Wednesday, June 4, 2014

கவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை. ஜெ வாழ்க





கடந்த வாரம் வலைச்சரம் இணையத்தின் ஆசிரியர் பொறுப்பேற்று செயல்பட்ட போது ஒரு நாள் கவிதை என்ற தலைப்பில் பதிவெழுதினேன். அன்று பலரின் கவிதைகளையும் பகிர்ந்து கொண்டேன். அந்த பதிவின் இணைப்பை கீழே தந்துள்ளேன்.

அன்றைய இடுகையை அன்று காலையில் பார்த்த செய்தியோடு கீழ்க்காணும் கவிதையோடு தொடங்கியிருந்தேன்.

இனி மின் வெட்டு இல்லை
என்றோர் தலைப்புச் செய்தி.

ஆதவன் வந்திடாத
முன் காலைப் பொழுதில்

இருளும் புழுக்கமும்
சூழ்ந்த அறையில்

கொட்டும் வியர்வையில்
கண்களைச் சுருக்கி

படித்து முடித்தேன்
அச்செய்தியை.

இப்போது இங்கே
மின் வெட்டு.

ஒரு கவிஞனின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக ஜூன் மாதம் முதல் தேதி முதல் மின் வெட்டு இருக்காது என்று தான் சொன்ன உறுதி மொழியைக் கூட பொருட்படுத்தாமல் முன்னை விட கூடுதலாக மின்சாரத்தை வெட்டி வரும் புரட்சித்தலைவி அம்மா ஜெ வாழ்க வாழ்க.

வலைச்சர இணைப்பு இதோ

பெப்சி, லேஸ், பவண்டோ, கடலை உருண்டை - ஒரு எளிய பாடம்




ஒரு பத்து நிமிடம் முன்பாக பார்த்த ஒரு அற்புதமான காட்சி.
அதை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதால் இரவு
உணவு ஆறிப் போனாலும் பரவாயில்லை என்று எழுதுகிறேன்.

இடம் : ஒரு பெட்டிக்கடை.

தள்ளு வண்டியில் பொரி கடலை விற்கும் ஒரு எளிய வியாபாரி
தனது வியாபாரத்தை முடித்து விட்டு மனைவி மற்றும் இரண்டு
பெண் குழந்தைகளோடு வீடு திரும்புகிறார்.

பெட்டிக்கடை வந்ததும் அப்பா கூல் ட்ரிங்க்ஸ் என்று குழந்தைகள்
கேட்டது. பெப்ஸி என்று வேறு கேட்கிறது. அது வேண்டாம்மா,
உடம்பிற்கு நல்லதில்லை என்று சொல்லி பவண்டோ வாங்கினார்.

அந்த சின்ன பாட்டிலை நான்கு பேரும் பகிர்ந்து குடித்ததே 
அழகான காட்சியாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் குறைவாக
குடித்து குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தார்கள். அந்த ஒரு
பாட்டிலே அந்த குடும்பத்திற்கு நிறைவாக இருந்தது.

அடுத்த காட்சிதான் சூப்பர்.

வேற ஏதாவது வாங்கித் தாங்கப்பா என்று கேட்க பத்து ரூபாய்
கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு அந்த குழந்தைகள்
லேஸ் வறுவல் கேட்க, அந்த தந்தை தலையிட்டார்.

"இதெல்லாம் வெளி நாட்டுக்காரங்களதுமா. இதை விட நம்ம
வண்டில உள்ள கடலையும் பொரியும் நல்லது. நம்ம வியாபாரமே
இதனாலதான் சரியா நடக்கறதில்லை" 

எனக்கென்னமோ அவர் அந்த குழந்தைகளுக்கு அரசியல் 
வகுப்பு எடுத்தது போலவே தோன்றியது. பிறகு ஆளுக்கு
இரண்டு கடலை உருண்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டு
விட்டனர். 

மக்களின் உடலுக்கும் நாட்டின் வளத்திற்கும் எது நல்லது 
என்று அந்த தள்ளு வண்டிக்காரருக்கு தெரிந்தது ஏன்
ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை?


பின் குறிப்பு : நேற்று இரவு எட்டு மணிக்குப் போன மின்சாரம் பத்து மணிக்கு வந்த போது இதை எழுதத் தொடங்கினேன்.  பத்தே நிமிடத்தில் மீண்டும் போய்விட்ட மின்சாரம் இரவு பதினொன்றே காலுக்குத்தான் வந்தது. ஆகவே நேற்று பதிவு செய்ய வேண்டியதை இன்று பதிவு செய்கிறேன். சம்பவம் நடந்தது ஒன்பதரை மணி அளவில்.



Tuesday, June 3, 2014

முகநூலில் அரசியல் பேசக்கூடாதா?



ஒரு தோழர் எழுதியிருந்த அரசியல் பதிவிற்கு ஒருவர் இட்டிருந்த கமெண்ட் “பல நல்ல விஷயங்களுக்காகத்தான் முகநூல் இருக்கு. அரசியல் பண்ணறதுக்கு இல்லை”.

அரசியல் பேசாதே என்று சொல்வதை விட மிகப் பெரிய அரசியல் வேறு எதுவும் இல்லை.

எனக்கு ஒரு பழைய விஷயம்தான் நினைவிற்கு வருகிறது.

ஒரு காலத்தில் (எண்பதுகளின் துவக்கத்தில் என்று நினைக்கிறேன்) காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் “மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, இளைஞர்களுக்கு அரசியல் அவசியமில்லை. பெண்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் கூட அரசியலை விட்டே விலகி நிற்க வேண்டும் என்று இந்த தேசத்து மக்களுக்கு  உபதேசம் சொன்ன போது “மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளர்களும் பெண்களும் விவசாயிகளும் அரசியலை நாடக்கூடாது என்றால் அரசியல் என்ன திருடர்கள், பொறுக்கிகள், கடத்தல்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளுக்கு மட்டும் சொந்தமானதா என்று எங்கள் சங்கத்தின் மகத்தான தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் சுனில் மைத்ரா சூடாக பதிலளித்தார்.

அது போல சிலர் வெறும் வெட்டிப் பொழுதுபோக்குக்காக முகநூலை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு அரசியல் எட்டிக்காயாக கசக்கிறது. சில சமயம் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் வருகிறபோது அவற்றுக்கு பதில் சொல்ல இயலாத கையாலாகததனமும் கூட அரசியல் வேண்டாம் என்று சொல்ல வைக்கிறது.

வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போவோம் என்றுள்ளவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசியல் கண்ணுக்கே தெரியாமல் முழுமையாக கலந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவில்லை. தங்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமலும் அதனிடமிருந்து மீள்வதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப் படவேண்டியுள்ளது.

அப்படிப்பட்டவர்களை அறியாமையிலேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவர்கள்தான் அரசியல் வேண்டாம் என்று சொல்வார்கள். காங்கிரஸ் முன்பு சொன்னதும் அந்த அடிப்படையில்தான்.

சரி அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் முகநூலில் அப்படி என்ன நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்? சினிமாவைப் பற்றியும் கிரிக்கெட்டைப் பற்றியும் பேசுவதை விடவா அரசியல் பேசுவது மோசமானது? மார்க்கே ஒப்புக்கொள்ள மாட்டாருப்பா....
  

Monday, June 2, 2014

ராஜாதி ராஜன் இந்த ராஜா



 



கிராமத்திலிருந்து தென்றலாய் புறப்பட்டு
இசையுலகின் புயலாய் மாறியவன்.

மச்சானைத் தேடிய அன்னக்கிளி
மாபெரும் கலைஞனை கண்டுபிடித்தாள்.

பாடப்புத்தகத்தை படித்ததை விட
இவன் பாடல் கேட்ட நாள் அதிகம்.

எல்லா உணர்வையும் ஊட்டி 
வளர்த்த இசைத்தாயும் அவன்.


அவன் இசையால் நாங்கள் மகிழ்ந்தோம்.
ஆனால் பலர் வாழ்ந்தார்கள்.

எல்லைகள் கடந்தவன்,
இசையில் எல்லைகளே இல்லாதவன்.

குழலினிது, யாழினிது, 
உன் இசையில் 
எல்லா வாத்தியங்களுமே
இனிது இனிது என்றும் இனிது.
உந்தன் பாடல்கள் என்றும் இனிது.

தமிழகத்தின் இசை அடையாளம்
என்றுமே நீதான் ராஜா.



அந்த போர்டை தூக்குங்கப்பா



வேலூர் மக்கான் சந்திப்பில் ஒரு எலக்ட்ரானிக்  போர்ட் உள்ளது. அதில் நாள், நேரம் இதையெல்லாம் மட்டுமல்லாமல் வெப்ப அளவையும் கூட பார்க்கலாம். குரங்கை நினைத்துக் கொண்டு மருந்தை சாப்பிடாதே என்ற வைத்தியரின் அறிவுரையை நோயாளிகளால் எப்படி பின்பற்ற முடியாதோ அது போலவே அந்தப்பக்கம் செல்லும் போது அந்த போர்டை பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் முடிவதில்லை.

103 டிகிரி பாரன்ஹீட், 104 டிகிரி பாரன்ஹீட்  என்று பார்க்கும்போது சூரியன் நேரடியாக தலை மீது அமர்ந்து கொண்டது போல த்ரிகிறது. வெப்ப அளவைப் பார்க்கும் போதே எல்லா உற்சாகமும் வடிந்து ஒரு வித சுய பரிதாபமும் ஏற்பட்டு விடுகிறது.

இந்த போர்ட் இல்லாவிட்டால் வெயில் தாங்கவில்லை என்று பொதுவாக பேசுவோமே தவிர அளவெல்லாம் மறுநாள் பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். இன்ஸ்டன்டாக சோர்வையும் மலைப்பையும் அந்த போர்ட் உருவாக்கி விடுகிறது

ம்ம்ம்ம்ம், மத்த ஊர் ஆசாமிங்களாம் கொடுத்து வைச்ச மகராசனுங்க.





Sunday, June 1, 2014

சண்டே ஸ்பெஷல்

இன்று காலை வலைச்சரத்தில் போட்ட பதிவின்
இணைப்பு இங்கே  உள்ளது. இதிலே ஒரு 
தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்ததும்
இருக்கிறது. உள்ளே சென்று பாருங்கள்.
 

யாரடா மனிதன் இங்கே?

வலைச்சரத்திலிருந்து விடைபெறும் நேரம் இது.
இறுதியாக இட்ட பதிவையும் கொஞ்சம் கண்டிப்பா 
படிச்சுடுங்க.