Saturday, July 11, 2015

மகாபாரத மறு வாசிப்புக் கதை

கடந்த ஞாயிறன்று வண்ணக்கதிரில் வெளியான எனது சிறுகதை.பத்ம வியூகம்
-          வேலூர் சுரா
அன்று ஹஸ்தினாபுர அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. அரண்மனை  நுழைவாயில் தொடங்கி ராஜ தர்பார் மண்டபம் வரை எங்கும் மெல்லிய தங்க இழைகளால் செய்யப்பட்ட தோரணங்கள் கட்டப்பட்டிருக்க, வைரம் பதித்த  தங்கத் தூண்கள் சூரிய ஒளி பட்டு மின்னிக் கொண்டிருந்தன. மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி  அரண்மனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். புதிய மன்னனாக பரிட்சித்து  பதவியேற்கும் வைபவத்திற்காக அவர்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அபிமன்யு குமாரன் அரசனாகும் மகிழ்ச்சியோடு பஞ்ச பாண்டவர்கள் கானகம் செல்லும் வருத்தமும் அவர்கள் முகங்களிலும் சிந்தனையிலும் கலந்தே இருந்தது.

இதோ ஒவ்வொருவராக அரசவைக்குள் வந்து கொண்டே இருந்தார்கள்.

மூத்த அமைச்சர் விதுரர் முழுமையாய் நரைத்த தன் தாடியை தடவிக் கொண்டே தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் இருந்த ஆசனத்தில் பலராமரும் அவருக்குப் பக்கத்தில் கிருஷ்ணரும் அமர்ந்திருந்தனர். மற்ற அமைச்சர்கள், பல நாட்டு மன்னர்கள் என்று பலரும் அவையின் ஆசனங்களை அலங்கரித்திருந்தனர்.  “தர்மத்தின் தலைமகன் யுதிஷ்டிரர் தன் சகோதரர்களோடும் பத்தினி பாஞ்சாலியோடும் வருகிறார், பராக், பராக்” என வாயிற்கோப்போன் அறிவிக்க மக்கள் முண்டியடித்துக் கொண்டு  அவர்களைப் பார்க்கத் தலைப்பட்டனர்.

யுதிஷ்டிரனும் திரௌபதியும் முன்னே வர, அவர்கள் பின்னே பீமன், அர்ஜூனன், நகுல, சகாதேவர்களும் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னே சுபத்ரா, புதிதாக மன்னனாகப் போகும் பரிட்சித்துவின் தாய் உத்தரை ஆகியோரும் வந்தார்கள். அவர்கள் தங்களின் ஆசனங்களில் அமர்ந்த பின்பு மீண்டும் ஒரு ஆரவாரம் கேட்டது. நூறு வெண்ணிப் புரவிகளில் பச்சை நிற ஆடையுடுத்திய வீரர்கள் கையில் வேல் ஏந்தி வர, அந்த குதிரைகளின் கும்போசை சீரான தாளத்தை கேட்பது போலவே இருந்தது. குதிரைகளின் பின்னே ஐம்பது யானைகள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட முகப்புத் துணி போர்த்தப்பட்டு மெல்லமாய் நடந்து வர இறுதியாக கண்ணைப் பறிக்கிற பிரகாசத்தோடு பொன்மயமாய் காட்சியளித்த ரதத்தில் வந்திறங்கினான் பரிட்சித்து.

இளமை பூரிக்கும் தோற்றத்துடன் மெலிதாய் அரும்பிய மீசையோடு ரோஜா நிற ஆடையணிந்த பரிட்சித்து, அவையில் மக்களின் கரகோஷத்தோடு பிரவேசித்தான். தாத்தாக்களான பாண்டவர்கள். பாட்டிக்கள் சுபத்ரை, திரௌபதி, அன்னை உத்தரை, மூத்த அமைச்சர் விதுரர், குலகுரு வியாசர் ஆகியோரின் பாதம் பணிந்து வணங்க, அவர்களும் அவனை ஆசிர்வதித்தனர். திரௌபதியின் முகத்தில் மட்டும்  இறுகிப் போயிருந்திருந்தது. அவையின் மத்தியில் சந்திரனின் மிகப் பெரிய ஓவியம் தீட்டப்பட்டு இருந்தது. அதன் முன்பாக சொக்கத் தங்கத்தில் செய்யப்பட்டிருந்த ஹஸ்தினாபுர சிம்மாசனம் வீற்றிருந்தது. பட்டுத்துணிகளில் அமரும் இடம் உருவாக்கப்பட்டிருந்தது. சிம்மாசனத்தின் உச்சியிலும் சந்திரனின் படம் செதுக்கப்பட்டு முத்து, பவழம், வைடூரியம், கோமேதகம் ஆகிய ரத்தினங்களால் இழைக்கப்பட்டிருந்தது. கை வைக்கும் இடத்தில் சிங்க முகம் வடிவமைக்கப்பட்டு வைரத்தால் பதிக்கப்பட்ட கண்கள் தன் ஒளியால் மிரட்டிக் கொண்டிருந்தது. இந்த சிம்மாசனத்தில் யார் அமருவது என்பதற்கான யுத்தம் லட்சக்கணக்கான வீரர்களை பலி வாங்கிய புதைகுழி என்பது அதன் அற்புத அழகில் மறைந்து போயிருந்தது.

விதுரர் இப்போது மெல்ல நடந்து அவையின் மத்திக்கு வந்தார். அவரது கைகளில் குரு வம்சத்தினர் காலம்காலமாக அணிந்து வரும் மகுடம் இருந்தது. வயதானாலும் அவரின் குரலின் கம்பீரம் குறையவில்லை. அவர் பேசத் தொடங்கினார்.

“மகா ஜனங்களே, துஷ்யந்த சக்ரவர்த்தியின் மகனான பரதச் சக்ரவர்த்தி அமைத்த ஹஸ்தினாபுர சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இப்போது பரிட்சித்துவிற்கு நம் குல குரு வியாசர் பெருமான் முடி சூட்டப் போகிறார். குரு வம்சத்தின் பெருமையின் உலகெங்கும் நிலை நாட்டிய மாவீரன் பாண்டவர்களின் பெருமைக்குரிய அர்ஜூனருக்கும் யாதவ குல மன்னன் உக்கிரசேனனின் மகளும் பலராம, கிருஷ்ணரின் சோதரியுமான சுபத்திரைக்கும் பிறந்த பராக்ரமசாலி அபிமன்யு குருஷேத்திரப் போரில் வீர மரணம் அடைந்து சுவர்க்கம் சென்றதை நீங்கள் அறிவீர்கள். அந்த மாவீரனுக்கும் விராட அரசனின் மகளான உத்தரைக்கும் பிறந்தவர் நமது பரிட்சித்து.

வியாசர் மெல்ல வந்து விதுரர் கையிலிருந்த மகுடத்தை வாங்கி பரிட்சித்துவின் தலையில் சூட அத்தனை பேரும் மலரை வாரி வீசி வாழ்த்தினார்கள். திரௌபதியின் கண்களில் மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க அவளது கண்களில் தீப்பிழம்பு தெரிவதைப் பார்த்த யுதிஷ்டிரன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அதே நேரம் அவன் பார்வையில் சுபத்திரையின் கண்களில் தோன்றிய பெருமிதமும் தப்பவில்லை. இனி இவளது கேள்விக்கணைகள் இனி என்னைத் துளைக்காது எனறு சுபத்திரையைப் பார்த்த அர்ஜூனன் மனதிலும் நிம்மதி பிறந்தது.

அவன் நினைவுகளும் குருஷேத்திரப் போரின் பதினான்காவது நாளை நோக்கிப் பறந்தது. அபிமன்யுவால் உடைக்கப்பட்ட பத்ம வியூகத்தை மீண்டும் சரி செய்து அவன் மரணத்திற்கு காரணமாக இருந்த சிந்து தேச ராஜன் ஜயத்ரதனை கொல்வேன் என்ற சபதத்தை நிறைவேற்றி விட்டு அச்செய்தியைச் சொல்ல சுபத்ரையை நோக்கிப் போனதும் அப்போது நடைபெற்ற விவாதமும் மறக்கக் கூடியதா என்ன?பாசறைக்குள் நுழைந்த அர்ஜூன்ன் உற்சாகமாக்க் குரல் கொடுத்தான்.

“சுபத்திரை, நம் கண்மணி அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமானவனை நான் இன்று வதம் செய்து விட்டேன். எஞ்சியிருப்பவர்களையும் நாளை எமனுலகம் அனுப்பி விடுவேன்

“அப்படியா? உங்கள் தமையனார் யுதிஷ்டிரனையும் பாண்டவ தளபதி திருஷ்டத்யுமனனையும் கொன்று விட்டீர்களா? என்னை எப்போது கொல்லப் போகிறீர்கள்? உங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளப் போகிறீர்களா?

ஒரு கணம் உறைந்து போன அர்ஜூன்ன் கேட்டான்.

“சுபத்திரை, என்ன பேசுகிறாய். நான் ஏன் என் மூத்த சோதரனை கொல்ல வேண்டும்? திருஷ்டத்யுமனன் எப்படி அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமாவான்? நம் குழந்தை நம்மை விட்டுப் பிரிய நீயும் நானும் எப்படி பொறுப்பாவோம்?

மகனைப் பிரிந்த துயரத்தை விட சீற்றமே சுபத்திரையின் முகத்தில் அதிகமாக தென்பட்ட்து.

“கர்ப்பமுற்ற மனைவியிடம் நல்ல விடயங்கள் பற்றி பேசி இனிமையாய் பொழுதைக் கழிக்க வேண்டிய நீர், உமது தீரத்தைப் பற்றி பறைசாற்ற பத்ம வியூகத்தை எப்படி பிளந்து கொண்டு உள்ளே செல்வது என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தீர்கள். கர்ப்பத்திலிருக்கும் சிசு அதை உன்னிப்பாக்க் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் உமது தற்பெருமையைக் கேட்கச் சகிக்காமல் நான் உறங்கி விட்டேன். அதனால்தான் பத்ம வியூகத்திற்கு உள்ளே செல்லத் தெரிந்த என் மகன் வெளியே வர முடியாமல் சிக்கி மாண்டு விட்டான். அதனால் தண்டிக்கப்பட வேண்டிய  முதல் குற்றவாளிகள் நாம் இருவரும்தான்

“வியூகங்களைப் பற்றியும் அதை எப்படி உடைப்பது என்பது பற்றியும் தெரியாத திருஷ்டத்யுமனன் ஒரு சேனாதிபதியா? திரௌபதியின் அண்ணன் என்ற காரணத்தால்தானே அவனை நீ சேனாதிபதியாக பரிந்துரைத்தாய். உனது சிபாரிசு இறுதியில் என் வம்ச விளக்கை அணைத்து விட்ட்து

அக்னியாஸ்திரத்தை விட வெப்பம் நிறைந்த வார்த்தைகளை சுபத்ரை ஏவ பதிலளிக்க முடியாமல் அர்ஜூன்ன் மேலும் திணற அடுத்த அம்பு சுபத்ரையிடமிருந்து புறப்பட்ட்து.

“துரோணாச்சார்யார் அமைத்த பத்ம வியூகத்தை நீ பிளந்து கொண்டு செல், நாங்கள் உன் பின்னாலே வந்து விடுகிறோம் என்று சொன்ன உங்கள் அண்ணன் யுதிஷ்டிரன் எங்கே போனார்? என் குலக்கொழுந்தை கௌரவர் சேனையில் தனியாக சிக்க விட்டவர் அவர்தானே? அவரை நம்பித்தானே என் மகன் உள்ளே சென்றான். காரியமாற்றும் திறனற்றவர் எதற்கு வாய் ஜாலம் காட்ட வேண்டும்?

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அர்ஜூன்ன் கேட்டான்.

“அப்படியென்றால் ஜயத்ரதன் மீது தவறு கிடையாதா? அபிமன்யுவால் பிளக்கப்பட்ட பத்ம வியூகத்தை அவன் மீண்டும் சரி செய்யாவிட்டால் பாண்டவ சேனை உள்ளே நுழைந்திருந்த. அபிமன்யுவும் நேற்று வெற்றி வீரனாய் பரிணமித்திருப்பான்

“என் அண்ணன் உனக்கு உபதேசித்த கீதோபதேசத்தை மறந்து விட்டாயா? கடமையைச் செய் என்பது உனக்கு மட்டும்தான் பொருந்துமா? தனது படையின் வெற்றிக்காக பாடுபட வேண்டிய கடமை சிந்து ராஜனுக்குக் கிடையாதா? உன் அண்ணனின் இயலாமைக்கும் உன் மைத்துனனின் கையாலாகததனத்திற்கும் அடுத்தவரைப் பழிக்காதே

“யுத்த சாஸ்திரத்திற்கு எதிராக நிராயுதபாணியாக இருந்த அபிமன்யுவை பல பேர் சூழ்ந்திருந்து தாக்கினார்களே, அவர்களை பழி தீர்க்க வேண்டாமா?

“ஆம். அவர்கள் தவறிழைத்தவர்கள்தான். ஆனால் யுத்த தர்மத்தை மீறத் தொடங்கியது நீங்கள்தானே. நபும்சகனான சிகண்டியை முன்னிறுத்தி பிதாமகரை கொன்றீர்கள்

சுபத்திரை பேசிக் கொண்டிருந்த போதே வாசலில் அரவம் கேட்டு அர்ஜூன்ன் திரும்பிப் பார்த்தான்.

ஒரு போர் வீரன் பாசறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். அவன் உள்ளே வந்தாலாவது சுபத்ரையிடமிருந்து தப்பிக்கலாம் என்றெண்ணி அர்ஜூன்ன் அவனை உள்ளே அழைத்தான்.

“விஜயரே, ஒரு வருத்தமான செய்தி. இரவிலும் இன்று தொடர்ந்த யுத்த்த்தில் பீமசேனரின் புஜபல பராக்கிரம மைந்தரான கடோத்கஜன், தேரோட்டி மகனான கர்ணன் பிரயோகித்த சக்தி ஆயுத்த்தால் மாண்டு போனார்

இச்செய்தியைக் கேட்ட சுபத்திரை வெறி பிடித்தவள் போல இரு கைகளையும் தட்டிக் கொண்டு பாசறைக்குள்ளேயே சுழன்று சுழன்று ஆடினாள்.

“பத்ம வியூகத்தை வகுத்தவர் துரோணர் இல்லை அர்ஜூனரே, துரோணர் இல்லை. உன் மூத்த தமையன் யுதிஷ்டிரன்தான். அவனது வியூகத்தில் மூன்று இளங்குருத்துக்கள் கருகி விட்ட்து

பொறுமை இழந்த அர்ஜூன்ன்
“உன் மகனை இழந்ததால் உன் சித்தஸ்வாதீனம் பேதலித்து விட்ட்து. அதனால்தான் தர்மராஜா என்றழைக்கப் படுகிற என் தமையனையே பழித்துப் பேசத் தலைப்பட்டாய். இனியும் இது போல பேசினால் தாரம் என்றும் பார்க்க மாட்டேன். உன் நாவை துண்டித்திடுவேன்

“அர்ஜூனரே, சகோதரப் பாசம் எனும் மாயை உம் கண்களை மறைத்து விட்ட்து. ஹஸ்தினாபுர அரியணைக்கு இனியும் ஒரு போர் மூளக் கூடாது என்று  சகுனியை விட காய்களை  லாவகமாக நகர்த்தியிருப்பது உன் அறிவிற்குப் புலப் படவில்லையா?

பாசறைக்குள் கோழைகளாக பதுங்கியிருக்கிற பாஞ்சாலியின் புதல்வர்களா இல்லை வீர மரணம் அடைந்திட்ட வாலிபர்களா, யார் அரியணையில் ஏறி ஹஸ்தினாபுர ஆட்சியை நட்த்த தகுதியானவர்கள்? ஆனால் அப்படி போட்டி போட தகுதியான அரவானோ இல்லை கடோத்கஜனோ இல்லை என் மகன் அபிமன்யுவோ உயிரோடே இல்லை.

சுபத்ரையின் இந்தக் குற்ற்ச்சாட்டு அர்ஜூன்னை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்த்து. அவனுடைய காண்டீபத்திலிருந்து எய்யப்படும் பாணங்கள் போல அவளது தாக்குதல் அஸ்திரங்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

“திரௌபதியின் மகன்களைத் தவிர வேறு யாரும் போட்டியில் இருக்க்க் கூடாது என்பதற்காக எவ்வளவு சூழ்ச்சியோடு செயல்பட்டுள்ளார்கள். என் அண்ணன் கிருஷ்ணனே ஒரு சூழ்ச்சிக்காரன். அவனால் கூட உணர முடியாத சூழ்ச்சி இது. கொல்லப்பட்டவர்கள் அர்ஜூன்னுக்கும் பீமனுக்கும் பிறந்தவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் எல்லோரும் கலப்பினக் குழந்தைகள்

அர்ஜூன்ன் நிலை குலைந்தான். சுபத்திரையின் சீற்றத்தின் நியாயம் புரிந்த்து.

அவள் தொடர்ந்தாள்.

“நாக கன்னிகை உலூபிக்கும் உனக்கும் பிறந்த அரவானை களப்பலி கொடுக்கச் சொன்னது யார்? சர்வ லட்சணம் பொருந்திய அந்த மாவீரனை போருக்கு முன்பாகவே கொன்று விட்டார்கள்.

அரக்க குலத்தைச் சேர்ந்த இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்த கடோத்கஜனை இரவு நேரப் போரில் ஈடுபட வைத்து கர்ணனின் சக்தி ஆயுதத்திற்கு பலியாக்கி விட்டார்கள்.

யாதவ குலத்தில் பிறந்த எனக்கும் உனக்கும் பிறந்த அபிமன்யுவையும் பத்ம வியூகத்திற்குள் சிக்க வைத்து கொன்று விட்டார்கள்.

ஆனாலும் அவர்களின் எண்ணம் பலிக்காது. மூன்று தாய்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டும்

அதன் பின்பு அர்ஜூன்ன் எதுவும் பேசவில்லை. குருஷேத்திரப் போரில் துரியோதனன் கொல்லப்படும் வேளையில் அவனுக்கு அளித்த உறுதிமொழியின் படி அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்தில் மாண்டு போனவர்களில் திரௌபதியின் புதல்வர்களும் அடக்கம். உத்தரையின் கர்ப்பத்தில் ஜனித்திருந்த பரிட்சித்துதான் இப்போது அரசனாயிருக்கிறான்.

பாட்டி சுபத்ரையின் கால்களில் விழுந்து வணங்கிய பரிட்சித்துவை எழுப்பி அவனை ஆசீர்வதித்த படி கூறினாள்.

“தங்களின் பரம்பரைக்கு அரியணை வேண்டுமென்பதால் என் மகன் மாவீரன் அபிமன்யு கொல்லப்பட்டான். அந்த தவறுக்கான பதிலடியாகவே காலம் உன்னை ஹஸ்தினாபுர மன்னராக்கியுள்ளது. நீடூழி வாழ்க

இதைக் கேட்டுக் கொண்டிருந்த திரௌபதியும் யுதிஷ்டிரனும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர்களால் வேறென்ன செய்ய முடியும்?

2 comments:

 1. 1. கதை எழுத எப்படி நேரம் கிடைக்கிறது? (பதில். எல்லோருக்கும் நேரம் இருக்கிறது. உருப்படியில்லாதது எது எனப் பார்த்து அதில் நேரம் செலவழிக்காமல் இருந்தால் தாராளமாக நேரம் இருக்கும்)
  2. மகாபாரதத்தின் பெருமை, அதனை எப்படி வேண்டுமானாலும் புரிந்து வாழ்க்கைக்குத் தேவையான அறிவைப் பெறலாம். நீங்கள் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, கொஞ்சம் டைம் மேனேஜ்மேண்ட் தான்.

   Delete