Thursday, September 1, 2022

வித்தியாசமான பிறந்தநாள் . . .



 *01.09.2022*

//க. சுவாமிநாதன்//
____________________
66 ஆண்டுகள் முழுக்க முழுக்க அரசு நிறுவனமாகவே இருந்த எல்.ஐ.சி யின் 3.5 பங்குகளை விற்ற பின்னர் வருகிற முதல் பிறந்த நாள் என்ற வகையில் வித்தியாசமானது.
உலகமய காலத்தில் எத்தனையோ அரசு நிறுவனங்கள் பங்கு விற்பனைக்கும்/ தனியார் மயத்திற்கும் குறி வைக்கப்பட்டாலும் ஒரு நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை விற்பதற்கே 28 ஆண்டுகள் அரசாங்கம் தண்ணி குடிக்க வேண்டி இருந்தது என்ற வகையில் வித்தியாசமானது.
மல்கோத்ரா குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் வரை எந்த முடிவை அரசு எடுக்க நினைத்தாலும் - அந்நிய முதலீடு வரையறை, அரசு உத்தரவாத பறிப்பு, பங்கு விற்பனை சதவீதம் என எதுவாயினும் - அரசின் விருப்பம் அப்படியே நிறைவேறியதில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்த பிறகு வரும் பிறந்த நாள் என்ற வகையில் வித்தியாசமானது.
எந்த பங்கு விற்பனை, தனியார் மய முடிவுகளின் போதும் இல்லாத அளவிற்கு இது தப்பு, இது எதற்கு, இது கூடாது என்று பங்கு விற்பனையின் போது 'மக்கள் கருத்து' ஓங்கிக் கேட்ட பெருமையோடு கொண்டாடப்படுவது வித்தியாசமானது.
நட்டம், செயல்பாடு இல்லை, வாடிக்கையாளர் புகார்கள் என்றெல்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட அனுபவங்களே பொதுத் துறை நிறுவனங்களுக்கு இருந்த நிலையை மாற்றி பார்ச்சூன் 500 லிஸ்டில் முதல் 100 இல் இடம் பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை நிலை நாட்டி வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி நின்று காண்பித்திருப்பது வித்தியாசமானது.
பங்குச் சந்தையில் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்ற சூழலை பயன்படுத்தி நிறுவனத்தின் நிதி பலம் பற்றி ஊடகங்களில் தொடுக்கப்பட்ட மனோ ரீதியான தாக்குதலை மீறி ஏப்ரல் - ஜூலை 2022 லிலும் பிரிமியத்தில் 68 சதவீதம், பாலிசிகளில் 72 சதவீதம் சந்தைப் பங்கை தக்க வைத்து கம்பீரமாக மக்கள் நம்பிக்கையை தக்க வைத்து கொண்டாடுவது வித்தியாசமானது.
2022 -23 லிலும் 42 லட்சம் கோடி சொத்து, 28 லட்சம் கோடி அரசுப் பத்திரங்கள், ஆதாரத் தொழில் வளர்ச்சி என "என் கடன் தேச நிர்மாணமே" என்று விஸ்வரூப தரிசனத்தை காண்பிப்பது வித்தியாசமானது.
"நான்
வெட்ட வெட்டத்
துளிர்ப்பேன் தழைப்பேன்"
நிறுவனங்களில் நான் வாழை
எனக்கு வேறுபாடு இல்லை
பணக்காரர் ஏழை
என தாக்குதல்கள் கடந்து
நிமிர்ந்து நிற்பது வித்தியாசமானது.
29 கோடி தனி நபர் பாலிசிகள் -
குழுக் காப்பீடு சேர்த்து 40 கோடிகள் -
தேசமெங்கும் 12 லட்சம் முகவர்களின் கால் சுவடுகள் -
இறப்பு உரிம பட்டுவாடாவில் 98 % க்கும் அதிகம்...
இப்படியொரு நிறுவனம் உலகில் உண்டா என்று மூக்கில் விரல் வைக்கும் அதிசயம் அப்படியே தொடர்வது வித்தியாசமானது.
எந்த காலத்திலும்
51 சதவீதம் அரசின் வசம் இருக்குமென்று
சட்டத்தில் எழுதி வாங்கிய
போராட்ட அனுபவத்தோடு
வருகிற பிறந்த நாள் என்பது
வித்தியாசமானது.
"அரசு உத்தரவாதம்" தொடரும்
என்ற வாக்குறுதி ஈட்டி
தனியார்களின் ஆசை நிறைவேற விடாது பவனி வருவது வித்தியாசமானது.
இன்னும் வளரும்...
என்றும் வளரும்...
அரசு நிறுவனமாகவே
எக்காலமும் தொடரும்...
இந்த நம்பிக்கையோடு
நாளைய நாட்காட்டி தாள் கிழிவது
மேலும் மேலும் வித்தியாசமானது.

1 comment:

  1. Thanks com.
    We will take message to the people.
    Your social media work is great.

    K Swaminathan

    ReplyDelete