அவனது முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி இருந்தது.

சங்கர் சில மாதங்களில் வேலைக்கு சென்றுவிடுவான் அதுவரை குடும்பத்தை நடத்த வேண்டுமே என்ன செய்வது என்று முடிவெடுத்து ஒரு மில்லில் வேலை கேட்டேன். அங்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு டைல்ஸ் கம்பெனியில் கணக்கு வேலை கிடைத்தது.

சில நாட்கள் கடந்து என் பாட்டி கோதையம்மாள் என்னை சந்திக்க வந்தார். எனக்கும் சங்கருக்கும் ஒன்றும் புரியவில்லை. எங்கள் இருவரிடமும் என் பாட்டி அன்புடன் பேசினார். அதில் ஏதும் சூழ்ச்சி இருக்காது என்று நானும் சங்கரும் நம்பினோம். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பல நாட்கள் தொடர்ந்து என் பாட்டி வரத் தொடங்கினார். என்னையும் சங்கரையும் அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு செல்வார். அங்கு தேனீர் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். போகின்ற போது எனக்கு ரூ.200 அல்லது ரூ.500 என்று செலவுக்கு கொடுப்பார். நான் வந்து போவது உன் அப்பா, அம்மாவுக்கு தெரியாது என்பார். பாட்டியை நானும் சங்கரும் நம்பினோம்.

உடுமலைப்பேட்டைக்கு கடந்த ஜனவரி மாதம் 2016ல் பொருள் வாங்குவதற்காக நானும் சங்கரும் சென்றோம். எங்களுடன் பாட்டியும் வந்தார். கவிதா சீனிவாசன் என்கிற மருத்துவமனை அருகே நாங்கள் மூவரும் நடந்து சென்றபோது, ஒரு ஸ்கார்பியோ கார் எங்கள் முன்பு வந்து நின்றது. அதில் என் அப்பா, அம்மா, அத்தை உமா உள்ளிட்ட சிலர் இருந்தனர். நான் உடனே சங்கரிடத்தில், டேய் ஓடுடா நம்மை பிடிக்கத்தான் வருகிறார்கள் என்று கூறினேன். நாங்கள் இருவரும் ஓடத் தொடங்கினோம். என் அப்பாவும் அவருடன் வந்தவர்களும் எங்களை விரட்டி வந்தனர். என்னை பிடித்து காரில் கடத்த முயன்றபோது நான் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன். பொது மக்களும் அங்கு கூடிவிட்டனர். போலீஸ் வந்தார்கள். என்னையும் சங்கரையும் மீட்டுக் கொண்டு உடலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்றார்கள். இதற்கிடையில் என் அப்பா, என் அம்மா உள்ளிட்ட என் உறவினர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். என் பாட்டி கோதையம்மாள் தான் திட்டம்போட்டு என் குடும்பத்தினரை வரவைத்து எங்களை கடத்த முயற்சி செய்தனர் என்பது தெரிய வந்தது. அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் எங்களிடத்தில், உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்க முடியாது. இந்த பகுதியை விட்டு எங்காவது சென்று குடியிருங்கள் என்று அறிவுத்தினார்கள்.

இந்த சம்பவம் நடந்து 2 மாதம் கடந்து மார்ச் 2016 முதல் வாரத்தில் என் அப்பா, என் அம்மா, பாட்டி, உறவினர்கள் என்று சிலர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். மரியாதையாக நீ எங்களோடு வரவேண்டுமென்று என்னை மிரட்டினர். இது என் கணவர் வீடு இங்குதான் நான் வாழ்வேன் என்று கூற, சங்கரின் அப்பாவிடம், 10 இலட்சம் தருகிறேன் என் மகளை அனுப்பி வையுங்கள் என்று என் அப்பா கூறினார். அதற்கு சங்கரின் அப்பா, பெற்ற மகளுக்கு யாராவது விலை பேசுவார்களா? என்று கேட்டார். சந்தையில் பேரம் பேசுவது போன்று என் அப்பா நடந்து கொண்ட விதம் என்னை பாதித்தது. என் அப்பாவிடம் 10 கோடி கொடுத்தாலும் என் புருசனை விட்டு வரமாட்டேன் என்றேன். நம்ம உறவினர்கள் எல்லோரும் உன் மீது கோபமாக இருக்கிறார்கள். உன்னையும் உன் புருசனையும் கொல்லுவார்கள். அதனால் சொல்கிறேன் மரியாதையாக எங்களோடு வந்துவிடு என்றார். நானும் சங்கரும் உறுதியாக இருந்ததனால் என் குடும்பத்தினர் எங்களை சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினர்.

சம்பவம் நடந்த 13.03.2016 அன்று காலை 8.00 மணிக்கு சங்கர் என்னிடத்தில் நாளை கல்லூரி ஆண்டு விழா எனக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடு பாப்பா என்றான். கண்டிப்பாக எடுத்துக் கொடுக்கிறேன். சட்டை எடுக்க உடுமலைப்பேட்டை போகலாம் என்றேன். சங்கர் வெளியே சென்று முடி வெட்டிவிட்டு வந்தான்.

பிற்பகல் 1.00 மணியளவில் நானும் சங்கரும் வீட்டிலிருந்து புறப்பட்டோம். உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருவரும் வந்திறங்கினோம். துணிக்கடைக்கு சென்று சங்கருக்கு ஒரு சட்டை வாங்கிக் கொடுத்தேன். கடையை விட்டு வெளியே வரும்போது கடை பொம்மையில் அணிவிக்கப்பட்டிருந்த சட்டை அழகாக இருந்தது. நான் சங்கரிடம் நான் எடுத்த சட்டையைவிட இந்த சட்டை அழகாக இருக்கிறது, மாற்றிவிட்டு வரலாம் என்று கூறினேன். அதேபோன்று நாங்கள் எடுத்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டையை வாங்கி வெளியே வந்தோம். அங்கிருந்த கூழ் கடையில் இருவரும் கூழ் குடித்தோம். நான் சங்கரிடத்தில் கையில் ரூ.60 மட்டும்தான் இருக்கிறது, பார்த்து செலவு செய்ய வேண்டும். இந்த மாதத்தை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்றேன். சங்கர் சிரித்துக் கொண்டே கவலைப்படாதே பாப்பா சிக்கனமாக இருக்கலாம். நான் இன்று சப்பாத்தி மாவு வாங்கி உனக்கு சப்பாத்தி சுட்டுக் கொடுக்கிறேன் என்று கூறினான். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தோம்.

பிற்பகல் சுமார் 2.00 மணி இருக்கும். திடீரென்று 5 பேர் கொண்ட கும்பல் என்னையும் சங்கரையும் சுற்றி வளைத்து கீழே தள்ளியது. அரிவாளால் சங்கரை வெட்டியது. என்னையும் அந்த கும்பல் வெட்டியது. லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவிடியா மகனே என்று கூறிக் கொண்டே சங்கரை அந்த கும்பல் வெட்டியது.

சங்கர் இறந்து போய்விட்டான். படுகாயத்தோடு சிகிச்சை பெற்று நடைபிணமாக உட்கார்ந்திருக்கிறேன். சங்கரின் இறப்புக்கு அவனது நண்பர்கள் எவரும் வரவில்லை. சங்கரையும் என்னையும் அந்த கும்பல் வெட்டியதை சிசிடிவி கேமரா மூலம் இந்த உலகமே பார்த்தது. என்னையும் சங்கரையும் கொல்ல என் தாத்தாவையும் பாட்டியையும் என் குடும்பம் பயன்படுத்தியதை நினைத்து நடுங்கிப்போய் நிற்கிறேன்.

என் அப்பாவும் என் குடும்பத்தினரும் என் மீது வைத்திருந்தது பாசம் என்று நம்பினேன். அது சாதிக்கான பாசம் என்று தெரிகிறது. கூலிப்படையை வைத்து மகளையும் மருமகனையும் கொல்லும் குடும்பத்தை குடும்பம் என்று சொல்ல முடியுமா? எனக்கு அரசு கல்வி கொடுக்க வேண்டும், வேலை கொடுக்க வேண்டும், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்கின்றனர். அவர்களது அன்பிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இவையெல்லாம் எனக்கு கிடைக்கலாம். அது மறுவாழ்வுதான். ஆனால் வாழ்வை இழக்கச் செய்த சாதியை என்ன செய்வது? சங்கர் அவனது தலைமுறையின் முதல் இன்ஜினியர். அவனுக்கென்று சில கனவுகள் இருந்தது. அதையும் இந்த சாதி பறித்துக் கொண்டது. நீதி கிடைக்கும். சாதி ஒழியுமா? என்கிற கேள்வியை எழுப்பிய கௌசல்யாவுக்கு என்ன பதில் சொல்வது?

- எவிடன்ஸ் கதிர் Evidence Kathir

மனிதன் - திரையில்தான் சாத்தியமென்பது துயரம்




மே தினத்தன்று காலைக்காட்சியில் பார்த்த படம் மனிதன்.

இன்று மாலைக்காட்சி பார்க்கலாம் வா என்று மகன் கூப்பிட, மே தினக் கொடியேற்றம், பேரணி, பொதுக் கூட்டம் எல்லாம் உள்ளது. ஆகவே முடியாதென்று மறுக்க, கட்சி வேலை, சங்க வேலை இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிற போது என்னோடு மட்டும் வர முடியாதா என்று கோபமாக அவன் கேட்க, எந்த பதிலுமே சொல்ல முடியாமல் சமரச ஏற்பாடாக காலைக் காட்சி சென்றோம்.

பிளாட்பார்மில் படுத்திருந்த ஏழைகள் மீது குடி போதையில் கார் ஏற்றிக் கொன்ற சல்மான் கான் வழக்குதான் கதை.

நீதி எப்படி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது என்பதையும் அரசு, காவல்துறை, வக்கீல்கள், நீதிபதிகள் ஆகியோர் பணம் படைத்தவர்கள் சார்பாகவே உள்ளனர் என்பதையும் அம்பலப்படுத்துகிற படம்.

ஒரு முறை தாராளமாக பார்க்கலாம். ஆபாசக் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ, தேவையற்ற வன்முறைக்காட்சிகளோ இல்லாத படம் என்பது பாராட்டுக்குரியது. நிச்சயமாக முகம் சுளிக்காமல் குடும்பத்துடன் பார்க்கலாம் என்பதே இன்றைய நாளில் பெரிய விஷயம்.

பிரகாஷ் ராஜூம் ராதா ரவியுமே படத்தின் மிகப் பெரிய பலம். ஆணவம் மிகுந்த பெரிய வழக்கறிஞராக நமக்கு கோபம் ஏற்படுத்தும்படி நடித்திருப்பதே அவருக்கு மிகப் பெரிய வெற்றி. பெரிய வழக்கறிஞர்கள் வந்தால் நீதிபதிகள் எப்படியெல்லாம் வளைந்து கொடுப்பார்கள் என்பதை தன் நடிப்பில் சித்தரிக்கிற ராதாரவி, கடைசிக் காட்சிகளில் நமது மனம் கவர்கிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும். அவரால் முடிந்தவரை நடித்துள்ளார். அவர் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்?

அடுத்து என்ன நடக்கும் என்று பெரும்பாலான காட்சிகளில் யூகிக்க முடிந்தாலும் இரண்டு ட்விஸ்டுகள் எதிர்பாராதவை.

உதயநிதி ஸ்டாலினின் காவலுக்காக வருகிற சிரிப்பு போலீஸ், ஒரு கட்டத்தில் வெகுண்டெழுவதும், இறுதிக் காட்சியில் வரும் சாட்சியும் எதிர்பாராதவை.

இன்னொரு காரை துரத்திக் கொண்டு போகையில்தான் விபத்து ஏற்படும். அந்த காரை அத்தோடு இயக்குனர் மறந்து விட்டார் போல. அந்த காரை ஓட்டிய இன்னொரு பணக்கார வாலிபன் கடைசியில் சாட்சி சொல்ல வரலாம் என்று இடைவேளையில் நானும் என் மகனும் பேசிக் கொண்டோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரகாஷ்ராஜ் பெரிய அப்பாடக்கர் வக்கீலாக இருந்தாலும் பெரு முதலாளிகள், அவரையும் தங்களின் கூலியாட்களில் ஒருவராகவே நடத்துவார்கள் என்றும் கோர்ட்டில் வீரம் காண்பித்தாலும் செல்வந்தர்களிடம் அவரும் பம்மித்தான் ஆக வேண்டும் என்பது யதார்த்தம்.

2 ஜி வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றில் ஆஜராகிற வக்கீல்கள், கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் எப்படி மாட்டிக் கொண்டு முழிப்பார்கள் என்பதையும் யூகிக்க முடிகிறது.

“பிளாட்பார்ம் ஒன்றும் படுக்கையறையல்ல” என்ற பிரகாஷ்ராஜ் வசனம் தெனாவெட்டானது. ஆனால் சல்மான் கானுக்காக பாலிவுட் நடிகை ஒருவர் இதைத்தான் சொன்னார் என்பதை அந்த வசனம் நினைவு படுத்தியது.

சல்மான் கான் சுதந்திரப் பறவையாக வெளியே சுற்றிக் கொண்டிருக்க, காரேற்றிக் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி, திரைப்படத்தில் மட்டுமே கிடைத்துள்ளது என்பது துயரமான யதார்த்தம்.



Tuesday, May 3, 2016

மலாலாவிற்கு அருகதை இல்லைதான் டுபாக்கூர் சாமியாரே




பெண்களுக்கு கல்வி வேண்டும் என்று குரல் கொடுத்ததனால் தாலிபன் தீவிரவாதிகளிடம் குண்டடி பட்டு, இன்னும் அக்குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டிருக்கும் மலாலாவிற்கு நோபல் அமைதிப் பரிசு பெறுவதற்கான அருகதை கிடையாது என்று இந்தியாவின் கார்ப்பரேட் டுபாக்கூர் சாமியார் சீசீசீ ரவிசங்கர் சொல்லியுள்ளார்.

ஆமாம் அருகதை கிடையாதுதான் சாமியாரே!

அந்தப் பெண் என்ன உங்களைப் போல கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏசி ரூமில் வெண்ணெய் ஒழுக பேசி வசியம் செய்கிறாளா என்ன?

இல்லை முதலாளித்துவ நாடுகள் மத்தியிலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும் தரகு வேலை செய்கிறாளா?

இல்லை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக் கொண்டுள்ள பெண்ணா அவள்?

கலாச்சார இழவு என்ற பெயரில் யமுனையை நாசம் செய்தாளா?

ராணுவத்தையே எடுபிடியாக மாற்றினாளா?

மோடி உள்ளிட்ட அரசியல் தலைகள் அவளது கைப்பிடிக்குள் உள்ளதா என்ன?

உங்களைப் போலவே பிற்போக்குத்தனமான, உங்களது பங்காளி தாலிபனுக்கு எதிராக குரல் கொடுத்த பெண்ணிற்கு எதற்கு நோபல் பரிசு? 

நியாயம்தான் சாமியாரே!

பெண்களுக்கு கல்வி எல்லாம் எதற்கு? பெண்கள் படித்து விட்டால் உங்களைப் போன்ற போலிச்சாமியார்களின் காம லீலைகளுக்கு பலியாக ஆட்கள் கிடைப்பது கஷ்டமல்லவா?

அது சரி,

எனக்கும் நோபல் பரிசு கிடைத்தது, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். விருதுகள் முக்கியமல்ல. நம் சேவைதான் முக்கியம்னு கதை விட்டுள்ளீர். அதைக்கேட்கையில் வேலாயுதம் படத்து பஜன்லால் சேட்தான் நினைவுக்கு வந்தார். இப்படித்தான் எங்களூரிலும் ஜெயமோகன் என்ற காவிக்கூட்ட எழுத்தாளரும்  சாகித்ய அகாடமி விருது வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று ஒவ்வொரு வருடமும் சொல்வார். 

கீழே உள்ள படத்தைப் பாரும். 



பத்ம விபூஷன் விருதை வாங்குவது நீர்தானே?

விருது அவசியமில்லை என்று வியாக்யானம் பேசும் நீர், என்ன எழவிற்கு இந்த விருதை வாங்குகிறீர்?
 

 

அரசுப் பள்ளியில் சேர அடிதடி - நிஜம்தான்

 வாட்ஸப்பில் வந்த செய்தி. பாராட்டுக்களை பதிவு செய்கிறேன். 


 
எங்காவது அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்திருக்கிறதா? மதுரை மாவட்டம் யா.ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.

மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளியான இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஏக தள்ளுமுள்ளு ஆகிப் போனதால், வரிசையில் நிற்க வைத்து, டோக்கன் கொடுத்து ஒலி பெருக்கியில் பெயர்களை அறிவித்து அட்மிஷன் நடத்தி இருக்கிறார்கள்.

தனியாரிலிருந்து மாறிய மாணவர்கள்

அப்படி என்ன மோகம் இந்தப் பள்ளியின் மீது? “2010-11-ல் நான் இங்கு வந்தபோது பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு மிக மோசமாக இருந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய்தோம். மாணவர்கள் வருகை தானாகவே அதிகரித்தது. எங்கள் பள்ளியைச் சுற்றி 8 தனியார் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளிலிருந்து இந்த முறை 78 மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு மாறி இருக்கிறார்கள்” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன்.

குழந்தைகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் 8 ஆயிரம் சதுர அடியில் 10 லட்ச ரூபாய் செலவில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்திருக்கிறார்கள். கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஆசிரியர்களே பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். பொதுமக்களில் நூறு பேரைப் புரவலர்களாகச் சேர்த்து அவர்களிடம் தலைக்கு 1,000 ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு மின் கட்டணம், துப்புரவுப் பணியாளர் சம்பளம் உள்ளிட்டவற்றைச் சமாளித்துக் கொள்கிறார்கள்.

கணினி ஜாலம்

தனியார் பள்ளிகள் பிரம்மாண்டமாக முன்னிறுத்தும் ஸ்மார்ட் கணினி அறையையும் பொதுமக்களின் பங்களிப்போடு எளிமையாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள ஆறு கணிப்பொறிகளில் மாணவர்கள் தொழில்நுட்ப ஜாலங்கள் காட்டுகிறார்கள். இதற்கு முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, நமக்கு நாமே திட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிதியைக் கொண்டு 30 லட்ச ரூபாய் செலவில் அனைவருக்கும் நாற்காலிகள் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பள்ளி ஆண்டு விழாவை வழக்கமான சம்பிரதாயமாகக் கொண்டாடாமல் திறமைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

கதையின் அருமை

இந்த விழாவில் மாணவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் அத்தனை திறமைகளையும் வெளிக்கொணரக் களம் அமைத்துத் தருகிறார்கள். அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க மார்ச் 22-ம் தேதி கதை சொல்லல் தினமாகக் கொண்டாடினார்கள். அன்று தமிழகத்தின் முக்கியக் கதை சொல்லிகளை வரவழைத்துக் கதை சொல்லும் நிகழ்ச்சி அருமையாக அரங்கேறியது. இப்போது புரிகிறதா அட்மிஷனுக்கு ஏன் அடிதடி என்று?

“சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடுதான் இதை என்னால் சாதிக்க முடிந்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 158 பேரைச் சேர்த்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறது எங்கள் பள்ளி. இங்கிருந்து மேல் படிப்பிற்காக மற்றப் பள்ளிகளுக்குப் போன பிள்ளைகள் அங்கேயும் சாதிக்கிறார்கள். எங்கள் பள்ளிக்குக் கூக்கூ அமைப்பு 5 லட்சம் செலவில் நூலகம் அமைத்துத் தர சம்மதித்திருக்கிறது. அதேபோல் டி.வி.எஸ். நிறுவனத்தின் ஆரோக்கிய டிரஸ்ட் 9 லட்சத்தில் நவீனக் கழிப்பறை கட்டித் தருவதாகச் சொல்லி இருக்கிறது. படிப்படியாக இன்னும் கட்டமைப்பை மேம்படுத்தி இதை மாநிலத்திலேயே முதல் தரமான அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே லட்சியம்” என்கிறார் தென்னவன்.

Monday, May 2, 2016

சென்னை பெங்களூர் சாலையில் பணக் கடத்தல். . .



தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய பின்பு மட்டுமே மூன்று முறை சென்னை சென்று திரும்பினேன். மூன்று முறையுமே காரில்தான் பயணம். 

இந்த மூன்று பயணங்களிலும் எங்குமே பறக்கும் படையோ அல்லது நிற்கும் படையோ எங்குமே சோதனை செய்யவில்லை. அப்படி ஒன்று இருப்பதற்கான அறிகுறி கூட எங்கும் தென் படவில்லை. 

அப்படியென்றால் அதற்கென்ன அர்த்தம்?

பிரதானமான இந்த சாலையில் வேகமாக வாகனங்கள் விரைவதால் பணக் கடத்தல் நடப்பதற்கு சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்து விட்டதா?

அல்லது 

பணப்பறிமாற்றம் அதிகமாக நடக்க வாய்ப்புள்ள ஒரு சாலையில் பறக்கும் படையை நிற்கவைத்து பிரதானக் கழகங்களுக்கு எதற்கு தேவையற்ற ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டும் என்று தவிர்க்கிறதா?

மொத்தத்தில் இந்த பற்க்கும் படை என்பதே ஒரு வெட்டி வேலையாகவே இருக்கிறது.

 

Sunday, May 1, 2016

இறுதியில் தெரியும் வெற்றி யாருக்கென்று?

ஒரு பணக்கார மனிதர் ஒரு உணவு விடுதிக்குள் நுழைகிறார். 

சுற்றி முற்றும் பார்க்கும் அந்த மனிதர் கண்ணிலே, அந்த விடுதியின் ஒரு மூலையில் வேட்டி சட்டை அணிந்த ஒரு எளிய மனிதர் கண்ணில் படுகிறார். அந்த மனிதரை பார்த்ததுமே இவருக்கு எரிச்சல் வந்து விடுகிறது. அந்த மனிதரை வெறுப்பேற்ற நினைத்து 

ஒரு சர்வரைக் கூப்பிட்டு

"இங்கே சாப்பிடும் அனைவருக்கும் ஒரு சிக்கன் பிரியாணி கொடு, அந்த வேட்டி கட்டிய மனிதனைத் தவிர. எல்லாருக்கும் நான் பணம் தருகிறேன்" 

என்று சத்தமாக சொல்கிறார். அப்படியே அந்த வேட்டி மனிதரையும் பார்க்கிறார். அவரது முகத்திலோ ஒரு மலர்ச்சி. அங்கிருந்தபடியே "நன்றி"  என்று சொல்கிறார்.

இவருக்கு எரிச்சல் அதிகமாகிறது.

"அந்தாளத் தவிர எல்லோருக்கும் ஒரு சிக்கன் க்ரேவியும் கொடு" 

என்று அடுத்து சொல்கிறார்.

இப்போதாவது அந்த மனிதர் அவமானத்தில் கூனிக் குறுகிப் போவாரா என்று பார்த்தால் இப்போதும் அதே சிரிப்புதான். 

இவருக்கு கோபம் வந்து விட்டது.

"அந்த வேட்டிக்காரரைத் தவிர எல்லோருக்கும் ஒரு ஐஸ் கிரீம் கொடு " என்று அடுத்த ஆர்டரைச் சொல்லுகிறார்.

வேட்டிக்காரரின் முகத்தில் புறக்கணிப்புக்கான சாயல் கொஞ்சமும் இல்லை. மாறாக மகிழ்ச்சியே தென்படுகிறது. இவரது பக்கத்தில் வந்து கை கொடுத்து நன்றி என்று சொல்கிறார்.

பணக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. சர்வரைக் கூப்பிட்டு பணத்தை கொடுத்தபடியே 

"என்னய்யா, அந்த ஆள் என்ன மெண்டலா? நான் எவ்வளவு அசிங்கப் படுத்தியும் நன்றி சொல்றான்" 

என்று கேட்க

சர்வர் நிதானமாக பதில் சொல்கிறார்.

"இல்லை. அவர்தான் இந்த ஹோட்டல் உரிமையாளர்".


அந்த பணக்காரர் போலத்தான் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தொழிலாளர்களை தாக்குகிறார்கள். வேலைகளைப் பறித்து இழிவு படுத்துகிறார்கள். போராடுகையில் அரசையும் போலீசையும் பயன்படுத்தி சிறை வைக்கிறார்கள். குண்டாந்தடித் தாக்குதலையும் தோட்டாக்களையும் பரிசாக அளிக்கிறார்கள்.  ஆனால் என்றும் ஆணவம் வெல்லாது. இறுதி வெற்றி என்றும் உழைக்கும் மக்களுக்கே.

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்