Tuesday, March 8, 2011

தலைவருக்கு ஓசிச்சோறு

இது எனது நூறாவது பதிவு 

நேற்றைய  எகானாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வந்த  செய்தி  இது. 

சர்வதேச நிதி மூலதன திமிங்கலம் வாரன் பபெட் இந்தியா வரவுள்ளார். 
அவரது அறக்கட்டளைக்கான நிதி திரட்டும் பயணமாம் இது. வாரன் பபெட்டோடு  அமர்ந்து விருந்து சாப்பிட  கொடுக்க வேண்டிய தொகை 
2 .6  மில்லியன் டாலராம். ரூபாய் மதிப்பில்  பதிமூன்று கோடி ரூபாய் 
என்று வரும். இந்த விருந்தில்  கட்டணம் எதுவும்  இல்லாமல் கலந்து
கொள்ள இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் 
(இனி சுருக்கமாக ஐ.ஆர்.டி.ஏ ( Insurance  Regulatory and  Development Authority )
விவேக் ஹரிநாராயணன் அழைககப்பட்டுள்ளதாகவும்   அச்செய்தி 
தெரிவிக்கிறது.     விவேக் ஹரிநாராயணனோடு வாரன் பபெட்   தனியாக பேச வேண்டும்   என்று விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி  தெரிவிக்கிறது.

விவேக் ஹரிநாராயணனுக்கு  மட்டும்  ஏன்  இந்த சிறப்பு சலுகை? 
இவர்கள் இருவரும்  அப்படி  என்ன ரகசியம்  பேசபபோகின்றனர்? 

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையில் நேரடியாக  இறங்க வேண்டும் 
என்ற எண்ணம் வாரன் பபெட்டிற்கு உண்டு. தற்போதே  அவர் பஜாஜ் 
அல்லயன்ஸ் நிறுவனத்தின் நிறுவன முகவராக (கார்ப்பரேட் ஏஜென்ட்) 
ஆக உள்ளார். காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டை காப்பீடு செய்யும் 
மறு காப்பீட்டு நிறுவனத்தை ( Re Insurance ) துவக்கவும் அவர் விரும்புகிறார். 

அவரது விருப்பம் என்பது இந்தியக் கூட்டாளிகள் இல்லாமல் தனியாக 
இன்சூரன்ஸ் தொழில் செய்ய விரும்புகிறார். அதற்கு தடையாக உள்ளது 
தற்போதைய ஐ.ஆர்.டி.ஏ சட்டம். 

அதன்படி வெளி நாட்டு நிறுவனம் இந்தியாவில் இன்சூரன்ஸ் தொழில் 
செய்ய வேண்டுமென்றால்  அது ஒரு இந்தியக் கூட்டாளியோடு இணைந்து  மட்டுமே தொழில் தொடங்க முடியும்.  அதிலும் வெளி நாட்டு 
கம்பெனியின் மூலதனம்  இருபத்தியாறு  சதவிகிதத்திற்கு  மேல் செல்லக் கூடாது. இந்த அந்நிய மூலதன வரம்பை நாற்பத்தி ஒன்பது சதவிகிதமாக 
உயர்த்த வேண்டும் என்பது வெளி நாட்டுக் கம்பெனிகளின்  கட்டளை. 
அதை நிறைவேற்ற   ஒரு மசோதாவை  ( இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா)  2008  ம்  ஆண்டிலேயே  காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள்  ஆதரவை விளக்கிக் கொண்டவுடனேயே  கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் இம்மசோதா இன்னமும் நிறைவேறவில்லை.  

மசோதாவின் அயோக்கியத்தனங்கள் குறித்து பின்னர் விளக்கமாகப் பார்ப்போம்.  

நாற்பத்தி ஒன்பது கூட வாரன் பபெட்டிற்கு திருப்தி அளிக்கவில்லை. இதற்கு முன்பு  பிரிட்டிஷ் பிரதமராகவும் அதற்கு முன்பு நிதியமைச்சராகவும்  இருந்த  டேவிட் பிரவுன் கூட  இங்கிலாந்து நாட்டு
லாயிட்ஸ் நிறுவனத்திற்காக, அது தனியாக இங்கே தொழில் தொடங்க 
வேண்டும் என்பதற்காக  லாபியிங் ( அதாங்க, நீரா ராதியா வேலை) 
செய்தார். 

இப்போது    ஐ.ஆர்.டி.ஏ சேர்மனுக்கு  வாரன் பபெட் பதிமூன்று கோடியை
விட்டுக் கொடுத்து ஓசிச்சோறு  போடுவதன் நோக்கம்  தனக்கு உகந்த வகையில் சட்டங்களை உருவாக்கு என்று கட்டளை போடுவதைத் தவிர   வேறு  என்னவாக  இருக்க முடியும்? 

விருந்து இந்த மனிதருக்கு.  ஏப்பம் விடப்போவது வாரன் பபெட், அவரது
வயிற்றில்  ஜீரணமாகப்  போவது  இந்திய மக்களின் சேமிப்பு. 

நீண்டதொரு பின் குறிப்பு ஆனால் முக்கியமானது

ஒரு கசப்பான விருந்து/நினைவு 

1999 ல் பாஜக இன்சூரன்ஸ் துறையில்  தனியாரை அனுமதிப்பதற்கான 
ஐ.ஆர்.டி.ஏ மசோதாவை கொண்டு வந்தது. அதை நிறைவேற்ற கடுமையாக  முயற்சித்தது. அப்போது  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  அனைத்து கட்சிகளின் தலைவர்களையும்  சந்தித்து 
மசோதாவிற்கு  எதிராக  வாக்களிக்குமாறு  வேண்டுகோள்  விடுத்தது. 
இந்திய மக்களிடமிருந்து  ஒரு கோடியே  ஐம்பத்தி ஐந்து லட்சம் 
கையெழுத்துக்களைத்   திரட்டி  அப்போதைய சபாநாயகர் திரு ஜி.எம்.சி.பாலயோகி  அவர்களிடம் அளிக்கிறோம்.  இடதுசாரிக்கட்சிகள், 
மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால்  அதிமுக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய 
ஜனதாதள் ஆகிய கட்சிகள்  எதிர்த்து வாக்களிக்கின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான  சோனியா காந்தி, மன்மோகன்சிங்,  மாதவராவ் சிந்தியா ஆகியோரையும்  எங்கள் சங்கத்தின்   அகில இந்தியத் தலைவர்கள் சந்தித்து விவாதிக்கின்றனர். 
மாதவராவ் சிந்தியா மூலம் முடிவை தெரிவிப்பதாக சோனியா காந்தி 
சொல்கின்றார்.  இரு தினங்களுக்குப்ப் பின்பு  காங்கிரஸ் கட்சி ஐ.ஆர்.டி.ஏ 
மசோதாவிற்கு ஆதரவான நிலை எடுத்தது.  ஏன்  இந்த  மாற்றம் 
நிகழ்ந்தது. 


தற்போது  பெட்ரோலியத்துறை  அமைச்சராக  உள்ள முரளி தியோரா
அமெரிக்காவிற்கு  அவசரமாக  அழைக்கப்படுகின்றார்.  அமெரிக்கப் 
பெருமுதலாளிகளை  சந்தித்து விட்டு  அவர் இந்தியா  திரும்புகின்றார். 
இந்தப் பயணத்திற்கு  ஏற்பாடு செய்தது  முன்பு  இந்தியாவிற்கான 
அமெரிக்க தூதராக  இருந்து பின்னர் அமெரிக்க பன்னாட்டு இன்சூரன்ஸ் 
நிறுவனமான  எ.ஐ.ஜி ( AIG)   தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட 
ஃப்ரான்க்  வைஸ்னர். 

ஏ.ஐ.ஜி  நிறுவனம்  திவாலாகும் நிலைக்குச்சென்றதும்  கோடிக்கணக்கான  டாலர்களை  அள்ளிக் கொடுத்து  அமெரிக்க அரசு  அதனைக் காப்பாற்றியது,  ஏ.ஐ.ஜி திவாலானாலும்   அதன் இந்தியக கூட்டாளி நிறுவனமான டாடா ஏ.ஐ.ஜி க்கு  எவ்வித பாதிப்பும் வராது, ஏ.ஐ.ஜி யின் பங்கு 26 % தான். மீதியெல்லாம் டாட்டாவிடம்  உள்ளது. அவர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வார் என்று பசியும்     விவேக் ஹரிநாராயணனும்  அறிக்கை வெளியிட்டதும் ரத்தன் டாடா பிரம்மாண்ட விளம்பரங்கள் கொடுத்ததும்  சமீபத்திய விவகாரங்கள்.



அமெரிக்கப்ப் பயணத்திற்கு பிறகு  முரளி தியோரா சோனியா காந்தியை
சந்திக்கிறார், பேசுகிறார், பேரம் படிந்து விட்டது, காங்கிரஸ் கட்சியின் 
நிலை மாறி விட்டது. பாஜக கொண்டு வந்த மசோதாவிற்கு  ஆதரவாக 
வாக்களிக்கிறது.  இதற்கு முரளி தியோராவிற்கு  கிடைத்த பரிசு  என்ன 
தெரியுமா?  

புத்தாயிரத்தாண்டு  தொடங்குவதை ஒட்டி 31 .12 .1999  அன்று  நள்ளிரவு  அமெரிக்க   ஜனாதிபதி பில் கிளிண்டன்   ஒரு பிரம்மாண்டமான விருந்து 
அளிக்கிறார். அதிலே பங்கேற்க  இந்தியாவிலிருந்து முரளி தியோரா 
மட்டுமே அழைக்கப்படுகின்றார்.  அமெரிக்கப் பன்னாட்டு காப்பீட்டு 
நிறுவனங்கள் இந்தியாவில்  நுழைய காங்கிரஸ் கட்சியை வாக்களிக்க 
வைத்ததற்காக அவருக்கு  அளிக்கப்பட்ட  விருது அந்த விருந்து. 

விவேக் ஹரிநாராயணனுக்கு  வாரன் பபெட் வைக்கும் விருந்தின் 
விளைவுகள் இந்தியாவிற்கு  என்னென்ன விளைவுகளை உருவாக்குமோ? 
அடுத்த பின் குறிப்பு : இத்தனை எழுதி விட்டு தமிழகத்தின் தங்கத்தலைவர்கள்  
இந்த மசோதா குறித்து  என்ன செய்தார்கள் என்பதை    எழுதாமல் விடலாமா? 
மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால்  அஇஅதிமுக  மசோதாவை எதிர்த்து வாக்களித்தது என்பதை முன்னரே  எழுதியிருந்தேன். 

இன்சூரன்ஸ் துறை  தனியார்மயத்திற்கு  எதிரான கையெழுத்து இயக்கத்தை  முதல் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தது கலைஞர்தான். ஆனால் திமுக மசோதாவிற்கு  ஆதரவாக  வாக்களித்தது. 
மருத்துவர் ஐயா அப்போது திண்டிவனத்தில்தான் இருந்தார். அவரை 
சந்திக்க எங்கள் திண்டிவனம் கிளைச்செயலாளர் மறைந்த தோழர் 
டி.ஜி.சந்திரபாபு  பலமுறை முயற்சித்தும்  முடியவில்லை. எப்போ போனாலும்  பாத்ரூமில்  இருப்பதாகவே சொல்றாங்க தோழர் என்று 
அவர் கோபத்தோடு  ஒரு செயற்குழுவில் அவர் பகிர்ந்து கொண்டார். 

ஐயா வந்தவாசியில்  ஒரு பொறியியல் கல்லூரியை  துவக்க வருவதாக
தெரிந்து    ஒரு எல்.ஐ.சி முகவர் மூலமாக நேரம் வாங்கி சென்றோம். ஆரணியில்   பஸ்  கிடைக்காமல் அங்கிருந்து கார் வேறு வைத்துக்கொண்டு  சென்றோம்.  நாங்கள் அளித்த மனுவை முழுமையாகப் படித்தார்.  கண்டிப்பாக என்னுடைய ஆதரவு  உண்டு. 
ஸ்டியரிங் கமிட்டி கூட்டத்திலேயே  இதை முடித்து விடுவேன். மசோதா
லோக்சபாவிற்கெல்லாம்  வரவே வராது என்று உறுதி கொடுத்தார். நான் 
வேறு எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளருக்கு வந்தவாசியில் 
இருந்தே எஸ்.டி.டி போட்டு தகவல் சொன்னேன்.  ஆனால் மசோதா 
வரும் போது  பாமக ஆதரவாகத்தான் வாக்களித்தது. 

வைகோ கதை இதை விட பெரிய கூத்து. வேலூரில்  ஒரு கட்சிக்காரரின் 
திருமணத்திற்கு  அவர் வருவதாகத் தெரிந்து  முன்பே போய் காத்திருந்தோம்.  மனு கொடுக்கத்தான் வந்துள்ளோம்  என்று சொல்லியும்
திருமண வீட்டார் கட்டாயப்படுத்தி டிபன் சாப்பிட வைத்தார்கள். நன்றாகவே இருந்தது.  வைகோ  உள்ளே  நுழைந்ததும் அவரைப் பார்த்து
விவரம் சொல்லி மனுவை  அளித்தோம்.  அவர் அப்படியே  எங்களையும் 
மேடைக்கு அழைத்துப்போய்  கையில் மைக்கை  எடுத்து " இன்சூரன்ஸ் 
தோழர்கள் தமிழகம் முழுவதும்  என்னை  சந்திக்கிறார்கள். அவர்களின் 
கோரிக்கை நியாயமானது, வாதங்கள் நியாயமானது,  தேசத்தை, 
பொருளாதாரத்தை  பாதுகாக்க நினைக்கும் அவர்கள் எண்ணம் நியாயமானது.  அவர்கள் பக்கம் நான் நிற்பதுதான் நியாயமானது. 
இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில்  வந்தால் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 
மதிமுக இருந்தாலும் மசோதாவிற்கு எதிராக இந்த வைகோவின் குரல் 
ஒலிக்கும், ஒலிக்கும், ஒலிக்கும் என்று மூன்று முறை ஆவேசமாக 
சொன்னார். அதன் பின்பே திருமண நிகழ்ச்சிகள்  தொடங்கியது. மாலைமுரசு பத்திரிகை அன்று முதல் பக்க செய்தியாக வேறு இதனை
வெளியிட்டது. ஆனால் மசோதா வந்தபோது அதற்கு ஆதரவாக முதலில்
உயர்ந்த கரம் வைகோவுடையதுதான்.

எங்களுக்கு திருமண வீட்டார் போட்ட ஓசி டிபன் மட்டுமே மிச்சம்.    

 


 



  

5 comments:

  1. very informative and very serious blogspot. True to your objective of unravelling the societal misgivings, the news piece about insurance sector is very enlightening.

    Wish you the very best to continue your writing and may you "hit" many more 100's of articles

    with respects
    raj

    ReplyDelete
  2. Interesting & Informative

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. ஆனால் நீளம் பொறுமையை சோதிக்கிறது. மூன்று பகுதிகளாக பிரித்திருக்கலாம்

    ReplyDelete
  4. வெளியில் நன்கு நடிக்கிறார்கள்.

    ReplyDelete
  5. வலைச்சரத்தின் மூலம் உள் நுழைந்தேன். இது போன்ற கருத்துக்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதிது. இருந்தாலும் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. நன்றி சார்.

    ReplyDelete