Monday, July 6, 2015

மக்கள் தீர்ப்பை மதியுங்கள்





கிரீஸ் நாட்டு மக்கள் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டிற்கு  உதவுவதற்கு ஐரோப்பிய யூனியன், சர்வதேச நிதி அமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியோர் விதித்த நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று நடந்த கருத்துக் கணிப்பில் 61.3 % கிரீஸ் மக்கள் வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.

உலகமயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய கிரீஸ் நாடு, உலக பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவித்தது. முதலாளிகள் கொழுத்து நிற்க, ஏற்கனவே இளைத்து மூச்சு விடவே சிரமப் படுகிற தொழிலாளிகளின் மீது நெருக்கடியை இறக்கி வைத்து இளைப்பாற நினைத்தது கிரீஸ் அரசு.

வேலைகளை வெட்டுவது, ஊதியங்களை வெட்டுவது, பென்ஷனைப் பறிப்பது, மருத்துவ வசதிகளை நிறுத்துவது என்று அனைத்து பாரங்களையும் தொழிலாளர்களே சுமக்க வேண்டும் என்று விதிகளும் கொண்டு வந்தது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அப்படி செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தவர்கள் கிரீசின் ஆட்சியாளர்களை ஆட்டி வைத்த அந்த மூவர் அணிதான் (ஐரோப்பிய யூனியன், சர்வதேச நிதி அமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி) 

ஆனால் அந்த நாட்டு உழைப்பாளி மக்கள் அதனை ஏற்கவில்லை. நாளொரு போராட்டம், தினமொரு வேலை நிறுத்தம் என்று வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினார்கள். கலவர பூமியாய் கிரீஸ் காட்சியளித்த பல புகைப்படங்கள் உங்களுக்கும் நினைவில் இருக்கலாம். 

இந்த நிலைமையில்தான் அங்கே தேர்தல் வந்தது. "ஐரோப்பாவை கம்யூனிஸம் எனும் பூதம் அச்சுறுத்துகிறது" என்று மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் அறிக்கையின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அந்த சித்தாந்தத்தின் அவசியத்தை உணர்ந்ததால் கிரீஸ் மக்கள் ஐரோப்பிய வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் மூலமாக ஒரு இடதுசாரிக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியது.

சிரிஸா என்ற பெயருடைய  இடதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது. அலெக்ஸ் சிப்ராஸ் என்பவர் பிரதமரானார். அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியே முந்தைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மாற்றியமைப்போம் என்பதுதான். அதனால்தான் அவர்களால் தேர்தலில் வெற்றி பெறவும் முடிந்தது.

ஆனால் கிரீஸிற்கு தேவையான நிதியை அளிக்க மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தது மூவர் கூட்டணி. முதலில் சிரிஸா கட்சியிடம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று மக்களின் முடிவிற்கே விட்டது.

வேண்டாம் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனை ஏற்பது அரசின் கடமை மட்டுமல்ல. இதனை மதிக்க வேண்டிய பொறுப்பு மூவர் கூட்டணிக்கும் உள்ளது. அப்படி அதனை ஏற்க மறுத்து கிரீஸிற்கு நிதி அளிக்காவிட்டால் அந்நாடு ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளி வந்தாக வேண்டும்.அப்படி வருவதால் கிரீஸிற்கு மட்டும் பாதிப்பல்ல. ஐரோப்பிய யூனியனுக்கும் கூடத்தான். சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு எதிரான செய்கைகள் ஏற்கனவே மிகக் கடுமையாக ஸ்பெயினிலும் எதிர்க்கப்பட்டு வருகிறது. அங்கே கொதி நிலையை நோக்கி போராட்டங்கள் சென்று கொண்டிருக்கிறது.

கிரீஸ் மக்கள் இன்று எடுத்த முடிவை நாளை ஸ்பெயின் மக்கள் எடுப்பார்கள்.

ஜனநாயகத்தின் தொட்டில் ஐரோப்பா என்று பாடப்புத்தகங்களில் எழுதி வைத்துள்ளார்கள். அது நிஜமென்பது கிரீஸ் மக்களின் உணர்வுகளை, கருத்தை, வாக்குகளை ஐரோப்பிய யூனியன் மதித்தால்தான் நிரூபணமாகும்.

பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வேட்டைக்கு அடி பணியாமல் மக்கள் நல்ன் மட்டுமே பிரதானமாகக் கொண்டு லத்தீன் அமெரிக்க அரசுகள் உறுதியாக செயல்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியாத அந்நாடுகளின் பொருளாதாரம் இன்று மேம்பட்டுத்தான் உள்ளது.

கிரீஸ் அரசு அதனை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லது.
 


 

3 comments:

  1. எனக்கு உண்மையாகவே புரியவில்லை. இதனால் என்ன சாதித்திருக்கிறார்கள்? கிரீஸ் ப்ரெசிடெண்ட் சொல்வது.. இதனால் பேச்சு வார்த்தையின் போது மேலும் பேரம் பேசமுடியும் என்பதே.. ஆக மொத்தம் ஐரோபியன் கூட்டமைப்பின் மற்ற நாடுகளிடம் இருந்து பண உதவியை எதிர்பார்த்துத் தான் இருக்கிறார்கள். அப்படி யூரோவிலிருந்து வெளியேறி தனியாக கரன்சி அடிக்க வேண்டியிருந்தால் அந்த கரன்சியின் மதிப்பு குறைந்த பட்சம் 40% குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

    மொத்தத்தில் ஒரு பக்கம் பள்ளம். மறு பக்கம் நெருப்பு. எதையாவது ஒன்றில் விழுவது தவிர்க்க இயலாதது!

    ReplyDelete
  2. என்ன சாதித்திருக்கிறார்கள் என்று எனக்கும் புரியவில்லை.நோகாமல் நொங்கு தின்ன அவர்களால் முடியுமா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. இனி கிரேக்கம் மிகவும் கசப்பான ஒரு மாத்திரையை விழுங்க வேண்டும் என்று பிபிசியின் ஐரோப்பிய பிராந்தியச் செய்தியாளர் கூறினார்.
    முன்னால் உள்ள பாதை நீளமானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என்று ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் கூறியுள்ளார்.
    - தமிழ்பிபிசி 13.07.2015

    ReplyDelete