Tuesday, March 27, 2018

நாமப் பிரச்சினையில் ராசா யார் பக்கம்?



முக நூலில் ஒரு பதிவு பார்த்தேன்.

காரைக்குடி பக்கத்தில் இருக்கிற அரியக்குடியில் உள்ள பெருமாள் கோயிலில் கோயிலை உருவாக்க, திருப்பணி செய்ய உதவிய சில நகரத்தார் இனத்தைச் சேர்ந்தவர்களின் சிலையில் புதிதாக இப்போது நாமம் வரைந்துள்ளார்கள். வைணவக் கோயிலுக்கு உதவி செய்தாலும் நகரத்தார் எப்போதுமே சைவர்கள்தான். அவர்களுக்கு இப்படி வைணவ அடையாளம் கொடுப்பது நியாயமா என்பது அவரது ஆதங்கம்.

இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று எழுத வந்து விட்டீர்களா என்ற மைன்ட் வாய்ஸ் கேட்கத்தான்  செய்கிறது.

ஒரே மதம் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குள்ளே உள்ள முரண்பாடுகளையும்

ஆதிக்க உணர்வையும் 

வெளிக்காட்டுகிறது இந்த சர்ச்சை.

சரி இருக்கட்டும். இது

பக்த்ர்களுக்குள் உள்ள பிரச்சினை, இதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று சொல்கிறீர்களா? 

சரி, தாராளமாக செய்து கொள்ளுங்கள் . . .

காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கோயில் சம்பந்தப்பட்ட சர்ச்சை என்பதால் காரைக்குடிக்காரர் எச்.ராசா இதிலே என்ன நிலை எடுத்து யார் பக்கம் நிற்கப் போகிறார் என்று அறிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வமாக உள்ளது.

நாமம் நீடிக்கட்டும் என்பாரா
இல்லை எடுக்கச் சொல்வாரா

இல்லை

கலவரத்துக்கு வாய்ப்பில்லை
என்பதால் ஒதுங்கி 
ஓடி விடுவாரா?


Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக!



ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை பணிகள் துவங்கப்பட்டபோதும், அது இயங்க ஆரம்பித்தபோதும் அதனால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்து பல்வேறு இயக்கங்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் காட்டி வந்துள்ளன. இந்நிலையில் இது சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விளைவாக அந்த ஆலை 2013ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்படுவதற்கு முன்பாக பல விபத்துக்களும், உயிரிழப்புகளும், ஆலையிலிருந்து வெளியேறிய வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, மண் வளம் பாதிக்கப்படுவது, வளி மண்டலம் மாசுபடுவது, காற்றுவளி மண்டலத்தில் ஆலை தூசுக்கள் பரவி நிற்பது இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய், வாழ்வாதார பாதிப்பு, கால்நடைகள் இறந்து போவது என இவை அனைத்தும் சேர்ந்தே இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

மன்னார்வளைகுடாவில் உள்ள உயிர்க்கோள பகுதியிலிருந்து 25 கிலோமீட்டருக்கு அப்பால் அமைய வேண்டும் என்பதையோ ஆலையைச் சுற்றிலும் மாசு கட்டுப்பாட்டிற்காக 250 மீட்டர் அளவிற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதையோ, தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதையோ, கழிவுநீரை ஆலைக்கு வெளியே விடக்கூடாது என்பதையோ, ஆலையின் உட்புறம் மூன்றில் ஒரு பகுதி பசுமை வளையம் இருக்க வேண்டும் என்பதையோ அந்த நிறுவனம் பின்பற்றவில்லை. கடுமையான போராட்டங்கள் நீதிமன்ற தலையீடுகள் ஆகியவற்றிற்கு பிறகே சில பணிகளை முடித்தும் சிலவற்றை அரசு நிர்வாகத்தை வளைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டும், சுற்றுச்சூழல், மக்கள் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர ரூ.750 கோடி வரி ஏய்ப்புக்காகவும், பிளாட்டினம் மற்றும் பெல்லாடியம் ஆகிய தங்கத்திலும் விலை உயர்ந்த உலோகங்களை தங்கம் என்று ஏமாற்றி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததற்காகவும், அந்த ஆலையின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

இப்படி அரசின் விதிகளையோ, சுற்றுச்சூழலையோ, நிதி ஒழுங்கையோ கொஞ்சமும் சட்டை செய்யாத நிறுவனமாகவும் விவசாயம், குடிநீர், உப்புத் தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், உடல்நலத்திற்கு தீங்கு அளிப்பதாகவும் இருந்த காரணத்தினால்தான் உயர்நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டிருந்தது. 

மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மூடும் உத்தரவை ரத்து செய்தாலும், அந்த ஆலையின் பல்வேறு அத்துமீறல்களை சுட்டிக்காட்டி ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து அந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு பிறகும் அந்த ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கு மோசமான கேடுகளை விளைவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளதால் தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காற்று மாசடைந்து மூச்சுத்திணறலால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளால் புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்றவை பரவி வருகின்றன. 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சிஐடியு தொழிற்சங்கமும், இதர பல அமைப்புகளும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இந்த ஆலைக்கு எதிரான வழக்குகளை நடத்தி வந்துள்ளன. 2013ம் ஆண்டிலேயே ஆலையை மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வந்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கையினை நிராகரித்து வந்தது மட்டுமின்றி, நீதிமன்ற தீர்ப்புகளையும், சுற்றுச் சூழல் விதிகளையும் அமல்படுத்தாமல் அபாயகரமான ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாகவே இன்று இப்பகுதியில் மக்களின் உடல் நலத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, சுற்றுச்சூழல், காற்று, நீர், மாசுபடுதல் மற்றும் மக்களின் நல்வாழ்விற்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த ஆலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மூட வேண்டுமெனவும், அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடியில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும், வியாபாரிகளும் இணைந்து நின்று வெற்றிகரமான இயக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் கலந்து கொண்டவர்களையும், அந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுகிறது. 

இப்போதைய போராட்டம் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக மாறி உள்ள சூழலில் மத்திய - மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ளவாறு இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கிட வேண்டுமென்றும் மத்திய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

- கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Sunday, March 25, 2018

மதச்சார்பின்மை என்றால் கெட்ட வார்த்தையா?



காவிகளை அம்பலப்படுத்தி எந்த பதிவு எழுதினாலும் ஒரு அதிமேதாவி அனாமதேயம் ஆங்கிலத்தில் வன்மமாக ஏதாவது உளரி விட்டு போகும்.

ராமராஜ்ய ரதயாத்திரை என்ற பெயரில் காவிகள் நடத்தும் கலவர யாத்திரையின் ரதமே விதிகளை மீறி வடிவமைக்கப் பட்டது என்ற பதிவில் அந்த அனாமதேயம் வழக்கம் போல மதச்சார்பின்மையை நேசிப்பவர்களை அசிங்கமாக திட்டி உள்ளது.

பதில் சொல்ல முடியாத போது ஆபாச வசையில் இறங்குவது என்பதுதான் அனாமதேயங்களின் வழக்கம் என்பது ஒரு புறம் இருக்க 

மதச்சார்பின்மை 

என்ற வார்த்தையே கேட்டாலே இவர்கள் இப்படி கதி கலங்குகிறார்கள்? பதட்டப்படுகிறார்கள்? வெறி தலைக்கேறி உளறுகிறார்கள்?

அப்படி அவ்வளவு கெட்ட வார்த்தையா மதச்சார்பின்மை?

அரசியல் நடவடிக்கைகளிலும் அரசின் நடவடிக்கைகளிலும் மதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் 

அரசியல் லாபங்களுக்காக மத உணர்வுகளை தூண்டக் கூடாது

இதுதான் மதச்சார்பின்மை.

மத உணர்வுகளை தூண்டுவதை மட்டுமே தங்களின் ஒரே அரசியல் உத்தியாக வைத்திருக்கிற காவிகளால் எப்படி மதச்சார்பின்மையை சகித்துக் கொள்ள முடியும்?

அவர்களின் பிழைப்பே அடிபட்டு விடுமே!

அதனால்தான் காவிகளும் அவர்களை முட்டாள்தனமாக நம்புகிற வேறு சிலரும் கூட மதச்சார்பின்மையை வெறுக்கிறார்கள். 

இந்திய மக்களின் ஒற்றுமை நீடிப்பதற்கான ஒரே அடித்தளம் மதச்சார்பின்மையும் மத நல்லிணக்கமும்தான்.

அதனை சீரழிக்க முயலும் காவிகளை தொடர்ந்து விமர்சித்தும் அவர்களது கேவலமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.

அனாமதேயங்கள் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டினாலும் கூட

Saturday, March 24, 2018

அசிங்கம் ஜனாதிபதிக்குத்தான்


அரவிந்த் கேஜ்ரிவாலை அசிங்கப்படுத்த நினைத்தது மோடி அரசு. 

அதற்காக அதன் எடுபிடி தேர்தல் ஆணையத்தை ஏவி விட்டது. ஆம் ஆத்மி கட்சியின் இருபது எம்.எல்.ஏ க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்புகிறார்.

பதவி நீக்கம் செய்வது முறையல்ல. எங்களுக்கு கொடுக்கப் பட்டது பொறுப்பு மட்டுமே தவிர அது ஒன்றும் ஆதாயம் தரும் பதவி அல்ல என்று முறையிட்டனர் அவர்கள். எங்களது தரப்பு வாதங்களை தலைமை தேர்தல் ஆணையர் செவி மடுக்கவே இல்லை. எனவே அவரது பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று குடியரசுத்தலைவரிடமும் சொல்ல முயற்சித்தார்கள்.

தன்னை குடியரசுத்தலைவராக்கியதற்கான விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் இருந்த அவரோ நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு  இருபது எம்.எல்.ஏ க்களின் பதவியை பறித்தார்.

இதோ, இப்போது டெல்லி உயர்நீதி மன்றம் அந்த உத்தரவு சட்ட விரோதம் என்று சொல்லி பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்கி விட்டது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஜனாதிபதி எடுத்த முதல் முக்கியமான முடிவே சட்ட விரோதம், ஜனநாயக விரோதம் என்றாகி விட்டது.

மோடி வகையறாக்களுக்கு வெட்கம், மான, ரோஷம், சூடு, சொரணை என்று எதுவும் எப்போதும் கிடையாது. எத்தனை பெரிய அசிங்கத்தையும் துடைத்துப் போட்டு விட்டு மீண்டும் அசிங்கப்பட தயாராகி விடுவார்கள்.

ஆனால் ஜனாதிபதி என்பவர் நாட்டின் முதல் குடிமகன்.

இவர்களின் ஆத்திரத்தில் அவசரத்தில் மதியிழந்து செய்த நடவடிக்கையால் அசிங்கப்பட்டது என்னமோ அவர்தான். 

இப்படி ஒரு இழிவு அவசியமா அவருக்கு?

திரு கே.ஆர்.நாராயணன் போல நல்ல ஜனாதிபதியாக செயல்பட இனிமேலாவது அவர் முயற்சிக்க வேண்டும்.


சுட்ட படம் . .சுட்ட கவிதை

பகத்சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தோழர் வெண்புறா சரவணன் தயாரித்திருந்த படமும்

தோழர் இரா.எட்வின் அவர்கள் எழுதிய கவிதையோடு தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதியிருந்த பதிவும் 

மிகவும் கவர்ந்தது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் 

என்ற அடிப்படையில் 

அவற்றை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



மாவீரன் பகத்சிங்!

நான் மகத்தான இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாத இதழான ”இளைஞர் முழக்கம்” பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தபோது கவிஞர், ஆசிரியர், தோழர் இரா.எட்வின் அவர்களிடம் தொடர்ந்து கவிதைகள் வாங்கி வெளியிடுவது வழக்கம்.
ஒருமுறை மார்ச் 23 க்கு பகத்சிங் குறித்து கவிதை கேட்டேன். அவர் அனுப்புவதாக சொல்லி அனுப்பவே இல்லை.லே-அவுட்க்கு முதல்நாள் தொலை பேசியில் அழைத்தேன்.
”என்ன தோழர் இன்னும் கவிதை அனுப்பல” என்றேன்.

”இல்ல ரமேஷ் அவர் குறித்து நிறைய தகவல் உள்ளது எதை எழுதுவதென குழம்பிக்கிடக்கிறேன்” என்றார்.

”சரி தோழர், பகத்சிங் தனதூ இறுதி நேரத்தில் சிறைச்சாலையிலிருந்து தூக்குமேடைக்கு போகும் போது என்ன யோசித்திருப்பான். அதை கவிதையாக்குங்கள்” என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் இந்த உணர்ச்சி பிரவாகம் என் மின்னஞ்சலை தட்டியது. படித்து பாருங்கள் இந்த கவிதையை.

சாகவரம் பெற்ற கவிதை இது.

தோழர் எட்வின். உங்கள் கரங்களை இறுக பற்றுகிறேன்.



-------------------------------------------------------------
கண்கள் கலங்க
கைகள் நடுங்க ...
என்ன இது?


என் இறுதி நொடிகளின்
சாட்சி நீ
என் இறுதிப் பயணத்தின்
சக பயணி நீ


கலங்காதே
காயம் பட்டு விடும்
என் மரணத்தின் கம்பீரம்
எங்கே
ஒரு புன்னகையோடு
கதவு திற காவல் நண்பனே


மரணம் வாங்க
ஒரு மகத்தான பேரணி
என்ன பேரணி...
முழக்கமேயில்லாமல் ?
எங்கே
என்னோடு சேர்ந்து
நீயும் முழங்கு
"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "


நாளை போய் உலகு சொல்
காற்று வாங்க
கடற்கரை போகும்
குதூகலத்தோடும் ...
விருது வாங்கப் போகும்
வீரனின் மிடுக்கோடும்
மரணம் வாங்க
நடந்தான் பகத் என்று
உலகை நோக்கி
உரக்க சொல் நண்பா!


எந்தத் தேவதையும்
என் இறுதி வழியில்
பூ மாறிப் பொழியவில்லை


ஒளி வட்டம் முளைக்க
வானம் கிழித்து வந்த
வாகனமேறி
நான்
வைகுந்தம் போகவில்லை


போகிற பாதை எங்கும்
தன் சொந்தப் புன்னகையை
தூவிப் போனான்
இவனென்று சொல் நண்பா


மக்கள் போராளிகளின்
உதிரத்திலும்
வியர்வையிலும்
கசிவேன் நான்


நீ கதவில் கை வைத்த
நொடி வரைக்கும்
லெனின் படித்தேன்


உனக்கு
லெனின் தெரியுமா?


நண்பா
எனக்கே
தாமதமாய்த் தெரியும்


கிடைக்க வேண்டிய
எங்களுக்கு
லெனின் மட்டும்
கிடைத்திருந்தால்
நாங்கள் இதயத்தில்
லெனினை ஏந்தியிருப்போம்


அடடா...
போராட்டப் பாதையே
திசை மாறிப் போயிருக்கும்


தேச விடுதலையோடு
ஜனங்களின் விடுதலையும்
சேர்த்தே வந்திருக்கும்


இந்தா
இந்த முத்தத்தை
சிந்தாமல் சிதறாமல்
சேர்த்துவிட்டு
துர்கா மகளிடம்


இறுதி வரை
மாமன் உன்னை
நினைத்திருந்தான்
என்று சொல்


கருணை மனு தந்த
சங்கடம்
என் தூக்குமேடை வரைக்கும்
கூடவே தொடர்ந்ததாய்
என் தந்தையிடம் சொல்


என்ன இது
துக்கம் காட்டும்
கருப்புத் துணி
தூர எறி


பூமி பார்த்துப் பிறந்தால்
பூமி வாங்குவானாம்
பூமி பார்த்து சாகிறேன்
என் மக்கள்
பூமி மீட்கட்டும்


அதிகாரிகளே
கொடுத்து வைத்தவர்கள்:
நீங்கள்
சிரித்துக் கொண்டே
சாகும் மனிதனை
உங்களைத் தவிர
யார் பார்க்க முடியும்


"எல்லாம் முடிந்தது "
என்று சொல்ல
நான் ஒன்றும் ஏசுவல்ல
தொடங்கச் சாகிறேன்
தொடர்வார்கள் என் தோழர்கள்


விடுதலை பூமியில்
உச்சி சூரியனின்
வெயிலாய் கசிவேன் நான்


"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "

Friday, March 23, 2018

ராமராஜ்ஜிய ரதத்தில் இவ்வளவு ஓட்டைகளா?


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து சுட்டது. 

காவிகளால் காவிகளுக்காக நடக்கும் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தானே!

காலிகள் என்று அவசரத்தில் மாற்றிப் படித்து விடவில்லை அல்லவா?




விதிகளை மீறிய ரதம் 


ராமர் கோவிலின் மாதிரியைத் தாங்கி வரும் ரதம் மோட்டர் வாகனச் சட்ட விதிகளை மீறியுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுவதாக இந்து நாளிதழ் கூறுகிறது 

மீறல்கள்: 

1. அது பதிவுசெய்யப்பட்ட வண்டியாக இருந்தால் அதன் பதிவெண் பட்டை (தமிழில் நம்பர் பிளேட் என்பார்கள்) வண்டியின் முன்புறம், பின்புறம் அல்லது பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது இல்லை (தேவலோகத்தில் பதிவு செய்யப்பட்ட வண்டிகளுக்கு இந்த விதி பொருந்தாது என தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் சொல்லக் கூடும்) 

2. பதிவுசெய்யப்பட்ட வண்டியின் அமைப்பை கோவில் போல் மாற்றியமைக்கக் கூடாது. ஆம்புலன்சாகவோ, தீயணைப்பு வண்டியாகாவோ மாற்றலாம் 

3. ரதத்தின்     எஞ்சின் அல்லது உடல் (?) சரக்கு வண்டியினுடையதாக இருந்தால் அதில் சாமியார்களை ஏற்றிச்செல்ல முடியாது.

பின் குறிப்பு

இதைப் படித்தவுடன் காவிகளின், அதிலும் குறிப்பாக ஒரு அதிமேதாவி அனாமதேயம் அதிகாலையில் ஆங்கிலத்தில் அராஜகமாக பின்னூட்டம் எழுதும், அவர்களின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன். அதுதான் மேலே உள்ள படம். 



இன்று. இன்றுதான் அந்நாள்



மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் இந்தியாவின் விடுதலைக்காக தூக்குக்கயிற்றைத் தழுவி வரலாற்றில் நிலை கொண்ட நாள் இன்றுதான்.

ஆம்.

மார்ச் மாதம் 23 ம் நாள்தான் அவர்கள் லாகூர் சிறையில் தூக்கிலப்பட்டார்கள்.

இளந்தியாகிகளை மட்டுமல்ல, அவர்களின் இறுதி நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் வேறொரு நாளில் வேறொரு வதந்தி பரவுகிறது.

கேளா காதுகள் கேட்கட்டும் என்று நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவன் பகத்சிங்.

இன்றும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு ஏழை மக்களின், தொழிலாளர்களின் விவசாயிகளின் குமுறலும் கேட்கவில்லை. அவர்கள் எழுப்பும் உரிமைக்குரலும் கேட்கவில்லை.

பகத்சிங்கின் குரலாய், உணர்வாய் நாம் மாறுவோம்.
கேளாக்காதினரை கேட்க வைப்போம்