Thursday, April 5, 2018

அந்தஸ்துக்கே கலாய்ச்சா எப்படி????



என் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு உ.பி மாதிரி  மொட்டை சாமியாரை முதல்வராக்கினேனா?

இல்லை மோடி மாதிரி ஜக்கியோடு நடனமாடினேனா?

இல்லை அவரை மாதிரி நித்தியை வணங்கி போஸ் கொடுத்தேனா?

யமுனையை சீசீ.ரவிசங்கர் நாசமாக்க அனுமதித்தேனா?

ஹரியானா முதல்வர் மாதிரி ராம்ரஹீம் சாமியாரை பாதுகாக்க முயன்றேனா?

பாலியல் வன் கொடுமை செய்த ஆசாராம் சாமியாருக்கு ஆதரவா சுஷ்மாஜி நின்றாங்களே, அந்த மாதிரி செய்தேனா?

உத்தர்கண்ட் மாநில முதல்வர் சுடிதார் சாமியார் பாபா ராம்தேவுக்கு அரசு நிலத்தை அள்ளிக் கொடுத்தேனா?

ஏதோ எனக்கு தெரிஞ்ச சில சாமியாருங்க, சுகபோகமா இருக்கட்டுமேன்னு அமைச்சர் அந்தஸ்து கொடுத்தேன். 

அதுக்குப் போய் இப்படி கலாய்க்கிறாங்களே! நியாயமா இது?

எங்க கட்சியில தியாகிகளும் அறிவாளிகளும் இருந்தா அவங்களுக்கு பதவி கொடுக்கலாம். 

அத்தனை பேருமே அயோக்கியனும் அடி முட்டாளும்தான். அப்படி இருக்கையில சாமியாரா இருந்தா என்ன? சாதாரண லூஸா இருந்தா என்ன? 

                -----  ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகானின் மைண்ட் வாய்ஸ்


Tuesday, April 3, 2018

மகிழ்ச்சியோடு மறுபடியும் . . .

கடந்த வருடம் எழுதிய ஒரு நூல் அறிமுகத்தை இப்போது மீண்டும் பதிவு செய்கிறேன். அதற்கான காரணம் என்ன என்பதை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

இப்போதும் இன்னும் புதிதாய்




நூல்                 “வால்காவிலிருந்து முதல் கங்கை வரை”
ஆசிரியர்             ராகுல சாங்கிருத்தியான்
தமிழில்              முத்து மீனாட்சி
வெளியீடு            பாரதி புத்தகாலயம்
                      சென்னை - 18
விலை               ரூபாய் 280.00

நூலுக்குள் செல்லும் முன்பாக வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. நெய்வேலியில் பணி புரிந்த காலம். அப்போது சங்கத்தின் முன்னணித் தலைவராக இருந்த தோழர் அ.சுப்பராயன் அவர்களைப் பார்க்க நல்ல உயரமும் தடித்த மீசையும் கொண்ட ஒருவர் அவ்வப்போது வருவார். ஒரு நாள் மாலை அவர்களுடைய விவாதத்தில் என்னையும் உட்கார வைத்தார். இவர்தான் தோழர் அஸ்வகோஷ்எனப்படும் ராஜேந்திரசோழன், தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று அறிமுகமும் செய்து வைத்தார். அப்போது அவர்கள் பேசியதை விட “அதென்ன அஸ்வகோஷ் என்று ஒரு பெயர்? யாராவது மேற்கு வங்கத் தலைவரா?” என்ற கேள்விதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதை தோழர் சுப்பராயன் அவர்களிடமே கேட்டு விட்டேன். மறு நாள் ஒரு புத்தகத்தை கொடுத்து இதைப்படித்தால் புரியும் என்றார். அந்த நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை .சீரியஸான வாசிப்புக்கு துவக்கமாக இந்த நூல் அமைந்திருந்த்து.

அஸ்வகோஷ் எனும் அழியாத கதாபாத்திரத்தை அப்போது அறிந்து கொண்டேன்.

அந்த நூலை அவர் மீண்டும் ஜாக்கிரதையாக கேட்டு வாங்கிக் கொண்டதால் அதை சுட்டு விட வேண்டும் என்ற திட்டம் நிறைவேறவில்லை என்பது கூடுதல் தகவல்.

அப்போது படித்த நூலின் புதிய பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்தியிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்யப்பட்டது என்பது சிறப்பான ஒன்று. இந்த நூலிலும் எங்களுக்கு ஒரு பெருமிதம் உண்டு. அது கடைசியில்.

இப்போது நூலுக்குள் செல்வோம்.

ராகுல சாங்கிருத்தியான் மனித குல வரலாற்றை சுலபமாக புரிந்து கொள்ள கதைகள் மூலம் சொல்லியுள்ளார்.

கிமு 6000 ல் வால்கா நதிக்கரையில் தொடங்குகிற முதல் கதை தாய் வழிச் சமுதாயமாக சமூகம் இருந்தது என்றும் தாய் மகளுக்கு இடையே இருந்த பொறாமையையும் காண்பிக்கிறது.

கிமு 6000 தொடங்கி கி.பி 1942 வரை பல்வேறு காலக்கட்டங்களை குறிக்கும் இருபது கதைகள். நாகரீகங்கள் நதிக்கரையில்தான் வளர்ந்த்து என்பதை சொல்லும் விதமாக ஒவ்வொரு கதையிலும் ஒரு நதி பாத்திரமாக வந்து செல்கிறது.

தாய் வழிச்சமூகத்திலிருந்து வேட்டை சமுதாயமாக மாறுகிற போது பெண்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பறி போகிறது. இரு கூட்டங்களுக்கிடையேயான மோதல்களே பின்னாளில் தேவ அசுர யுத்தமாக சித்தரிக்கப்பட்டது என்பதை ஆரம்பத்தில் இருந்த ஜன்நாயகம் பின்னாளில் அரசாட்சியாக அதிகாரக்குவியலாக மாறியது என்பதை, வேத மந்திரங்களை படிப்பது சுகபோக வாழ்வுக்கான அடித்தளம் என்பதை எல்லாம் துவக்க கால கதைகள் சித்தரிக்கிறது.

காலம் உருண்டோட அரசியல் மாற்றங்களை சொல்லும் கதைகள் தொடர்கின்றன. முகலாயர் ஆட்சிக்காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை கதைகள் நீள்கின்றன. நாமறிந்த புத்தர், அலெக்ஸாண்டர், சாணக்யர், அக்பர் எல்லாம் கதை மாந்தர்களாக வருகின்றனர்.

1857 சிப்பாய்ப் புரட்சிக்கு காரணமான மங்கள் பாண்டேவை லண்டனில் பயின்ற, மார்க்சியம் தேர்ச்சி பெற்றவராய் சித்தரிக்கையில் மனம் குளிர்கிறது. ஆனால் அவரது போர்த்தந்திரத்தை பயன்படுத்த நினைக்கும் அரசர்களோ, அவர் சொல்ல விழையும் ஆட்சி முறையை மட்டும் செவி மடுக்க மறுப்பதை படிக்கையில் எரிச்சலாகிறது.

முன்பு படித்த போதும் சரி, இப்போது படிக்கும் போதும் சரி, மனதை மிகவும் ஈர்க்கும் கதை “பிரபா. மகாகவியும் நாடகப் படைப்பாளியும் பின்னாளில் புத்த பிட்சுவான “அஸ்வகோஷ் அவரது காதலிபிரபா பற்றியும் சரயு நதியின் அலைகள் பற்றியும் ஓரிரு பத்திகளில் என்ன எழுத முடியும்? படித்து உள்வாங்க வேண்டிய படைப்பல்லவா இது?

முப்பதாண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு புத்தகத்தை இப்போது படிக்கும்போதும் இன்னும் புதிதாகவே இருக்கிறது. இந்த புதிய பதிப்பில் தமிழ் இன்னும் அழகாக வேறு இருக்கிறது. சிறிது நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக படியுங்கள். அற்புதமான வாசிப்பனுபவம் நிச்சயம் கிடைக்கும்.

இந்த புதிய பதிப்புக்காக நேரடியாக இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்த திருமதி முத்து மீனாட்சி, எங்களின் மூத்த தோழரும் தற்போது நாக்பூரில் வசித்து வரும் தோழர் சியாமளம் காஷ்யபன் அவர்களின் மனைவி என்பது எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது.

மறுபடியும் ஏன் இந்த பதிவு, அதுவும் மகிழ்ச்சியோடு?



பத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் பரிசோடு விருது அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த பத்து பேரில் திருமதி முத்து மீனாட்சி அவர்களும் ஒருவர் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் சங்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பெறும் விருது நாங்கள் ஒவ்வொருவரும் பெறுவது போலத்தானே!

கடந்த வருடம் எழுதிய பதிவிற்கு அவர் அளித்த பின்னூட்டத்தையும் எனது பதிலையும் இங்கே பகிர்ந்து கொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். அப்போதுதான் அவரது உழைப்பு நமக்கு புரியும்


தோழர் ராமன் அவர்களுக்கு !
முத்துமீனடசி என்ற வசந்தா சியாமளம் எழுதிக்கொள்வது. நூலை முழுவதுமாக படித்து எழுதி யுள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. மொழிபெய்ர்ப்புக்கு நான் ன் பொறுப்பு என்றாலும் அதன செம்மைபடுத்தி, பிழை திருத்தி, தமிழ் வார்த்தைகளை நவீனப்படுத்தியது பாரதி புத்தகாலயம். குறிப்பாக தோழர்கள் கமலாலயன் ,ஜீவ சுந்தரி பாலன் ஆகிய இருவருமே பெருமைக்குறியவர்கள்..நீங்கள் எழுதிய விமரிசனத்திற்கு நன்றி - தோழமயுடன். முத்து மீனட்சி?வசந்தா சியாமளம்.
ReplyDelete
Replies
  1. உங்களின் பின்னூட்டமும் மின்னஞ்சலும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இப்போதுதான் தோழர் காஷ்யபன் தொலைபேசியில் பேசினார். 75 வயதில் ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணி வரை பனிரெண்டு மணி வரை மொழியாக்க வேலைகளை செய்து இந்த நூலை கொண்டு வந்தீர்கள் என்று அறியும் போது உங்கள் அயறாத உழைப்பு மலைப்பாக இருக்கிறது. நாங்கள் அல்லவா நன்றி சொல்லவேண்டும்! Really Inspiring
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமதி முத்து மீனாட்சி அவர்களே, தோழர் சியாமளம் காஷ்யபன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்திய முதல் விடுதலைப் போரில் பங்கேற்று கொல்லப்பட்டு, ஆனால் வெளிச்சத்துக்கு வராத அஜிமுல்லாகான் பற்றி திருமதி முத்து மீனாட்சி அவர்கள் எழுதிய சிறு நூல் அருமையானது. நாக்பூரில் அகில இந்திய மாநாடு நடந்தபோது தோழர் காஷ்யபன் தமிழகத்திலிருந்து பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும்  பரிசாக அளித்தார்.     அதை தேடிக் கண்டுபிடித்து அந்நூல் பற்றி எழுத வேண்டும். 

Monday, April 2, 2018

எடப்பாடிக்கு எதற்கெய்யா வெட்டி வீரம்????



தமிழக வரலாற்றிலேயே மிக மோசமான ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

நடிகரால் துவக்கப்பட்டு பின்பு இன்னும் ஒரு நடிகையால் வழி நடத்தப்பட்ட  கட்சி என்பதால் இப்போது இருப்பவர்களுக்கும் நடிப்பு இயல்பாகவே வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று டெல்லியில் நாடாளுமன்றத்தில் நடத்தும் முடக்கல் நாடகம் எல்லாம் மோடி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு வரக்கூடாது என்பதற்காக  பாஜக இயக்க இவர்கள் நடத்துகிற  நாடகம் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மைனாரிட்டியாக பாஜக மாறியுள்ள சூழலில் அதிமுகவின் எதிர்ப்பு உண்மையாக இருந்தால் மத்தியரசு இந்நேரம் பணிந்திருக்கும்.  அவர்கள் எழுதிய வசனத்தை இவர்கள் ஒப்பிப்பதால்தான் மத்தியரசு பிடிவாதமாக இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுகவிற்கு  உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சிகளும் மற்ற அமைப்பினரும் நடத்தும் போராட்டங்களை காவல்துறை கொண்டு ஒடுக்காமல் இருக்க வேண்டும்.

அவர்கள் நாடாளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் நியாயம் என்றால் மக்கள் தமிழகத்தின் வீதிகளில் நடத்தும் போராட்டமும் நியாயம்தானே! அது மட்டும் ஏன் இவர்களுக்கு கசக்கிறது? மத்தியரசிற்கு எதிரான குரலை ஒடுக்க முயல்கிறது? போராட்டங்கள் வலிமையாகும் போது கிடைக்கிற அழுத்தம் இவர்கள் என்ன காரணம் சொல்லி மக்களவையை முடக்குகிறார்களோ, அது நிறைவேற உதவிகரமாக இருக்குமல்லவா?

இப்போது உண்ணாவிரதம் என்று புதிய நாடகத்தை துவக்கி உள்ளார்கள். அதற்குப் பதிலாக கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கலாமே!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியரசு மறுப்பது கர்னாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக  மட்டுமே. தங்களின் புதிய ஆண்டையான மோடியின் நலனே இந்த அடிமைகளுக்கு முக்கியமே தவிர தமிழக விவசாயிகளின் நலன் அல்ல.

எடப்பாடி உள்ளிட்ட எவருமே அடுத்த தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. அது அவர்களுக்கும் நன்றாக தெரிவதால் ஆட்சியின் முழுக்காலத்தையும் அனுபவிக்கவும் அதன் மூலம் கோடி கோடியாக கொள்ளையடிக்கவுமே விரும்புகிறார்கள்.

"படுத்தே விட்டேனாய்யா" என்ற லெவலில் மண்டியிட்டுக் கிடக்கிற எடப்பாடி வகையறாக்கள் உண்ணாவிரத நாடகம் நடப்பது யாரை ஏமாற்ற?

இவர்களின் நடிப்பை கொஞ்சம் கூட சகிக்க இயலவில்லை. நாடகம் எவ்வளவு விரைவாக முடிகிறதோ அதுதான் தமிழகத்திற்கு நல்லது.



கேன்ஸர் ஒன்றும் இழிவல்ல . . .

அடையார் புற்று நோய் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சாந்தா அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவருக்கு அனுப்பிய கடிதம் இங்கே.

ஊழலை தயவு செய்து கேன்ஸரோடு ஒப்பிடாதீர்கள் என்ற அவரது ஆதங்கம் நியாயமானதே.



நீண்ட நாட்களாக ஃட்ராப்டிலேயே இருந்ததை இன்று பகிர்ந்து கொள்கிறேன்

Sunday, April 1, 2018

இன்று "முட்டாள்கள் தினம்" கிடையாது



இன்று முட்டாள்கள் தினம் கிடையாது.

ஆம்

முட்டாள்கள் தினத்தின் பெயர்

"மோடி ஆதரவாளர்கள் தினம்"

என்று பெயர் மாற்றப்பட்டு விட்டது.

இவர்களிடம் உள்ள மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் தாங்கள் முட்டாள் ஆனதை உள்மனது ஒப்புக் கொண்டாலும் அதை மனசாட்சியோடு வெளியே காண்பித்துக் கொண்டால் தங்களின் வெட்டி கௌரவம் பாதிக்கப்படும் என்பதால் இன்னும் கூட "மோடி நல்லவரு, வல்லவரு"  என்றுதான் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

இந்த முட்டாள்களை சரியாக அடையாளம் கண்டு கொண்டு அம்பலப்படுத்தவில்லையென்றால் நான்காண்டுகள் முன்பு செய்த விஷப் பிரச்சாரத்தை அடுத்த ஆண்டும் செய்வார்கள். 

ஒட்டு மொத்த இந்தியாவையும் மோடி முட்டாளாக்க இந்த முட்டாள்கள்தான் முன்பு துணை நின்றார்கள்.

அந்த விபத்து மீண்டும் நடக்கக் கூடாது.

மோடி ஆதரவாளர்கள் தங்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகையில் அவற்றை அம்பலப்படுத்தாமல் மறுத்துப் பேசாமல்   நமக்கெதற்கு வம்பு என்று மௌனம்   காக்கிற நல்லவர்கள் இருக்கிறார்களே, அவர்களையும் கூட இந்த வகைக்குள்தான் கொண்டு வர வேண்டும்.

இந்தியா மோடி தேசமென்றால் முட்டாள் தேசமென்று பொருள்.
அப்படிப்பட்ட இழி நிலையை எந்நாளும் நாம் அனுமதிக்கக் கூடாது.