Friday, July 3, 2015

கல்யாணக் கச்சேரி கேட்கவும் கூட…..






பொதுவாக திருமண வரவேற்பு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அது கர்னாடக இசையாக இருந்தாலும் சரி, மெல்லிசையானாலும் சரி. அவர்கள் பாட்டிற்கு பாடிக் கொண்டிருப்பார்கள். திருமணத்திற்கு வந்தவர்களோ, மேடைக்கு சென்று மணமக்களைப் பார்த்து மொய் கவரையோ அல்லது பரிசுப் பொருளையோ கொடுத்து விட்டு டைனிங் ஹாலுக்கு சென்று பந்தியில் இடம் பிடிப்பதில் மும்முரமாக இருப்பார்கள். இன்றைய வேகமான வாழ்வில் நிலைமை அப்படியாகி விட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் வீடு சேர வேண்டும் என்று நினைப்பதும் தவறல்ல. அப்படி இருக்கையில் கல்யாணக் கச்சேரிகளை நிதானமாக எங்கே கவனித்து ரசிப்பது?

ஒரு மாறுதலான காட்சியை கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில் பார்க்க முடிந்தது. அது ஒரு கர்னாடக இசை நிகழ்ச்சி.  வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தபேலா, மோர்சிங் என்று இசைக்கருவிகள் மட்டுமே. மைக்காரர் கொஞ்சம் படுத்தினாலும் இரண்டாவது பாடலில் சரியாகி விட்டது.

மூன்றாவது பாடலின் போது மணமக்கள் மேடைக்கு வந்து விட்டதால் கியூ வரிசையில் இடம் பிடிக்க பாதி பேர் ஓடினாலும் (என்னையும் சேர்த்துதான். நான் வேலூர் திரும்ப வேண்டிய ஆளுங்க) பாதிப் பேர் அசையாமல் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்ததே ஒரு சாதனை.

முதல் கடமை (அதுதான் பரிசுப் பொருள் தருவது) முடிந்து அடுத்த கடமைக்குச் (பந்திக்கு முந்துவது) செல்லும் முன் “எந்தரோ மகானுபாவ”னோடு கொஞ்ச நேரம் நானும் ஸ்ரீ ராகத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடித்த பின்பு சொல்லிக் கொண்டு போகலாம் என்று மீண்டும் வந்தால் அந்த பாதி பேர் இன்னும் அசையாமல் கச்சேரியை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து  “கொஞ்சம் டிஸ்டர்ப் செய்யாதீங்க” என்று ஒருவர் அதட்டவும் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்றைய தினம் அக்கலைஞர்கள் மன நிறைவோடு உறங்கியிருப்பார்கள்.

ரசிக்க யாரும் இல்லையெனில் அந்த கலைக்கு என்ன மதிப்பு?

ஒரு சந்தேகம் : தபேலா வாசிக்கிறவர்கள் என்றால் ஜாகீர் ஹூசேன் மாதிரிதான் முடி வைத்திருக்க வேண்டுமா? பல தபேலா கலைஞர்கள் அப்படிப்பட்ட முடியலங்காரத்துடன்தான்  இருக்கிறார்களே ஏன்?

2 comments:

  1. திருமண விழாவில் கச்சேரியை ரசிப்பது என்பது வியப்பிற்குரிய செய்திதான்
    அதனையும் மீறி ரசித்தார்கள் என்றால் கலைஞர்களின் கைவண்ணத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்
    பாராட்டுவோம்

    ReplyDelete
  2. ஒரு கல்யாண வரவேற்புக்கு நான் போன நேரம், "உலவும் தென்றல் காற்றினிலே..." (மந்திரிகுமாரி - திருச்சி லோகநாதன், ஜிக்கி பாடியது) என்று மெல்லிசை குழுவினர் அருமையாக பாடிக் கொண்டிருந்தார்கள். கூட வந்தவர்கள் சாப்பிட போகலாம் என்றாலும் இந்த பாட்டு முடியட்டும் என்று உட்கார்ந்தேன். பாட்டு முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டினேன். குழுவின் தலைவன் உங்கள் முதல் பாராட்டுக்கு நன்றி என்றார்

    ReplyDelete