Tuesday, July 27, 2021

இன்னும் அவர்கள் தேனா மோடி?



 *நாளொரு கேள்வி: 27.07.2021*


வரிசை எண்: *422*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க. சுவாமிநாதன்*
#########################

*தனியார் என்றால் இடதுசாரிகளுக்கு ஏன் வேப்பங்காய்!*

கேள்வி: தனியார்கள் என்றாலே இடதுசாரிகள் எதிர்ப்பது ஏன்? தடுப்பூசி போடுவதில் கூட 25 % ஐ தனியார்க்கு ஒன்றிய அரசு கொடுத்ததை இடதுசாரிகள் எதிர்த்தார்கள்! தனியாரும் சேர்ந்தால் தடுப்பூசி போடுவது வேகமாகாதா! தனியார் என்றால் வேப்பங்காயா!

*க. சுவாமிநாதன்*

இடதுசாரிகள் எதிர்த்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 

*ஒன்று,* தடுப்பூசியை வணிக மயம் ஆக்கக் கூடாது. எல்லோருக்கும் இலவசமாக தர வேண்டும். 

*இரண்டாவது,* லாபம் வராது எனில் அல்லது இதை விட லாபம் தருகிற வேறு ஏதும் வந்து விட்டால் தனியார்களின் முன்னுரிமையில் மக்கள் நலன் இருக்காது என்பதுதான்.

இடதுசாரிகளும் மாநில அரசுகளும் எதிர்த்ததால்தான் *மூன்று விலைக் கொள்கை* கைவிடப்பட்டது. உச்ச நீதி மன்றம் பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ 35000 கோடிக்கு கணக்கு கேட்டதும் ஒரு காரணம். மாநில அரசுகளுக்கு தரப்படும் தடுப்பூசிகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அரசு ஒத்துக் கொண்ட கதை இதுதான். *ஆகவே எதிர்ப்பு என்பதே எதிர் மறை விசயமல்ல.* எதிர்க்காமல் மௌனம் காத்து மக்கள் நலனை காவு கொடுக்க அனுமதித்து இருந்தால் அதுவே எதிர்மறையான விசயமாக இருந்திருக்கும். 

தனியார்க்கு 25 % கொடுத்த விவகாரத்திற்கு வருவோம். மூன்று விலைக் கொள்கையை ஒன்றிய அரசு கைவிடும் போது கூட தனியார்க்கான 25% ஐ கை கழுவவில்லை. *அவ்வளவு பாசம்!* ஆனால் தனியார்கள் தடுப்பூசி போடுவதில் மிகவும் பின் தங்கினார்கள்.

*தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்* அவர்கள் ஜூன் 28 அன்று ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஆதாரப் பூர்வமாக கணக்கு கொடுத்தார். எந்த அளவிற்கு தனியார்கள் தடுப்பூசி போடுவதில் பின் தங்கி உள்ளார்கள் என்று ... *அப்போது வரை போடப்பட்டிருந்த 1.43 கோடி டோஸ்களில் தனியார் மருத்துவ மனைகள் போட்டது 6.5 லட்சம் டோஸ்கள்தான். எவ்வளவு சதவீதம்? 4.5 தான். 25 சதவீதம் ஒதுக்கீடு பெறும் தனியார்கள் 4.5 சதவீதம் தான் போட்டார்கள் என்றால் அக்கறை இன்மையா? அல்லது 25 % ஐ எடுத்துக் கொள்ளவில்லையா? எடுத்துக் கொண்டிருந்தால் ஏன் போடப்படவில்லை?* என்ற கேள்விகள் எல்லாம் வருமல்லவா? 

தமிழக முதல்வர் கடிதம் *இன்னொரு உண்மையையும் உடைத்தது.* தனியார் மருத்துவமனைகளில் 7 அல்லது 8 லட்சம் டோஸ்கள் கையிருப்பு இருந்த நிலையில் மாநில அரசின் வசம் 2 லட்சம் டோஸ்கள் மட்டுமே இருந்தன. தடுப்பூசிகள் வேகமாக போட வேண்டிய அவசர தேவை இருந்தும் தனியார்களின் அணுகுமுறை எப்படி இருந்தது ? என்பதற்கு இது சாட்சியம். ஆனால் தமிழக முதல்வர் கூட தனியார்க்கு தராதே என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் 10 சதவீதமாக ஒதுக்கீட்டை குறைக்கலாம் என்றார். ஆனால் ஒரு மாதம் ஆகி விட்டது. இப்போது வரை தமிழக முதல்வர் கடிதத்திற்கு பதில் இல்லை. அதன் மீது நடவடிக்கையும் இல்லை. 

இந்து நாளிதழ் (25.07.2021) தலைப்பு செய்தி என்ன தெரியுமா? *"தனியார் துறை தடுப்பூசி போடுவதில் பின் தங்கி உள்ளது"* என்பதே. யார் சொல்கிறார் இதை? ஒன்றிய வணிக மற்றும் தொழில் அமைச்சர் *பியூஷ் கோயல்*. அவர் இந்தியப் பெரும் தொழிலதிபர்கள் அமைப்பான சி.ஐ.ஐ கூட்டத்தில் ஆற்றிய உரை அது. அதில் தொழில் அதிபர்களைப் பார்த்து அவர் சொல்கிறார்...

*"நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள்... எந்த அளவிற்கு என்னிடம் சண்டை போட்டீர்கள்... தடுப்பூசியை தனியார் துறைக்கும் திறந்து விட வேண்டுமென்று... இன்று உங்களுக்கு ஒதுக்கிய 25 % ஐ வாங்கக் கூட தயாராக இல்லை. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் போது உங்கள் செயல்பாடுகளும் படிப்படியாக ஈடு கொடுக்க வேண்டாமா?.... ஒரு தொழில் குழுமம் சொன்னது, நாங்கள் ஒரு கோடி தடுப்பூசியை போடுவோம் என்று... இன்னொருவர் சொன்னார், நாங்கள் குக்கிராமங்களுக்கு செல்வோம் என்று... ஆனால் ஒருவரும் போகவில்லை... பீகாருக்கு, வட கிழக்கு மாநிலங்களுக்கு, ஜார்கண்டிற்கு, சட்டிஷ்கருக்கு..."*

இவை அடைப்புக் குறிக்குள் அமைச்சர் வார்த்தைகளாக தரப்பட்டு இருப்பவை. வாய் கிழிய பேசிய வார்த்தைகள் செயல்களாக மாறவில்லை. *தனியார்களின் தோல்வி என்பது மட்டுமல்ல; இவ்வளவு உயிர்களை இந்தியா இழந்து நிற்கிற சூழலில் இடதுசாரிகளின் எச்சரிக்கையையும் மீறி ஒன்றிய அரசு காட்டிய தனியார் பாசத்தின் மிகப் பெரிய விலை. இவர்களின் தாமதத்தால் எவ்வளவு தொற்றுகளோ! எவ்வளவு உயிர்ப் பலிகளோ!* இவை புள்ளி விவரங்களாக மாறாமல் போகலாம். ஆனால் அரசின் கொள்கையில் கறைகளாக படிந்து போன புள்ளிகள் என்பதில் ஐயமில்லை. 

இடதுசாரிகளுக்கு தனியார்கள், கார்ப்பரேட்டுகள் வேப்பங்காயாக இருப்பதற்கு காரணம் இதுதான். ஆகவே அது ஏன் என்பது கேள்வியாக இருக்க கூடாது. *இப்படிப்பட்ட தனியாரை இன்னும் அனுமதித்து கொண்டிருப்பது அரசுக்கு தேனாய் தித்திப்பது ஏன்? என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.* 

******************
*செவ்வானம்*

No comments:

Post a Comment